யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 29வது வாரம் செவ்வாய்க்கிழமை
2015-10-20




முதல் வாசகம்

ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும் வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பாய் அமைந்தது.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 12, 15, 17-19. 20-21

சகோதரர் சகோதரிகளே, ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது; அந்தப் பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது. அதுபோலவே, எல்லா மனிதரும் பாவம் செய்ததால், எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது. எவ்வாறெனில், ஒருவர் செய்த குற்றத்தால் பலரும் இறந்தனர். ஆனால் கடவுளின் அருளும் இயேசு கிறிஸ்து என்னும் ஒரே மனிதரின் வழியாய் வரும் அருள்கொடையும் பலருக்கும் மிகுதியாய்க் கிடைத்தது. மேலும் ஒருவர் குற்றத்தாலே, அந்த ஒருவர் வழியாகச் சாவு ஆட்சி செலுத்தினதென்றால் அருள்பெருக்கையும் கடவுளுக்கு ஏற்புடையவராகும் கொடையையும் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவர் வழியாக அடைந்துகொண்டவர்கள் வாழ்வு பெற்று ஆட்சி செலுத்துவார்கள் என இன்னும் மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ? ஆகவே ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனைத் தீர்ப்பாய் அமைந்ததுபோல், ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும் வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பாய் அமைந்தது. ஒரு மனிதரின் கீழ்ப் படியாமையால் பலர் பாவிகளானதுபோல், ஒருவரின் கீழ்ப்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள். ஆனால் பாவம் பெருகிய இடத்தில் அருள் பொங்கி வழிந்தது. இவ்வாறு, சாவின் வழியாய்ப் பாவம் ஆட்சி செலுத்தியதுபோல், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய் அருள் ஆட்சி செய்கிறது; அந்த அருள்தான் மனிதர்களைக் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக்கி, நிலைவாழ்வு பெற வழிவகுக்கிறது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்ற இதோ வருகின்றேன்.
திருப்பாடல்கள் 40: 6-7, 7-8. 9. 16

6 பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரி பலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர். 7 எனவே, `இதோ வருகின்றேன்.' பல்லவி

7 என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது; 8 என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது என்றேன் நான். பல்லவி

9 என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக்கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர். பல்லவி

16 உம்மைத் தேடுவோர் அனைவரும் உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்! நீர் அருளும் மீட்பில் நாட்டங்கொள்வோர், `ஆண்டவர் எத்துணைப் பெரியவர்!' என்று எப்போதும் சொல்லட்டும்! பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! `உங்கள் இடையை வரிந்துகட்டிக்கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்துகொண்டிருக்கட்டும். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 35-38

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: ``உங்கள் இடையை வரிந்துகட்டிக்கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்துகொண்டிருக்கட்டும். திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள். தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறுபெற்றவர்கள். அவர் தம் இடையை வரிந்து கட்டிக்கொண்டு அவர்களைப் பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும் மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாயிருப்பதைக் காண்பாரானால் அவர்கள் பேறு பெற்றவர்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறுபெற்றவர்கள்'' (லூக்கா 12:37)

நற்செய்தி நூல்களில் குறிப்பிடப்படுகின்ற நற்பண்புகளுள் சிறப்பான ஒன்று ''விழித்திருக்கும் பண்பு'' ஆகும். தூக்கம் நம் கண்களைத் தழுவும்போது கண் இமைகள் தாமாகவே மூடிக்கொள்கின்றன. ஆழ்ந்த தூக்கம் வந்துவிட்டால் நாம் நம்மைச் சூழ்ந்து நடப்பது என்னவென்பதையே அறியாமல் போய்விடுவோம். இதனால்தான் தூக்கத்தைச் சாவுக்கு ஒப்பிடுவது வழக்கம். வள்ளுவரும் ''உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி விழிப்பது போலும் பிறப்பு'' (குறள் 339) என்றுரைக்கிறார். விழித்திருக்கும்போது கூட சில சமயங்களில் நாம் பகல் கனவு காண்பதுண்டு. அதுவும் ஒருவிதத்தில் தூக்கநிலை போன்றதே. இயேசு நம்மிடம் எதிர்பார்க்கின்ற விழிப்பு நம் உள்ளத்தில் நாம் தூக்க மயக்கம் கொண்டவர்கள் போல இராமல், நமது வாழ்வில் கடவுளின் வல்லமை எவ்வாறு செயலாற்றுகிறது என்பதை உணர்ந்தவர்களாய் வாழ வேண்டும் என்பதைக் குறிக்கிறது. விழிப்பாய் இருப்போர் கடவுளின் உடனிருப்பில் எப்போதுமே நிலைத்திருப்பர். கடவுள் நம்மைவிட்டு அகன்றுபோவது போலத் தெரிந்தாலும் அவர் ஒருபோதுமே நம்மை விட்டுவிட்டுச் சென்றுவிடவில்லை என்பதை நாம் உணர்ந்தால் அவருடைய கண்பார்வையின்கீழ் நம் சொல், செயல், சிந்தனை அனைத்தும் நிகழ்கிறது என்பதை உள்ளத்தின் ஆழத்தில் தெரிந்துகொள்வோம்.

விழித்திருக்கும் பண்பு நம்மிடம் துலங்கும்போது நாம் நம் தலைவராகிய கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பதை மகிழ்ச்சியோடு செய்வோம். நாம் ஆற்றவேண்டிய பணியும் ஒரு சுமையாகத் தெரியாது. நம்மை அன்புசெய்கின்ற கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கின்ற அன்புப் பணியை நாம் மனமுவந்து செய்யும்போது நாம் உண்மையிலேயே விழித்திருக்கிறோம் எனலாம். அப்போது வீட்டுத் தலைவராகிய கடவுளே நமக்குப் ''பணிவிடை செய்வார்''; நம்மை விருந்தினர் நிலைக்கு உயர்த்தித் தம் அன்புப் பிணைப்பில் நம்மை இணைத்திடுவார்; நமது உள்ளமும் மகிழ்ச்சியால் நிறையும் (காண்க: லூக்கா 12:37).

மன்றாட்டு:

இறைவா, எங்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் உம் வருகை நிகழ்கிறது என்பதை உணர்ந்து நாங்கள் விழிப்புடையோராய் வாழ அருள்தாரும்.