யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 25வது வாரம் செவ்வாய்க்கிழமை
2015-09-22


முதல் வாசகம்

கடவுளின் கோவிலைக் கட்டும் பணியைத் தடை செய்யாதிருங்கள்.
எஸ்ரா நூலிலிருந்து வாசகம் 6: 7-8, 12b, 14-20

கடவுளின் கோவிலைக் கட்டும் பணியைத் தடை செய்யாதிருங்கள். யூதர்களின் ஆளுநரும், யூதர்களின் மூப்பர்களும் கடவுளின் கோவிலை, அது முன்பு இருந்த இடத்தில், மீண்டும் எழுப்பட்டும். யூதர்களின் மூப்பர் கடவுளின் கோவிலைக் கட்டுவதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி ஆணை பிறப்பிக்கிறேன். அவர்கள் வேலை தடைப்படாதபடி, அதற்கான முழுச் செலவைப் பேராற்றின் அக்கரைப் பகுதியிலிருந்து வரும் வரியாகிய அரச வருவாயினின்று கொடுக்க வேண்டும். தாரியு என்னும் நானே இக்கட்டளையைப் பிறப்பித்தேன். இது சரிவர நிறைவேற்றப்படட்டும். இறைவாக்கினர் ஆகாயும் இத்தோவின் மகன் செக்கரியாவும் இறைவாக்கு உரைத்ததன் விளைவாக யூத மூப்பர்கள் கோவிலைக் கட்டினர்; வேலையும் முன்னேறிக் கொண்டிருந்தது. இஸ்ரயேலின் கடவுளது ஆணையாலும், பாரசீக மன்னர்களான சைரசு, தாரியு, அர்த்தக்சஸ்தா ஆகியோரின் கட்டளையாலும் அவர்கள் கட்டடப் பணியை முடித்தனர். மன்னர் தாரியு ஆட்சியின் ஆறாம் ஆண்டிலே, அதார் திங்கள் மூன்றாம் நாளிலே, கோவில் வேலை நிறைவுற்றது. இஸ்ரயேல் மக்கள், குருக்கள், லேவியர், அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்த ஏனையோர், கடவுளின் கோவில் அர்ப்பண விழாவை அக்களிப்புடன் கொண்டாடினார்கள். கடவுளின் கோவில் அர்ப்பண விழாவில் நூறு காளைகளையும், இருநூறு செம்மறிக் கிடாய்களையும், நானூறு செம்மறிக் குட்டிகளையும் ஒப்புக்கொடுத்தார்கள்; இஸ்ரயேல் குலக் கணக்கின்படி, பன்னிரண்டு வெள்ளாட்டுக் கிடாய்களை இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் பாவம் போக்கும் பலியாகச் செலுத்தினார்கள். மோசேயின் நூலில் எழுதியுள்ளபடி, எருசலேமில் கடவுளின் பணிக்காகக் குருக்களை அவர்களின் பிரிவின்படியும் லேவியரை அவர்களின் துறைகளின்படியும் அவர்கள் நியமித்தனர். மேலும் அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்த மக்கள் பாஸ்கா விழாவை முதல் மாதத்தின் பதினான்காம் நாள் கொண்டாடினர். குருக்களும் லேவியரும் ஒன்றிணைந்து தங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டனர். அவர்கள் தூய்மையானார்கள். அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்திருந்த எல்லா மக்களுக்காகவும், சகோதரக் குருக்களுக்காகவும், தங்களுக்காகவும் அவர்கள் பாஸ்கா ஆட்டுக்குட்டியைக் கொன்றனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

"ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்",
திருப்பாடல்கள் 122: 1-2. 3-4

1 "ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்", என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன். 2 எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். - பல்லவி

3 எருசலேம் செம்மையாக ஒன்றிணைத்துக் கட்டப்பட்ட நகர் ஆகும். 4 ஆண்டவரின் திருக்குலத்தார் ஆங்கே செல்கின்றனர். - பல்லவி

4 இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைகளுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள். 5 அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். - பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! `இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்'' அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 19-21

அக்காலத்தில் இயேசுவின் தாயும் சகோதரர்களும் இயேசுவிடம் வந்தார்கள். ஆனால் மக்கள் திரளாக இருந்த காரணத்தால் அவரை அணுக முடியவில்லை. ``உம் தாயும் சகோதரர்களும் உம்மைப் பார்க்க விரும்பி வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள்'' என்று அவருக்கு அறிவித்தார்கள். அவர் அவர்களைப் பார்த்து, ``இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்'' (லூக்கா 8:21)

இயேசு தம் அன்னையாகிய மரியாவை மதிப்புக் குறைவாகப் பேசியதாகச் சிலர் குறைகூறுவதுண்டு. அவ்வாறு குறைகூறுவோர் மரியாவுக்கு உயர்ந்த மதிப்புக் கொடுக்கவேண்டியதில்லை எனவும் வாதாடுவர். ஆனால் உண்மை என்ன? இயேசு தம் தாய் மரியாவை உயர்ந்தவர் எனப் போற்றுவதற்கு இரண்டு முக்கிய காரணங்களைக் காட்டுகிறார். ஒன்று, மரியா உண்மையிலேயே தம்மை ஈன்றெடுத்த தாய் என்பது. ஆனால் அதைவிடவும் முக்கிய காரணம் ஒன்றுண்டு. அதுதான் மரியா கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்பட்டது (காண்க: லூக்கா 1:38). ஆக, ''இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் சகோதரர்களும் ஆவார்கள்'' என்று இயேசு கூறிய சொற்கள் இயேசுவின் சீடர் அனைவருமே அவருடைய குடும்பத்தின் உறுப்பினர் என உறுதிப்படுத்துகிறது. இறைவார்த்தையைக் கேட்பதோடு நின்றுவிடாமல் அந்த வார்த்தையை வாழ்க்கையில் நாம் கடைப்பிடித்தால் இயேசு உண்மையிலேயே நம் உடன்பிறப்பாக இருக்கிறார் என்னும் உண்மையை நாம் உணர்ந்திடுவோம். ''சொல்லுதல் யார்க்கும் எளிய: அரியஆம் சொல்லிய வண்ணம் செயல்'' (குறள் 664) என்னும் வள்ளுவர் கூற்றும் இந்த உண்மையை உணர்த்துகிறது.

இயேசுவில் நம்பிக்கை கொள்வோர் இயேசுவைப் போல மாற வேண்டும். அவர் கடவுளின் ''வார்த்தை'' (காண்க: யோவான் 1:1): அந்த வார்த்தை ''மனிதர் ஆனார்'' (யோவான் 1:14). இவ்வாறு மனிதர் ஆன வார்த்தையைப் போல நாமும் இறைவார்த்தையைச் செயல்படுத்துவதன் வழியாக நிறைவுள்ள மனிதராக மாறிட அழைக்கப்படுகிறோம். ''இறைவா, நான் எப்போதும் போதிக்க உம் துணை எனக்குத் தேவை: தேவைப்பட்டால் மட்டுமே வார்த்தைகளை நான் பயன்படுத்த வேண்டும்'' என்று அசிசி நகர் தூய பிரான்சிஸ் கூறிய அருங்கூற்றினை நாம் இவண் நினைவுகூரலாம். இயேசுவின் வாழ்வே அவர் நமக்கு வழங்கும் தலைசிறந்த போதனை.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் வாழ்வில் சொல்லும் செயலும் இணைந்து உமக்குச் சான்றாகிட அருள்தாரும்.