யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - B
பொதுக்காலம் 32வது வாரம் திங்கட்கிழமை
2015-11-09

இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழா




முதல் வாசகம்

நான் கோவிலின் வாயிற்படியின் கீழிருந்து கிழக்கு நோக்கித் தண்ணீர் வருவதைக் கண்டேன்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 47: 1-2,8-9,12

அந்நாள்களில் ஒரு மனிதர் என்னைக் கோவிலின் நுழைவாயிலுக்கு மீண்டும் அழைத்து வந்தார். அங்கு நான் கோவிலின் வாயிற்படியின் கீழிருந்து கிழக்கு நோக்கித் தண்ணீர் வருவதைக் கண்டேன். ஏனெனில், கோவில் கிழக்கு நோக்கி இருந்தது. தண்ணீர், கோவில் மற்றும் பீடத்தின் தெற்குப் பக்கத்திலிருந்து வந்தது. அவர் என்னை வடக்கு வாயில் வழியாய் அழைத்து வந்து கிழக்கு நோக்கிய வெளிவாயிலின் வெளிப்பகுதிக்கு இட்டுச் சென்றார். இதோ! தண்ணீர் தெற்குப் பகுதியிலிருந்து பாய்ந்து கொண்டிருந்தது. அவர் என்னிடம் உரைத்தது: ``இத்தண்ணீர் கிழக்குப் பகுதியை நோக்கிப் பாய்ந்து அராபாவில் சேர்கிறது. அங்கு அது கடலோடு கலக்கிறது. அது கடலோடு கலக்கையில் அத்தண்ணீர் அங்கு நல்ல தண்ணீராக மாறும். இந்த ஆறு பாயும் இடமெல்லாம் திரளான உயிரினங்கள் வாழும். அங்கு ஏராளமான மீன்கள் இருக்கும். ஏனெனில் இத்தண்ணீர் பாய்ந்து அங்குள்ள நீரை நல்ல நீராய் மாற்றும். எனவே அது பாயும் இடமெல்லாம் யாவும் உயிர் வாழும். பல வகையான பழமரங்கள் ஆற்றின் இருமருங்கிலும் வளரும்; அவற்றின் இலைகள் உதிரா; அவற்றில் கனிகள் குறையா. ஒவ்வொரு மாதமும் அவை கனி கொடுக்கும்; ஏனெனில் தூயகத்திலிருந்து தண்ணீர் அவற்றிற்குப் பாய்கின்றது. அவற்றின் கனிகள் உணவாகவும் இலைகள் மருந்தாகவும் பயன்படும்.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆற்றின் கால்வாய்கள் ஆண்டவரின் நகருக்குப் பேரின்பம் அளிக்கின்றன.
திருப்பாடல் 46: 1-2,3 4-5. 7-8

கடவுள் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார்; இடுக்கணுற்ற வேளைகளில் நமக்கு உற்ற துணையும் அவரே. 2 ஆகையால், நிலவுலகம் நிலை குலைந்தாலும், மலைகள் ஆழ்கடலில் அதிர்ந்து நடுங்கினாலும், 3உ எங்களுக்கு அச்சம் என்பதே இல்லை. பல்லவி

4 ஆறு ஒன்று உண்டு, அதன் கால்வாய்கள் உன்னதரான கடவுளின் திரு உறைவிடமான நகருக்குப் பேரின்பம் அளிக்கின்றன. 5 அந்நகரின் நடுவில் கடவுள் இருக்கின்றார்; அது ஒருபோதும் நிலைகுலையாது; வைகறைதோறும் கடவுள் துணை அதற்கு உண்டு. பல்லவி

7 படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்; யாக்கோபின் கடவுளே நமக்கு அரண். 8 வாரீர்! ஆண்டவரின் செயல்களைக் காணீர்! அவர் உலகில் ஆற்றியுள்ள திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பாரீர்! பல்லவி

இரண்டாம் வாசகம்

நீங்கள் கடவுளுடைய கோவில்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 9-11, 16-17

சகோதரர் சகோதரிகளே, நீங்கள் கடவுள் எழுப்பும் கட்டடம். கடவுள் எனக்கு அளித்த அருளின் படியே, நான் கைதேர்ந்த கட்டடக் கலைஞர் போல அடித்தளம் இட்டேன். அதன்மேல் வேறொருவர் கட்டுகிறார். ஒவ்வொருவரும் தாம் கட்டும் முறையைக் குறித்துக் கவனமாக இருக்க வேண்டும். ஏற்கெனவே அடித்தளம் இட்டாயிற்று. இவ்வடித்தளம் இயேசு கிறிஸ்துவே. வேறோர் அடித்தளத்தை இட எவராலும் முடியாது. நீங்கள் கடவுளுடைய கோவில் என்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா? ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில் கடவுளின் கோவில் தூயது; நீங்களே அக்கோவில்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! எனது பெயர் என்றென்றும் போற்றப்படுமாறு இக்கோவிலை நான் தெரிந்தெடுத்துத் திருநிலைப்படுத்தியுள்ளேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-22

அக்காலத்தில் யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார்; கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்ந்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார். அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்; ஆடு மாடுகளையும் விரட்டினார்; நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு, மேசைகளையும் கவிழ்த்துப் போட்டார். அவர் புறா விற்பவர்களிடம், ``இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்'' என்று கூறினார். அப்போது அவருடைய சீடர்கள், ``உம் இல்லத்தின் மீதுள்ள ஆர்வம் என்னை எரித்து விடும்'' என்று மறைநூலில் எழுதியுள்ளதை நினைவுகூர்ந்தார்கள். யூதர்கள் அவரைப் பார்த்து, ``இவற்றையெல்லாம் செய்ய உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன?'' என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக அவர்களிடம், ``இக்கோவிலை இடித்து விடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்'' என்றார். அப்போது யூதர்கள், ``இந்தக் கோவிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே! நீர் மூன்றே நாளில் இதைக் கட்டி எழுப்பிவிடுவீரோ?'' என்று கேட்டார்கள். ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலைப் பற்றியே பேசினார். அவர் இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட போது அவருடைய சீடர் அவர் இவ்வாறு சொல்லியிருந்ததை நினைவுகூர்ந்து, மறைநூலையும் இயேசுவின் கூற்றையும் நம்பினர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்'' (யோவான் 2:16)

தொன்றுதொட்டே மக்கள் தாங்கள் வழிபடும் கடவுளுக்குக் கோவில்கள் எழுப்பிச் சிறப்பித்துள்ளனர். இஸ்ரயேல் மக்கள் எருசலேமில் கோவில் அமைத்து யாவே கடவுளை வழிபட்டனர். உண்மையிலேயே கடவுள் உறைகின்ற இல்லமாக அக்கோவில் அமைந்தது. இயேசு எருசலேம் கோவிலுக்குப் பலமுறை சென்றிருக்க வேண்டும். ஒருநாள் அவர் கோவிலுக்குச் செல்லும் வேளையில் அங்கு விரும்பத்தகாத செயல்கள் நிகழ்வதைக் காண்கிறார். ஆடுமாடுகளையும் புறாக்களையும் விற்கின்றவர்கள் ஒருபக்கம், நாணயம் மாற்றுவதில் ஈடுபடுவோர் மறுபக்கம் என்று கோவிலில் ஒரே சந்தடி நிலவுகிறது. கடவுளை வழிபடுவதற்கு என ஒதுக்கப்பட்ட இடம் ஒரு சந்தைக் கூடம் போல மாறிவிட்டதை இயேசு கடிந்துகொள்கிறார்: ''என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்'' (யோவான் 2:16) என்று கூறி, இயேசு கோவிலிலிருந்து எல்லாரையும் துரத்தியடிக்கின்றார்.

இயேசுவின் இச்செயலை விமர்சிக்கும் சிலர் இயேசு வன்முறையில் ஈடுபட்டார் எனவும், தேவைப்பட்டால் வன்முறையில் நாமும் ஈடுபடலாம் எனவும் வாதாடுவர். ஆனால் வன்முறை என்றால் பிறருடைய உயிருக்கோ உடைமைக்கோ அழிவு கொணர்வது என நாம் பொருள்கொண்டால் இயேசு அத்தகைய வன்முறையில் ஈடுபடவில்லை. என்றாலும், கடவுளின் இல்லம் கள்வர் குகைபோல் ஆவதையும் இயேசு அனுமதிக்கவில்லை. எனவே, இயேசு கண்டிப்போடு செயல்பட்டார் என்பதில் ஐயமில்லை. இன்னொரு கோணத்திலிருந்து பார்த்தால் இயேசு தம் உடலைக் கோவிலுக்கு ஒப்பிட்டுப் பேசுகிறார் (காண்க: யோவான் 2:21). இயேசுவிடத்தில் கடவுள் குடிகொண்டிருந்தார் என்பதே இதன் பொருள். கடவுள் தம் சாயலாக நம்மை உருவாக்கியிருக்கின்றார். எனவே நாம் அனைவரும் கடவுளின் இல்லம், கடவுள் உறைகின்ற கோவில். தூய பவுல் இவ்வுண்மையை அழகாக எடுத்துரைக்கிறார்: ''நீங்கள் கடவுளுடைய கோவிலென்று...உங்களுக்குத் தெரியாதா?'' (1 கொரி 3:16). கடவுளின் கோவிலாக மனிதர் உள்ளனர் என்னும் உண்மை ஆழமானது. மனிதருக்கு நாம் தீங்கிழைக்கும்போது கடவுளையே பழிக்கிறோம் எனலாம். மனிதர் கடவுளின் அன்புப் படைப்புக்கள் என்னும் உண்மையை நாம் ஏற்று அதற்கேற்ப மனிதரை மதித்து நடந்தால் கடவுளுக்கே மாட்சி அளிக்கின்றோம். கோவில் என்பது கல்லாலும் மண்ணாலும் ஆன கட்டடம் மட்டும் அல்ல, உயிருள்ள மனிதரே கடவுள் உறையும் இல்லமாக உள்ளனர் என்பதை உணர்வோர் கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே நிலவுகின்ற நெருங்கிய உறவைப் புரிந்துகொள்வர்.

மன்றாட்டு:

இறைவா, நீர் எங்கள் இதயங்களில் வாழ்கின்றீர் என்பதை ஆழ உணர்ந்திட அருள்தாரும்.