இன்று பொதுக்காலம் 5 ஆம் ஞாயிறு

திருவழிப்பாட்டு ஆண்டு B (08-02-2015)

நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்?/> நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்?/> நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்?/> நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்?/> காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்/> காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்/> இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி/> இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி/> இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி/>


திருப்பலி முன்னுரை

இறைமகன் இயேசவின் அன்புக்கும் அரவணைப்புக்கும் முற்றிலும் உரிய சகோதரர்களே சகோதரிகளே, உங்கள் அனைவருக்கும் வணக்கம். படைப்பிற்கெல்லாம் சிறந்த படைப்பாக மனிதனை உருவாக்கிய இறைவன் அவருடைய சாயலை மனித உருவில் வைத்தார். அதனால்தான் மற்ற உயிரினங்களை விட மனிதர்மேல் அதிக அன்பு வைத்து இந்த மண்ணுலகை ஆள மனிதனைப் பணித்தார். அதற்கேற்றவகையில் பகுத்தறியும் ஆற்றலும் பலவகைத் திறன்களும் அவனுள் இருக்கச் செய்தார். இந்த திறன்களால் ஒருவர் ஒருவரை விஞ்சி நிற்காமல் சமநிலை ஏற்பட ஒருவர் ஒருவருக்கு உதவுதல் எனும் பணிபுரிதலின் மூலமும் அதற்குக் காரணமாக இறை உறவைக் கொண்டிருத்தலின் மூலமும் தன் பணித்திட்டத்தை நிறைவேற்றச் செய்கிறார். ஆண்டின் பொதுக்காலம் 5 – ஆம் வாரத்தில் இறைமக்கள் இந்த சிந்தனைகளை மனதில் இருத்தி இறை உறவுடன் மக்கள் நலப் பணிசெய்து வாழ திருச்சபை நம்மை அழைக்கிறது.

உதவி கேட்டு வருபவர்கள் தாம் உலகில் அதிகம். உதவிக்கு வருபவர்கள் மிகச் சிலர்தான். ஆனால் எல்லாரையும் எல்லா வகையிலும் விடுவிப்பவராக இருக்கிறார் இயேசு என்பதை சிந்திக்க அழைக்கிறது நற்செய்தி. இறையேசுவில் பிரியமானவர்களே! பரபரப்பான சூழலில் பல்வேறு பொறுப்புகளால் நமது வாழ்வு நெருக்கடிக்குள்ளாகி தடுமாறுகிறது. அமைதியில், குடும்பத்தில், உறவுகளில் இறைவனை கண்டு இளைப்பாறுதல் பெற நமது ஆண்டவர் இயேசு அவரது திருப்பலிக்கு அழைக்கிறார். தனிமையான இடத்தில் இறைவேண்டுதல் வழியாக இயேசு ஆற்றல் பெற்றது போல நாமும் குறிப்பாக நமது குழந்தைகள் ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவர்களாய் வாழ அருள்வேண்டி தொடரும் இத்திருப்பலியில் இறைஞ்சி மன்றாடுவோம்.





முதல் வாசகம்

முதல் வாசக முன்னுரை

மனிதனுடைய வாழ்வு போரட்டம் நிறைந்ததாகத்தான் இருக்கின்றது. அந்தப் போராட்டத்தில் அவன் சந்திக்கக்கூடியது ஒன்று நோய். எந்தவிதமான நோய் எனக்குள் வந்து பாதித்தாலும் நான் அதற்கு அஞ்சமாட்டேன் ஏனென்றால் நான் கடவுளிள் முழுமையான நம்பிக்கை கொண்டிருக்கின்றேன்; என்று துன்புறும் உழியனாகிய யோபு கூறுவதை வாசிக்க கேட்போம்.

விடியும்வரை படுக்கையில் புரண்டு உழல்வேன்.
யோபு நூலிலிருந்து வாசகம் 7: 1-4,6-7

யோபு கூறியது: மண்ணில் வாழ்வது மனிதருக்குப் போராட்டந்தானே? அவர்களின் நாள்கள் கூலியாள்களின் நாள்களைப் போன்றவைதாமே? நிழலுக்கு ஏங்கும் அடிமை போலவும், கூலிக்குக் காத்திருக்கும் வேலையாள் போலவும், வெறுமையான திங்கள்கள் எனக்கு வாய்த்தன; இன்னல்மிகு இரவுகள் எனக்குப் பங்காயின. படுக்கும்போது எப்போது எழலாம் என்பேன்! இரவோ நீண்டிருக்கும்; விடியும்வரை புரண்டு உழல்வேன். என் நாள்கள் தறியின் ஓடுகட்டையினும் விரைந்தோடுகின்றன; அவை நம்பிக்கையின்றி முடிவடைகின்றன. என் உயிர் வெறுங்காற்றே என்பதை நினைவுகூர்வீர்; என் கண்கள் மீண்டும் நன்மையைக் காணா.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: உடைந்த உள்ளத்தோரை ஆண்டவர் குணப்படுத்துகிறார். அல்லது: அல்லேலூயா.

1 நம்முடைய கடவுளைப் புகழ்ந்து பாடுவது நல்லது; அவரைப் புகழ்வது இனிமையானது; அதுவே ஏற்புடையது. 2 ஆண்டவர் எருசலேமை மீண்டும் கட்டி எழுப்புகின்றார்; நாடு கடத்தப்பட்ட இஸ்ரயேலைக் கூட்டிச் சேர்க்கின்றார். பல்லவி

3 உடைந்த உள்ளத்தோரைக் குணப்படுத்துகின்றார்; அவர்களின் காயங்களைக் கட்டுகின்றார். 4 விண்மீன்களின் இலக்கத்தை எண்ணி, அவை ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைக்கின்றார். பல்லவி

5 நம் தலைவர் மாண்பு மிக்கவர்; மிகுந்த வல்லமையுள்ளவர்; அவர்தம் நுண்ணறிவு அளவிடற்கு அரியது. 6 ஆண்டவர் எளியோர்க்கு ஆதரவளிக்கின்றார்; பொல்லாரையோ தரைமட்டும் தாழ்த்துகின்றார். பல்லவி

இரண்டாம் வாசகம்

இரண்டாம் வாசக முன்னுரை

தமது புகழ்க்காக, நற்பெயருக்காக வாழாமல், உண்மையான தொண்டுள்ளத்தோடு மக்கட்பணி செய்தவர். நற்செய்திப் பணி வழி நம்பிக்கையை ஊட்டியவர். நற்செய்தி அறிவிக்காவிடில் ஜயோ எனக்குக்கேடு என்று பவுல் அடியார், நம் அனைவரையும் இறையன்புக்குச் சான்றுபகர்வோம் என்றும், நம்பிக்கை இழந்த மக்களுக்கு நம்பிக்கை ஒளியாவோம் என்றும், நல்லது செய்வதில் என்றுமே முனைப்பாயிருப்போம் என்று கூறும் இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்

நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு!
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 9: 16-19, 22-23

சகோதரர் சகோதரிகளே, நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்யவேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு! இதை நானாக விரும்பிச் செய்தால் எனக்குக் கைம்மாறு உண்டு. நானாக விரும்பாவிட்டாலும் இது என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பாக இருக்கிறது. அப்படியானால், எனக்குக் கைம்மாறு என்ன? உங்களுக்கு எச்செலவுமின்றி நற்செய்தியை அறிவிப்பதிலுள்ள மனநிறைவே அக்கைம்மாறு; நான் நற்செய்தி அறிவிப்போருக்குரிய உரிமையைக் கொஞ்சம்கூடப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. நான் யாருக்கும் அடிமையாய் இல்லாதிருந்தும் பலரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர என்னை எல்லாருக்கும் அடிமையாக்கிக்கொண்டேன். வலுவற்றவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர வலுவற்றவர்களுக்கு வலுவற்றவனானேன். எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாம் ஆனேன். நற்செய்தியால் வரும் ஆசியில் பங்கு பெற வேண்டி, நற்செய்திக்காக எல்லாவற்றையும் செய்கிறேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார். அல்லேலூயா. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 29-39

அக்காலத்தில் இயேசுவும் சீடர்களும் தொழுகைக்கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள். சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப்பற்றி இயேசுவிடம் சொன்னார்கள். இயேசு அவர் அருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரைவிட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார். மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் அவரிடம் கொண்டு வந்தார்கள். நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது. பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் ஓட்டினார்; அந்தப் பேய்கள் அவரை அறிந்திருந்ததால் அவற்றை அவர் பேசவிடவில்லை. இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். சீமோனும் அவருடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள். அவரைக் கண்டதும், ``எல்லாரும் உம்மைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்'' என்றார்கள். அதற்கு அவர், ``நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்; ஏனெனில் இதற்காகவே நான் வந்திருக்கிறேன்'' என்று சொன்னார். பின்பு அவர் கலிலேய நாடுமுழுவதும் சென்று அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றிப் பேய்களை ஓட்டி வந்தார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


கடவுள் உங்களை விலை கொடுத்து மீட்டுள்ளார். எனவே, உங்கள் உடலால் கடவுளுக்குப் பெருமை சேருங்கள்!

பதில்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

அனைவரும் என்னைப் போல் நற்செய்தியை அறிவியுங்கள் என்று சொன்ன எம் இறைவா!

உம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள, குருக்கள, கன்னியர் பொதுநிலையினர் அனைவரும் உம்மைப்போல வாழ்ந்து தங்களது வாழ்வால் மற்றவருக்கு நற்செய்தியை அறிவித்திட தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

உமது நம்பிக்கை உன்னை குணமாக்கியது’ என்று கூறிய இறைவா,

என் பங்கில் உள்ள நோயாளிகள் அனைவரும் உம்மையே நம்பியுள்ளனர். அவர்களை குணப்படுத்தும். அவர்கள் குணமடைந்து மீண்டும் தங்கள் பணிகளை தொடர தேவையான சக்திகளை தந்தருளவும், பெற்றோர்கள், ஆசான்கள் உமக்குள் என்றும் வாழ்ந்து, பிள்ளைகளுக்கும், மாணவர்களுக்கும் நல்வழி காட்டவும், உமக்காகப் பொறுமையுடன் காத்திருந்து, உமது திருவுளத்தை நிறைவேற்றிடவும் தேவையான அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

“என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன்” என்று திருவாய் மொழிந்த இயேசுவே

இன்றைய நிகழ்காலப் பேரழிவுகளால் பெரும் துயருற்று எதிர்கால ஏக்கங்களை உள்ளங்களில் சுமந்துகொண்டு வீங்கிய இதயத்துடன் விரக்தியின் விழிம்பில் இருந்து கொண்டு கற்பனைகளையும் கனவுகளையும் காற்றிலே பறக்க விட்டு வாடி நிற்கும் எம் இளைஞர்களை ஒருகணம் கண்நோக்கிபாரும். ஆண்டவரே நாம் உம்மையே நாடி வருகின்றோம். எம் ஏக்கங்களை துடைத்தருளும் எம் விரக்திகளை மகிழ்வாக்கியருளும் எம் கனவுகளை கனிகளாக்கியருளும் கடவுளே என்றும் உம்; பணியில் எம் கால்கள் நடந்து வாழ்வை கண்டடைய வரமருள வேன்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

“வாழ்வு தரும் உணவு நானே” எனக்கூறிய நற்கருணை நாதரே!

உலகின் பலபாகங்களிலும் வசிக்கும் எமது பங்கு மக்களை உமது கரங்களில் ஒப்படைக்கின்றோம். அவர்களின் உள்ளக்கிடக்கைகளை ஏக்கத்தவிப்புக்களை நீரே பூர்த்தி செய்தருளும். அவர்கள் அனைவரும் வாழ்வுதரும் உணவாகிய உம்மையே பெற்றுக்கொள்ளவும் உம்மையே ஆர்வத்தோடு தேடவும் உலகில் பசியோடு தம்மைசுற்றி தவிப்பவர்களுக்கு பசிபோக்கும் கருவியாக மாறவும் நீர் வழித்துணையாக வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

தாயும் தந்தையுமான எம் இறைவா!

இங்கே குழுமியுள்ள ஒவ்வொரு சகோதர சகோதரிகளுக்காகவும், இங்கே வரஇயலாதவர்களுக்காகவும் மற்றும் இங்கே வரமனமில்லாதவர்களுக்காகவும் உம்மை மன்றாடுகிறோம். நல்ல ஆயர்களாக, நாங்கள் அனைவரும் ஒரே தந்தையின் பிள்ளைகள் என்ற மனநிலையோடு ஒரே மந்தையில் என்றுமே வாழ வரமருள வேண்டுமென்று தாயும் தந்தையுமான எம் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்' என்றார்'' (மாற்கு 1:38)

மக்களைத் தேடிச் சென்று அவர்களுக்கு இறையாட்சி பற்றிய நற்செய்தியை அறிவித்தார் இயேசு. அவ்வேளைகளில் இயேசு தம்மோடு தொடர்ந்து இருக்கவேண்டும் என்று மக்கள் விரும்பியதுண்டு. எனவேதான் சீடர்கள் இயேசுவிடம் சென்று, ''எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்'' என்று கூறினார்கள் (மாற் 1:37). ஆனால் இயேசு ஒருசில மனிதரை மனமாற்றம் அடையச் செய்தால் போதும் என்றோ, அவர்களுக்கு மட்டும் நற்செய்தி அறிவித்தால் போதும் என்றோ நினைக்கவில்லை. அவர் மேலும் பல ஊர்களுக்குச் செல்ல வேண்டும்; மேலும் பல மக்களைச் சென்றடைய வேண்டும்; மேலும் பலரை இறையாட்சியின் அரவணைப்பில் கொண்டு வர வேண்டும் என்னும் ஆர்வத்தால் உந்தப்பட்டார். எனவே, ''நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம்'' என்றார். இயேசு பல ஊர்களுக்குச் சென்று போதித்தாலும் அவருடைய நடமாட்டம் கலிலேயா பகுதியிலும் எருசலேம் பகுதியிலும் மட்டுமே நிகழ்ந்தது. இயேசுவின் பணியைத் தொடர்ந்து அனைத்துலக மக்களுக்கும் நற்செய்தியை அறிவிக்கின்ற பொறுப்பு அவருடைய சீடர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நாம் இயேசுவின் கால்களாக, கைகளாக, ஏன் இயேசுவின் உடலாக இருக்கின்றோம் என பவுல் அறிவுறுத்துகிறார் (காண்க: 1 கொரி 12:27; எபே 4:4-6). இத்தகைய உணர்வால் உந்தப்பட்டு, பவுல் போன்ற திருத்தூதர்கள் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கப் புறப்பட்டுச் சென்றார்கள். பிற்காலத்தில் தூய பிரான்சிஸ் சவேரியார் போன்றோர் இந்திய நாட்டிற்கு வந்து மறையறிவித்தார்கள். எனவே, இயேசு ஊர் ஊராகச் சென்று போதித்த பணி இன்றும் தொடர்கிறது. நற்செய்தியைப் பறைசாற்றுவோர் இயேசுவைப் பின்பற்றி ''அடுத்த ஊர்களுக்கும்'' போக அழைக்கப்படுகிறார்கள். ஒரே இடத்தில், ஒரே தளத்தில் வேரூயஅp;ன்றி விடாமல் வெவ்வேறு மக்களை அணுகிச் சென்று அவர்களையும் இறையாட்சியின் அரவணைப்பில் கொணர்ந்திட முயல வேண்டும் என்பதை இயேசுவின் பணி நமக்கு உணர்த்துகிறது. இதனால் நாம் பயணம் சென்று தொலைநாடுகள் செல்லவேண்டும் என்றில்லை; மாறாக, எங்கிருந்தாலும் அங்குள்ள அனைவருக்கும் வேறுபாடின்றி நற்செய்தியின் தூதுவர்களாக நாம் விளங்கிட வேண்டும் என்பதே பொருள்.

மன்றாட்டு:

இறைவா, எங்களை நற்செய்தியின் தூதுவர்களாக மாற்றியருளும்.