யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 26வது வாரம் திங்கட்கிழமை
2015-09-28

புனித வென்சஸ்லோஸ்


முதல் வாசகம்

இதோ நான் வருகிறேன்; வந்து உன் நடுவில் குடிகொள்வேன்' என்கிறார் ஆண்டவர்.
இறைவாக்கினர் செக்கரியா நூலிலிருந்து வாசகம் 2: 1-5,10-11

நான் என் கண்களை உயர்த்திப் பார்த்தபோது, இதோ, அளவு நூலைக் கையில் பிடித்திருந்த ஒருவரைக் கண்டேன். `எங்கே போகிறீர்?' என்று நான் அவரை வினவினேன். அதற்கு அவர், `எருசலேமை அளந்து, அதன் அகலமும் நீளமும் எவ்வளவு என்பதைக் காணப்போகிறேன்' என்றார். என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதர் திரும்பிச் செல்கையில் மற்றொரு தூதர் அவருக்கு எதிரே வந்தார். வந்தவர் முன்னவரிடம் இவ்வாறு சொன்னார்: ஓடிச் சென்று அந்த இளைஞனிடம் நீ சொல்ல வேண்டியது: `எருசலேமில் எண்ணிறந்த மனிதர்களும் திரளான கால்நடைகளும் இருப்பதால் அந்நகரம் மதில் இல்லாத ஊர்களைப் போல் இருக்கும்! ஏனெனில் அதைச் சுற்றிலும் நானே நெருப்புச் சுவராய் அமைவேன்; அதனுள் உறையும் மாட்சியாய் விளங்குவேன்', என்கிறார் ஆண்டவர். `மகளே, சீயோன்! அகமகிழ்ந்து ஆர்ப்பரி; இதோ நான் வருகிறேன்; வந்து உன் நடுவில் குடிகொள்வேன்' என்கிறார் ஆண்டவர். அந்நாளில், வேற்றினத்தார் பலர் ஆண்டவரிடம் வந்து சேர்வார்கள்; அவர்கள் அவருடைய மக்களாய் இருப்பார்கள். அவர் உன் நடுவில் தங்கியிருப்பார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் சீயோனைக் கட்டி எழுப்பி மாட்சியுடன் திகழ்ந்திடுவார்.
திருப்பாடல் 102: 15-17. 18,20,19. 28,21-22

வேற்றினத்தார் ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்; பூவுலகின் மன்னர் யாவரும் அவரது மாட்சியைக் கண்டு மருள்வர். 16 ஏனெனில் ஆண்டவர் சீயோனைக் கட்டியெழுப்புவார்; அங்கு அவர் தம் மாட்சியுடன் திகழ்வார். 17 திக்கற்றவர்களின் வேண்டுதலுக்கு அவர் செவிகொடுப்பார்; அவர்களின் மன்றாட்டை அவமதியார். பல்லவி

18 இனி வரவிருக்கும் தலைமுறைக்கென இது எழுதி வைக்கப்படட்டும்; படைக்கப்படவிருக்கும் மக்கள் ஆண்டவரைப் புகழட்டும். 20 அவர் சிறைப்பட்டோரின் புலம்பலுக்குச் செவிசாய்ப்பார்; சாவுக்கெனக் குறிக்கப்பட்டவர்களை விடுவிப்பார். 19 ஆண்டவர் தம் மேலுலகத் திருத்தலத்தினின்று கீழே நோக்கினார்; அவர் விண்ணுலகினின்று வையகத்தைக் கண்ணோக்கினார். பல்லவி

28 உம் அடியாரின் பிள்ளைகள் பாதுகாப்புடன் வாழ்வர்; அவர்களின் வழிமரபினர் உமது திருமுன் நிலைத்திருப்பர்! 21 சீயோனில் ஆண்டவரின் பெயர் போற்றப்படும். எருசலேமில் அவர்தம் புகழ் அறிவிக்கப்படும். 22 அப்போது, மக்களினங்களும் அரசுகளும் ஒன்றுதிரண்டு ஆண்டவரை வழிபடுவர். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்'' என்றார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 43-45

அக்காலத்தில் இயேசு செய்த யாவற்றையும் பார்த்து அனைவரும் வியப்படைந்தனர். அவர் தம் சீடர்களிடம், ``நான் சொல்வதைக் கேட்டு மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்'' என்றார். அவர்கள் அவர் சொன்னதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் அதை உணர்ந்துகொள்ளாதவாறு அது அவர்களுக்கு மறைவாயிருந்தது. ஆயினும் அவர் சொன்னதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்க அஞ்சினார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''பிறகு இயேசு ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு, 'இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்...' என்றார்'' (மாற்கு 9:36-37)

கிறிஸ்தவ நம்பிக்கையைத் தம் வாழ்வில் கடைப்பிடித்து, அதைப் பிறருக்கு அறிவிக்கின்ற மனிதர்கள் துன்பங்களையும் எதிர்ப்புகளையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்பது வரலாறு கூறும் உண்மை. இயேசுவே துன்பங்களை எதிர்கொண்டார்; சாவுக்குத் தீர்ப்பிடப்பட்டார். ஆயினும், இயேசு தாம் துன்பங்கள் அனுபவிக்க வேண்டும் என்று கூறியது அவருடைய சீடர்களுக்குப் புரியாத புதிராகவே இருந்தது. மாற்கு நற்செய்தியில் இயேசு தாம் கொல்லப்படப் போவதை ஒருமுறையல்ல, இருமுறையல்ல, மூன்று முறை முன்னறிவித்தார் எனக் காண்கிறோம் (காண்க: மாற் 8:31-38; 9:30-32; 10:32-34). ஆனாலும் அவருடைய சீடர்கள் ''துன்புறும் மெசியா''வை ஏற்க மறுத்தார்கள். அவர்களுடைய பார்வையில் இயேசு அதிகாரத்தோடு போதித்து, இஸ்ரயேல் மக்களை அடிமைநிலையிலிருந்து விடுவித்து, அவர்களைச் சுதந்திர மக்களாக்கி ஆட்சி செய்வார்; மகிமை மிகுந்த அவரது ஆட்சியில் தங்களுக்கும் அதிகாரப் பொறுப்புகள் வழங்கப்படும் என இயேசுவின் சீடர்கள் கனவு கண்டார்கள். எனவே, இயேசு துன்புறப் போகிறாரே என்பது பற்றி எள்ளளவும் கவலைப்படாமல் சீடர்கள் மட்டும் ''தங்களுள் யார் பெரியவர்'' என்னும் வாதத்தில் ஈடுபட்டார்கள்.

அப்போது இயேசு சீடர்களுக்கு ஒரு முக்கியமான போதனையை வழங்குகிறார். ''இயேசு அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிடுகிறார்''. பின் அவர்களைப் பார்த்து, அவர்கள் முதலிடங்களை நாடுவதற்குப் பதிலாக ''அனைவருக்கும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும்'' மாற வேண்டும் என்கிறார் (மாற் 9: 35). ''கடைசியானவர்'' எப்படி இருப்பார் என்பதை இயேசு ஒரு செயல் வழியாகக் காட்டுகிறார். அவர் ஒரு சிறு பிள்ளையை எடுத்து, சீடர் நடுவே நிறுத்துகிறார். அப்பிள்ளையை அன்போடு அரவணைக்கிறார். ''இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்'' எனக் கூறுகின்றார் (மாற் 9:37). சிறுபிள்ளைகள் அக்காலத்தில் தம் தந்தையரின் ''உடைமை'' எனக் கருதப்பட்டார்கள். சிறுபிள்ளைகளுக்கு உரிமைகள் கிடையாது; சமுதாயத்தில் மதிப்போ மரியாதையோ கிடையாது. அவர்கள் தங்கள் தேவைகளை நிறைவுசெய்ய பிறரைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. ஆக, சமுதாயத்தில் கடைநிலையில் இருந்த ''சிறு பிள்ளை'' போல யார் தம்மையே தாழ்த்தக்கொள்கிறார்களோ அவர்களே கடவுள் முன் பெரியவர்கள் ஆவர் என இயேசு போதிக்கிறார். மேலும் இயேசு தம்மையே அச்சிறு பிள்ளைக்கு ஒப்பிடுகிறார். சமுதயாத்தில் ஒதுக்கப்பட்ட மக்களை நாம் மதிப்போடும் மரியாதையோடும் நடத்தும்போது நாம் உண்மையிலேயே துன்புற்ற இயேசுவை ஏற்று மதிப்பளிக்கிறோம் என்பது ஓர் ஆழ்ந்த உண்மை. ஏழைகளின் மட்டில் தனிக் கவனம் செலுத்துவது கிறிஸ்தவ மரபு. அதைப் பின்பற்றி நாமும் பெருமையையும் செல்வத்தையும் தேடிச் செல்வதற்குப் பதிலாகக் கடவுளின் பார்வை கொண்டு செயல்பட வேண்டும். அப்போது சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டோரின் முகத்தைப் பார்க்கும்போது அங்கே இயேசுவையே நாம் காண்போம். ''இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்'' (மாற் 8:37) என்னும் இயேசுவின் சொற்கள் நாம் கடவுளின் பார்வையில் பெரியவர்களாக மாறுவதற்கான வழியைச் சுட்டிக்காட்டுகின்றன. மன மகிழ்வோடு பிறருக்குப் பணிசெய்வதே அந்த வழி.

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் தாழ்ச்சியும் பணிவும் கொண்ட உள்ளத்தோடு உம்மை அணுகிவர எங்களுக்கு அருள்தாரும்.