யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 16வது வாரம் சனிக்கிழமை
2015-07-25

புனித யாக்கோப்பு


முதல் வாசகம்

ஆண்டவர் இயேசுவை உயிர்த்தெழச் செய்த கடவுளே எங்களையும் அவரோடு உயிர்த்தெழச் செய்து அவர் திருமுன் நிறுத்துவார்;
புனித பவுல் 2கொரிந்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4;7-15

7 இந்தச் செல்வத்தை மண்பாண்டங்கள் போன்ற நாங்கள் கொண்டிருக்கிறோம். இந்த ஈடு இணையற்ற வல்லமை எங்களிடமிருந்து வரவில்லை, அது கடவுளுக்குகே உரியது என்பது இதிலிருந்து விளங்குகிறது. 8 நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்து போவதில்லை; குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை; 9 துன்புறுத்தப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை; வீழ்த்தப்பட்டாலும் அழிந்துபோவதில்லை. 10 இயேசுவின் வாழ்வே எங்கள் உடலில் வெளிப்படுமாறு நாங்கள் எங்குச் சென்றாலும் அவருடைய சாவுக்குரிய துன்பங்களை எங்கள் உடலில் சுமந்து செல்கிறோம். 11 இயேசுவின் வாழ்வு சாவுக்குரிய எங்கள் உடலில் வெளிப்படுமாறு உயிரோடிருக்கும்போதே நாங்கள் அவரை முன்னிட்டு எந்நேரமும் சாவின் வாயிலில் நின்று கொண்டிருக்கிறோம். 12 சாவின் ஆற்றல் எங்களிலும் வாழ்வின் ஆற்றல் உங்களிலும் வெளிப்படுகிறது. 13 "நான் கடவுள்மீது நம்பிக்கையோடு இருந்தேன்; ஆகவே பேசினேன்" என்று மறைநூலில் எழுதியுள்ளது. அதற்கொப்ப நம்பிக்கை மனப்பான்மை கொண்டுள்ள நாங்களும் நம்புகிறோம்; ஆகவே பேசுகிறோம். 14 ஆண்டவர் இயேசுவை உயிர்த்தெழச் செய்த கடவுளே எங்களையும் அவரோடு உயிர்த்தெழச் செய்து அவர் திருமுன் நிறுத்துவார்; உங்களையும் அவ்வாறே நிறுத்துவார் என்பது எங்களுக்குத் தெரியும். 15 இவையனைத்தும் உங்கள் நன்மைக்கே நிகழ்கின்றன. இறையருள் பெறுவோரின் தொகை பெருகப்பெருக அவர்கள் கடவுளுக்குச் செலுத்தும் நன்றியும் பெருகும். இதனால் கடவுள் போற்றிப் புகழப்படுவார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம்.
திருப்பாடல்கள் 126;1-6

1 சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம்.பல்லவி

2 அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது; "ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்" என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். பல்லவி

3 ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம்பல்லவி.

4 ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும்.பல்லவி

5 கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். பல்லவி

6 விதை எடுத்துச் செல்லும்போது-செல்லும்போது - அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது-வரும்போது-அக்களிப்போடு வருவார்கள்.பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உங்களுள் பெரியவராக இருக்கு விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20;20-28

20 பின்பு செபதேயுவின் மனைவி தம் மக்களோடு ஒரு வேண்டுகோள் விடுக்குமாறு இயேசுவிடம் வந்து பணிந்து நின்றார். 21 "உமக்கு என்ன வேண்டும்?" என்று இயேசு அவரிடம் கேட்டார். அவர், "நீர் ஆட்சி புரியும்போது என் மக்களாகிய இவர்கள் இருவருள் ஒருவன் உமது அரியணையின் வலப்புறமும் இன்னொருவன் இடப்புறமும் அமரச் செய்யும்" என்று வேண்டினார். 22 அதற்கு இயேசு, "நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கப்போகும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா?" என்று கேட்டார். அவர்கள் "எங்களால் இயலும்" என்றார்கள். 23 அவர் அவர்களை நோக்கி, "ஆம், என் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவதோ எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்களை என் தந்தை யாருக்கு ஏற்பாடு செய்திருக்கிறாரோ அவர்களுக்கே அவை அருளப்படும்" என்றார். 24 இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப்பேரும் அச்சகோதரர் இருவர் மீதும் கோபங் கொண்டனர். 25 இயேசு அவர்களை வரவழைத்து, "பிற இனத்தவரின் தலைவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். உயர்குடி மக்கள் அவர்கள்மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்; இதை நீங்கள் அறிவீர்கள். 26 உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. உங்களுள் பெரியவராக இருக்கு விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். 27 உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும். 28 இவ்வாறே மானிட மகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாக தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்" என்று கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'மானிட மகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்' என்று கூறினார்'' (மத்தேயு 20:28)

இயேசு துன்பங்கள் அனுபவித்து, சாவுக்குக் கையளிக்கப்பட்டார். தமக்கு என்ன நேரப்போகிறது என்பதை அவர் தம் சீடருக்குப் பலமுறை எடுத்துரைத்தது உண்டு. ஆனால் அவருடைய சீடர்களோ இயேசு கூறியதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் இயேசுவை ஒரு மெசியா-அரசர் என்று பார்த்தார்கள். அவர் துன்புறும் மெசியா என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் துன்பத்தின் வழியாகவே நிறைவாழ்வை நாம் பெற முடியும் என்பதை இயேசு தம் வாழ்விலும் சாவிலும் தெளிவாகக் காட்டினார். அவருடைய வாழ்நாட்களில் அவருக்கு ஏற்பட்ட துன்பங்கள் பல உண்டு. அவற்றில் எல்லாம் மிகப்பெரிய துன்பம் அவருடைய உடலுக்கு ஏற்பட்ட வேதனை அல்ல, மாறாக, அவருடைய உள்ளத்தையும் இதயத்தையும் ஊடுருவிய துன்பங்களே அவை. இயேசுவின் உள்ளம் துயரத்தால் சோர்ந்திருந்ததை கெத்சமனித் தோட்டத்தில் ''இயேசு துயரமும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார்'' (மத் 26:37) எனக் குறிப்பிடுகிறார் மத்தேயு.

இவ்வாறு துன்புற்று, சாவுக்குக் கையளிக்கப்பட்டு இயேசு இறந்தாலும் கடவுள் அவரைச் சாவிலிருந்து விடுவித்தார்; இயேசுவைப் புத்துயிர் பெற்றவராக உயிர்பெற்றெழவும் செய்தார். இயேசுவைப் பின்செல்வோரும் அவரைப் போல மக்களுக்குப் பணிசெய்வதில் ஈடுபடும்போது மக்கள் கடவுளின் அன்பை அனுபவித்து உணர்ந்து அறிந்துகொள்வார்கள். எனவே, இறையாட்சியில் நாம் முக்கிய இடத்தைப் பிடித்துக்கொள்ளவேண்டும் என்னும் முறையற்ற வேண்டுகோளை இயேசுவிடம் கொண்டுசெல்வதே முறையல்ல என்பதை இயேசுவின் சொற்கள் காட்டுகின்றன. இயேசுவைப் பின்பற்றுவோர் தொண்டு ஆற்றுவதிலும் பிறருக்கு அன்புகாட்டி வாழ்வதிலும் நிலைத்திருக்க அழைக்கப்படுகிறார்கள்.

மன்றாட்டு:

இறைவா, கடவுளாட்சியின் பொருட்டு நாங்கள் துன்பத்தையும் தாங்கிக்கொள்கின்ற மனநிலையைத் தந்தருளும்.