யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 8வது வாரம் வெள்ளிக்கிழமை
2015-05-29


முதல் வாசகம்

நம் மூதாதையர் இரக்கமுள்ள மனிதர்கள்; தங்களது வழிமரபில் அவர்கள் நிலைத்திருக்கிறார்கள்
சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 44: 1,9-12

மேன்மை பொருந்திய மனிதரையும் நம் மூதாதையரையும் அவர்களது தலைமுறை வரிசைப்படி புகழ்வோம். நினைவுகூரப்படாத சிலரும் உண்டு; வாழ்ந்திராதவர்கள் போன்று அவர்கள் அழிந்தார்கள்; பிறவாதவர்கள்போல் ஆனார்கள். அவர்களுக்குப் பின் அவர்கள் பிள்ளைகளும் அவ்வாறே ஆனார்கள். ஆனால் அவர்களும் இரக்கமுள்ள மனிதர்களே. அவர்களுடைய நேர்மையான செயல்கள் மறக்கப்படுவதில்லை. தங்களது வழிமரபில் அவர்கள் நிலைத்திருக்கிறார்கள். அவர்களுடைய உரிமைச் சொத்து அவர்களின் வழித்தோன்றல்களுக்கும் கிடைக்கும். அவர்களின் வழிமரபினர் உடன்படிக்கைகளின்படி நடக்கின்றனர்; அவர்கள் பொருட்டு அவர்களின் பிள்ளைகளும் அவ்வாறே நடப்பார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்.
திருப்பாடல் 149: 1-2. 3-4. 5-6, 9

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்; அவருடைய அன்பர் சபையில் அவரது புகழைப் பாடுங்கள். 2 இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக் குறித்து மகிழ்ச்சி கொள்வதாக! சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர்வார்களாக! பல்லவி

3 நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக; மத்தளம் கொட்டி, யாழிசைத்து அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக! 4 ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்; தாழ் நிலையிலுள்ள அவர்களுக்கு வெற்றியளித்து மேன்மைப்படுத்துவார். பல்லவி

5 அவருடைய அன்பர் மேன்மையடைந்து களிகூர்வராக! மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவராக! 6ய அவர்களின் வாய் இறைவனை ஏத்திப் புகழட்டும்; 9 இத்தகைய மேன்மை ஆண்டவர் தம் அன்பர் அனைவருக்கும் உரித்தானது. பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 11-26

அக்காலத்தில் இயேசு எருசலேமுக்குள் சென்று கோவிலில் நுழைந்தார். அவர் அனைத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டு, ஏற்கெனவே மாலை வேளையாகி விட்டதால், பன்னிருவருடன் பெத்தானியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். மறுநாள் பெத்தானியாவை விட்டு அவர்கள் திரும்பியபொழுது இயேசுவுக்குப் பசி உண்டாயிற்று. இலையடர்ந்த ஓர் அத்தி மரத்தை அவர் தொலையிலிருந்து கண்டு, அதில் ஏதாவது கிடைக்குமா என்று அதன் அருகில் சென்றார். சென்றபோது இலைகளைத் தவிர வேறு எதையும் அவர் காணவில்லை. ஏனெனில் அது அத்திப் பழக்காலம் அல்ல. அவர் அதைப் பார்த்து, ``இனி உன் கனியை யாரும் உண்ணவே கூடாது'' என்றார். அவருடைய சீடர்கள் இதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். கோவிலுக்குள் சென்றதும் இயேசு அங்கு விற்பவர்களையும் வாங்குபவர்களையும் வெளியே துரத்தத் தொடங்கினார்; நாணயம் மாற்றுவோரின் மேசைகளையும் புறா விற்பவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துப்போட்டார். கோவில் வழியாக எந்தப் பொருளையும் எடுத்துச் செல்ல அவர் விடவில்லை. `` `என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைவேண்டலின் வீடு என அழைக்கப்படும்' என்று மறைநூலில் எழுதியுள்ளது'' என்று அவர்களுக்குக் கற்பித்தார்; ``ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கிவிட்டீர்கள்'' என்றார். தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் இதைக் கேட்டு, அவரை எப்படி ஒழித்து விடலாம் என்று வழி தேடினார்கள். எனினும் கூட்டத்தினர் அனைவரும் அவரது போதனையில் ஆழ்ந்து வியந்திருந்ததால் அவர்கள் அவருக்கு அஞ்சினார்கள். மாலை வேளை ஆனதும் இயேசுவும் சீடர்களும் நகரத்திலிருந்து வெளியேறினார்கள். காலையில் அவர்கள் அவ்வழியே சென்றபோது அந்த அத்திமரம் வேரோடு பட்டுப்போயிருந்ததைக் கண்டார்கள். அப்போது பேதுரு நடந்ததை நினைவுகூர்ந்து அவரை நோக்கி, ``ரபி, அதோ நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போயிற்று'' என்றார். அதற்கு இயேசு அவர்களைப் பார்த்து, ``கடவுள்மீது நம்பிக்கை கொள்ளுங்கள். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: எவராவது இந்த மலையைப் பார்த்து, `பெயர்ந்து கடலில் விழு' எனத் தம் உள்ளத்தில் ஐயம் எதுவுமின்றி நம்பிக்கையுடன் கூறினால், அவர் சொன்னவாறே நடக்கும். ஆகவே உங்களுக்குச் சொல்கிறேன்: நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது எவற்றையெல்லாம் கேட்பீர்களோ அவற்றைப் பெற்றுவிட்டீர்கள் என நம்புங்கள்; நீங்கள் கேட்டபடியே நடக்கும். நீங்கள் வேண்டுதல் செய்ய நிற்கும்போது யார் மேலாவது நீங்கள் மனத்தாங்கல் கொண்டிருந்தால், மன்னித்துவிடுங்கள். அப்போது உங்கள் விண்ணகத் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிப்பார். நீங்கள் மன்னிக்காவிட்டால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்'' என்று கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

'நீங்கள் வேண்டுதல் செய்ய நிற்கும்போது யார் மேலாவது நீங்கள் மனத்தாங்கல் கொண்டிருந்தால், மன்னித்துவிடுங்கள். அப்போது உங்கள் விண்ணகத் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிப்பார்' (மாற்கு 11:25-26)

பிறர் நமக்கு எதிராகச் செய்கின்ற குற்றங்களை நாம் மன்னிக்க வேண்டும் என்பது இயேசு வழங்கிய போதனைகளில் அடிப்படையான ஒன்று. இவ்வாறு மன்னிப்பது கடவுளின் பண்பை நாம் கொண்டிருப்பதற்கு இணையாகும். மனிதர் நல்லவராயினும் கெட்டவராயினும் கடவுள் அவர்களை அன்புசெய்ய ஒருபோதும் மறப்பதில்லை. கடவுளின் முன்னிலையில் குற்றமற்றவர் யார்? ஒருவருமே இல்லை. பாவம் என்பது நம் அனைவரின் வாழ்விலும் உண்டு. இவ்வாறிருந்தும் கடவுள் நம்மை ஒதுக்குவதில்லை. நம் குற்றங்களை மன்னித்து நம்மை அன்போடு ஏற்கின்ற கடவுள் தம் மகன் இயேசுவின் சிலுவைச் சாவின் வழியாக நமக்குப் பாவ மன்னிப்பு அளித்துள்ளார். எனவே நாமும் பிறருடைய குற்றங்களை மன்னிப்பதற்கு எப்போதுமே மன மகிழ்வோடு முன்வர வேண்டும்.

மனிதப் பார்வையில் மன்னிப்பு என்பது எளிதாகக் கைகூடுவதன்று. ஆனால் கடவுளின் பார்வையை நமதாக்கிக் கொண்டு நாம் செயல்படும்போது மன்னிப்பு என்பது நம் வாழ்க்கையை வரையறுக்கின்ற சிறப்புக் கூறாக மாறும். மன்னிப்பு என்பது அன்பின் தலைசிறந்த வெளிப்பாடு ஆகும். மன்னிப்பின் ஊற்று கடவுளே. நம் உள்ளத்தில் மன்னிக்கும் மனப்பாங்கு இருந்தால் நம்மில் இறையன்பும் பிறரன்பும் துலங்கும்.

மன்றாட்டு:

இறைவா, பிறர் செய்யும் குற்றங்களை நாங்கள் மனதார மன்னித்தருள எங்களுக்கு அருள்தாரும்.