யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 20வது வாரம் புதன்கிழமை
2015-08-19

புனித ஜான் யுட்ஸ்


முதல் வாசகம்

`உண்மையில், உங்கள்மீது ஆட்சி செய்ய நீங்கள் என்னைத் திருப்பொழிவு செய்தால், வாருங்கள்; என் நிழலில் அடைக்கலம் புகுங்கள்;
நீதித்தலைவர்கள் நூலிலிருந்து வாசகம் 9: 6-15

அந்நாள்களில் செக்கேம் மற்றும் பெத்மில்லோவின் குடிமக்கள் அனைவரும் செக்கேமில் `சிலைத் தூண் கருவாலி' மரத்தடியில் அபிமெலக்கை அரசனாக ஏற்படுத்தினர். இது யோத்தாமுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் கெரிசிம் மலைக்கு ஏறிச் சென்று அதன் உச்சியில் நின்றுகொண்டு உரத்த குரலில் கூப்பிட்டுக் கூறியது: ``செக்கேமின் மக்களே, எனக்குச் செவிசாயுங்கள்; கடவுள் உங்களுக்குச் செவிகொடுப்பார். மரங்கள், தங்களுக்கு ஓர் அரசனைத் திருப்பொழிவு செய்யப் புறப்பட்டன. அவை ஒலிவ மரத்திடம், `எங்களை அரசாளும்' என்று கூறின. ஒலிவ மரம் அவற்றிடம், `எனது எண்ணெயால் தெய்வங்களும் மானிடரும் மதிப்புப் பெறுகின்றனர். அப்படியிருக்க அதை உற்பத்தி செய்வதை நான் விட்டுக்கொடுத்து மரங்களுக்கு மேல் அசைந்தாட வருவேனா?' என்றது. மரங்கள் அத்தி மரத்திடம், `வாரும், எங்களை அரசாளும்' என்றன. அத்தி மரம் அவற்றிடம், `எனது இனிமையையும் நல்ல பழத்தையும் விட்டுவிட்டு, மரங்கள் மீது அசைந்தாட வருவேனா?' என்றது. மரங்கள் திராட்சைக் கொடியிடம், `வாரும், எங்களை அரசாளும்' என்றன. திராட்சைக் கொடி அவற்றிடம், `தெய்வங்களையும் மானிடரையும் மகிழ்விக்கும் எனது திராட்சை இரசத்தை விட்டுவிட்டு மரங்கள்மேல் அசைந்தாட வருவேனா?' என்றது. மரங்கள் எல்லாம் முட்புதரிடம், `வாரும் எங்களை அரசாளும்' என்றன. முட்புதர் மரங்களிடம், `உண்மையில், உங்கள்மீது ஆட்சி செய்ய நீங்கள் என்னைத் திருப்பொழிவு செய்தால், வாருங்கள்; என் நிழலில் அடைக்கலம் புகுங்கள்; இல்லையேல், முட்புதரான என்னிடமிருந்து நெருப்பு கிளர்ந்தெழுந்து லெபனோனின் கேதுரு மரங்களை அழித்துவிடும்' என்றது.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உமது வல்லமையில் அரசர் பூரிப்படைகின்றார்
திருப்பாடல்கள் 21: 1-2. 3-4. 5-6

1 ஆண்டவரே, உமது வல்லமையில் அரசர் பூரிப்படைகின்றார்; நீர் அளித்த வெற்றியில் எத்துணையோ அவர் அக்களிக்கின்றார்! 2 அவர் உள்ளம் விரும்பியதை நீர் அவருக்குத் தந்தருளினீர்; அவர் வாய்விட்டுக் கேட்டதை நீர் மறுக்கவில்லை. பல்லவி

3 உண்மையில் நலமிகு கொடைகள் ஏந்தி நீர் அவரை எதிர் கொண்டீர்; அவர் தலையில் பசும்பொன்முடி சூட்டினீர். 4 அவர் உம்மிடம் வாழ்வு வேண்டி நின்றார்; நீரும் முடிவில்லா நீண்ட ஆயுளை அவருக்கு அளித்தீர். பல்லவி

5 நீர்அவருக்கு வெற்றியளித்ததால் அவரது மாட்சிமை பெரிதாயிற்று. மேன்மையையும் மாண்பையும் அவருக்கு அருளினீர். 6 உண்மையாகவே, எந்நாளும் நிலைத்திருக்கும் ஆசிகளை அவர் பெற்றுள்ளார்; உமது முகத்தை அவர் மகிழ்ச்சியுடன் கண்டு களிக்கச் செய்தீர். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?' என்றார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1-16

அக்காலத்தில் இயேசு கூறியது: ``விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார். அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார். ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்றபொழுது சந்தை வெளியில் வேறு சிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார். அவர்களிடம், `நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்' என்றார். அவர்களும் சென்றார்கள். மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார். ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம், `நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்றுகொண்டிருக்கிறீர்கள்?' என்று கேட்டார். அவர்கள் அவரைப் பார்த்து, `எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை' என்றார்கள். அவர் அவர்களிடம், `நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்' என்றார். மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வை யாளரிடம், `வேலையாள்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை அவர்களுக்குரிய கூலி கொடும்' என்றார். எனவே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர். அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனாரியம் வீதம்தான் பெற்றார்கள். அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டபோது அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து, `கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கிவிட்டீரே' என்றார்கள். அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, `தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக்கொள்ளவில்லையா? உமக்குரியதைப் பெற்றுக்கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

திராட்சைத் தோட்ட உரிமையாளர் வேலையாள்களுள் ஒருவரைப் பார்த்து, 'தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக்கொள்ளவில்லையா? உமக்குரியதைப் பெற்றுக்கொண்டு போய்விடும். உமகுக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம்' என்றார்'' (மத்தேயு 20:13-14)

மாதச் சம்பளம் வாங்குவோருக்கும் அன்றாடம் செய்கின்ற வேலைக்குக் கூலி வாங்கிப் பிழைப்பு நடத்துவோருக்கும் இடையே பெரும் வேறுபாடு உள்ளதை நாம் அறிவோம். இயேசு வாழ்ந்த காலத்தில் பாலஸ்தீனப் பகுதிகளில் கூலி வேலை முறை வழக்கத்தில் இருந்தது. கூலி வேலை செய்தவர்களின் நிலை அடிமைகளின் நிலையை விட மோசமாக இருந்தது. அடிமைகளாவது ஒரு எசமானருக்கு ''உடைமை'' எனக் கருதப்பட்டனர். அன்றாடம் வேலை செய்து பிழைத்தவர்கள் சந்தை வெளியில் அதிகாலையிலேயே வந்து கூடுவர். அவர்களை வேலைக்கு அமர்த்த விரும்புவோர் அங்கே வந்து தமக்குத் தேவையான கூலியாள்களைக் கூட்டிச் சென்று வேலை செய்ய விடுவர். நம் நாட்டில் இன்றும்கூட இப்பழக்கம் பரவலாக உள்ளதை நாமறிவோம். அன்றுபோல இன்றும் கூலி வேலை செய்தவர்களுக்கு ஒரு நாள் வேலை கிடைக்காமல் போனால் பட்டினிதான். வேலையில்லை என்பதற்காக அவர்களுக்கு நிவாரண உதவி அளிக்க யாரும் அக்காலத்தில் இருக்கவில்லை. அவர்களுக்கு அரசு உதவ வேண்டும் என வாதாட தொழிலாளர் சங்கங்களும் கிடையாது. கூலி வேலைக்கு ஆள்களை அமர்த்தியவர்கள் தாங்கள் விரும்பியபடி செய்யலாம் (காண்க: மத் 20:15). எனவே, கூலியாள்களைப் பொறுத்தமட்டில் ஒரு நாள் வேலை கிடைக்காவிட்டால் அன்று அவரும் அவருடைய குடும்பமும் பட்டினி கிடக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இயேசு கூறிய ''திராட்சைத் தோட்ட உரிமையாளர் உவமை''யில் (காண்க: மத் 20:1-16) வருகின்ற நிலக்கிழார் (தோட்ட உரிமையாளர்) தமக்குத் தேவையான வேலையாள்களை விடியற்காலையிலேயே தேர்ந்துகொண்டார். ஆனால், அவர் மீண்டும் மூன்று முறை (காலை ஒன்பது மணி, நண்பகல், மாலை ஐந்து மணி) சந்தை வெளிக்குச் சென்று வேலை வாய்ப்பு இல்லாமல் நின்றிருந்தவர்களுக்கு வேலை கொடுக்கிறார். வேலை செய்து கூலி பெற்றால்தான் அன்றைய பிழைப்பு நடக்கும் என்னும் நிலையிலிருந்த அந்த கூலியாள்கள்மீது இரக்கம் கொண்டு தோட்ட உரிமையாளர் அவர்களுக்கு வேலை கொடுக்கின்றார்.

நாள் முழுதும் வேலைசெய்தவர்களுக்கும் ஒரு மணி மட்டுமே வேலை செய்தவர்களுக்கும் ஒரே சமமான கூலி கொடுக்கப்பட்டால் அது அநீதி என்றுதான் நாம் எண்ணுவோம். ஆனால் இயேசு வெறும் உலகப் பார்வையில் செய்யப்படுகின்ற மதிப்பீடுகள்படி கடவுள் செயல்படுவதில்லை என இந்த உவமை வழி நமக்கு உணர்த்துகிறார். உவமையில் வருகின்ற நிலக்கிழார் (தோட்ட உரிமையாளர்) கடவுளுக்கு உருவகம். அவர் தம் மக்களின் தேவைகளை உணர்ந்தவர். அவர்களை அவர் வேறுபடுத்திப் பிரித்துப் பார்த்து, ஒருவரை உயர்த்தவோ மற்றவரைத் தாழ்த்தவோ செய்வதில்லை. எல்லா மனிதரும் கடவுளுக்கு முன் சமமானவர்களே. விடியற்காலையிலேயே வந்து தோட்ட வேலை செய்தவர்கள், ''கடைசியில் வந்த இவர்களையும் நாள் முழுதும் வேலை செய்த எங்களையும் இணையாக்கிவிட்டீரே'' (மத் 20:12) என்று கேட்டது உலகப் பார்வைப் படி நியாயமான கேள்விதான். ஆனால் கடவுளின் நீதி இரக்கமும் பரிவும் தோய்ந்த அன்பு இதயத்திலிருந்து பிறக்கும் ஒன்று. கடவுளின் இரக்கத்திற்கு எல்லை கிடையாது. கடவுளின் இரக்கத்திற்கு நாம் மனித கணிப்புப்படி வேலி கட்ட முடியாது. முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்னும் தத்துவம் கடவுளைப் பொறுத்தமட்டில் உண்மை ஆகாது. முதலில் வந்தாலும் சரி, கடைசியில் வந்தாலும் சரி எல்லாருக்கும் சம உரிமையே என்பதே கடவுளின் நீதி. கடவுள் நம்மை எவ்வாறு நடத்த வேண்டும் என நாம் அவருக்கு ஆலோசனை கூற நமக்கு உரிமையில்லை. அவர் ''தாராள உள்ளத்தோடு பிறருக்கு நன்மை செய்கிறாரே என நினைத்து நாம் பொறாமைப்படுவதும் முறையாகாது'' (காண்க: மத் 20:15). மாறாக, எல்லா மக்களையும் சமமாக நடத்துகின்ற ''நம் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நாமும் நிறைவுள்ளவர்களாய் இருக்க வேண்டும்'' (காண்க: மத் 5:48).

மன்றாட்டு:

இறைவா, உம் அன்பின் பெருக்கை வியந்து உம்மைப் புகழ எங்களுக்கு அருள்தாரும்.