இன்று நாம் கிறிஸ்துவின் திருவுடல், திரு இரத்தப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம்.‏

திருவழிப்பாட்டு ஆண்டு B (07-06-2015)

இது எனது உடல்: இது எனது உடன்படிக்கையின் இரத்தம்./> இது எனது உடல்: இது எனது உடன்படிக்கையின் இரத்தம்./> இது எனது உடல்: இது எனது உடன்படிக்கையின் இரத்தம்/> இது எனது உடல்: இது எனது உடன்படிக்கையின் இரத்தம்/> கடவுள் அன்பாய் இருக்கிறார்/> தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்./> கடவுள் அன்பாய் இருக்கிறார்/> இது எனது உடல்: இது எனது உடன்படிக்கையின் இரத்தம்./> நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்/> நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்/>


திருப்பலி முன்னுரை

இயேசுவின் திருவுடல் திரு இரத்தப்பெருவிழாவில் மகிழ்வோடு ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்க அணியமாகியிருக்கும் அன்புமக்கள் அனைவருக்கும் திருவிழாவின் அன்புவாழ்த்தை உரியதாக்குகிறேன். ஆண்டுதோறும் பெரிய வியாழனன்று ஆண்டவர் இயேசு தான் பாடுபடுவதற்கு முன்தினம் இராவுணவு வேளையின்போது தொடங்கிய அவரின் மீட்புச் செயல்களோடு பல மறை உண்மைகளை தாயாம் திருச்சபை நினைவுகூருகிறது. அவருடைய திருவுடல் திரு இரத்தத்தை மாபெரும் கொடையாக இயேசு மானுடத்திற்கு வழங்கியதை திருப்பாடுகளோடும் துயர் மிகுந்த சிலுவை மரணத்தோடும் இணைத்து நினைவு கூருகிறது. எனவே அந்நாளைத் தனியாகத் தூய ஆவிப் பெருவிழாவை அடுத்து வரும் ஞாயிறுகளில் இரண்டாவதைத் தேர்வுசெய்து அதிகமான சிறப்புகளோடு மகிழ்வுடன் கொண்டாடுகின்றது.

கோதுமை அப்பத்திலும், திராட்சைப்பழ இரசத்திலும் இருக்கின்ற மறைவான பிரசன்னத்தை திருச்சபை இன்று கொண்டாடி மகிழ்கிறது. நம் ஆண்டவரின் திருஉடலையும் திருஇரத்தத்தையும் உணவாகவும் பானமாகவும் பெறப் பேறுபெற்றவர்கள் நாம். இறுதி இரவுணவு வேளையில் கிறிஸ்து ஏற்படுத்திய இந்த நற்கருணைப் பலியே, நம் கத்தோலிக்க வழிபாட்டின் மையமாக விளங்குகிறது. நற்கருணை நாதருக்கு உண்மையுள்ள சாட்சிகளாக வாழும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் ஆர்வத்துடன் பங்கேற்போம்.



முதல் வாசகம்

முதல் வாசக முன்னுரை

ஆவிக்குரியவர்களே,

இன்றைய முதல் வாசகம், மோசே வழியாக கடவுள் ஏற்படுத்திக்கொண்ட பழைய உடன்படிக்கையைப் பற்றி எடுத்துரைக்கிறது. மோசே இஸ்ரயேல் மக்கள் சார்பாக ஆண்டவருக்கு நல்லுறவுப் பலி செலுத்துவதையும், அவர்கள்மீது உடன்படிக்கையின் இரத்தத்தைத் தெளித்ததையும் இதில் காண்கிறோம். கடவுள் நம்மோடு செய்துள்ள உடன்படிக்கைக்கு உண்மை உள்ளவர்களாய் வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு கவனமாக செவிகொடுப்போம்.

ஆண்டவர் உங்களோடு செய்துள்ள உடன்படிக்கையின் இரத்தம் இதோ.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 24: 3-8

அந்நாள்களில் மோசே மக்களிடம் வந்து ஆண்டவர் சொன்ன அனைத்து வார்த்தை களையும் விதிமுறைகளையும் அறிவித்தார். மக்கள் அனைவரும் ஒரே குரலாக, ``ஆண்டவர் கூறிய வார்த்தைகள் அனைத்தையும் நாங்கள் செயல்படுத்துவோம்'' என்று விடையளித்தனர். மோசே ஆண்டவரின் வாக்குகள் அனைத்தையும் எழுதி வைத்தார். அதிகாலையில் அவர் எழுந்து மலையடிவாரத்தில் ஒரு பலிபீடத்தையும், இஸ்ரயேலின் பன்னிரண்டு குலங்களுக்காகப் பன்னிரண்டு தூண்களையும் எழுப்பினார். அவர் இஸ்ரயேல் மக்களின் இளைஞர்களை அனுப்பி வைக்க, அவர்களும் ஆண்டவருக்கு எரிபலிகள் செலுத்தினர். மாடுகளை நல்லுறவுப் பலிகளாகவும் ஆண்டவருக்குப் பலியிட்டனர். மோசே இரத்தத்தில் ஒரு பாதியை எடுத்துக் கலங்களில் விட்டு வைத்தார். மறு பாதியைப் பலிபீடத்தின் மேல் தெளித்தார். அவர் உடன்படிக்கையின் ஏட்டை எடுத்து மக்கள் காதுகளில் கேட்கும்படி வாசித்தார். அவர்கள், ``ஆண்டவர் கூறிய அனைத்தையும் நாங்கள் செயல்படுத்திக் கீழ்ப்படிந் திருப்போம்'' என்றனர். அப்போது மோசே இரத்தத்தை எடுத்து மக்கள் மேல் தெளித்து, ``இவ்வனைத்து வார்த்தைக்குமிணங்க, ஆண்டவர் உங்களோடு செய்துள்ள உடன்படிக்கையின் இரத்தம் இதோ'' என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவர் பெயரைத் தொழுதிடுவேன்.
திருப்பாடல் 116: 12-13. 15-16. 17-18

2 ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்? 13 மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன். பல்லவி

15 ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது. 16 ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர். பல்லவி

17 நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன்; 18 இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். பல்லவி

இரண்டாம் வாசகம்

இரண்டாம் வாசக முன்னுரை

அன்பர்களே,

இன்றைய இரண்டாம் வாசகம், தலைமை குருவான கிறிஸ்துவால் ஏற்படுத்தப்பட்ட புதிய உடன்படிக்கையைப் பற்றி பேசுகிறது. இயேசு கிறிஸ்து தம்மையே மாசற்ற பலியாக ஒப்புக்கொடுத்து, நமக்கு மீட்பு கிடைக்கச் செய்தார் என்பதை எடுத்துரைக்கிறது. கிறிஸ்துவுக்கு உகந்த புதிய உடன்படிக்கையின் மக்களாக வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு கவனமாக செவிமடுப்போம்.

கிறிஸ்துவின் இரத்தம் நம் மனச்சான்றை தூய்மைப்படுத்துகிறது!
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 9: 11-15

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து தலைமைக் குருவாக வந்துள்ளார். அவர் அருளும் நலன்கள் இப்போது நமக்குக் கிடைத்துள்ளன. அவர் திருப்பணி செய்யும் கூடாரம் முன்னதை விட மேலானது, நிறைவுமிக்கது. அது மனிதர் கையால் அமைக்கப்பட்டது அல்ல; அதாவது, படைக்கப்பட்ட இவ்வுலகைச் சார்ந்தது அல்ல. அவர் பலியாகப் படைத்த இரத்தம் வெள்ளாட்டுக் கிடாய்கள், கன்றுக்குட்டிகள் ஆகியவற்றின் இரத்தம் அல்ல, அவரது சொந்த இரத்தமே. அவர் ஒரே ஒரு முறை தூயகத்திற்குள் சென்று எக்காலத்திற்குமென அதைப் படைத்து நமக்கு என்றுமுள்ள மீட்புக் கிடைக்கும்படி செய்தார். வெள்ளாட்டுக் கிடாய்கள், காளைகள் இவற்றின் இரத்தமும் கிடாரியின் சாம்பலும் தீட்டுப்பட்டவர்கள் மீது தெளிக்கப்படும்போது, சடங்கு முறைப்படி அவர்கள் தூய்மை பெறுகிறார்கள். ஆனால் கிறிஸ்துவின் இரத்தம், வாழும் கடவுளுக்கு நாம் வழிபாடு செய்யுமாறு, சாவுக்கு அழைத்துச் செல்லும் செயல்களிலிருந்து நம் மனச்சான்றை எத்துணை மிகுதியாய்த் தூய்மைப்படுத்துகிறது! ஏனெனில் என்றுமுள்ள தூய ஆவியினால் தம்மைத்தாமே கடவுளுக்கு மாசற்ற பலியாகக் கொடுத்தவர் அவரே. இவ்வாறு அவர் புதிய உடன்படிக்கையின் இணைப்பாளராய் இருக்கிறார். கடவுளால் அழைக்கப்பட்டவர்கள் அவரால் வாக்களிக்கப்பட்ட, என்றும் நிலைக்கும் உரிமைப்பேற்றைப் பெறுவதற்கென்று இந்த உடன்படிக்கை உண்டானது. இது ஒரு சாவின்மூலம் ஏற்படுத்தப்பட்டது. இந்தச் சாவு முந்திய உடன்படிக்கையை மீறிச் செய்த குற்றங்களிலிருந்து மீட்பளிக்கிறது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 12-16, 22-26

புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாள் வந்தது. பாஸ்கா ஆட்டுக் குட்டியைப் பலியிடும் அந்நாளிலே இயேசுவின் சீடர், ``நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே சென்று ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?'' என்று கேட்டார்கள். அவர் பின்வருமாறு கூறி, தம் சீடருள் இருவரை அனுப்பினார்: ``நீங்கள் புறப்பட்டு நகருக்குள் செல்லுங்கள். மண்குடத்தில் தண்ணீர் சுமந்து கொண்டு ஓர் ஆள் உங்களுக்கு எதிரே வருவார். அவர் பின்னே செல்லுங்கள். அவர் எந்த வீட்டுக்குச் செல்கிறாரோ, அந்த வீட்டின் உரிமையாளரிடம், `` `நான் என் சீடர்களோடு பாஸ்கா விருந்து உண்பதற்கான என் அறை எங்கே?' என்று போதகர் கேட்கச் சொன்னார் எனக் கூறுங்கள். அவர் மேல் மாடியில் ஒரு பெரிய அறையைக் காட்டுவார். அது தேவையான வசதிகளோடு தயார் நிலையில் இருக்கும். அங்கே நமக்கு ஏற்பாடு செய்யுங்கள்.'' சீடர்கள் சென்று, நகரை அடைந்து, தங்களுக்கு அவர் சொல்லியவாறே அனைத்தையும் கண்டு பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள். அவர்கள் உண்டுகொண்டிருந்தபொழுது அவர் அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, ``இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்; இது எனது உடல்'' என்றார். பின்பு அவர் கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்தார். அனைவரும் அதிலிருந்து பருகினர். அப்பொழுது அவர் அவர்களிடம், ``இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம். இனிமேல் இறையாட்சி வரும் அந்நாளில்தான் நான் திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை ஒருபோதும் குடிக்க மாட்டேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார். அவர்கள் புகழ்ப் பாடல் பாடிவிட்டு ஒலிவ மலைக்குச் சென்றார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்: அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்.!

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

எங்கும் இருப்பவராம் இறைவா,

உலகெங்கும் நற்கருணைப் பலியை நிறைவேற்றும் எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள் அனைவரும், கிறிஸ்துவின் மறைபொருளான பிரசன்னத்தை உணர்ந்தவர்களாய் வாழவும், இறைமக்களை விசுவாச வாழ்வில் வளரச்செய்யவும் அருள்புரிய வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.

ஒற்றுமையை அருள்பவராம் இறைவா,

உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும், நற்கருணைப் பலியின் மேன்மையையும், உண்மைத்தன்மையையும் உணர்ந்து, கத்தோலிக்க திருச்சபையில் ஒன்றிணையும் மனம் தர வேண்டுமென்றும், உம்முடைய மக்களாகிய நாங்களும்: உமது ஆவியால் இயக்கப்பட்டு, உமது கட்டளைகளுக்குப் பணிந்து நடந்து உம் சீடர்களாக வாழ அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்புத் தந்தையே இறைவா!

உம்முடைய பிள்ளைகளாகிய நாமனைவரும் உமது திருமகனாம் இயேசுவின் திருவுடலாகிய நற்கருணைக்குரிய மாண்பையும், மதிப்பையும் உணர்ந்து வாழவும்: இறைவார்த்தையாலும், நற்கருணையாலும் ஊட்டம் பெற்று உமது சாட்சிகளாக வாழவும், எமது இளைஞர்கள் அனைவரும் நற்கருணை குறித்துக் காட்டும் தூய்மையான வாழ்வை வாழ்ந்து தாம் வாழுகின்ற சூழலில் என்றும் ஒளியாகத் திகழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

விண்ணக தந்தையே இறைவா,

இவ்வுலகில் வாழும் மாந்தர் அனைவரும், மூவொரு இறைவனாகிய நீரே உண்மை கடவுள் என்பதை அறிந்துகொள்ளவும், உமது பிள்ளைகளாக அன்பிலும் நீதியிலும் ஒற்று மையிலும் வாழவும் உதவ வேண்டுமென்றும், குடும்பப் பிரச்சனைகளால் அமைதியிழந்தும் வாழ்ந்துகொண்டிருக்கும் அனைவர் மேலும் மனமிரங்கி அவர்களின் வேதனைகள் அனைத்தையும் மகிழ்ச்சியாக மாற்றிட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஆறுதல் அனைத்திற்கும் ஊற்றாகிய இறைவா!

ஆதரவற்றோர், கைவிடப்பட்டோர், நோயுற்றோர் மற்றும் வறுமையில் வாடுவோர் அனைவரும் உமது பாதுகாப்பையும், பராமரிப்பையும் பெற்று மகிழ்ந்திட வேண்டுமென்றும், உடலின் உயிர்ப்பினால் மாட்சிபெற்ற உம் திருமகனைப் போன்று, உள்ளத்தின் உயிர்ப்பினால் உமது மாட்சியில் பங்குபெறும் தகுதி அடையுமாறு எம் நாட்டினர் அனைவருடைய வாழ்வையும் புதுப்பிக்க வேண்டுமென்றும், உலகப் பற்றினால் உண்மைக் கடவுளாகிய உம்மை மறந்து வாழும் இளைஞர்கள் நீரே ஆண்டவர், நீரே கடவுள் என்பதை உணர்ந்து உம்மில் புதிய வாழ்வைக் காண மனமாற்றம் பெற வேண்டுமென்று உயிர்த்த இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

அருள் வாழ்வின் ஊற்றான தந்தையே!

நாங்கள் உமது வாக்கையும்; நியமங்களையும் நீதி நெறிகளையும் நேரிய முறையில் நாம் கடைப்பிடித்து, அன்பியசமூக வாழ்வு வாழ்வதற்கும், கிறிஸ்துவின் பெயரால் பல்வேறு சபைகளாக வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும், தூய ஆவியாரின் வல்லமையால் ஒன்றிணைந்து, ஒரே திருச்சபையாக கிறிஸ்துவுக்கு சான்று பகர உதவவும், எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், தூய ஆவியாரின் ஆலயங்களாக வாழ்ந்து, எங்கள் சொற்களாலும் செயல்களாலும் கிறிஸ்து இயேசுவுக்கு சான்று பகரும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''அவர்கள் உண்டுகொண்டிருந்தபொழுது இயேசு அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, 'இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்: இது எனது உடல்' என்றார். பின்பு அவர் கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்தார். அனைவரும் அதிலிருந்து பருகினர்'' (மாற்கு 14:22-23)

இயேசு துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு முன்னால் தம்மையே காணிக்கையாக்கிய நிகழ்ச்சியைத் திருச்சபை தொடர்ந்து கொண்டாடி வந்துள்ளது. இதுவே நற்கருணைக் கொண்டாட்டம் என அழைக்கப்படுகிறது. இயேசு இறுதி முறையாகத் தம் சீடர்களோடு அமர்ந்து உணவருந்துகையில் அப்பத்தை எடுத்து அவர்களுக்குக் கொடுத்து, ''இது என் உடல்'' என்றும், இரசத்தை அவர்களுக்குக் கொடுத்து, ''இது என் இரத்தம்'' என்றும் கூறி அதை அவர்கள் அருந்தும்படிக் கொடுத்தார். இது இயேசு தம்மையே பலியாக்கியதைக் குறிக்கின்றது. நமக்காக வாழ்ந்த இயேசு நமக்காக இறந்தது மட்டுமன்றி, நம்மோடு என்றும் தங்கியிருப்பதன் அடையாளமாக நற்கருணைக் கொண்டாட்டத்தை நமக்குத் தந்துள்ளார். இயேசுவின் உடலும் இரத்தமும் உண்மையாகவே நமக்கு உணவாக்கப்படுகிறது என்றால் அது நமக்கு அவர் தருகின்ற ஆன்மிக உணவாக உள்ளது. நம்மில் கடவுளின் உயிர் குடிகொண்டிருப்பதற்கு நற்கருணை அடையாளமும் காரணமுமாய் இருக்கிறது.

நற்கருணை என்பது ஒரு இயேசு நமக்காக எந்நாளும் இருக்கின்றார் என்பதை நாம் மீண்டும் மீண்டும் நினைவுகூர்கின்ற நிகழ்ச்சியாகும். அதே நேரத்தில் நற்கருணைக் கொண்டாட்டத்தின்போது நாம் கடவுளின் குடும்பமாக இணைகின்றோம். ஏன், நாமே கிறிஸ்துவின் உடலாக மாறுகின்றோம். ஆகவே, நாம் உட்கொள்கின்ற அப்பமும் பருகுகின்ற இரசமும் இயேசுவோடு நம்மை இணைத்து, கடவுளின் வாழ்வில் நம் வாழ்வு இணைந்து ஒன்றிப்பதற்கும், அதன் வழியாக நாம் ஒருவர் ஒருவரோடு சகோதர அன்பில் இணைவதற்கும் வழியாகிறது. இயேசுவை நம்பி வாழ்கின்ற மக்கள் இயேசுவில் வாழ்வு கண்டு மகிழ்வார்கள். அந்த வாழ்வு அவர்களுடைய சிந்தனை, சொல், செயல் அனைத்தையும் கடவுளிடம் ஈர்க்கின்றது. நற்கருணையில் இயேசு அருளடையாள முறையில் பிரசன்னமாகிறார் என்பது நம் நம்பிக்கை. அதாவது இயேசுவை நாம் நம் இதயத்தில் ஏற்று, அவரோடு நம் வாழ்க்கையை ஒன்றித்து இணைகின்ற பேறு நமக்கு அளிக்கப்படுகிறது. நமக்காகத் தம்மையே கையளித்த இயேசுவைப் போல நாமும் ஒருவர் ஒருவருடைய வாழ்வு நலமடைய வேண்டும் என்பதற்காக நம்மையே பலியாக்குவதற்கு நற்கருணை ஒரு முன் அடையாளமாகவும் அந்த பலி வாழ்வுக்கு நம்மைத் தூண்டுகின்ற சக்தியாகவும் உள்ளது. அன்பின் வெளிப்பாடு நற்கருணை. அதுவே நம்மை அன்புக்குச் சாட்சிகளாக மாற்றிட வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகனை எங்களுக்கு உணவாக அளித்ததற்கு நன்றி!