யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 8வது வாரம் சனிக்கிழமை
2015-05-30


முதல் வாசகம்

ஞானத்தில் நான் வளர்ச்சி அடைந்தேன்; எனக்கு ஞானம் புகட்டுகிறவர்களுக்கு நான் மாட்சி அளிப்பேன்.
சீராக் ஆகமம் 51;12-20

ஆண்டவரே இதன்பொருட்டு உமக்கு நன்றி கூறுவேன்; உம்மைப் புகழ்வேன்; ஆண்டவருடைய பெயரைப் போற்றுவேன். 13 நான் இளைஞனாய் இருந்தபோது, பயணம் மேற்கொள்ளுமுன் என்னுடைய வேண்டுதலில் வெளிப்படையாய் ஞானத்தைத் தேடினேன். 14 கோவில்முன் அதற்காக மன்றாடினேன்; இறுதிவரை அதைத் தேடிக்கொண்டேயிருப்பேன். 15 திராட்சை மலரும் காலத்திலிருந்து கனியும் காலம்வரை என் உள்ளம் ஞானத்தில் இன்புற்றிருந்தது; என் காலடிகள் நேரிய வழியில் சென்றன. என் இளமையிலிருந்தே ஞானத்தைப் பின்தொடர்ந்தேன். 16 சிறிது நேரமே செவி சாய்த்து அதைப் பெற்றுக் கொண்டேன்; மிகுந்த நற்பயிற்சியை எனக்கெனக் கண்டடைந்தேன். 17 ஞானத்தில் நான் வளர்ச்சி அடைந்தேன்; எனக்கு ஞானம் புகட்டுகிறவர்களுக்கு நான் மாட்சி அளிப்பேன். 18 ஞானத்தைக் கடைப்பிடிக்க முடிவு செய்தேன்; நன்மைமீது பேரார்வம் கொண்டேன்; நான் ஒருபோதும் வெட்கமுறேன். 19 நான் ஞானத்தை அடையப் போராடினேன்; திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் கண்டிப்புடன் இருந்தேன்; உயர் வானத்தை நோக்கி என் கைகளை உயர்த்தினேன்; ஞானத்தை நான் இதுவரை அறியாதிருந்தது பற்றிப் புலம்பினேன். 20 அதன்பால் என் உள்ளத்தைச் செலுத்தினேன்; தூய்மையில் அதைக் கண்டுகொண்டேன்; தொடக்கத்திலிருந்தே என் உள்ளத்தை அதன்மேல் பதித்தேன்; இதன்பொருட்டு நான் என்றுமே கைவிடப்படேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன
திருப்பாடல்கள் 19;7,8,9,10

7 ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. பல்லவி

8 ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. பல்லவி

9 ஆண்டரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. பல்லவி

10 அவை பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை; தேனினும் தேனடையினின்று சிந்தும் தெளி தேனினும் இனிமையானவை.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! "எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இவற்றைச் செய்ய உமக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்?" என்று கேட்டனர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு 11;27-33

அக்காலத்தில் யேசுவும் சீடர்களும் மீண்டும் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு கோவிலில் நடந்து கொண்டிருந்தபோது தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள், மூப்பர்கள் ஆகியோர் அவரிடம் வந்து, 28 "எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இவற்றைச் செய்ய உமக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்?" என்று கேட்டனர். 29 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, "நானும், உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்; நீங்கள் மறுமொழி கூறுங்கள். அப்போது எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என நான் உங்களுக்குச் சொல்வேன். 30 திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் யோவானுக்கு விண்ணகத்திலிருந்து வந்ததா? அல்லது மனிதரிடமிருந்து வந்ததா? எனக்குப் பதில் சொல்லுங்கள்" என்றார். 31 அவர்கள், ';விண்ணகத்திலிருந்து வந்தது" என்போமானால், "பின் ஏன் அவரை நம்பவில்லை" எனக் கேட்பார். எனவே "மனிதரிடமிருந்து வந்தது" என்போமா?" என்று தங்களிடையே பேசிக் கொண்டிருந்தார்கள். 32 ஆனால் மக்கள் அனைவரும் யோவானை ஓர் இறைவாக்கினராகக் கருதியதால் அவர்கள் அவர்களுக்கு அஞ்சினார்கள். 33 எனவே, அவர்கள் இயேசுவிடம், "எங்களுக்குத் தெரியாது" என்று பதிலுரைத்தார்கள். இயேசுவும் அவர்களிடம், "எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குச் கூறமாட்டேன்" என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''யோவானுக்கு, திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது? விண்ணகத்திலிருந்தா? மனிதரிடமிருந்தா?' என்று இயேசு கேட்டார்... அவர்கள் இயேசுவிடம் 'எங்களுக்குத் தெரியாது' என்று பதிலுரைத்தார்கள்'' (மத்தேயு 21:25,27)

அதிகாரம் மிக்கவர் அவர் என்று தெரிந்திருந்தும் அவரிடம் கேட்டுப் பார்க்க துணியும் போது அவர் பதில் கொடுக்க மறுக்கிறார். அவரும் அவாகளை சோதித்துப் பார்க்க, பதஜில் கொடுக்க திணறுவதைப் பார்க்கிறோம். எந்த அதிகாரத்தால் இதை செய்ய வேண்டும். அதிகாரமிக்கவர் அவர் என்பதை தெரிந்திருந்தும் சோதித்து பார்க்கவே விரும்பும் போது அவர் பதில் அளிக்க மறுக்கின்றார். நம்மை சோதித்து பார்க்க முற்படுவோருக்கும் நாம் பதில் கொடுப்பது இல்லையே. இது தானே உண்மை.

மன்றாட்டு:

இறைவா, எங்களுக்கு உண்மையான அறிவைத் தந்தருளும்.