யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





பொதுக்காலத்தின் இருபத்தேழாம் ஞாயிறு

திருவழிபாடு ஆண்டு - B



வழியில் அவர் தம் சீடரை நோக்கி, நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?./> வழியில் அவர் தம் சீடரை நோக்கி, நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?./> வழியில் அவர் தம் சீடரை நோக்கி, நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?./> வழியில் அவர் தம் சீடரை நோக்கி, நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?./> வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி எப்பத்தா அதாவது திறக்கப்படு  என்றார்./> வழியில் அவர் தம் சீடரை நோக்கி, நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?./> வழியில் அவர் தம் சீடரை நோக்கி, நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?./> வழியில் அவர் தம் சீடரை நோக்கி, நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?./> வழியில் அவர் தம் சீடரை நோக்கி, நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?./>


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

1. தொடக்கநூல் 2: 18-24

2. எபிரேயர் 2:9-11

3. மாற்கு 10:02-16

திருப்பலி முன்னுரை

இறையாட்சிக்குரியவர்களே,

ஆண்டின் பொதுக்காலம் 27 ஆம் வார இறைவழிபாட்டில் பங்கேற்க அணியமாயிருக்கும் இறைமக்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

நாம் அனைவரும் உறவில் ஒன்றித்திருக்க இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. மனிதர்கள் எல்லோரும் கடவுளின் படைப்புகளாகிய இயற்கையோடும், மற்ற மனிதர்களோடும் ஒன்றித்து வாழ வேண்டுமென இன்றைய வாசகங்கள் எடுத்துரைக்கின்றன. சிறப்பாக அனைத்து உறவுகளுக்கும் உயிர் கொடுக்கும் திருமண உறவு பற்றி இயேசு பேசுகிறார். கணவனும் மனைவியும் அன்பில் ஒன்றித்திருக்க கடவுளால் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும் என்று இயேசு அறிவுறுத்துகிறார். அதே வேளையில், குழந்தைகளைப் போல தூய உள்ளம் கொண்டவர்களுக்கே இறையாட்சியில் இடம் கிடைக்கும் என்பதையும் அவர் தெளிவுபடுத்துகிறார். சிறு பிள்ளைகளைப் போன்று இறையாட்சியை ஏற்றுக்கொள்ளும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசகம்

முதல் வாசக முன்னுரை

இறையாட்சிக்குரியவர்களே,
இன்றைய முதல் வாசகம் முதல் மனிதனான ஆதாம் இயற்கையோடும் ஏவாளோடும் கொண்டிருந்த உறவைப் பற்றி எடுத்துரைக்கிறது. விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் பெயரிட்ட மனிதன், தனக்குத் தகுந்த ஒரு துணையைக் காணாமல் தவிப்பதை கடவுள் உணர்கிறார். எனவே ஆணுக்கு ஏற்றத் துணையாகப் பெண்ணை, கடவுள் படைத்ததைக் காண்கிறோம். கணவன், மனைவி இருவரும் ஒன்றித்து வாழ அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது. எனவே கடவுளின் திட்டத்தை நிறைவேற்றுப வர்களாக வாழும் வரம் கேட்டு, இந்த வாசகத்துக்கு செவிசாய்ப்போம்.

இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 2: 18-24

அனைத்தையும் படைத்து முடித்த பின் ஆண்டவராகிய கடவுள், ``மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன்\'\' என்றார். ஆண்டவராகிய கடவுள் மண்ணிலிருந்து எல்லாக் காட்டு விலங்குகளையும் வானத்துப் பறவைகளையும் உருவாக்கி, அவற்றிற்கு மனிதன் என்ன பெயரிடுவான் என்று பார்க்க, அவற்றை அவனிடம் கொண்டு வந்தார். உயிருள்ள ஒவ்வொன்றுக்கும் அவன் என்ன பெயரிட்டானோ அதுவே அதன் பெயராயிற்று. கால்நடைகள், வானத்துப் பறவைகள், காட்டு விலங்குகள் ஆகிய எல்லாவற்றிற்கும் மனிதன் பெயரிட்டான்; தனக்குத் தகுந்த துணையையோ மனிதன் காணவில்லை. ஆகவே ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச்செய்து, அவன் உறங்கும் பொழுது அவன் விலா எலும்பு ஒன்றை எடுத்துக்கொண்டு, எடுத்த இடத்தைச் சதையால் அடைத்தார். ஆண்டவராகிய கடவுள் தாம் மனிதனிடமிருந்து எடுத்த விலா எலும்பை ஒரு பெண்ணாக உருவாக்கி மனிதனிடம் அழைத்து வந்தார். அப்பொழுது மனிதன், ``இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள்; ஆணிடமிருந்து எடுக்கப்பட்டதால், இவள் பெண் என்று அழைக்கப்படுவாள்\'\' என்றான். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

: உம் வாழ்நாளெல்லாம் ஆண்டவர் உமக்கு ஆசி வழங்குவாராக!
திருப்பாடல் 128: 1-2. 3. 4-5. 6

ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! 2 உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! பல்லவி

3 உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். பல்லவி

4 ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். 5 ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! பல்லவி

6 நீர் உம் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காண்பீராக! இஸ்ரயேலுக்கு நலம் உண்டாவதாக! பல்லவி

இரண்டாம் வாசகம்

இரண்டாம் வாசக முன்னுரை

இறையாட்சிக்குரியவர்களே,
இன்றைய இரண்டாம் வாசகம் மனிதரோடு இயேசு கொண்டுள்ள உறவுநிலையினைப் பற்றி எடுத்துரைக்கிறது. இயேசு தன்னையேத் தாழ்த்தி, துன்பகரமான சாவுக்கு உட்படுத்திக் கொண்டதால் அவர் மாட்சி பெற்றார் என்று திருமுக ஆசிரியர் கூறுகிறார். மனிதருக்கு மீட்பின் மாட்சியை வழங்குமாறு, இறைமகன் இயேசு மனிதராக பிறந்து நமது சகோதரர் ஆனார் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். இயேசுவின் உண்மையான சகோதர, சகோதரிகளாக வாழும் வரம் கேட்டு, இந்த வாசகத்துக்கு செவிசாய்ப்போம்.

தூய்மையாக்குகிறவர், தூய்மையாக்கப்படுவோர் அனைவருக்கும் உயிர்முதல் ஒன்றே.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 2: 9-11

சகோதரர் சகோதரிகளே, நாம் காண்பதோ சிறிது காலம் வானதூதரைவிடச் சற்றுத் தாழ்ந்தவராக்கப்பட்ட இயேசுவையே. இவர் துன்புற்று இறந்ததால், மாட்சியும் மாண்பும் இவருக்கு முடியாகச் சூட்டப்பட்டதைக் காண்கிறோம். இவ்வாறு கடவுளின் அருளால் அனைவருடைய நலனுக்காகவும் இவர் சாவுக்கு உட்படவேண்டியிருந்தது. கடவுள் எல்லாவற்றையும் தமக்கென்று தாமே உண்டாக்கினார். அவர், மக்கள் பலரை மாட்சியில் பங்குகொள்ள அழைத்துச் செல்ல விரும்பிய போது, அவர்களது மீட்பைத் தொடங்கி வழிநடத்துபவரைத் துன்பங்கள் மூலம் நிறைவுள்ளவராக்கினார். இது ஏற்ற செயலே. தூய்மை யாக்குகிறவர், தூய்மையாக்கப்படுவோர் அனைவருக்கும் உயிர்முதல் ஒன்றே. இதனால் இயேசு இவர்களைச் சகோதரர் சகோதரிகள் என்று அழைக்க வெட்கப்படவில்லை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்; அவரது அன்பு நம்மிடம் நிறைவுபெறும் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 2-16

அக்காலத்தில் பரிசேயர் இயேசுவை அணுகி, ``கணவன் தன் மனைவியை விலக்கி விடுவது முறையா?\'\' என்று கேட்டு அவரைச் சோதித்தனர். அவர் அவர்களிடம் மறுமொழியாக, ``மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?\'\' என்று கேட்டார். அவர்கள், ``மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார்\'\' என்று கூறினார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், ``உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார். படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள், `ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.\' இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்\'\' என்றார். பின்னர் வீட்டில் இதைப் பற்றி மீண்டும் சீடர் அவரைக் கேட்டனர். இயேசு அவர்களை நோக்கி, ``தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான். தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள்\'\' என்றார். சிறு பிள்ளைகளை இயேசு தொடவேண்டுமென்று, அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர். இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு, ``சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது. இறையாட்சியைச் சிறு பிள்ளையைப் போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு உட்படமாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்\'\' என்றார். பிறகு அவர் அவர்களை அரவணைத்து, தம் கைகளை அவர்கள்மீது வைத்து ஆசி வழங்கினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


உளமார இசை பாடி ஆண்டவரைப் போற்றுங்கள். நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எல்லாவற்றிற்காகவும் எப்போதும் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

எங்கள் ஆயரே இறைவா,

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமது திருச்சபை யின் மக்கள் அனைவரையும் உம்மோடும், பிறரோடும், இயற்கையோடும் நல்லுறவு கொண்டவர்களாய் உருவாக்கத் தேவையான அருளை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

எங்கள் அரசரே இறைவா,

உலக நாடுகளை ஆட்சி செய்யும் தலைவர்கள் அனைவரும் திருமண உறவை மதிப்பவர்களாய் வாழவும், திருமணத்தின் மாண்பைப் பாதுகாப்பவர்களாய் திகழவும் தேவையான நல்ல மனதினை கொடுக்க வேண்டுமென்றும், எம் நாட்டு மக்கள் அனைவரும் உமது மேலான அன்பை உணரவும், உமது திருமகனின் சிலுவை மரணத்தின் வழியாக நீர் ஏற்பாடு செய்துள்ள மீட்பின் பேறுபலன்களைப் பெற்று மகிழவும் தேவையான மனமாற்றத்தை தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

எங்கள் மருத்துவரே இறைவா,

உலகில் பரவி வரும் பண நோயினால் இயற்கை வளங்களை அழிப்பவர்களும், நீர் தந்த அழகிய சுற்றுச்சூழலை மாசுபடுத்திப் பாழாக்குபவர்களும் மனந்திரும்பி, இயற்கையுடன் நல்லுறவு கொண்டவர்களாய் வாழத் தேவையான ஆற்றலை அளிக்க வேண்டுமென்றும், எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், சிறு பிள்ளைகளைப் போல இறையாட்சியை ஏற்றுக்கொள்ளும் தூய மனதினைப் பெற்று, உம்மோடும் பிறரோடும் உறவில் வளரத் தேவையான வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

சமுதாயத்திற்காக

நன்மைக்கு நாயகனே இறைவா! நம்மிடம் இல்லாத ஒன்று மற்றவரிடம் இருக்கும்போது, அந்தக் குறையைப் பெரிதாக்கி நம்மையே நாம் தாழ்வாக மதிப்பிடும் பொறாமை என்னும் குணம் மறைந்து பொருள், குணம், செயல், பண்பு, கொடை, நட்பு - இவை எமக்குக் கிடைக்காமல் மற்றவருக்குக் கிடைக்கும்போது, அல்லது எமக்குக் கிடைத்தாலும், மற்றவருக்கும் கிடைக்கும்போது எம்மில் எழுகின்ற பொறாமை எம்மிடமிருந்து ஒழிந்து ஒரு நல்ல குணமாகிய சகிப்புத்தன்மை எம்மில் வளர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நம் குடும்பங்களுக்கா:

எங்கும் நீங்காமல் நிறைந்திருக்கும் இறைவா! இன்று நாங்கள் காணும் நிதி நெருக்கடி, பொருளாதார ஏற்றத்தாழ்வின் காரணங்களைப் பார்த்தால், இன்று எமக்கு உடனடி தேவையாக இருப்பது எம் ஆற்றல்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள முன்வருவதுதான். அப்படிப் பகிர்ந்து கொள்வது எம் ஆற்றலை அதிகரிக்கின்றது என்பதை உணர்ந்து செயல்பட தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்..

நலந்தரும் ஊற்றாம் இறைவா,

உம்மை நம்பிக்கையோடு தேடி வரும் மக்களின் உடல் நோய்களையும், மன நோய்களையும் முழுமையாக குணப்படுத்தி, மற்றவர்களின் முன்னிலையில் உமது மாட்சிமிகு செயல்களின் சாட்சிகளாக அவர்களை மாற்ற வேண்டுமென்றும், உம் திருமகன் இயேசுவின் அன்பை வெளிப்படுத்தும் ஏற்றத்தாழ்வற்ற கிறிஸ்தவ சமூகத்தை உருவாக்குபவர்களாய் வாழும் அருளை எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவர் மேலும் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

நீதியின் நாயகராம் இறைவா,

உலகெங்கும் நீதிக்காகவும், அமைதிக்காகவும் ஏங்கும் உமது மக்களின் துன்பங்களை நீக்கி, அவர்கள் விரும்பும் நீதியும் அமைதியும் நிறைந்த உலகை உருவாக்கிட வேண்டு மென்றும், உம் திருவுளத்தை உணர்ந்தவர்களாய், நீதியின் வழியில் நன்மை செய்பவர்களாக வாழத் தேவையான அருள் வரங்களை எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவர் மீதும் பொழிந்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

இளையோருக்காக :

வளங்களை வாரி வழங்கி உள்ளங்களை நெறிப்படுத்தும் இறைவா! இச்சமுதாய முன்னேற்றத்தில் உறுதுணையாக இருக்கும் இளையோரை நிறைவாக ஆசீர்வதித்து அவர்கள் இத்திருச்சபையின் வருங்காலத்தூண்களாக மாறவும், அருள் வாழ்விலும், உலகவாழ்விலும் செயலாற்றும் நம்பிக்கைக் கொண்டவராய் வாழ தேவையான அருளை பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

இன்றைய சிந்தனை

கடின உள்ளமும், மண விலக்கும் !

மணவாழ்வு ஒரு மிகப் பெரிய சவால் என்பதை நாம் அறிவோம். மணவிலக்குகள் பெருகி வரும் இக்காலத்தில் மணவாழ்வின் ஒற்றுமைக்காக செபிக்கவும், முயற்சிகள் எடுக்கவும் கடமைப்பட்டிருக்கிறோம். மோசேயின் அனுமதியைப் பற்றி பரிசேயர் இயேசுவிடம் வினவியபோது உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே மோசே இவ்வாறு எழுதிவைத்தார் என்கிறார் இயேசு. மணவிலக்கு, மண முறிவு என்பதெல்லாம் கடின உள்ளத்தின் வெளிப்பாடுகள். எப்போது கணவன் அல்லது மனைவியின் உள்ளம் கடினப்பட்டுவிட்டதோ, அப்போது அவர்களின் மனதில் மணமுறிவு ஏற்பட்டுவிடுகிறது. அம்மன முறிவின் வெளிப்பாடே மணவிலக்கு. எனவே, தம்பதியர் தங்கள் உள்ளம் கடினப்பட்டுப் போகாமல் காத்துக்கொள்ளவேண்டும்.

தன்னலம் என்பது கடின உள்ளத்தின் ஓர் அடையாளம். புரிந்துகொள்ளாமை, ஏற்றுக்கொள்ளாமை, மன்னிக்காமை, பாசம் கொள்ளாமை, நல்லதைப் பாராட்டாமை ... இவை அனைத்துமே கடின உள்ளத்தின் வெளிப்பாடுகள்தாம். இத்தகையோர் மனதில் ஏற்கனவே மணமுறிவு ஏற்பட்டுவிட்டது என்றே கூறலாம். கல்லான இதயத்தை எடுத்துவிட்டு, கனிவான இதயத்தைப் பெற நாம் இறைவனிடம் இறைஞ்சுவோம். அவ்வாறே, கணவன் மனைவி இருவரும் புரிந்துகொண்டு, ஏற்றுக்கொண்டு, மன்னித்து, பாசம் காட்டி, பாராட்டி வாழ்ந்தால் இல்லறம் இனிமையாய் இருக்கும்.

மன்றாட்டு:

மணவாழ்வின் நாயகனே. இறைவா, உம்மைப் போற்றுகிறோம். தம்பதியரின் மணவாழ்வு அன்பு மணம் வீச உம்மை மன்றாடுகிறோம். நீரே அவர்களின் கடின இதயத்தை மாற்றி, கனிவான இதயமாக மாற்றுவீராக.