யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 28வது வாரம் வியாழக்கிழமை
2015-10-15

குழந்தை இயேசுவின் புனித தெரேசா




முதல் வாசகம்

அவர் நீதியுள்ளவர். இயேசுவின் மீது நம்பிக்கை கொள்வோரைத் தமக்கு ஏற்புடையவராக்கி வருகிறார்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 21-30

சகோதரர் சகோதரிகளே, கடவுள் மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் செயலுக்கும் திருச்சட்டத்துக்கும் தொடர்பில்லை என்பது வெளியாக்கப்பட்டுள்ளது; திருச்சட்டமும் இறைவாக்குகளும் இதற்குச் சான்று பகர்கின்றன. இயேசு கிறிஸ்துவின் மீது கொள்ளும் நம்பிக்கையின் வழியாகக் கடவுள் மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்குகிறார்; நம்பிக்கை கொள்வோர் அனைவரையுமே அவர் ஏற்புடையவராக்குகிறார். அவர் வேறுபாடு காட்டுவது இல்லை. ஏனெனில், எல்லாருமே பாவம் செய்து கடவுள் கொடுத்த மேன்மையை இழந்து போயினர். ஆயினும் அனைவரும் கிறிஸ்து இயேசு நிறைவேற்றிய மீட்புச் செயலின்மூலம் கடவுளுடைய அருளால் இலவசமாய் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுகின்றனர். இரத்தம் சிந்தி மனிதருடைய பாவத்துக்குக் கழுவாய் ஆகுமாறு இயேசுவைக் கடவுள் நியமித்தார். அவரிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவே அவ்வாறு செய்தார். கடவுள் கடந்த காலத்தில் மனிதர் செய்த பாவங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். இவ்வாறு மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் முறையை அவர் காட்டினார். இக்காலத்தில் தமது நீதியைக் கடவுள் பொறுமையோடு காட்டி வருகிறார். ஆம், அவர் நீதியுள்ளவர். இயேசுவின் மீது நம்பிக்கை கொள்வோரைத் தமக்கு ஏற்புடையவராக்கி வருகிறார். அப்படியிருக்க, பெருமை பாராட்ட இடமேது? இடமில்லை. எந்த அடிப்படையில் பெருமை பாராட்ட இடமில்லை? செயல்களின் அடிப்படையிலா? இல்லை; நம்பிக்கையின் அடிப்படையில்தான். ஏனெனில் திருச்சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல, இயேசுவின் மீது வைக்கும் நம்பிக்கையின் வாயிலாகவே எவரும் கடவுளுக்கு ஏற்புடையவராக முடியும் எனக் கருதுகிறோம். கடவுள் யூதருக்கு மட்டுமா கடவுள்? பிற இனத்தாருக்கும் அவர் கடவுள் அல்லவா? ஆம், பிற இனத்தாருக்கும் அவரே கடவுள். ஏனெனில் கடவுள் ஒருவரே. விருத்தசேதனம் பெற்றவர்களாயினும் விருத்தசேதனம் பெறாதவர்களாயினும், இயேசுவின் மீது கொள்ளும் நம்பிக்கையின் அடிப்படையில் யாவரையும் கடவுள் தமக்கு ஏற்புடையவராக்குகிறார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பேரன்பும் மீட்பும் உடைய ஆண்டவரையே நம்பியிரு
திருப்பாடல்கள் 130: 1-2. 3-4. 5-6

1 ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்; 2 ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும். -பல்லவி

3 ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்கமுடியும்? 4 நீரோ மன்னிப்பு அளிப்பவர்; மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர். -பல்லவி

5 ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன். என் நெஞ்சம் காத்திருக்கின்றது; அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். 6 விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரை விட, ஆம், விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரை விட, என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது. -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆம், நான் உங்களுக்குச் சொல்கிறேன், இந்த தலைமுறையினரிடம் கணக்குக் கேட்கப்படும். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

புனித லூக்காஸ் எழுதிய நற்செய்தியில் இருந்து வாசகம் 11;47-54

இக்காலத்தில் யேசு "ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் இறைவாக்கினருக்கு நினைவுச் சின்னங்கள் எழுப்புகிறீர்கள். ஆனால் அவர்களைக் கொலை செய்தவர்கள் உங்கள் மூதாதையர்களே. 48 உங்கள் மூதாதையரின் செயல்களுக்கு நீங்கள் சாட்சிகளாய் இருக்கிறீர்கள்; அவற்றுக்கு உடன்பட்டும் இருக்கிறீர்கள். அவர்கள் கொலை செய்தார்கள்; நீங்கள் நினைவுச் சின்னம் எழுப்புகிறீர்கள். 49 இதை முன்னிட்டே கடவுளின் ஞானம் இவ்வாறு கூறுகிறது; நான் அவர்களிடம் இறைவாக்கினரையும் திருத்தூதரையும் அனுப்புவேன். அவர்களுள் சிலரைக் கொலை செய்வார்கள்; அவர்களுள் சிலரைத் துன்புறுத்துவார்கள். 50 ஆபேலின் இரத்தம்முதல் பலிபீடத்திற்கும் தூயகத்திற்கும் நடுவே கொலை செய்யப்பட்ட இறைவாக்கினர் அனைவரின் இரத்தத்திற்காகவும் இந்தத் தலைமுறையினரிடம் கணக்குக் கேட்கப்படும். 51 ஆம், நான் உங்களுக்குச் சொல்கிறேன், இந்த தலைமுறையினரிடம் கணக்குக் கேட்கப்படும். 52 "ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்குக் கேடு! ஏனெனில் அறிவுக் களஞ்சியத்தின் திறவுகோலை நீங்கள் எடுத்துக்கொண்டீர்கள். நீங்களும் நுழைவதில்லை; நுழைவோரையும் தடுக்கிறீர்கள்" என்றார். 53 இயேசு அங்கிருந்து புறப்பட்டபோது மறைநூல் அறிஞரும் பரிசேயரும் பகைமையுணர்வு மிகுந்தவராய் 54 அவரது பேச்சில் அவரைச் சிக்கவைக்குமாறு பல கேள்விகளைக் கேட்டனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் இறைவாக்கினருக்கு நினைவுச் சின்னங்கள் எழுப்புகிறீர்கள். ஆனால் அவர்களைக் கொலைசெய்தவர்கள் உங்கள் மூதாதையர்களே' என்றார்'' (லூக்கா 11:57)

தனி மனிதரும் சமூகங்களும் எத்தகைய வாழ்க்கை நெறியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை அவர்களுக்குக் கடவுளின் பெயரால் உணர்த்தியவர்கள் இறைவாக்கினர்கள். அவர்கள் ஒருவிதத்தில் மனித குலத்தின் ''மனச் சான்றாக'' விளங்குபவர்கள். இஸ்ரயேல் மக்களின் வரலாற்றில் இறைவாக்கினர் வழியாகக் கடவுள் பேசினார். அதுபோலவே இன்றைய உலகிலும் மனிதரின் மனச்சான்றைத் தொட்டுப் பேசிய மகான்கள் வாழ்ந்துள்ளார்கள். தீண்டாமை ஒழிய வேண்டும் என்று பாடுபட்ட காந்தியடிகள், கருப்பரானாலும் வெள்ளையரானாலும் எல்லாருமே மனிதர் என்னும் முறையில் சம உரிமை கொண்டவர்களே என காந்தி வழியில் நின்று போராடிய மார்ட்டின் லூத்தர் கிங், ஏழையரின் முகத்தில் இயேசுவைக் கண்ட அன்னை தெரேசா போன்றோர் இக்கால இறைவாக்கினர்கள். சாவுக்குப் பிறகும் அவர்கள் நம்மிடையே வாழ்ந்துவருகிறார்கள் எனலாம். ஆனால் கடந்த கால இறைவாக்கினரைப் போற்றிவிட்டு, அவர்கள் கற்பித்ததைக் காற்றில் விட்டுவிட்டால் நமக்கு என்ன பயன்?

இந்த உண்மையைத்தான் இயேசு உணர்த்தினார். இறைவாக்கினர் உயிர் வாழ்ந்த போது அவர்களுடைய போதனையை ஏற்காமல் அவர்களைத் துன்புறுத்திக் கொன்றுபோட்டார்கள்; அத்தகைய கொடிய செயலைப் புரிந்தவர்களின் வாரிசுகளாக வந்தவர்களோ முற்காலத்தில் இகழப்பட்ட இறைவாக்கினர்களுக்கு நினைவுச் சின்னங்கள் எழுப்புகிறார்கள். இந்த முரண்பாட்டை இயேசு சுட்டிக்காட்டுகிறார். இன்றும்கூட, காந்தியடிகளின் சிலைகளுக்குத் தவறாமல் மாலை அணிவிக்கிறவர்கள் காந்தி வழங்கிய போதனையைக் காற்றில் பறக்க விடுவதை நாம் காணவில்லையா? சடங்குமுறைக்காகத் தலைவர்களுக்கு மரியாதை செலுத்துபவர்கள் அத்தலைவர்கள் காட்டிய நல்வழியை விட்டு விலகிச் செல்வதில்லையா? இந்த முரண்பாடு நம்மோடு இருப்பதை நாம் கருத வேண்டும். இயேசு காட்டிய வழியில் நடப்பதற்கு மாறாக, அவரைப் பெயரளவில் போற்றி, வாயாரப் புகழ்ந்து பாடுவதோடு நின்றுவிடாமல் இறைவார்த்தையைச் செயல்படுத்துவோராக நாம் வாழ்ந்திட வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் சொற்படி நாங்கள் வாழ்ந்திட அருள்தாரும்.