யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 27வது வாரம் புதன்கிழமை
2015-10-07

திருச்செபமாலை அன்னை




முதல் வாசகம்

இயேசுவின் சகோதரர்களோடும், அவருடைய தாய் மரியாவோடும் இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்;கொண்டிருந்தார்கள்
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம்1;12-14

12 பின்பு அவர்கள் ஒலிவமலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பினார்கள். இம்மலை எருசலேமுக்கு அருகில், ஓய்வுநாளில் செல்லக்கூடிய தொலையில் உள்ளது. 13 பேதுரு, யோவான், யாக்கோபு, அந்திரேயா, பிலிப்பு, தோமா, பர்த்தலமேயு, மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதியான சீமோன், யாக்கோபின் மகன் யூதா ஆகியோர் திரும்பி வந்தபின் தாங்கள் தங்கியிருந்த மேல்மாடிக்குச் சென்றார்கள். 14 அவர்கள் அனைவரும் சில பெண்களோடும், இயேசுவின் சகோதரர்களோடும், அவருடைய தாய் மரியாவோடும் இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்;கொண்டிருந்தார்கள்

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

"ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது.
லூக்கா 1;47-55

47 "ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது.48 ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்.பல்லவி

49 ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர்.50 அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார்.51 அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார்.பல்லவி

52 வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.53 பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.பல்லவி

54 மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவி;ல் கொண்டுள்ளார்;55 தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார் ".பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! , "நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்1;26-38

26 ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். 27 அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. 28 வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, "அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" என்றார். 29 இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார். 30 வானதூதர் அவரைப் பார்த்து, "மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். 31 இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். 32 அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். 33 அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது" என்றார். 34 அதற்கு மரியா வானதூதரிடம், "இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!" என்றார். 35 வானதூதர் அவரிடம், "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். 36 உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். 37 ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" என்றார். 38 பின்னர் மரியா, "நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு சீடர்களிடம், 'நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள்: தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப் பெறுக! உமது ஆட்சி வருக!...' என்றார்'' (லூக்கா 11:2)

''கர்த்தர் கற்பித்த செபம்'' எனவும் ''இயேசு கற்றுத் தந்த இறைவேண்டல்'' எனவும் அழைக்கப்படுகின்ற மன்றாட்டு மத்தேயு நற்செய்தியிலும் லூக்கா நற்செய்தியிலும் சிறிது மாறுபட்ட வடிவத்தில் உள்ளன (காண்க: மத் 6:9-15; லூக் 11:2-4). கடவுளை நாம் ''தந்தை'' என அழைக்கும்படி இயேசு கேட்கின்றார். இயேசுவே கடவுளைத் ''தந்தை'' எனவும் ''என் தந்தை'' எனவும் பட தருணங்களில் அழைக்கிறார். மிக நெருக்கமான உறவை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்த இச்சொல் ''அப்பா'' என்னும் பொருள் தருவது. இயேசு பேசிய அரேமிய மொழிச் சொல்லும் ''அப்பா'' என்னும் வடிவம் கொண்டதே. கடவுளைத் தந்தை என அழைப்பதன் பொருள் மூன்று விதங்களில் வெளிப்படுகிறது: அதாவது, கடவுள் அனைத்தையும் படைத்தவர், அனைத்தையும் ஆள்பவர், அனைத்தையும் பேணிக்காப்பவர். இவ்வாறு மனிதருக்கு அனைத்து நலன்களையும் அளித்து, அவர்களைக் காப்பவர் என்பதால் கடவுளைத் தந்தை என அழைப்பது பொருத்தமே. உரோமை மன்னர்களும் ''நாட்டுத் தந்தை'' என அழைக்கப்பட்டார்கள். ஆனால், ஆண்வழி சமுதாயத்தில் ஆணாதிக்கம் நிலவிய பின்னணியில் கடவுளைத் தந்தை என அழைத்து, அதிலிருந்து ஆண்கள் பெண்களை அடக்கி ஆள்பவர்கள் என நாம் பொருள்கொண்டு, கடவுளை அப்பாணியில் ஓர் ஆணாகவும் தந்தையாகவும் உருவகிப்பது தவறாகும். ஏனென்றால் விவிலியம் காட்டுகின்ற கடவுள் இத்தகைய ஆணாதிக்கக் கடவுள் அல்ல.

கடவுள் நம் தந்தை என்பதன் உண்மைப் பொருள் அவர் நமக்கு ஊற்றாகவும் தோற்றுவாயாகவும் இருக்கிறார் என்பதும், நம்மை அன்போடு பராமரித்துக் காக்கிறார் என்பதும் ஆகும். இப்பண்புகளை நாம் பெண்மைக்கும் ஏற்றி உரைக்கலாம். எனவே கடவுள் நமக்குத் தந்தையும் தாயுமாக இருக்கிறார் என நாம் கூற முடியும். அது மட்டுமல்ல, கடவுள் தம் ஆட்சியில் நாம் பங்கேற்க வேண்டும் என்றால் ஒரு சிறு குழந்தைபோல நாம் மாற வேண்டும் எனக் கேட்கின்றார். எனவே, ஆட்சி அதிகாரமும் அடக்குமுறையும் கடவுளின் பண்பல்ல, மாறாக, அன்போடு அனைவரையும் அரவணைத்து, சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டோரையும் உரிமை மறுக்கப்பட்டோரையும் மதித்து ஏற்கும் பண்பே கடவுளின் உள்ளார்ந்த இயல்பு. இவ்வாறு நாம் கடவுளை உருவகித்து, அவரை அணுகும்போது நம் உள்ளத்தில் பிள்ளைக்குரிய பாசமும் பணிவும் தோன்றும். கடவுளின் பாதுகாப்பு நமக்கு எப்போதும் உண்டு என்னும் உணர்வும் நம்மில் ஆழமாக வெளிப்படும்.

மன்றாட்டு:

இறைவா, உம்மை நம்பிக்கையோடு அணுகி வந்து, பிள்ளைகளுக்குரிய பாசத்தோடு உம்மை அன்பு செய்திட அருள்தாரும்.