யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 23வது வாரம் திங்கட்கிழமை
2015-09-07


முதல் வாசகம்

கிறிஸ்துவோடு இணைந்து ஒவ்வொருவரும் முதிர்ச்சி நிலை பெறுமாறு ஒவ்வொருவருக்கும் அறிவுரை கூறி முழு ஞானத்தோடு கற்பித்து வருகிறோம்
திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 24 - 2: 3

சகோதரர் சகோதரிகளே, இப்பொழுது, உங்கள் பொருட்டுத் துன்புறுவதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். கிறிஸ்து தம் உடலாகிய திருச்சபைக்காக வேதனையுற்றார். அவர் மேலும் படவேண்டிய வேதனையை என் உடலில் ஏற்று நிறைவு செய்கிறேன். என்மூலம் இறைவார்த்தையை முழுமையாக உங்களுக்கு வழங்கும் பொறுப்பைக் கடவுள் எனக்குக் கொடுத்தார். எனவே நான் திருத்தொண்டன் ஆனேன். நான் வழங்கும் இறைவார்த்தை ஊழிஊழியாக, தலைமுறை தலை முறையாக மறைந்திருந்த இறைத்திட்டத்தைப் பற்றியது. அத்திட்டம் இப்பொழுது இறைமக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. மக்களினங்கள் இடையே அது அளவற்ற மாட்சியுடன் செயல்படுகிறது என்பதைத் தம் மக்களுக்குத் தெரிவிக்கக் கடவுள் திருவுளம் கொண்டார். உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்துவைப் பற்றியதே அத்திட்டம். மாட்சி பெறுவோம் என்னும் எதிர்நோக்கை அவரே அளிக்கிறார். கிறிஸ்துவைப் பற்றியே நாங்கள் அறிவித்து வருகிறோம். கிறிஸ்துவோடு இணைந்து ஒவ்வொருவரும் முதிர்ச்சி நிலை பெறுமாறு ஒவ்வொருவருக்கும் அறிவுரை கூறி முழு ஞானத்தோடு கற்பித்து வருகிறோம். இதற்காகவே வல்லமையோடு என்னுள் செயல்படும் அவருடைய ஆற்றலுக்கு ஏற்ப வருந்திப் பாடுபட்டு உழைக்கிறேன். உங்களுக்காகவும் இலவோதிக்கேயா நகர மக்களுக்காகவும் என்னை நேரில் பார்த்திராத மற்ற அனைவருக்காகவும் நான் மிகவும் வருந்தி உழைக்கிறேன். இதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன். என் உழைப்பால் உள்ளங்கள் யாவும் ஊக்கமடைந்து அனைவரும் அன்பினால் ஒன்றாக இணைக்கப்படவேண்டும்; இவ்வாறு கடவுளுடைய மறைபொருளாகிய கிறிஸ்துவை யாவரும் அறிந்துணர வேண்டும்; அந்த அறிவுத் திறனால் உறுதியான நம்பிக்கையை அவர்கள் நிறைவாகப் பெறவேண்டும். இதுவே என் விருப்பம். ஞானமும் அறிவுமாகிய செல்வங்கள் அனைத்தும் கிறிஸ்துவில் மறைந்துள்ளன.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

நெஞ்சே கடவுளுக்காக மௌனமாய்க் காத்திரு
திருப்பாடல்கள் 62;5,6,8

5 நெஞ்சே கடவுளுக்காக மௌனமாய்க் காத்திரு; ஏனெனில், நான் எதிர்பார்க்கும் நலன் வருவது அவரிடமிருந்தே; 6 உண்மையாகவே, என் கற்பாறையும் மீட்பும் அவரே. எனவே, நான் சிறிதும் அசைவுறேன். பல்லவி

8 மக்களே! எக்காலத்திலும் அவரையே நம்புங்கள்; அவர் முன்னிலையில் உங்கள் உள்ளத்தில் உள்ளதைத் திறந்து கொட்டுங்கள்; கடவுளே நமக்கு அடைக்கலம். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! : ஓய்வு நாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?' அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 6-11

ஓய்வு நாளில் இயேசு தொழுகைக்கூடத்திற்குள் சென்று கற்பித்தார். அங்கே வலக்கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். மறைநூல் அறிஞரும் பரிசேயரும் இயேசுவிடம் குற்றம் காணும் நோக்குடன், ஓய்வு நாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக் கொண்டே இருந்தனர். இயேசு அவர்களுடைய எண்ணங்களைஅறிந்து, கை சூம்பியவரை நோக்கி, ``எழுந்து நடுவே நில்லும்!'' என்றார். அவர் எழுந்து நின்றார். இயேசு அவர்களை நோக்கி, ``உங்களிடம் ஒன்று கேட்கிறேன்: ஓய்வு நாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?'' என்று கேட்டார். பிறகு அவர் சுற்றிலும் திரும்பி அவர்கள் யாவரையும் பார்த்துவிட்டு, ``உமது கையை நீட்டும்!'' என்று அவரிடம் கூறினார். அவரும் அப்படியே செய்தார். அவருடைய கை நலமடைந்தது. அவர்களோ கோபவெறிகொண்டு இயேசுவை என்ன செய்யலாம் என்று ஒருவரோடு ஒருவர் கலந்து பேசினர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''மறைநூல் அறிஞரும் பரிசேயரும் இயேசுவிடம் குற்றம் காணும் நோக்குடன், ஓய்வு நாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக் கொண்டேயிருந்தனர்'' (லூக்கா 6:7)

இயேசுவிடம் குற்றம் காண்பதற்கென்றே மறைநூல் அறிஞரும் பரிசேயரும் இயேசுவைக் ''கூர்ந்து கவனித்துக் கொண்டேயிருக்கின்றனர்'' (காண்க: லூக் 6:7). சிலர் குற்றம் காண்பதையே தங்கள் தொழிலாகக் கொண்டிருப்பார்கள். பிறர் ஏதாவது தவறு செய்ய மாட்டார்களா என்று பார்த்துக்கொண்டே இருக்கின்ற மனிதர்கள் நல்ல எண்ணத்தோடு செயல்படுவதில்லை. மாறாக, பிறருடைய குற்றங்களைச் சுட்டிக் காட்டி, தாங்கள் அவர்களை விடவும் மேலானவர்கள் என தங்களையே ஏமாற்றிக்கொள்கிறவர்கள் இவர்கள். அல்லது பிறரைத் தாழ்த்துவதன் மூலம் தாங்கள் உயர்ந்துவிடலாம் என நினைத்து இவர்கள் கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்பார்கள். இயேசுவை அணுகிய ''மறைநூல் அறிஞரும் பரிசேயரும்'' இவ்வகையைச் சார்ந்தவர்களே. லூக்கா நற்செய்தியாளர் இயேசுவுக்கும் அக்கால யூத சமயத் தலைவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது எனவும், அவர்கள் இயேசுவை எதிர்த்து நின்றார்கள் எனவும் பதிவு செய்துள்ளார் (காண்க: லூக் 6:11). லூக்கா கூறுவது வரலாற்று உண்மையா அல்லது மிகைக் கூற்றா என்னும் கேள்வி எழுகிறது. விவிலிய அறிஞர்கள் இக்கேள்விக்குத் தருகின்ற விளக்கம் இது: இயேசுவின் வரலாற்றைப் பதிவு செய்கின்ற லூக்கா அவ்வரலாற்றின் தொடக்கத்திலேயே இயேசுவுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் இருந்தார்கள் எனக் காட்டுகிறார். இது ஓர் இலக்கிய உத்தியாகக் கூட இருக்கலாம். மேலும், இயேசு நிலைநாட்ட விரும்பிய உண்மை என்னவென்றால், சமயச் சடங்குகளை விடவும் மனித உயிரையும் மாண்பையும் மதிப்பது தேவை. அதாவது, சடங்கு முறையை விட உயர்ந்தது அறநெறி சார்ந்த கடமை என்னும் போதனையை இயேசு வழங்குகிறார்.

எனவே, ஓய்வு நாள் என்பது ஒரு சமயம் சார்ந்த சடங்கு அனுசாரம். ஆனால் நோயுற்ற மனிதரைக் கரிசனையோடு கவனிப்பதும், அவர்கள் குணம் பெறுவதற்குத் தேவையானவற்றைச் செய்துகொடுப்பதும் அறநெறி சார்ந்த முதன்மை. பரிசேயரும் மறைநூல் அறிஞரும் மக்களைத் தீட்டுப் படுத்துவது யாது என்னும் தேவையற்ற விவாதங்களில் ஈடுபட்டனர்; சமையலுக்குப் பயன்படும் புதினா போன்ற செடிகளில் பத்தில் ஒருபங்கைக் காணிக்கையாக்க அளிக்க வேண்டும் எனவும் ஓய்வு நாளில் எவ்வளவு தூரம் நடப்பது சட்டத்தால் அனுமதிக்கப்பட்டது எனவும் நிர்ணயிப்பதில் நேரத்தைச் செலவிட்டனர். இப்போக்கினை இயேசு கண்டித்தார். இந்த நிலைப்பாட்டின் விளைவாக இயேசு யூத சமயத் தலைவர்களின் எதிர்ப்பைச் சந்திக்க நேர்ந்தது. தமது போதனையை ஏற்காத மனிதரை விட்டுவிட்டு இயேசு தமக்குச் செவிமடுத்தவர்களிடம் திரும்பினார். இறையாட்சி பற்றி இயேசு அறிவித்த நற்செய்தியை ஏற்றவர்கள் இயேசுவிடம் ஓர் அதிசய சக்தி விளங்கியதைக் கண்டார்கள். இயேசு வழியாகக் கடவுளே பேசுகிறார் என அவர்கள் உணர்ந்தார்கள். இத்தகைய மக்கள் நடுவிலிருந்து இயேசு பன்னிருவரைத் தேர்ந்துகொண்டார் (லூக் 6:12-13). அவர்களுக்குத் ''திருத்தூதர்'' என்பது பெயர் (லூக் 6:13). இதை லூக்கா கோடிட்டுக் காட்டுகிறார். தூற்றுவார் தூற்றட்டும், மனம் திறந்து கேட்பார் தம் பணியைத் தொடரட்டும் என்பதே இயேசுவின் அணுகுமுறை ஆயிற்று. இயேசுவின் பணியை ஆற்றிட நாம் அழைக்கப்படுகிறோம். அவர் கடவுளின் திருத்தூதராக நம்மிடையே வந்து, நம்மைத் தம் சீடராக ஏற்று, நாம் அவரது பணியைத் தொடர நம்மையும் திருத்தூதர்களாக அனுப்புகிறார்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகனால் அனுப்பப்படுகின்ற தூதர்களாக நாங்கள் செயல்பட அருள்தாரும்.