யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
தவக்காலம் 5வது வாரம் வியாழக்கிழமை
2015-03-19

புனித யோசேப்பு மரியாளின் கணவர்


முதல் வாசகம்

நான் அவனுக்கு தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான்
சாமுவேலின் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7:4-5, 12-14, 16

4 அன்று இரவே ஆண்டவரின் வார்த்தை நாத்தானுக்கு அருளப்பட்டது.5 நீ சென்று, என் ஊழியன் தாவீதிடம் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: நான் தங்குவதற்காக எனக்கு கோவில் கட்டப்போகிறாயா?12 வாழ் நாள் நிறைவுபெற்று நீ என் மூதாதையரோடு துயில்கொள்ளும் போது, உனக்கு பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப் பின் நான் உயர்த்தி அவனது அரசை நான் நிலைநாட்டுவேன்.13 எனது பெயருக்காக கோவில் கட்டவிருப்பவன் அவனே. அவனது அரசை நான் என்றும் நிலைநிறுத்துவேன்.14 நான் அவனுக்கு தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான். அவன் தவறுசெய்யும்போது மனித இயல்புக்கேற்ப அடித்து, மனிதருக்கே உரிய துன்பங்களைத் தருவேன்.16 முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும்! உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

அவனது வழிமரபை என்றென்றும் நிலைநிறுத்துவேன்
திருப்பாடல்கள் 89:2-5, 27,29

2 உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப்போல் உறுதியானது. 3 நீர் உரைத்தது: 'நான் தேர்ந்து கொண்டவனோடு உடன்படிக்கை செய்துகொண்டேன்; என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது: 4 உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்; உன் அரியணையைத் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன்' (சேலா)

5 ஆண்டவரே, வானங்கள் உம் வியத்தகு செயல்களைப் புகழ்கின்றன; தூயவர் குழுவினில் உமது உண்மை விளங்கும்.

27 நான் அவனை என் தலைப்பேறு ஆக்குவேன்; மண்ணகத்தின் மாபெரும் மன்னன் ஆக்குவேன்.

29 அவனது வழிமரபை என்றென்றும் நிலைநிறுத்துவேன்; அவனது அரியணையை வான்வெளி உள்ளவரை நிலைக்கச் செய்வேன்.

இரண்டாம் வாசகம்

அவர் பல மக்களினங்களுக்குத் தந்தையானார்
உரோமையருக்கு எழுதிய நிருபத்தில் இருந்து வாசகம் 4:13,16-18,22

13 உலகமே அவருக்கு உரிமைச் சொத்தாகும் என்னும் வாக்குறுதி ஆபிரகாமுக்கோ அவருடைய வழிமரபினர்களுக்கோ திருச்சட்டத்தைக் கடைப்பிடித்ததால் கிடைக்கவில்லை: நம்பிக்கை கொண்டு கடவுளுக்கு ஏற்புடையவர் ஆனதால்தான் அவ்வாக்குறுதி கிடைத்தது.16 ஆகவே கடவுளின் அருள்செயலால் நம்பிக்கை வாக்குறுதியின் அடிப்படையாயிற்று. இவ்வாறு வாக்குறுதி ஆபிரகாமின் வழிவந்தவர்கள் எல்லாருக்கும்-திருச்சட்டத்திற்கு உட்பட்டோருக்கு மட்டுமல்ல, அவரைப்போலக் கடவுள்மீது நம்பிக்கை கொண்டோருக்கும்-உரியது என்பது உறுதியாயிற்று. ஆபிரகாம் நம் அனைவருக்கும் தந்தை.17 ஏனெனில் எண்ணற்ற மக்களினங்களுக்கு உம்மை நான் தந்தையாக்குகிறேன் என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆம், இறந்தவர்களை வாழ்விப்பவரும் இல்லாததைத் தம் வார்த்தையால் இருக்கச் செய்பவருமாகிய கடவுள் மீது நம்பிக்கை கொண்டு அவர் முன்னிலையில் ஆபிரகாம் நம் தந்தையானார்.18 உன் வழிமரபினர் எண்ணற்றவராய் இருப்பர் என்றும் அவருக்குச் சொல்லப்பட்டது. இக்கூற்று நிறைவேறும் என்னும் எதிர்நோக்குக்கு இடம் இல்லாததுபோல் தோன்றினும், அவர் எதிர்நோக்கினார்: தயங்காமல் நம்பினார். ஆகவே அவர் பல மக்களினங்களுக்குத் தந்தையானார்.22 ஆகவே அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! 'யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1:16, 18-21,24

16 யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு.18 இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். 19 அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். 20 அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, 'யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். 21 அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்' என்றார். 24 யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்'' (மத்தேயு 1:24)

இயேசுவின் வாழ்க்கை, பணி, போதனை ஆகியவற்றை உள்ளடக்கிய நற்செய்தி நூல்கள் நான்கிலும் யோசேப்பு பற்றிய பகுதிகள் சிலவே. இயேசுவின் வளர்ப்புத் தந்தையாக யோசேப்பு கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டார். கடவுளுடைய திட்டம் நிறைவேற யோசேப்பு ஒத்துழைத்தார். அதுவே அவருடைய வாழ்க்கையைச் சிறப்படையச் செய்தது. யோசேப்பு கனவின் வழியாகக் கடவுளிடமிருந்து கட்டளை பெறுவதும், கடவுள் தருகின்ற வழிமுறைக்கு ஏற்ப நடப்பதும் பழைய ஏற்பாட்டு யோசேப்பின் கதையை நமக்கு நினைவூட்டுகிறது (தொநூ 37:5-11). அங்கே யோசேப்புவின் வாழ்க்கை பற்றிய முக்கிய செய்திகளைக் கடவுள் கனவில் அவருக்கு அறிவித்தார். இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய யோசேப்பு பற்றி அதிக விவரங்கள் தரப்படாவிட்டாலும் ''யோசேப்பு நேர்மையாளராக இருந்தார்'' (காண்க: மத் 1:19) என்னும் செய்தி அவருடைய வாழ்க்கையைச் சுருக்கமாக நம் கண்முன் கொணர்கிறது. ''நேர்மையாளர்'' என்னும் சொல்லுக்கு விவிலியத்தில் தனிப்பொருள் உண்டு. அதாவது யார்யார் கடவுளுக்கு அஞ்சி, அவருடைய வழிகளைப் பின்பற்றி நடக்கின்றார்களோ அவர்கள் ''நேர்மையாளர்'' என அறியப்பட்டார்கள். யோசேப்பு இத்தகைய நேர்மையாளர் வரிசையில் வருகிறார்.

யோசேப்பின் ''நேர்மை'' எவ்வாறு துலங்கியது? முதலில், யோசேப்பு மரியாவின் கணவர் என்னும் முறையிலும் இயேசுவின் வளர்ப்புத் தந்தை என்னும் முறையிலும் அவர்களைப் பேணிப் பராமரித்தார் என்பதில் ஐயமில்லை. யோசேப்பு மரியாவைத் திருமணம் செய்துகொண்டு அவரோடு கூடிவாழ்வதற்கு முன்னரே மரியா கருவுறுகிறார். இச்செய்தியை அறிந்த யோசேப்பு அதிர்ச்சியடைகிறார். என்றாலும் மரியாவை இகழ்ச்சிக்கு உட்படுத்துவது சரியல்ல என அவர் முடிவுசெய்து மறைவாக விலக்கிடத் திட்டமிட்டபோது அவருக்கு உண்மை தெரியவருகிறது. ''மரியா கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்'' என்னும் செய்தி அவருக்குக் கடவுளிடமிருந்து கனவின் வழியாக வருகிறது. இதை யோசேப்பு எவ்விதத் தயக்கமுமின்றி ஏற்றுக்கொள்கிறார். யோசேப்பின் நேர்மை என்பது கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப நடப்பதில் அடங்கியிருந்தது. இன்று இயேசுவின் சீடராக வாழ்வோர் யோசேப்பைப் போல ''நேர்மையாளர்களாக'' நடக்க அழைக்கப்படுகிறார்கள்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் உள்ளத்திலும் வாழ்விலும் நேர்மை விளங்கச் செய்தருளும்.