யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)






பொதுக்காலம் 31வது வாரம் வெள்ளிக்கிழமை
2015-11-06




முதல் வாசகம்

கடவுளின் நற்செய்தியை அறிவிப்பதே என் குருத்துவப் பணி.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 15: 14-21

என் சகோதரர் சகோதரிகளே, நீங்கள் நன்னயம் நிறைந்தவர்களாயும், எல்லா அறிவும் நிரம்பப் பெற்றவர்களாயும், ஒருவர் மற்றவரை அறிவுறுத்தக் கூடியவர்களாயும் இருக்கிறீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன். ஆயினும் உங்களுக்கு நினைவூட்டும் வகையில் சிலவற்றை இக்கடிதத்தில் மிகத் துணிவோடு எழுதியுள்ளேன். நான் கடவுளின் அருளைப் பெற்றவன் என்பதால்தான் அவ்வாறு எழுதினேன். அந்த அருள்தான் என்னைப் பிற இனத்தாருக்குப் பணி செய்யக் கிறிஸ்து இயேசுவின் ஊழியனாக்கிற்று. பிற இனத்தார் தூய ஆவியால் அர்ப்பணிக்கப்பட்ட, கடவுளுக்கு உகந்த காணிக்கையாகும்படி அவர்களுக்குக் கடவுளின் நற்செய்தியை அறிவிப்பதே என் குருத்துவப் பணி. ஆகையால், கடவுளுக்காகச் செய்யும் இந்தப் பணியை முன்னிட்டு, கிறிஸ்து இயேசுவுக்குரியவனாகிய நான் பெருமை பாராட்டிக்கொள்ள இடமுண்டு. பிற இனத்தார் தமக்குக் கீழ்ப்படியும் பொருட்டுக் கிறிஸ்து என் வழியாய்ச் சொல்லாலும் செயலாலும், அரும் அடையாளங்கள், அருஞ் செயல்களின் வல்லமையாலும், கடவுளின் ஆவியின் வல்லமையாலும் செய்து முடித்தவற்றைத் தவிர வேறெதைப் பற்றியும் பேச நான் துணியமாட்டேன். இவ்வாறு, எருசலேம் தொடங்கி இல்லிரிக்கம் மாநிலம் வரை எங்கும் சுற்றிக் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கும் பணியை முடித்துவிட்டேன். கிறிஸ்துவின் பெயரைக் கேள்விப்படாத இடங்களில் மட்டும் நற்செய்தி அறிவிப்பதே என் நோக்கமாய் இருந்தது. ஏனெனில் வேறொருவர் இட்ட அடித்தளத்தின்மேல் கட்டி எழுப்ப நான் விரும்பவில்லை. ஆனால், ``தங்களுக்குச் சொல்லப்படாததை அவர்கள் காண்பர்; தாங்கள் கேள்விப் படாததை அவர்கள் புரிந்துகொள்வர்.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பிற இனத்தார் கண் முன்னே ஆண்டவர் மீட்பை வெளிப்படுத்தினார்.
திருப்பாடல்கள் 98: 1-4

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி

2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். 3ய இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். பல்லவி

3b உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். 4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் முன்மதியுள்ளவர்களாய் நடந்து கொள்ளுகிறார்கள். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 1-8

அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குக் கூறியது: ``செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப்பட்டது. தலைவர் அவரைக் கூப்பிட்டு, `உம்மைப் பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது' என்று அவரிடம் கூறினார். அந்த வீட்டுப் பொறுப்பாளர், `நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கிவிடப்போகிறாரே! மண் வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது. வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும்போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்ய வேண்டும் என எனக்குத் தெரியும்' என்று அவர் தமக்குள்ளே சொல்லிக் கொண்டார். பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். முதலாவது வந்தவரிடம், `நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?' என்று கேட்டார். அதற்கு அவர், `நூறு குடம் எண்ணெய்' என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், `இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும்' என்றார். பின்பு அடுத்தவரிடம், `நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?' என்று கேட்டார். அதற்கு அவர், `நூறு மூடை கோதுமை' என்றார். அவர், `இதோ, உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும்' என்றார். நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல் பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார். ஏனெனில், ஒளியின் மக்களை விட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்து கொள்ளுகிறார்கள்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''உம்மைப் பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும்'' (லூக்கா 16:2)

இயேசு கூறிய உவமைகளில் பல வகைகள் உண்டு. சில உவமைகளில் இயற்கை சார்ந்த உருவகங்கள் உள்ளன. மழை, காற்று, புயல், மண், பாறை, கோதுமை, திராட்சைத் தோட்டம், பறவைகள் போன்ற உருவகங்களை இவண் குறிப்பிடலாம். வேறு சில உவமைகள் மனித உறவுகளையும் தொடர்புகளையும் பற்றியவை. நல்ல சமாரியர், காணாமற்போன மகன், ஏழை இலாசர் போன்ற உவமைகள் இவ்வகையைச் சார்ந்தவை. இவ்வாறு மனித செயல்பாடுகள் பற்றிய உவமைகளில் ''வீட்டுப் பொறுப்பாளர்'' பற்றி இயேசு கூறிய உவமைகள் சிறப்பு வாய்ந்தவை. கடவுள் மனிதரிடம் பொறுப்புகளை ஒப்படைக்கிறார். பொறுப்புகளைப் பெற்ற மனிதர் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பினை ஆற்றுவதில் பொறுப்போடு செயல்பட வேண்டும். ''உம்மைப் பற்றி நான் கேள்விப்படுவதென்ன?'' என்று கேட்ட வீட்டுத் தலைவர், ''உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும்'' (காண்க: லூக்கா 16:2) என்று வீட்டுப் பொறுப்பாளரிடம் கூறுவது கடவுளுக்கும் நமக்கும் இடையே நிலவுகின்ற உறவைப் பிரதிபலிக்கிறது. கடவுளிடமிருந்து நாம் பெறுகின்ற பொறுப்பு பிற மனிதர் நமக்குத் தருகின்ற பொறுப்பு மட்டுமல்ல, மாறாக, நம்மைத் தம் சாயலில் உருவாக்கி நம்மைத் தம் பிள்ளைகளாக ஏற்கின்ற கடவுள் நாம் இவ்வுலகில் அவருடைய பதிலாள்களாக இருந்து அவருடைய பெயரால் நம் பொறுப்பைச் செவ்வனே ஆற்ற வேண்டும் என்றுதான் விரும்புகிறார். எனவே, கடவுளிடமிருந்து நாம் பெறுகின்ற பொறுப்பு ஒரு கொடை ஆகும். நன்றியோடு அக்கொடையைப் பெறுகின்ற நாம் அதை நன்முறையில் பயன்படுத்த அழைக்கப்படுகிறோம்.

பொறுப்போடு செயல்படுகின்ற மனிதர் தாம் புரிகின்ற செயல்களின் விளைவுகளை எண்ணிப் பார்ப்பர். நல் விளைவிகளைக் கொணரும் செயல்களுக்கும் தீய விளைவுகளைக் கொணரும் செயல்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டினையும் தெளிவாக உணர்வர். இவ்வாறு முன்மதியோடு செயல்பட்டால் நாம் கடவுளிடம் கணக்கு ஒப்படைக்கும் நேரம் வரும்போது அஞ்ச வேண்டியதில்லை. ஆனால், பொறுப்பற்ற விதத்தில் செயல்படுவோர் தாம் புரிகின்ற தவற்றிற்குத் தாங்கள் பொறுப்பல்ல என்று கூற முடியாது. ஏனென்றால், கடவுள் நாம் சுதந்திரமாகச் செயல்படுவதற்கான சக்தியை நமக்கு அளித்து, நாம் அவருடைய விருப்பத்திற்கு ஏற்ப, முன்மதியோடு செயல்பட வேண்டும் என நம்மை அழைக்கிறார். இச்வாலை ஏற்க நாம் தயாரா?

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் பொறுப்புணர்வோடும் முன்மதியோடும் செயல்பட அருள்தாரும்.