யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 11வது வாரம் வெள்ளிக்கிழமை
2015-06-19


முதல் வாசகம்

எல்லாத் திருச்சபைகளைப் பற்றிய கவலை எனக்கு அன்றாடச் சுமையாயிருந்தது.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 11:18,21-30

சகோதரர் சகோதரிகளே, பலர் உலகு சார்ந்த முறையில் பெருமையடித்துக் கொள்வதால் நானும் அவ்வாறே செய்கிறேன். அவர்கள் எதில் பெருமை பாராட்டத் துணிகிறார்களோ அதில் நானும் பெருமை பாராட்டத் துணிந்து நிற்கிறேன். இப்போதும் ஓர் அறிவிலியைப் போன்றே பேசுகிறேன். அவர்கள் எபிரேயரா? நானும்தான்; அவர்கள் இஸ்ரயேலரா? நானும்தான்; அவர்கள் ஆபிரகாமின் வழிமரபினரா? நானும்தான். அவர்கள் கிறிஸ்துவின் பணியாளர்களா? நான் அவர்களை விடச் சிறந்த பணியாளனே. இங்கும் நான் ஒரு மதியீனனாகவே பேசுகிறேன். நான் அவர்களை விட அதிகமாய்ப் பாடுபட்டு உழைத்தேன்; பன்முறை சிறையில் அடைபட்டேன்; கொடுமையாய் அடிபட்டேன்; பன்முறை சாவின் வாயிலில் நின்றேன். ஐந்து முறை யூதர்கள் என்னைச் சாட்டையால் ஒன்று குறைய நாற்பது அடி அடித்தார்கள். மூன்று முறை தடியால் அடிபட்டேன்; ஒரு முறை கல்லெறி பட்டேன்; மூன்று முறை கப்பல் சிதைவில் சிக்கினேன்; ஓர் இரவும் பகலும் ஆழ்கடலில் அல்லலுற்றேன். பயணங்கள் பல செய்தேன்; அவற்றில் ஆறுகளாலும் இடர்கள், கள்வராலும் இடர்கள், என் சொந்த மக்களாலும் இடர்கள், பிற மக்களாலும் இடர்கள், நாட்டிலும் இடர்கள், காட்டிலும் இடர்கள், கடலிலும் இடர்கள், போலித் திருத்தூதர் களாலும் இடர்கள், இப்படி எத்தனையோ இடர்களுக்கு ஆளானேன். பாடுபட்டு உழைத்தேன்; பன்முறை கண் விழித்தேன்; பசி தாகமுற்றேன்; பட்டினி கிடந்தேன்; குளிரில் வாடினேன்; ஆடையின்றி இருந்தேன். இவை தவிர எல்லாத் திருச்சபைகளையும் பற்றிய கவலை எனக்கு அன்றாடச் சுமையாயிருந்தது. யாராவது வலுவற்றிருந்தால் நானும் அவரைப் போல் ஆவதில்லையா? யாராவது பாவத்தில் விழ நேர்ந்தால் என்உள்ளம் கொதிப்பதில்லையா? நான் பெருமை பாராட்ட வேண்டும் என்றால் என் வலுவின்மையைப் பற்றியேதான் நான் பெருமை பாராட்ட வேண்டும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் இடுக்கண்ணினின்று நீதிமான்களை விடுவிக்கின்றார்
திருப்பாடல்கள் 34;2-7

1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும் பல்லவி

. 2 நான் ஆண்டவரைப்பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். பல்லவி

3 என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம் பல்லவி

. 4 துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். பல்லவி

5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை. பல்லவி

6 இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ, அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

புனித மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6;9-23

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்; திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர். ஆனால், விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்; அங்கே பூச்சியோ துருவோ அழிப்பதில்லை; திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும். கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும். அது கெட்டுப் போனால், உங்கள் உடல் முழுவதும் இருளாய் இருக்கும். ஆக, உங்களுக்கு ஒளி தரவேண்டியது இருளாய் இருந்தால் இருள் எப்படியிருக்கும்

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

ஒப்பற்ற செல்வம் சேர்ப்போம்

இன்று இரண்டு சிந்தனை வழங்கப்படுகின்றது. செல்வம் கூறித்து கூறுகின்றார். கண் கூறித்தும் கூறுகின்றார். விண்ணுலக செல்வம், மண்ணுலக செல்வம். மண்ணுலக செல்வத்தை காணும் மக்கள் அதனின் பலனை அனுபவித்து சுகம் தேடுவதால், அதனை அடைய தீவிர முயற்சி செய்கின்றனர். விண்ணுலக செல்வத்தை காண இயலாது, அதனை வாழும் காலத்தில் அனுபவிக்க இயலாததால், அதனை தேடுவதும் குறைவுபடுகின்றது.

இதற்கு மனிதர்கள் மண்ணுலக வாழ்வு நிரந்தரமானது அல்ல, விண்ணுலக வாழ்வே நிரந்தரமானது என்பதனை புரிந்து கொண்டால் மாத்திரமே, வாழும் போது புண்ணியங்களை செய்து விண்ணுலகில் செல்வம் சேர்க்க விரும்புவார்கள். கண் உடலுக்கு விளக்கு என்ற சிந்தனையும் அற்புதமானது. கண்ணொளி பெற்றாலேயே, சிந்தனையும், செயலும் சீர்படும்.

மன்றாட்டு:

இறைவா, பிறருக்கு உதவும் வேளையில் நாங்கள் தன்னலம் நாடாது செயல்பட அருள்தாரும்.