யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 26வது வாரம் செவ்வாய்க்கிழமை
2015-09-29

தூய மிக்கேல், கபிரியேல், ரபேல் - அதிதூதர்கள் விழா


முதல் வாசகம்

பல கோடிப் பேர் அவர்முன் நின்றார்கள்.
இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 9-10, 13-14

நான் பார்த்துக்கொண்டிருக்கையில், அரியணைகள் அமைக்கப்பட்டன; தொன்மை வாய்ந்தவர் அங்கு அமர்ந்தார்; அவருடைய ஆடை வெண்பனி போலவும், அவரது தலைமுடி தூய பஞ்சு போலவும் இருந்தன; அவருடைய அரியணை தீக்கொழுந்துகளாயும் அதன் சக்கரங்கள் எரி நெருப்பாயும் இருந்தன. அவர் முன்னிலையிலிருந்து நெருப்பாலான ஓடை தோன்றிப் பாய்ந்தோடி வந்தது; பல்லாயிரம் பேர் அவருக்குப் பணி புரிந்தார்கள்; பல கோடிப் பேர் அவர்முன் நின்றார்கள்; நீதிமன்றம் தீர்ப்பு வழங்க அமர்ந்தது; நூல்கள் திறந்து வைக்கப்பட்டன. இரவில் நான் கண்ட காட்சியாவது; வானத்தின் மேகங்களின் மீது மானிடமகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்; இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்; அவர் திருமுன் கொண்டு வரப்பட்டார். ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்குக் கொடுக்கப் பட்டன; எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும்; அவரது ஆட்சியுரிமை என்றும் உள்ளதாகும்; அதற்கு முடிவே இராது; அவரது அரசு அழிந்துபோகாது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே! தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.
திருப்பாடல் 138: 1-5

ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன். 2ய உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள்பணிவேன். பல்லவி 2b உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர். 3 நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர். பல்லவி 4 ஆண்டவரே! நீர் திருவாய் மலர்ந்த சொற்களைப் பூவுலகின் மன்னர் அனைவரும் கேட்டு உம்மைப் போற்றுவர். 5 ஆண்டவரே! உம் வழிகளை அவர்கள் புகழ்ந்து பாடுவர்; ஏனெனில், உமது மாட்சி மிகப்பெரிது! பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 47-51

அக்காலத்தில் நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, ``இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்\'\' என்று அவரைக் குறித்துக் கூறினார். நத்தனியேல், ``என்னை உமக்கு எப்படித் தெரியும்?\'\' என்று அவரிடம் கேட்டார். இயேசு, ``பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின் கீழ் இருந்தபோதே நான் உம்மைக் கண்டேன்\'\' என்று பதிலளித்தார். நத்தனியேல் அவரைப் பார்த்து, ``ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்\'\' என்றார். அதற்கு இயேசு, ``உம்மை அத்தி மரத்தின் கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதை விடப் பெரியவற்றைக் காண்பீர்\'\' என்றார். மேலும் ``வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன் மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்\'\' என்று அவரிடம் கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

இன்று இருக்கிறாரா?

திருத்தூதர் பர்த்தொலேமேயு ஒரு எதார்த்தவாதி, சிந்தனையாளர், திருச்சட்டமும் இறைவாக்கும் பயின்றவர். நாடும் ஊரும் தெறிந்தவர்."நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?" என்ற அவரின் கேள்வி இதற்குச் சான்று.

திருத்தூதர் பர்த்தொலேமேயுபற்றி இயேசுவின் கணிப்பு, "இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்" அவரது கணிப்பும் சரியானதே. பிலிப்போடு அத்திமரத்தின்கீழ் நடந்த உரையாடலை இயேசு வெளியிட்டதும் அதிர்ந்துபோன திருத்தூதர், தன்னுடைய திருச்சட்ட, மறைநூல் அறிவால் தன்னோடு பேசுபவர் "இறை மகன்; இஸ்ரயேல் மக்களின் அரசர்" என்பதை அடையாளம் காணுகிறார்.

எதார்த்த வாழ்வும் சீரிய சிந்தனையும் மறைநூல் அறிவும் பொது அறிவும் அவர் இயேசுவின் சீடராவதற்கு பெரிதும் உதவியது.கிறிஸ்தவர்களும் திருப்பணியாளர்களும் இத்தகைய மனநிலைகொண்டால் விண்ணுக்கும் மண்ணுக்கும் இணைப்பாளர்களாக வான தூதர்களாக, மறு கிறிஸ்துவாக உலகை மாற்றி அமைக்க முடியும்.

மன்றாட்டு:

இறைவா! கபடற்ற எதார்த்த உள்ளம்கொண்ட திருப்பணியாளர்கள், கிறிஸ்தவர்களை எம்மிடையே அதிகமாக்கும்.