யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 24வது வாரம் திங்கட்கிழமை
2015-09-14

திருச்சிலுவையின் மகிமை


முதல் வாசகம்

பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான்.
எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 21: 4-9

அந்நாள்களில் ஏதோம் நாட்டைச் சுற்றிப் போகும்படி ஓர் என்ற மலையிலிருந்து இஸ்ரயேல் மக்கள் `செங்கடல் சாலை' வழியாகப் பயணப்பட்டனர்; அவ்வழியை முன்னிட்டு மக்கள் பொறுமை இழந்தனர். மக்கள் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராகப் பேசினர்: ``இந்தப் பாலைநிலத்தில் மாளும்படி எங்களை எகிப்திலிருந்து கொண்டு வந்தது ஏன்? இங்கு உணவுமில்லை, தண்ணீருமில்லை, அற்பமான இந்த உணவு எங்களுக்கு வெறுத்துப் போய்விட்டது'' என்றனர். உடனே ஆண்டவர் கொள்ளிவாய்ப் பாம்புகளை மக்களிடையே அனுப்பினார்; அவை கடிக்கவே இஸ்ரயேல் மக்களில் பலர் மாண்டனர். அப்போது மக்கள் மோசேயிடம் வந்து, ``நாங்கள் பாவம் செய்துள்ளோம்; நாங்கள் ஆண்டவருக்கும் உமக்கும் எதிராகப் பேசியுள்ளோம்; அவர் இந்தப் பாம்புகளை அகற்றிவிடும்படி நீர் ஆண்டவரிடம் வேண்டிக் கொள்ளும்'' என்றனர். அவ்வாறே மோசே மக்களுக்காக மன்றாடினார். அப்போது ஆண்டவர் மோசேயிடம், ``கொள்ளிவாய்ப் பாம்பு ஒன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து; கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்'' என்றார். அவ்வாறே மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார்; பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என் மக்களே, என் அறிவுரைக்குச் செவிசாயுங்கள்
திருப்பாடல்கள் 78: 1-2. 34-35. 36-37. 38

1 என் மக்களே, என் அறிவுரைக்குச் செவிசாயுங்கள்; என் வாய்மொழிகளுக்குச் செவிகொடுங்கள். 2 நீதிமொழிகள் மூலம் நான் பேசுவேன்; முற்காலத்து மறைச் செய்திகளை எடுத்துரைப்பேன். பல்லவி 34 அவர்களை அவர் கொன்றபோது அவரைத் தேடினர்; மனம் மாறி இறைவனைக் கருத்தாய் நாடினர். 35 கடவுள் தங்கள் கற்பாறை என்பதையும் உன்னதரான இறைவன் தங்கள் மீட்பர் என்பதையும் அவர்கள் நினைவில் கொண்டனர். பல்லவி

36 ஆயினும், அவர்கள் உதட்டளவிலேயே அவரைப் புகழ்ந்தார்கள்; தங்கள் நாவினால் அவரிடம் பொய் சொன்னார்கள். 37 அவர்கள் இதயம் அவரைப் பற்றிக்கொள்வதில் உறுதியாய் இல்லை; அவரது உடன்படிக்கையில் அவர்கள் நிலைத்து நிற்கவில்லை. பல்லவி

38 அவரோ இரக்கம் கொண்டவராய், அவர்கள் குற்றத்தை மன்னித்தார்; அவர்களை அழித்துவிடவில்லை, பலமுறை தம் கோபத்தை அடக்கிக்கொண்டார். தம் சினத்தையெல்லாம் அவர்களுக்கு எதிராய் மூட்டவில்லை. பல்லவி

இரண்டாம் வாசகம்

இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்;
திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 6-11

சகோதரர் சகோதரிகளே, கடவுள் வடிவில் விளங்கிய இயேசு, கடவுளுக்கு இணையாய் இருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக `இயேசு கிறிஸ்து ஆண்டவர்' என எல்லா நாவுமே அறிக்கையிடும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.'' அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 13-17

அக்காலத்தில் இயேசு நிக்கதேமிடம் கூறியது: ``விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை. பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிட மகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர். தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டதுபோல மானிட மகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்'' (யோவான் 3:14)

''திருச்சிலுவை உயர்த்தப்பட்ட விழா'' இன்று கொண்டாடப்படுகிறது. சிலுவையில் இயேசு அறையப்பட்டு ''உயர்த்தப்பட்டார்''. அதாவது, சிலுவையில் தொங்கிய இயேசுவைக் கடவுள் மகிமைப்படுத்தினார். சிலுவை என்பது துன்பமும் மகிழ்ச்சியும் நிறைந்த ஓர் முரண்பாட்டு அனுபவம். இயேசுவின் துன்பமே நம் மகிழ்ச்சிக்கு வழியாயிற்று. ஏனென்றால் துன்புற்று இறந்த இயேசுவிடம் நம்பிக்கை கொள்வோருக்குக் கடவுள் என்றும் நீடிக்கின்ற ''நிலைவாழ்வை'', ''நிறைவாழ்வை'' வாக்களித்துள்ளார். இஸ்ரயேல் மக்கள் பாலைநிலத்தில் பயணம் சென்ற போது பாம்புக் கடிக்குப் பலர் பலியாயினர். அப்போது மேலே உயர்த்தப்பட்ட பாம்பினை ஏறெடுத்துப் பார்த்தவர்கள் பிழைத்துக்கொண்டனர் (காண்க: எண்ணிக்கை 21:4-9). அந்நிகழ்ச்சி இயேசு சிலுவையில் தொங்கி நமக்கு வாழ்வளித்ததற்கு ஓர் முன்னடையாளம் போலாயிற்று.

சிலுவையைக் கண்டு அஞ்சுவோர் இன்றும் உண்டு. துன்பம் தமக்கு நேர்ந்துவிடலாகாது என்னும் எண்ணமே இதற்குக் காரணம். ஆனால் துன்பத்தின் வழியாகத்தான் கடவுள் நம்மை நிலைவாழ்வில் கொண்டுசேர்க்கின்றார் என்பதே உண்மை. துன்பத்தை நாம் நாடிச் செல்லவேண்டியதில்லை. ஆனால் வருகின்ற துன்பங்களைக் கடவுளின் திருவுளத்துக்கு ஏற்ப நாம் ஏற்றுக்கொண்டு, அத்துன்பங்களை இயேசுவின் துன்பங்களோடு இணைத்து மனதார உள்வாங்கிச் செயல்பட்டால் நாமும் இயேசுவின் மீட்புப் பணியில் நெருங்கிப் பங்கேற்போர் ஆவோம். அப்போது இயேசு மாட்சிமையில் ''உயர்த்தப்பட்டது'' போல நாமும் அவருடைய மாட்சியில் பங்கேற்று மகிழ்வோம். இயேசுவில் நம்பிக்கை கொள்வோர் எதைக் கண்டும் அஞ்சவேண்டியதில்லை. ஏனென்றால் தீய சக்திகள் அனைத்தையும் அவர் அடிபணியச் செய்துவிட்டார். அவருடைய வாழ்வு தோல்வியில் முடிந்ததுபோலத் தோன்றினாலும் உண்மையில் வெற்றி வாகை சூடியவர் அவரே. அந்த இயேசுவின் வெற்றியில் நமக்கும் பங்குண்டு.

மன்றாட்டு:

இறைவா, உயர்நிலையை அடைய வேண்டும் என்றால் நாங்களும் சிலுவையில் உயர்த்தப்பட வேண்டும் என உணர்ந்து வாழ்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.