யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





பொதுக்காலம் இருபத்தைந்தாம் ஞாயிறு

திருவழிபாடு ஆண்டு - B



வழியில் அவர் தம் சீடரை நோக்கி, நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?./> வழியில் அவர் தம் சீடரை நோக்கி, நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?./> வழியில் அவர் தம் சீடரை நோக்கி, நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?./> வழியில் அவர் தம் சீடரை நோக்கி, நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?./> வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி எப்பத்தா அதாவது திறக்கப்படு  என்றார்./> வழியில் அவர் தம் சீடரை நோக்கி, நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?./> வழியில் அவர் தம் சீடரை நோக்கி, நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?./> வழியில் அவர் தம் சீடரை நோக்கி, நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?./>


திருப்பலி முன்னுரை

அன்புக்குரியவர்களே,

பொதுக்காலத்தின் இருபத்தைந்தாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் பணிவுடன் அழைக்கிறோம். இன்றைய திருவழிபாடு கடவுளுக்கு உகந்த பணியாளர்களாக வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறது. எத்தனை இடையூறுகளும், துன்பங்களும் வந்தாலும் எப்பொழுதும் பிறருக்கு நன்மை செய்பவர்களாக செயல்பட நாம் அழைக்கப்படுகிறோம். நீதிமான்களுக்கு எதிராக எத்தனை பேர் சூழ்ச்சி செய்தாலும் கடவுள் அவர்களுக்கு துணை நிற்கிறார் என்பதை நாம் உணர வேண்டும். நம்மில் இருக்கும் தீய நாட்டங்களுக்கு இடம் கொடுக்காமல், இயேசுவைப் போன்று கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவர்களாய் வாழ நாம் அழைப்பு பெற்றுள்ளோம். நம்மில் யார் பெரியவர் என்ற போட்டியில் நம்மை இழந்துவிடாமல், கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றும் பணியாளர்களாக செயல்படும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசகம்

முதல் வாசக முன்னுரை

மீட்புக்குரியவர்களே,
இன்றைய முதல் வாசகம் நீதிமான்களுக்கு எதிராக பொல்லாதவர்கள் செய்கிற சூழ்ச்சியைப் பற்றி எடுத்துரைக்கிறது. நாம் கடவுளுக்கு உகந்த நீதிமான்களாக வாழ்ந்தால், இவ்வுலகின் மக்கள் நம்மைத் துன்புறுத்த திட்டம் தீட்டலாம். ஆனால், பகைவர்களின் கையிலிருந்து நம்மை விடுவித்து காக்க கடவுள் வல்லவர் என்பதை புரிந்துகொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். கடவுளின் துணையை நம்பி, நீதிமான்களாக வாழும் வரம் கேட்டு, இந்த வாசகத்துக்கு செவிசாய்ப்போம்.

இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம்.
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 2: 17-20

பொல்லாதவர்கள் தங்களுக்குள் சொல்லிக் கொள்வதாவது: `நீதிமான்களுடைய சொற்கள் உண்மையா எனக் கண்டறிவோம்; முடிவில் அவர்களுக்கு என்ன நிகழும் என ஆய்ந்தறிவோம். நீதிமான்கள் கடவுளின் மக்கள் என்றால், அவர் அவர்களுக்கு உதவி செய்வார்; பகைவரிடமிருந்து அவர்களை விடுவிப்பார். அவர்களது கனிவினைக் கண்டு கொள்ளவும், பொறுமையை ஆய்ந்தறியவும், வசைமொழி கூறியும் துன்புறுத்தியும் அவர்களைச் சோதித்தறிவோம். இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம்; ஏனெனில் தங்கள் வாய்மொழிப்படி அவர்கள் பாதுகாப்புப் பெறுவார்கள்.\'

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என் தலைவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார்.
திருப்பாடல் 54: 1-2. 3. 4,6

கடவுளே, உமது பெயரின் வல்லமையால் என்னைக் காப்பாற்றும்; உமது ஆற்றலினால் எனது நேர்மையை நிலைநாட்டும். 2 கடவுளே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்; என் வாயின் சொற்களுக்குச் செவிகொடுத்தருளும். பல்லவி

3 ஏனெனில், செருக்குற்றோர் எனக்கு எதிராய் எழுந்துள்ளனர்; கொடியவர் என் உயிரைப் பறிக்கப் பார்க்கின்றனர்; அவர்கள் கடவுளை அறவே நினைப்பதில்லை. பல்லவி

4 இதோ! கடவுள் எனக்குத் துணைவராய் இருக்கின்றார்; என் தலைவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார்; 6 தன்னார்வத்தோடு உமக்குப் பலி செலுத்துவேன்; ஆண்டவரே உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; இதுவே நன்று. பல்லவி

இரண்டாம் வாசகம்

இரண்டாம் வாசக முன்னுரை

மீட்புக்குரியவர்களே,
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யாக்கோபு, ஞானம் காட்டும் வழியில் தூய்மையாக வாழுமாறு அழைப்பு விடுக்கிறார். சிற்றின்ப நாட்டங்களில் ஆர்வம் கொள்வதையும், சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவதையும் கண்டிக்கிறார். அமைதியை நாடும் ஞானத்தால் இரக்கமுள்ள நற்செயல்களைச் செய்து நீதியின் கனியை விளைவிக்குமாறு அறிவுறுத்துகிறார். தூய உள்ளத்தோடு, நீதியை நிலைநாட்டுபவர்களாக வாழும் வரம் கேட்டு, இந்த வாசகத்துக்கு செவிசாய்ப்போம்.

அமைதி ஏற்படுத்துவோர் விதைத்த அமைதி என்னும் விதையிலிருந்து நீதியென்னும் கனி விளைகிறது.
திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 16 - 4: 3

அன்பிற்குரியவர்களே, பொறாமையும் கட்சி மனப்பான்மையும் உள்ள இடத்தில் குழப்பமும் எல்லாக் கொடுஞ்செயல்களும் நடக்கும். விண்ணிலிருந்து வரும் ஞானத்தின் தலையாய பண்பு அதன் தூய்மையாகும். மேலும் அது அமைதியை நாடும்; பொறுமை கொள்ளும்; இணங்கிப் போகும் தன்மையுடையது; இரக்கமும் நற்செயல்களும் நிறைந்தது; நடுநிலை தவறாதது; வெளிவேடமற்றது. அமைதி ஏற்படுத்துவோர் விதைத்த அமைதி என்னும் விதையிலிருந்து நீதியென்னும் கனி விளைகிறது. உங்களிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படக் காரணமென்ன? உங்களுக்குள்ளே போராடிக் கொண்டிருக்கும் சிற்றின்ப நாட்டங்கள் அல்லவா? நீங்கள் ஆசைப்படுவது கிடைக்காததால் கொலை செய்கிறீர்கள்; பேராசை கொள்கிறீர்கள்; அதைப் பெற முடியாததால் சண்டை சச்சரவுகள் உண்டாக்குகிறீர்கள். அதை நீங்கள் ஏன் பெறமுடிவதில்லை? நீங்கள் கடவுளிடம் கேட்பதில்லை. நீங்கள் கேட்டாலும் ஏன் அடைவதில்லை? ஏனெனில் நீங்கள் தீய எண்ணத்தோடு கேட்கிறீர்கள்; சிற்றின்ப நாட்டங்களை நிறைவேற்றவே கேட்கிறீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும் பொருட்டே, நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 30-37

அக்காலத்தில் இயேசுவும் அவருடைய சீடர்களும் புறப்பட்டுக் கலிலேயா வழியாகச் சென்றார்கள். அது யாருக்கும் தெரியக்கூடாது என்று இயேசு விரும்பினார். ஏனெனில், ``மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்; அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்\'\' என்று அவர் தம் சீடருக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார். அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்கவும் அவர்கள் அஞ்சினார்கள். அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டில் இருந்த பொழுது இயேசு, ``வழியில் நீங்கள் எதைப் பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்?\'\' என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள் பேசாதிருந்தார்கள். ஏனெனில் தங்களுள் பெரியவர் யார் என்பதைப் பற்றி வழியில் ஒருவரோடு ஒருவர் வாதாடிக்கொண்டு வந்தார்கள். அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், ``ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்\'\' என்றார். பிறகு அவர் ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு, ``இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக் கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை மட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையேஏற்றுக்கொள்கிறார் என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


உளமார இசை பாடி ஆண்டவரைப் போற்றுங்கள். நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எல்லாவற்றிற்காகவும் எப்போதும் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

வல்லமையும், திடனும் தரும் தந்தையே இறைவா!,

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரையும், இன்றைய உலகில் நாளுக்கு நாள் எழும் சவால்களைக் கண்டு நிலைகுலைந்து விடாது, உறுதியான விசுவாசத்தோடு பணி ஆற்றக் கூடிய அருளை அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எம் வாழ்வுக்கு ஆதரவாயுள்ள தந்தையே!

பல்வேறு நிகழ்வுகள் மூலமாக நீர் எமக்கு எப்பொழுதும் ஆதரவாயிருக்கின்றீர் என்னும் மாபெரும் உண்மையை நாங்கள் உணர்ந்து உமக்கு நன்றி சொல்லுகின்றோம். நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் முன்மாதிரிகையான வாழ்வால் அமைதியை ஏற்படுத்துவோராகவும், இரக்கமும் - நற்செயல்களும் கொண்டவர்களாகவும் வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திடவும், எம் நாட்டு மக்கள் அனைவரும், நீதியின் வழியில் அமைதியை விரும்புபவர்களாக வாழவும், சண்டை சச்சரவுகளுக்கு இடம் கொடுக்காமல் மனித நேயத்தோடு செயல்படவும் தேவையான தூய உள்ளத்தை தந்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்ற தந்தையே!

உலகில் பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும் வன்முறையாளர்கள், மற்றும் தலைவர்கள் உண்மையினதும், நீதியினதும் வழிக்குத் திரும்பி அமைதியை ஏற்படுத்துவோராகச் செயற்பட அவர்களை மாற்றியமைத்திட வேண்டுமென்றும், உமது பிள்ளைகளாகிய நாம், வெறுமனே மேலோட்டமான கொண்டாட்டங்களிலும், சடங்காசாரங்களிலும் எமது கவனத்தைச் செலுத்தாது , ஆவியிலும் , உண்மையிலும் வழிபடுகின்ற மக்களாக வாழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கொடைகள் அனைத்திற்கும் ஊற்றான இறைவா!

உமது பிள்ளைகளாகிய நாம், வெறுமனே மேலோட்டமான கொண்டாட்டங்களிலும், சடங்காசாரங்களிலும் எமது கவனத்தைச் செலுத்தாது, ஆவியிலும், உண்மையிலும் வழிபடுகின்ற மக்களாக வாழ வேண்டுமென்றும், உம்மால் உருவாக்கப்பட்ட குடும்ப உறவும், அழைப்பும் சவால்களுக்குள் அகப்பட்டுக் கிடக்கும் இவ்வேளையில், ஒவ்வொரு குடும்பத்திலுமுள்ள கணவனும் - மனைவியும் தங்கள் அழைப்பின் உட்பொருளை ஆழமாக உணர்ந்து, உறவுடனும் - ஒற்றுமையுடனும் வாழ அருள் கூர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நம்பிக்கையின் ஊற்றாம் இறைவா,

உலகெங்கும் நீர் செய்து வரும் அற்புதங்களின் மேன்மையால் மக்கள் உமது வல்லமையை உணரவும், நீர் உண்மை கடவுள் என்பதை உலகம் முழுவதும் அறிந்துகொள்ளவும் துணைபுரிய வேண்டுமென்றும், எங்கள் நாட்டு மக்கள் அனைவரும் தன்னலத்தினைக் களைந்து, சமூக நலத்திலும், எளியவர்களின் முன்னேற்றத்திலும் அக்கறை கொண்டவர்களாய் வாழ்ந்து, இறையாட்சிக்குரிய சமத்துவ, சகோதரத்துவ சமுதாயத்தைக் கட்டியெழுப்ப உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

நலந்தரும் ஊற்றாம் இறைவா,

உம்மை நம்பிக்கையோடு தேடி வரும் மக்களின் உடல் நோய்களையும், மன நோய்களையும் முழுமையாக குணப்படுத்தி, மற்றவர்களின் முன்னிலையில் உமது மாட்சிமிகு செயல்களின் சாட்சிகளாக அவர்களை மாற்ற வேண்டுமென்றும், உம் திருமகன் இயேசுவின் அன்பை வெளிப்படுத்தும் ஏற்றத்தாழ்வற்ற கிறிஸ்தவ சமூகத்தை உருவாக்குபவர்களாய் வாழும் அருளை எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவர் மேலும் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

நீதியின் நாயகராம் இறைவா,

உலகெங்கும் நீதிக்காகவும், அமைதிக்காகவும் ஏங்கும் உமது மக்களின் துன்பங்களை நீக்கி, அவர்கள் விரும்பும் நீதியும் அமைதியும் நிறைந்த உலகை உருவாக்கிட வேண்டு மென்றும், உம் திருவுளத்தை உணர்ந்தவர்களாய், நீதியின் வழியில் நன்மை செய்பவர்களாக வாழத் தேவையான அருள் வரங்களை எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவர் மீதும் பொழிந்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

இன்றைய சிந்தனை

''பிறகு இயேசு ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு, 'இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்...' என்றார்'' (மாற்கு 9:36-37)

கிறிஸ்தவ நம்பிக்கையைத் தம் வாழ்வில் கடைப்பிடித்து, அதைப் பிறருக்கு அறிவிக்கின்ற மனிதர்கள் துன்பங்களையும் எதிர்ப்புகளையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்பது வரலாறு கூறும் உண்மை. இயேசுவே துன்பங்களை எதிர்கொண்டார்; சாவுக்குத் தீர்ப்பிடப்பட்டார். ஆயினும், இயேசு தாம் துன்பங்கள் அனுபவிக்க வேண்டும் என்று கூறியது அவருடைய சீடர்களுக்குப் புரியாத புதிராகவே இருந்தது. மாற்கு நற்செய்தியில் இயேசு தாம் கொல்லப்படப் போவதை ஒருமுறையல்ல, இருமுறையல்ல, மூன்று முறை முன்னறிவித்தார் எனக் காண்கிறோம் (காண்க: மாற் 8:31-38; 9:30-32; 10:32-34). ஆனாலும் அவருடைய சீடர்கள் ''துன்புறும் மெசியா''வை ஏற்க மறுத்தார்கள். அவர்களுடைய பார்வையில் இயேசு அதிகாரத்தோடு போதித்து, இஸ்ரயேல் மக்களை அடிமைநிலையிலிருந்து விடுவித்து, அவர்களைச் சுதந்திர மக்களாக்கி ஆட்சி செய்வார்; மகிமை மிகுந்த அவரது ஆட்சியில் தங்களுக்கும் அதிகாரப் பொறுப்புகள் வழங்கப்படும் என இயேசுவின் சீடர்கள் கனவு கண்டார்கள். எனவே, இயேசு துன்புறப் போகிறாரே என்பது பற்றி எள்ளளவும் கவலைப்படாமல் சீடர்கள் மட்டும் ''தங்களுள் யார் பெரியவர்'' என்னும் வாதத்தில் ஈடுபட்டார்கள்.

அப்போது இயேசு சீடர்களுக்கு ஒரு முக்கியமான போதனையை வழங்குகிறார். ''இயேசு அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிடுகிறார்''. பின் அவர்களைப் பார்த்து, அவர்கள் முதலிடங்களை நாடுவதற்குப் பதிலாக ''அனைவருக்கும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும்'' மாற வேண்டும் என்கிறார் (மாற் 9: 35). ''கடைசியானவர்'' எப்படி இருப்பார் என்பதை இயேசு ஒரு செயல் வழியாகக் காட்டுகிறார். அவர் ஒரு சிறு பிள்ளையை எடுத்து, சீடர் நடுவே நிறுத்துகிறார். அப்பிள்ளையை அன்போடு அரவணைக்கிறார். ''இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்'' எனக் கூறுகின்றார் (மாற் 9:37). சிறுபிள்ளைகள் அக்காலத்தில் தம் தந்தையரின் ''உடைமை'' எனக் கருதப்பட்டார்கள். சிறுபிள்ளைகளுக்கு உரிமைகள் கிடையாது; சமுதாயத்தில் மதிப்போ மரியாதையோ கிடையாது. அவர்கள் தங்கள் தேவைகளை நிறைவுசெய்ய பிறரைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. ஆக, சமுதாயத்தில் கடைநிலையில் இருந்த ''சிறு பிள்ளை'' போல யார் தம்மையே தாழ்த்தக்கொள்கிறார்களோ அவர்களே கடவுள் முன் பெரியவர்கள் ஆவர் என இயேசு போதிக்கிறார். மேலும் இயேசு தம்மையே அச்சிறு பிள்ளைக்கு ஒப்பிடுகிறார். சமுதயாத்தில் ஒதுக்கப்பட்ட மக்களை நாம் மதிப்போடும் மரியாதையோடும் நடத்தும்போது நாம் உண்மையிலேயே துன்புற்ற இயேசுவை ஏற்று மதிப்பளிக்கிறோம் என்பது ஓர் ஆழ்ந்த உண்மை. ஏழைகளின் மட்டில் தனிக் கவனம் செலுத்துவது கிறிஸ்தவ மரபு. அதைப் பின்பற்றி நாமும் பெருமையையும் செல்வத்தையும் தேடிச் செல்வதற்குப் பதிலாகக் கடவுளின் பார்வை கொண்டு செயல்பட வேண்டும். அப்போது சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டோரின் முகத்தைப் பார்க்கும்போது அங்கே இயேசுவையே நாம் காண்போம். ''இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்'' (மாற் 8:37) என்னும் இயேசுவின் சொற்கள் நாம் கடவுளின் பார்வையில் பெரியவர்களாக மாறுவதற்கான வழியைச் சுட்டிக்காட்டுகின்றன. மன மகிழ்வோடு பிறருக்குப் பணிசெய்வதே அந்த வழி.

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் தாழ்ச்சியும் பணிவும் கொண்ட உள்ளத்தோடு உம்மை அணுகிவர எங்களுக்கு அருள்தாரும்.