யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 16வது வாரம் திங்கட்கிழமை
2015-07-20


முதல் வாசகம்

ஆண்டவர் மோசேயை நோக்கி, ``ஏன் என்னை நோக்கி அழவேண்டும்?
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 14: 5-18

அந்நாள்களில் மக்கள் ஓடிப் போய்விட்டார்கள் என எகிப்திய மன்னனுக்கு அறிவிக்கப்பட்டபோது, பார்வோனின் மனமும் அவன் அலுவலர் மனமும் இம்மக்களைப் பொறுத்தமட்டில் மாற்றம் கண்டது. ``நாம் இப்படிச் செய்துவிட்டோமே! நமக்கு ஊழியம் செய்த இஸ்ரயேலரை ஏன்தான் அனுப்பிவிட்டோம்?'' என்று அவர்கள் பேசிக்கொண்டனர். எனவே அவன் தன் தேரைப் பூட்டித் தன் ஆள்களையும் கூட்டிக்கொண்டு கிளம்பினான். தேர்ந்தெடுக்கப்பட்ட அறுநூறு தேர்களையும், மற்றும் எகிப்திலிருந்த எல்லாத் தேர்களையும், அவற்றின் படைத்தலைவர்கள் அனைவரையும் கூட்டிக்கொண்டு புறப்பட்டான். ஆண்டவர் எகிப்திய மன்னனாகிய பார்வோனின் மனம் இறுகிவிடச் செய்தார்; அவனும் இஸ்ரயேல் மக்களைத் துரத்திச் சென்றான். இஸ்ரயேல் மக்களோ வெற்றிக் கை உயர்த்தியவாறு சென்று கொண்டிருந்தனர். பார்வோனின் குதிரைகள், தேர்கள், குதிரை வீரர்கள், படை ஆகிய இவை அனைத்தோடும் எகிப்தியர் அவர்களைத் துரத்திச் சென்று பாகால் செபோனுக்கு எதிரேயுள்ள பிககிரோத்தின் எதிரே கடலின் அருகில் பாளையம் இறங்கியிருந்த அவர்களை நெருங்கினர். பார்வோன் நெருங்கிவந்துகொண்டிருக்க, இஸ்ரயேல் மக்களும் தம் கண்களை உயர்த்தி எகிப்தியர் தங்களைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருப்பதைக் கண்டனர். பெரிதும் அச்சமுற்றவராய் இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரை நோக்கிக் கூக்குரல் எழுப்பினர். அவர்கள் மோசேயை நோக்கி, ``எகிப்தில் சவக்குழிகள் இல்லையென்றா நீர் எங்களைப் பாலைநிலத்தில் சாவதற்கு இழுத்து வந்தீர்? எகிப்திலிருந்து எங்களை வெளியேற்றி இப்படி எங்களுக்குச் செய்துவிட்டீரே! `எங்களை விட்டு விடும்; நாங்கள் எகிப்தியர்களுக்கு ஊழியம் செய்வோம்' என்பதுதானே எகிப்தில் நாங்கள் உம்மிடம் கூறிய வார்த்தை! ஏனெனில் பாலைநிலத்தில் செத்தொழிவதைவிட, எகிப்தியருக்கு ஊழியம் செய்வதே எங்களுக்கு நலம்'' என்றனர். மோசே மக்களை நோக்கி, ``அஞ்சாதீர்கள்! நிலைகுலையாதீர்கள்! இன்று ஆண்டவர்தாமே உங்களுக்காக ஆற்றும் விடுதலைச் செயலைப் பாருங்கள். இன்று நீங்கள் காணும் எகிப்தியரை இனிமேல் என்றுமே காணப் போவதில்லை. ஆண்டவரே உங்களுக்காகப் போரிடுவார்; நீங்கள் அமைதியாயிருங்கள்'' என்றார். ஆண்டவர் மோசேயை நோக்கி, ``ஏன் என்னை நோக்கி அழவேண்டும்? முன்னோக்கிச் செல்லும்படி இஸ்ரயேல் மக்களிடம் சொல். கோலை உயர்த்திப் பிடித்தவாறு உன் கையைக் கடல்மேல் நீட்டி அதனைப் பிரித்து விடு. இஸ்ரயேல் மக்கள் கடல் நடுவே உலர்ந்த தரையில் நடந்து செல்வார்கள். நான் எகிப்தியரின் மனத்தைக் கடினப்படுத்துவேன். அவர்கள் இஸ்ரயேலரைப் பின்தொடர்ந்து செல்வார்கள். அப்போது பார்வோனையும் அவனுடைய படைகள், தேர்கள், குதிரை வீரர்கள் அனைவரையும் வென்று நான் மாட்சியுறுவேன். பார்வோனையும் அவன் தேர்களையும் குதிரை வீரர்கள் அனைவரையும் வென்று நான் மாட்சியுறும்போது, `நானே ஆண்டவர்' என்று எகிப்தியர் உணர்ந்து கொள்வர்'' என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவருக்குப் புகழ் பாடுவேன்; ஏனெனில், மாட்சியுடன் வெற்றி பெற்றார்.
விப 15: 1. 2. 3-4. 5-6

ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்; ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றி பெற்றார்; குதிரையையும், குதிரை வீரனையும் கடலுக்குள் அமிழ்த்திவிட்டார். -பல்லவி

2 ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல். அவரே என் விடுதலை; என் கடவுள். அவரை நான் புகழ்ந்தேத்துவேன். அவரே என் மூதாதையரின் கடவுள்; அவரை நான் ஏத்திப் போற்றுவேன். -பல்லவி

3 போரில் வல்லவர் ஆண்டவர்; `ஆண்டவர்' என்பது அவர் பெயராம். 4 பார்வோனின் தேர்களையும் படையையும் அவர் கடலில் தள்ளிவிட்டார்; அவனுடைய சிறந்த படைத்தலைவர்கள் செங்கடலில் அமிழ்த்தப்பட்டனர். -பல்லவி

5 ஆழங்களில் அவர்கள் கல்லைப்போல் மூழ்கிப் போயினர்; ஆழங்கள் அவர்களை மூடிக்கொண்டன. 6 ஆண்டவரே, உம் வலக்கை வலிமையில் மாண்புற்றது; ஆண்டவரே, உமது வலக்கை பகைவரைச் சிதறடிக்கின்றது. -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இன்று உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 38-42

அக்காலத்தில் மறைநூல்அறிஞர் சிலரும் பரிசேயர் சிலரும் இயேசுவுக்கு மறுமொழியாக, ``போதகரே, நீர் அடையாளம் ஒன்று காட்ட வேண்டும் என விரும்புகிறோம்'' என்றனர். அதற்கு அவர் கூறியது: ``இந்தத் தீய விபசாரத் தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு இறைவாக்கினரான யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது. யோனா மூன்று பகலும் மூன்று இரவும் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தார். அவ்வாறே மானிட மகனும் மூன்று பகலும் மூன்று இரவும் நிலத்தின் உள்ளே இருப்பார். தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து, இவர்களைக் கண்டனம் செய்வார்கள். ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால், இங்கிருப்பவர் யோனாவை விடப் பெரியவர் அல்லவா! தீர்ப்பு நாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார். ஏனெனில் அவர் சாலமோனின் ஞானத்தைக் கேட்க உலகின் கடைக்கோடியிலிருந்து வந்தவர். ஆனால் இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா!''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இயேசுவை நோக்கி, 'உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்?' என்று கேட்டனர்'' (மாற்கு 7:5)

கிருமிகள் வழியாக நோய்கள் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கையாகக் கைகளைக் கழுவ வேண்டும் என்பது இப்போது பரவலான வழக்கமாக இருக்கிறது. இது நல்ல வழக்கம்தான். அதுபோல, உணவருந்துமுன் கைகளைக் கழுவ வேண்டும் என்பதும் சரியாகத்தான் படுகிறது. ஆனாலும் சடங்கு சம்பிரதாயமாகக் கை அலம்புகின்ற பழக்கம் யூதர்களிடையே நிலவியது. இது பற்றிய சட்ட திட்டங்கள் ''மூதாதையர் மரபு'' என்னும் தொகுப்பாக முதலில் வாய்மொழி முறையிலும் பின்னர் ''மிஷ்னா'' என்னும் எழுத்துமுறையிலும் வடிவம் பெற்றன. வழிபாட்டுச் சடங்குகளை நிறைவேற்றும்போது தூய்மையாக இருக்கவேண்டும் என்பதற்காக யூத குருக்கள் கை கழுவினர். பிற இனத்தாரோடு உறவுகள் வளரவே, கை கழுவும் பழக்கம் குருக்களல்லாத பொது மக்களிடையேயும் பரவியது. சட்டத்தைக் காக்கும் வேலியாக உருவான இப்பழக்கம் படிப்படியாக ஒரு தடுப்புச் சுவர் போல ஆயிற்று. அதாவது, மக்களை ஒருவர் ஒருவரிடமிருந்தும் கடவுளிடமிருந்தும் பிரிக்கின்ற தடையாக மாறிற்று. இத்தகைய தடுப்புச் சுவர்களை இயேசு தகர்த்தெறிய வந்தார். கை கழுவவதற்கு எவ்வளவு தண்ணீர் பயன்படுத்துவது, கைகளைக் கழுவும்போது அவற்றை எப்படி விரிப்பது, எத்தனை தடவை கழுவுவது போன்ற அதிநுணுக்கமான கேள்விகள் எழுப்பப்பட்டன. உரோமை ஆட்சியாளர்களால் சிறைப்படுத்தப்பட்ட யூத குரு பற்றி ஒரு கதை உண்டு. குடிப்பதற்கென்று அவருக்கு அவ்வப்போது தண்ணீர் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் அத்தண்ணீரைக் குடித்துத் தாகம் தீர்ப்பதைவிட சடங்குமுறையான கை அலம்பலுக்கென்றே தண்ணீரை எல்லாம் பயன்படுத்திவிட்டதால் சாவும் நிலைக்கு வந்துவிட்டாராம். அந்த அளவு சடங்குமுறை ஒழுங்குகள் மக்களின் வாழ்வை ஆக்கிரமித்துக் கொண்டன.

தண்ணீரினால் கழுவிப் பெறுகின்ற வெளித்தூய்மையை விட உள் தூய்மையே முதன்மையானது என இயேசு கற்பிக்கிறார். தேவையற்ற சுமைகளை மக்கள் மீது ஏற்றிய சமயத் தலைவர்களை இயேசு கடிந்துகொள்கிறார். தூய்மை என்பது உள்ளத்திலிருந்து எழ வேண்டும். நம்மைத் தேடி வருகின்ற கடவுளுக்கு நம் உள்ளத்தை நாம் திறப்பதே தூய்மை அடைய வழியே தவிர வெளிச் சடங்குகளால் வாழ்வில் தூய்மை துலங்கிவிடாது. அதுபோலவே தீட்டு என்பது மனித உள்ளத்திலிருந்து பிறக்கின்ற அழுக்கு. அத்தகைய அழுக்குகளை இயேசு பட்டியலிடுகிறார்: ''மனித உள்ளத்திலிருந்தே பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன'' (மாற் 7:21-22). இத்தகைய தீட்டுகளிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளவும் தூய்மை வாழ்வு நடத்தவும் நாம் விரும்பினால் நாம் ''உதட்டளவில் கடவுளைப் போற்றாமல் உள்ளத்தளவில் அவரை அணுகிச் செல்ல வேண்டும்'' (காண்க: மாற் 7:6). கடவுளின் வார்த்தையை நம் வாழ்வில் செயல்படுத்த வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் உள்ளத்தில் நல்ல சிந்தனைகள் உருவாகிட எங்களையே உம்மிடம் கையளிக்க அருள்தாரும்.