யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 29வது வாரம் சனிக்கிழமை
2015-10-24

புனித அந்தோனி மரிய கிளாரெட்




முதல் வாசகம்

உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர்பெறச் செய்வார்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 1-11

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருப்போருக்கு இனித் தண்டனைத் தீர்ப்பே கிடையாது. ஏனெனில், கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருப்போருக்கு வாழ்வு தரும் தூய ஆவியின் சட்டம் பாவம், சாவு என்பவற்றுக்கு உள்ளாக்கும் சட்டத்தினின்று என்னை விடுவித்துவிட்டது. ஊனியல்பின் காரணமாய் வலுவற்றிருந்த திருச்சட்டம் செய்ய முடியாத ஒன்றைக் கடவுள் செய்தார். அதாவது, ஊனியல்பு கொண்ட மனிதரைப் போன்றவராய்த் தம் சொந்த மகனை அனுப்பி மனிதரிடமுள்ள பாவத்திற்கு முடிவு கட்டினார். ஊனியல்புக்கேற்ப நடவாமல், ஆவிக்குரிய இயல்புக்கேற்ப நடக்கும் நாம் திருச்சட்டத்தின் நெறிகளை நிறைவேற்ற வேண்டும் என்று அவ்வாறு செய்தார். ஏனெனில், ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோரின் நாட்டமெல்லாம் அந்த இயல்புக்கு உரியவற்றின் மீதே இருக்கும்; ஆனால் ஆவிக்குரிய இயல்புக்கு ஏற்ப வாழ்வோரின் நாட்டம் ஆவிக்கு உரியவற்றின் மீதே இருக்கும். ஊனியல் மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது சாவே; ஆவிக்குரிய மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது வாழ்வும் அமைதியும் ஆகும். ஏனெனில் ஊனியல் மனநிலை கடவுளுக்குப் பகையானது; அது கடவுளின் சட்டத்திற்குக் கட்டுப்பட்டிருப்பதில்லை, இருக்கவும் முடியாது. ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோர் கடவுளுக்கு உகந்தவர்களாய் இருக்க முடியாது. ஆனால் கடவுளின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருந்தால், நீங்கள் ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல. பாவத்தின் விளைவாக உங்கள் உடல் செத்ததாயினும், கிறிஸ்து உங்களுள் இருந்தால், நீங்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுவீர்கள்; அதன் பயனாகத் தூய ஆவி உங்களுக்குள் உயிராய் இருக்கும். மேலும், இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர்பெறச் செய்வார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

கடவுள் முகத்தைத் தேடுவோரின் தலைமுறையினர் இவர்களே.
திருப்பாடல்கள் 24: 1-2. 3-4. 5-6

1 மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம். 2 ஏனெனில், அவரே கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. -பல்லவி

3 ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்? 4 கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். -பல்லவி

5 இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார். 6 அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே; யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள்'' அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-9

அக்காலத்தில் சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக்கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர். அவர் அவர்களிடம் மறுமொழியாக, ``இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும் விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள். சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப் பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும் விடக் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள்'' என்றார். மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார்: ``ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை. எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், `பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்திமரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?' என்றார். தொழிலாளர் மறுமொழியாக, `ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டு வையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எரு போடுவேன். அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம்' என்று அவரிடம் கூறினார்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

திருந்துவதே நல் வாழ்வு

"பண்ணின அநியாயத்திற்கு இப்ப வாங்கி கட்டிக்கொள்கிறான்" இது பிறரைப்பற்றி பலர் சொல்லும் புரளி. ஆனால் இத்தகையோர் தன்னிலை உணர்வதில்லை. ஒருவனைப் பிடிக்கவில்;லை என்றால் ஊதிப்பெருக்கி உலை வைத்துவிடுவர்.

இப்படித்தான் கலிலேய யூதரைப் பிடிக்காத எருசலேம் யூதர்கள் இயேசுவிடம் வந்து, "பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான். இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும் விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா?" என்று வரலாற்றில் நடந்த ஒரு நிகழ்சியை சுட்டிக்காட்டி கேட்டனர்.

இதற்கு மறுமொழியாக இயேசுவும்; இன்னொரு வரலாற்று நிகழ்ச்சியை மேற்கோளாகக் காட்டுகிறார். யோவா 5'2-3 , நெகே 3'15ல் சொல்லப்படுகின்ற குளத்தின் மண்டபத்தின் கோபுரம் விழுந்து 18 பேர் இறந்தார்களே, அவர்களும் பாவிகளா என்று குருக்குக் கேள்வி கேட்கிறார்.

அடுத்தவனைப்பற்றி பேசும்போது அவனது பெருமை, திறமை, நன்மைகளைப் பேசு. உன்னைப்பற்றி பேசும்போது உன் பலவீனங்கள், தவறுகள், குறைகளை மனதில் கொள். இரண்டையும் செய்யும்முன் இறைவனை உன் முன் நிறுத்திக்கொள். இயேசு சொன்ன சொற்கள்,எல்லோரும் பாவிகள், எல்லோரும்; குற்றவாளிகள். மனமாற்றம் பெறுதலே அழிவிலிருந்து காத்துக்கொள்ள சிறந்த வழி.

மன்றாட்டு:

இறைவா, எங்களோடு தொடர்ந்து உறவாடுகின்ற உம்மை எங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் கண்டுகொள்ள அருள்தாரும்.