யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 9வது வாரம் வியாழக்கிழமை
2015-06-04


முதல் வாசகம்

"இளைஞர்களே, வணக்கம். உங்களுக்கு நலம் பெருகட்டும்" என்று அவர்களை வாழ்த்தினார்
தோபித்து 6;10-11 7;1,9-14 8;4-8

10அந்நாட்களில் தொபியாவும் அசாரியாவும் மேதியா நாட்டினுள் சென்று 1 அவர்கள் எக்பத்தானாவை அடைந்தபொழுது தோபியா அசரியாவிடம், "சகோதரர் அசரியா, உடனே என்னை நம் உறவினர் இரகுவேலின் வீட்டிற்கு அழைத்துச் செல்லும்" என்றார். எனவே இரபேல் அவரை இரகுவேலின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். இரகுவேல் தம் வீட்டு முற்றத்துக் கதவு அருகே அமர்ந்திருக்க அவர்கள் கண்டு முதலில் அவரை வாழ்த்தினார்கள். அதற்கு அவர், "இளைஞர்களே, வணக்கம். உங்களுக்கு நலம் பெருகட்டும்" என்று அவர்களை வாழ்த்தினார். பின்னர், அவர்களை அவர் வீட்டிற்குள் அழைத்துச் சென்று, கை அலம்பிவிட்டு உணவு அருந்த அமர்ந்தார்கள். தோபியா அசரியாவிடம், "சகோதரரே, என் உறவினளான சாராவை எனக்கு மணம் செய்துகொடுக்குமாறு இரகுவேலிடம் கேளும்" என்றார். 10 இச்சொற்கள் இரகுவேலின் செவியில் விழுந்தன. அவர் இளைஞர்pடம், "நீ இன்று இரவு உண்டு பருகி மகிழ்வுடன் இரு. தம்பி, என் மகள் சாராவை மணந்து கொள்ள உன்னைத்தவிர உரிமை உள்ள மனிதர் வேறு எவரும் இல்லை. உன்னைத்தவிர வேறு எவருக்கும் அவளைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் இல்லை; ஏனெனில் நீ என் நெருங்கிய உறவினன். ஆயினும், தம்பி, உன்னிடம் ஓர் உண்மையைக் கூற விரும்புகிறேன். 11 அவளை நம் உறவினர்களுள் எழுவருக்கு மணமுடித்துக் கொடுத்தேன். அவளைக் கூடுவதற்கு நெருங்கிய அன்றிரவே அவர்கள் அனைவரும் இறந்தார்கள். இப்பொழுது, தம்பி, உண்டு பருகு. ஆண்டவர் உங்கள் இருவருக்கும் நல்லது செய்வார்" என்றார். அதற்குத் தோபியா, "நீங்கள் இதைப்பற்றி ஒரு முடிவுக்கு வரும்வரை நான் உண்ணமாட்டேன். பருக மாட்டேன்" என்றார். இரகுவேல், "சரி, செய்கிறேன்; மோசேயின் நூலில் விதித்துள்ளபடியே அவளை உனக்கு மணமுடித்துக் கொடுப்பேன். உனக்கு அவளைக் கொடுக்கும்படி விண்ணகத்தில் உறுதி செய்யப்பட்டு விட்டது. ஆகவே உன் உறவினளை ஏற்றுக்கொள். இனி நீ அவளுக்கு உரியவன்; அவள் உனக்குரியவள்; இன்று முதல் என்றுமே அவள் உன்னுடையவள். தம்பி, விண்ணக ஆண்டவர் இன்று இரவு உங்களைக் காப்பாராக; உங்கள் மீது இரக்கமும் அமைதியும் பொழிவாராக" என்றார். 12 இரகுவேல் தம் மகள் சாராவை அழைக்க, அவள் வந்தாள். அவளது கையைப் பிடித்துத் தோபியாவிடம் கொடுத்தார். "மோசேயின் நூலில் விதித்துள்ள சட்டங்கள், முறைமைகளின்படி இவள் உனக்கு மனைவியாகிறாள். இவளை ஏற்றுக் கொண்டு உன் தந்தையின் வீட்டுக்கு இனிதே அழைத்துச் செல். விண்ணகக் கடவுள் உங்களுக்கு அமைதி அருள்வாராக" என்றார். 13 பின்பு, அவர் சாராவின் தாயை அழைத்து ஓர் ஏட்டைக் கொண்டுவரச் சொன்னார். மோசேயின் சட்டம் விதித்துள்ளபடி சாராவைத் தோபியாவின் மனைவியாக்கும் திருமண ஒப்பந்தத்தை அதில் எழுதிக் கொடுத்தார். 14 அதன் பின் அவர்கள் உண்டு பருகத் தொடங்கினார்கள்.4 சாராவின் பெற்றோர் வெளியில் சென்று அறையின் கதவை மூடினர். தோபியா படுக்கையிலிருந்து எழுந்து சாராவிடம், "அன்பே, எழுந்திரு. நம் ஆண்டவர் நம்மீது இரங்கிக் காத்தருளுமாறு பணிந்து மன்றாடுவோம்" என்றார். 5 சாரா எழுந்து நின்றாள். அவர்கள் மன்றாடத் தொடங்கி, தங்களைக் காத்தருளுமாறு வேண்டினார்கள். தோபியா பின்வருமாறு வேண்டினார்; "எங்கள் மூதாதையரின் இறைவா, போற்றி உமது பெயர் என்றென்றும் எல்லாத் தலைமுறைகளுக்கும் போற்றி! வானங்களும் உம் படைப்பு அனைத்தும் எக்காலமும் உம்மைப் போற்றுக! 6 நீர் ஆதாமைப் படைத்தீர்; அவருடைய மனைவி ஏவாளை அவருக்குத் துணையாகவும் ஆதரவாகவும் உண்டாக்கினீர். அவர்கள் இருவரிடமிருந்தும் மனித இனம் தோன்றியது. 'மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்ததொரு துணையை உருவாக்குவோம்' என்று உரைத்தீர். 7 இப்பொழுது என் உறவினள் இவளை நான் மனைவியாக ஏற்றுக்கொள்வது இச்சையின் பொருட்டன்று, நேர்மையான நோக்கத்தோடுதான். என்மீதும் இவள்மீதும் இரக்கம் காட்டும்; நாங்கள் இருவரும் முதுமை அடையும்வரை இணைபிரியாது வாழச் செய்யும்." 8 இருவரும் "ஆமென், ஆமென்" என்று கூறினர். .

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்!
திருப்பாடல்கள் 128;1-5

1 ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! 2 உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! 3 உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக்கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். 4 ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். 5 ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக!


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக" என்பது முதன்மையான கட்டளை. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு 12;28-34

அக்காலத்தில் அவர்கள் வாதாடிக்கொண்டிருப்பதைக் கேட்டுக்கொண்டிருந்த மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசு அவர்களுக்கு நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு அவரை அணுகி வந்து, "அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?" என்று கேட்டார். 29 அதற்கு இயேசு, "இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். 30 உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழுமனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக" என்பது முதன்மையான கட்டளை. 31 "உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக" என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை" என்றார். 32 அதற்கு மறைநூல் அறிஞர் அவரிடம், "நன்று போதகரே, "கடவுள் ஒருவரே; அவரைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை" என்று நீர் கூறியது உண்மையே. 33 அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்புகொள்வது போல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்தவதும் எரிபலிகளையும் வேறுபலிகளையும்விட மேலானது" என்று கூறினார். 34 அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், "நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை" என்றார். அதன்பின் எவரும் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''மறைநூல் அறிஞருள் ஒருவர்...இயேசுவை அணுகிவந்து, 'அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?' என்று கேட்டார். அதற்கு இயேசு,...'உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக... உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக' என்றார்'' (மாற்கு 12:28-31)

யூத சமயம் மக்களுக்குப் பல கட்டளைகளை வழங்கியிருந்தது. அக்கட்டளைகளுள் முக்கியமானது எது என்னும் கேள்விக்குப் பல யூத அறிஞர்கள் பதில் தந்தனர். இயேசுவை அணுகிச் சென்று ''அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?'' என்று கேட்ட மறைநூல் அறிஞர் நல்ல எண்ணத்தோடுதான் அக்கேள்வியைக் கேட்டார். இயேசு அவருக்கு அளித்த பதில் ''கடவுளை அன்பு செய்க; மனிதரை அன்பு செய்க'' என்பதாகும். இயேசு இப்பதிலைப் பழைய ஏற்பாட்டிலிருந்து மேற்கோள் காட்டி எடுத்துரைக்கிறார் (காண்க: இச 6:4-5; லேவி 19:18). கடவுள் நம்மைப் படைத்து, பாதுகாத்து, அன்போடு வழிநடத்துகின்ற தந்தை. எனவே, அவரை நாம் முழுமையாக அன்புசெய்வது பொருத்தமே. அவரிடத்தில் நம்மை நாம் எந்தவித நிபந்தனையுமின்றிக் கையளித்திட வேண்டும். இது முதன்மையான கட்டளை. இதற்கு நிகரான கட்டளையாக இயேசு ''பிறரை அன்புசெய்க'' என்னும் வழிமுறையை நல்குகின்றார். நாம் எல்லா மனிதரையும் வேறுபாடின்றி அன்பு செய்ய அழைக்கப்டுகிறோம்.

இயேசு அன்புக் கட்டளை பற்றி அளித்த பதிலைக் கேட்ட மறைநூல் அறிஞர் இயேசு கூறிய பதிலை முழுமையாக ஏற்றுக்கொண்டதோடு, அன்புக் கட்டளையை நிறைவேற்றுவது எருசலேம் கோவிலில் நிகழ்ந்த பலிகளை எல்லாம் விட மிகச் சிறந்தது எனக் கூறித் தம் இசைவைத் தெரிவிக்கிறார் (மாற் 12:32-33). இயேசு பழைய ஏற்பாட்டில் காணப்பட்ட அன்புக் கட்டளையை மக்களுக்கு மீண்டும் எடுத்துக் கூறிய நேரத்தில் அன்பு என்பது இரு பக்கங்களைக் கொண்டது எனக் காட்டுகிறார். கடவுளை அன்புசெய்வதோடு நாம் பிறரையும் அன்புசெய்ய வேண்டும். ஒன்றில்லாமல் மற்றது இல்லை. எனவே, இயேசு கடவுளின் அன்பில் எந்நாளும் நிலைத்திருந்து, அதே நேரத்தில் நம்மை முழுமையாக அன்புசெய்து நமக்காகத் தம்மையே பலியாக்கியதுபோல நாமும் இறையன்பிலும் பிறரன்பிலும் சிறந்து விளங்க அழைக்கப்படுகிறோம். அன்பு இல்லாத இடத்தில் வேறு நற்பண்புகளும் இராது. அன்பு இருக்குமிடத்தில் தன்னலம் மறையும்; பிறருடைய நலனுக்கு நாம் முன்னுரிமை கொடுப்போம். கடவுள் நம்மை எந்தவொரு நிபந்தனையுமின்றி அன்புசெய்வது போல நாமும் முழுமையாகக் கடவுளை அன்புசெய்து, அவருடைய அன்பின் தூண்டுதலால் எல்லா மக்களையும் அன்புசெய்திட முன்வருவோம்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் வாழ்க்கை அன்பின் வெளிப்பாடாக அமைந்திட அருள்தாரும்.