யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 25வது வாரம் வெள்ளிக்கிழமை
2015-09-25


முதல் வாசகம்

`இன்னும் சிறிது காலத்தில் நான் விண்ணுலகையும், மண்ணுலகையும், கடலையும் பாலை நிலத்தையும் நடுக்கமுறச் செய்வேன்
இறைவாக்கினர் ஆகாய் நூலிலிருந்து வாசகம் 2: 1-9

தாரியு அரசனது இரண்டாம் ஆட்சியாண்டின் ஏழாம் மாதத்தின் இருபத்தோராம் நாளன்று, ஆண்டவரின் வாக்கு இறைவாக்கினர் ஆகாய் வாயிலாக அருளப்பட்டது: ``யூதாவின் ஆளுநரும் செயல்தியேலின் மகனுமாகிய செருபாபேலிடமும் தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமாகிய யோசுவாவிடமும் மக்களுள் எஞ்சியிருப்போர் அனைவரிடமும் இப்பொழுது நீ போய் இவ்வாறு சொல்: `இந்தக் கோவிலின் முன்னைய மாட்சியைக் கண்டவர் எவராகிலும் உங்களிடையே இன்னும் இருக்கின்றனரா? இப்போது இது உங்களுக்கு எக்கோலத்தில் தோன்றுகிறது? இது உங்கள் பார்வையில் ஒன்றும் இல்லாதது போல் தோன்றுகிறது அல்லவா? ஆயினும் செருபாபேலே! மன உறுதியோடு இரு,' என்கிறார் ஆண்டவர். `தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமாகிய யோசுவாவே! மன உறுதியோடு இரு; நாட்டிலுள்ள அனைத்து மக்களே, ஊக்கம் கொள்ளுங்கள்; பணியைத் தொடருங்கள்; ஏனெனில் நான் உங்களோடு இருக்கிறேன்' என்கிறார் படைகளின் ஆண்டவர்.'' ``நீங்கள் எகிப்தினின்று புறப்பட்டு வந்த போது உங்களுக்கு நான் அளித்த வாக்குறுதியின்படி, உங்கள் நடுவில் எனது ஆவி நிலைகொண்டிருக்கிறது; அஞ்சாதீர்கள். ஏனெனில் படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: `இன்னும் சிறிது காலத்தில் நான் விண்ணுலகையும், மண்ணுலகையும், கடலையும் பாலை நிலத்தையும் நடுக்கமுறச் செய்வேன். வேற்றினத்தார் அனைவரையும் நிலைகுலையச் செய்வேன். அப்போது வேற்றினத்தார் அனைவரின் விருப்பத்திற்குரியவைகளும் இங்கு வந்து சேரும்; இந்தக் கோவிலை நான் மாட்சியால் நிரப்புவேன்' என்கிறார் படைகளின் ஆண்டவர். ` வெள்ளி எனக்கு உரியது, பொன்னும் எனக்கு உரியது', என்கிறார் படைகளின் ஆண்டவர். `இந்தக் கோவிலின் முன்னைய மாட்சியை விடப் பின்னைய மாட்சி மிகுதியாய் இருக்கும்', என்கிறார் படைகளின் ஆண்டவர். `இந்த இடத்தில் நான் நலம் நல்குவேன்' என்கிறார் படைகளின் ஆண்டவர்.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

கடவுளே, என் நேர்மையை நிலைநாட்டும்;
திருப்பாடல்கள் 43: 1. 2. 3. 4

1 கடவுளே, என் நேர்மையை நிலைநாட்டும்; இறைப் பற்றில்லா இனத்தோடு என் வழக்குக்காக வாதிடும்; வஞ்சகமும் கொடுமையும் நிறைந்த மனிதர் கையினின்று என்னை விடுவித்தருளும். - பல்லவி

2 கடவுளே! நீரே என் ஆற்றல்; ஏன் என்னை ஒதுக்கித் தள்ளிவிட்டீர்? எதிரியால் ஒடுக்கப்பட்டு, நான் ஏன் துயருடன் நடமாட வேண்டும்? - பல்லவி

3 உம் ஒளியையும் உண்மையையும் அனுப்பியருளும். அவை என்னை வழி நடத்தி, உமது திருமலைக்கும் உமது உறைவிடத்திற்கும் கொண்டுபோய்ச் சேர்க்கும். - பல்லவி

4 அப்பொழுது, நான் கடவுளின் பீடம் செல்வேன்; என் மன மகிழ்ச்சியாகிய இறைவனிடம் செல்வேன்; கடவுளே! என் கடவுளே! யாழிசைத்து ஆர்ப்பரித்து உம்மைப் புகழ்ந்திடுவேன். - பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ``ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?'' அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 18-22

அக்காலத்தில் இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர். அப்போது அவர்களிடம் ``நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?'' என்று அவர் கேட்டார். அவர்கள் மறு மொழியாக, ``சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் எனவும் சொல்கின்றனர்'' என்றார்கள். ``ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?'' என்று அவர்களிடம் அவர் கேட்டார். பேதுரு மறுமொழியாக, ``நீர் கடவுளின் மெசியா'' என்று உரைத்தார். இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார். மேலும் இயேசு, ``மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்'' என்று சொன்னார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''பேதுரு மறுமொழியாக, 'நீர் கடவுளின் மெசியா' என்று உரைத்தார்'' (லூக்கா 9:20)

சீடர்களிடம் இயேசு ஒரு கேள்வி கேட்டார்: ''நீங்கள் நான் யார் என சொல்கிறீர்கள்?'' - இதுதான் கேட்கப்பட்ட கேள்வி. இதற்குப் பேதுரு அளித்த மறுமொழியில் பல அர்த்தங்கள் பொதிந்திருந்தன. இயேசுவை ''மெசியா'' என்று பேதுரு அடையாளம் காட்டியபோது அந்த மெசியா என்னும் சொல் எத்தனையோ அர்த்தங்களைக் கொண்டது என்பதைப் பேதுரு உணர்ந்திருக்க வேண்டும். கடவுளின் திருப்பொழிவு பெற்றவர் என்பதே மெசியா என்னும் சொல்லின் நேரடிப் பொருள். இயேசு கடவுளால் தனிப்பட்ட விதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதைப் பேதுரு குறிப்பிடுகிறார். ஆனால் அக்கால மக்களிடையே நிலவிய பொது எதிர்பார்ப்பையும் பேதுரு பிரதிபலித்தார் என்றே கூற வேண்டும். மெசியா என்பவர் ஓர் அரசியல் தலைவர்போலத் தோன்றி மக்களை உரோமையரின் அடிமைத் தளையிலிருந்து ஆற்றலோடு விடுவிப்பார் என்பதே அன்றைய சிந்தனையாக இருந்தது.

இயேசு தம்மை ஓர் அரசியல் மெசியாவாக அறிவிக்கவில்லை. அதிகாரத்தோடும் ஆற்றலோடும் படைபலத்தோடும் செல்வக் கொழிப்போடும் வரவில்லை இயேசு. அவருடைய அதிகாரம் கடவுளிடமிருந்து வருகின்ற அதிகாரமே. அதன் பொருள் மக்களுக்குப் பணிசெய்வதே. ஆக, இயேசு மெசியாவாக இருக்கிறார் என்றால் அவர் ஒரு சிறப்புப் பண்புகொண்ட மெசியா. அதாவது இயேசு ''துன்புறும் மெசியா''. கடவுளின் ஆட்சி வருகின்றது, வந்துவிட்டது என்னும் நற்செய்தியை அறிவித்தார் என்பதற்காக அவரைத் தொலைத்துக்கட்ட எண்ணினர் அதிகார வர்க்கத்தினர். அவர்களது கைகளில் இயேசு துன்பங்கள் பல அனுபவித்தார். ஆனால் கடவுள் அத்துன்பங்களின் வழியாகத் தம் மீட்புத் திட்டத்தை இவ்வுலகில் நிறைவேற்றினார். துன்பங்களை இயேசு மனமுவந்து தழுவிக்கொண்டதால் அவரைத் துன்பமோ சாவோ தோற்கடிக்க இயலவில்லை. மனிதருக்குப் புது வாழ்வு வழங்க வந்த இயேசு தம் துன்பங்கள் மற்றும் சாவு வழியாக ஒரு புது நிலையை அடைந்துவிட்டார்; புத்துயிர் பெற்று எழுந்துவிட்டார். அப்புது வாழ்வில் பங்குபெற அழைக்கப்பெற்ற நாம் பேறுபெற்றோர்.

மன்றாட்டு:

இறைவா, துன்பத்தின் வழியாகவே நாங்கள் நிறைவாழ்வில் பங்கேற்க இயலும் என்பதை எங்களுக்கு உணர்த்தியருளும்.