யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 18வது வாரம் செவ்வாய்க்கிழமை
2015-08-04

புனித ஜோன் மரியவியானி


முதல் வாசகம்

ஏன் என் அடியான் மோசேக்கு எதிராகப் பேச நீங்கள் அஞ்சவில்லை?
எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 12: 1-13

அந்நாள்களில் மோசே எத்தியோப்பியப் பெண்ணை மணந்திருந்தார்; அவர் மணந்திருந்த எத்தியோப்பியப் பெண்ணை முன்னிட்டு மிரியாமும் ஆரோனும் அவருக்கு எதிராகப் பேசினர். அவர்கள், ``ஆண்டவர் உண்மையில் மோசே வழியாக மட்டுமா பேசியுள்ளார்? அவர் எங்கள் வழியாகவும் பேசவில்லையா?\'\' என்றனர். ஆண்டவர் இதனைக் கேட்டார். பூவுலகின் அனைத்து மாந்தரிலும் மோசே சாந்தமிகு மானிடராய்த் திகழ்ந்தார். உடனே ஆண்டவர் மோசே, ஆரோன், மிரியாம் ஆகியோரிடம், ``நீங்கள் மூவரும் சந்திப்புக் கூடாரத்தருகே வாருங்கள்\'\' என்றார். அவர்கள் மூவரும் வந்தனர். மேகத் தூண் ஒன்றில் ஆண்டவர் இறங்கி வந்து கூடார வாயிலருகே நின்று, ஆரோனையும் மிரியாமையும் அழைத்தார்; அவர்கள் இருவரும் முன் வந்தனர். அவர் கூறியது: ``என் வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்குள் இறைவாக்கினன் ஒருவன் இருந்தால் ஆண்டவராகிய நான் ஒரு காட்சியின் வழியாக அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன். கனவில் அவனோடு பேசுவேன். ஆனால் என் அடியான் மோசேயோடு அப்படியல்ல; என் வீடு முழுவதிலும் அவனே நம்பிக்கைக்குரியவன்; நான் அவனோடு பேசுவது மறைபொருளாக அல்ல, நேர்முகமாகவும் தெளிவாகவும் இருக்கும். ஆண்டவர் உருவையும் அவன் காண்கிறான். பின்னர் ஏன் என் அடியான் மோசேக்கு எதிராகப் பேச நீங்கள் அஞ்சவில்லை?\'\' மேலும் ஆண்டவரின் சினம் அவர்கள்மேல் மூண்டது; அவர் அகன்று சென்றார். கூடாரத்தின் மேலிருந்து மேகம் அகன்றதும் மிரியாமை பனி போன்ற வெண்மையான தொழுநோய் பீடித்தது. ஆரோன் மிரியாம் பக்கம் திரும்பவே அவள் தொழுநோயாளியாய் இருக்கக் கண்டார். ஆரோன் மோசேயிடம், ``என் தலைவரே! அறிவீனமாக நாங்கள் செய்த பாவத்தை எங்கள்மேல் சுமத்த வேண்டாம்; தாயின் வயிற்றிலிருந்து செத்துப் பிறந்த அரைகுறைக் குழந்தை போன்று இவள் ஆகாதிருக்கட்டும்\'\' என்றார். மோசே ஆண்டவரிடம் முறையிட்டு, ``கடவுளே, இவளைக் குணமாக்க வேண்டுகிறேன்\'\' என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்.
திருப்பாடல் 51: 1-2. 3-4. 10-11

கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். 2 என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். பல்லவி

3 ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது. 4 உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன்; எனவே, உம் தீர்ப்பினால் உம் நீதியை வெளிப் படுத்தியுள்ளீர்; உம் தண்டனைத் தீர்ப்பில் நீர் மாசற்றவராய் விளங்குகின்றீர். பல்லவி

10 கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும். 11 உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! `ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்.\" அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-2,10-14

அக்காலத்தில் பரிசேயரும் மறைநூல் அறிஞரும் எருசலேமிலிருந்து இயேசுவிடம் வந்து, ``உம் சீடர் மூதாதையரின் மரபை மீறுவதேன்? உணவு அருந்துமுன் அவர்கள் தங்கள் கைகளைக் கழுவுவதில்லையே\'\' என்றனர். மேலும் இயேசு மக்கள் கூட்டத்தைத் தம்மிடம் வரவழைத்து அவர்களை நோக்கி, ``நான் சொல்வதைக் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள். வாய்க்குள் செல்வது மனிதரைத் தீட்டுப்படுத்தாது; மாறாக வாயிலிருந்து வெளி வருவதே மனிதரைத் தீட்டுப்படுத்தும்\'\' என்றார். பின்பு சீடர் அவரை அணுகி, ``பரிசேயர் உம் வார்த்தையைக் கேட்டு மனவேதனை அடைந்தனர் என்பது உமக்குத் தெரியுமா?\'\' என்றனர். இயேசு மறுமொழியாக, ``என் விண்ணகத் தந்தை நடாத எந்த நாற்றும் வேரோடு பிடுங்கப்படும். அவர்களை விட்டுவிடுங்கள் அவர்கள் குருட்டு வழிகாட்டிகள். பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவரை வழிநடத்தினால் இருவரும் குழியில் விழுவர்\'\' என்றார். .

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

-'வேண்டுவதற்காக ஒரு மலைக்குச் செல்வோம்'-

இயேசு தந்தை இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைக்குச் சென்றுள்ளார். நம் இயேசு பொழுது சாயும் நேரங்களில் மலைக்குச் சென்று தந்தை இறைவனிடம் செபிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அன்றும் அவர் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு வழக்கம்போல செபிக்கச் சென்றார். இறைமகன் செபிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாரென்றால் எனக்கும் உங்களுக்கும் செபம் எவ்வளவு அவசியம ;!

அந்த அவசியத்தை சீடர்கள் அடுத்த நிமிடமே உணர்ந்தனர். பெத்சாயிதா கடல் பயணம் அன்று கடும் பயணமாகி மாறிவிட்டது. பொழுது சாய்வதற்குள் வீடு போய் சேர வேண்டிய சீடர்கள் இன்னும் நடுக்கடலில் இருந்தனர். நான்காம் காவல்வேளை. ;எதிர்காற் று வேறு. உடலிலும் வலிமை இல்லை. அதைவிட ஆன்மீக வலிமை இல்லாததால் உடலிலும் உள்ளத்திலும் வலுவிழந்துவிட்டனர். படகிலும் பணம்செய்ய பயப்படுகின்றனர்.

மன்றாட்டு:

இறைவா, கவலைகள் நடுவிலும் உம் உடனிருப்பு எங்களை விட்டு மறைவதில்லை என நாங்கள் உணர்ந்து வாழ அருள்தாரும்.