யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 22வது வாரம் வெள்ளிக்கிழமை
2015-09-04


முதல் வாசகம்

திருச்சபையாகிய உடலுக்குத் தலையும் தொடக்கமும் அவரே.
திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 15-20

சகோதரர் சகோதரிகளே, இயேசு கிறிஸ்து கட்புலனாகாத கடவுளது சாயல்; படைப்பனைத்திலும் தலைப்பேறு. ஏனெனில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை, கட்புலனாகுபவை, கட்புலனாகாதவை, அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர். அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன. அனைத்துக்கும் முந்தியவர் அவரே; அனைத்தும் அவரோடு இணைந்து நிலைபெறுகின்றன. திருச்சபையாகிய உடலுக்குத் தலையும் தொடக்கமும் அவரே. எல்லாவற்றுள்ளும் முதன்மை பெறுமாறு இறந்து உயிர்த்தெழுவோருள் அவர் தலைப்பேறு ஆனார். தம் முழு நிறைவும் அவருள் குடிகொள்ளக் கடவுள் திருவுளம் கொண்டார். சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
திருப்பாடல்கள் 100: 1-2. 3. 4. 5

! 1 அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்! 2 ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! பல்லவி

3 ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! பல்லவி

4 நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப் பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்! பல்லவி

5 ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! `யோவானுடைய சீடர்கள் அடிக்கடி நோன்பு இருந்து மன்றாடி வருகிறார்கள்; அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 33-39

அக்காலத்தில் பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இயேசுவை நோக்கி, ``யோவானுடைய சீடர்கள் அடிக்கடி நோன்பு இருந்து மன்றாடி வருகிறார்கள்; பரிசேயர்களின் சீடரும் அவ்வாறே செய்கின்றனர். உம்முடைய சீடரோ உண்பதும் குடிப்பதுமாக இருக்கின்றனரே!'' என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி, ``மணமகன் மணவிருந்தினர்களோடு இருக்கும் வரை அவர்களை நோன்பு இருக்கச் செய்யலாமா? ஆனால் மணமகன் அவர்களை விட்டுப் பிரிய வேண்டிய காலம் வரும்; அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்'' என்றார். அவர் அவர்களுக்கு ஓர் உவமையையும் கூறினார்: ``எவரும் புதிய ஆடையிலிருந்து ஒரு துண்டைக் கிழித்து அதைப் பழைய ஆடையோடு ஒட்டுப் போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப் போட்டால் புதிய ஆடையும் கிழியும்; புதிய துண்டும் பழையதோடு பொருந்தாது. அதுபோலப் பழைய தோற்பைகளில் எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை; ஊற்றி வைத்தால் புதிய மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும். மதுவும் சிந்திப் போகும்; தோற்பைகளும் பாழாகும். புதிய மதுவைப் புதிய தோற்பைகளில்தான் ஊற்றி வைக்க வேண்டும். பழைய திராட்சை மதுவைக் குடித்தவர் எவரும் புதியதை விரும்ப மாட்டார்; ஏனெனில் `பழையதே நல்லது' என்பது அவர் கருத்து.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

புதியதும் பழையதும்

பழமையும் புதுமையும் பக்குவமாகப் பின்னிப் பிணைந்து செல்லும்போது அதன் சிறப்பே தனியானது. முதுமையின் விவேகமும் இளமையின் வேகமும் இணைந்து இயங்கினால், அதன் பலனுக்கு ஈடுஏது? விருந்தும் மருந்தும் விகிதாச்சாரம் மாராமல் இருந்தால் நல்ல சுகத்திற்கு குறையில்லை.

இந்த நிலை அவ்வளவு எளிதானதல்ல. அந்தந்த நிலைபற்றிய அறிவு, அனுபவம்,ஆற்றல் வேண்டும். இணைந்து இணக்கமாக இயங்கும் செயலாக்கம் வேண்டும்.

இவை இல்லாதபோது புதிய திராட்சை மதுவை பழைய தோற்பைகளில் ஊற்றி வைத்த கதைதான். பழைய ஆடையில் புதிய துணியை சேர்த்து தைத்த ஆடையின் கதிதான். மணமகன் மணக்கோலத்தில் இருக்கும்போது நோன்பு இருப்பதும் இதற்குச் சமமே. திருமண வீட்டில் முகாரி ராகம் வாசித்தால் யார் பொருப்பார்?. ஆள், இடம், சூழ்நிலைபற்றிய அறிவு, அனுபவம் பேண்டும்.

வாழ்க்கைக்கு மிக அவசியமான ஒன்றல்லவா! கடைபிடித்துபாருங்கள். இயேசு சொன்னது சரிஎனப்படும்.

மன்றாட்டு:

இறைவா, நீர் எங்களுக்கு அளிக்கின்ற மாண்புக்கு ஏற்ப நாங்கள் வாழ்ந்திட அருள்தாரும்.