யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 2வது வாரம் சனிக்கிழமை
2015-01-24

புனித பிரான்சீஸ் சலேசியார்




முதல் வாசகம்

இயேசு, தம் சொந்த இரத்தத்தைக் கொண்டு, எக்காலத்திற்குமே ஒரே முறையில் தூயகத்திற்குள் நுழைந்தார்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 9: 2-3,11-14

சகோதரர் சகோதரிகளே, திரு உறைவிடத்தில் முன்கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அங்கே ஒரு விளக்குத் தண்டும் ஒரு மேசையும் படையல் அப்பங்களும் இருந்தன. இவ்விடத்திற்குத் `தூயகம்' என்பது பெயர். இரண்டாம் திரைக்குப் பின், ``திருத்தூயகம்'' என்னும் கூடாரம் இருந்தது. ஆனால், இப்போது கிறிஸ்து தலைமைக் குருவாக வந்துள்ளார். அவர் அருளும் நலன்கள் இப்போது நமக்குக் கிடைத்துள்ளன. அவர் திருப்பணி செய்யும் கூடாரம் முன்னதைவிட மேலானது, நிறைவு மிக்கது. அது மனிதர் கையால் அமைக்கப்பட்டது அல்ல; அதாவது, படைக்கப்பட்ட இவ்வுலகைச் சார்ந்தது அல்ல. அவர் பலியாகப் படைத்த இரத்தம் வெள்ளாட்டுக் கிடாய்கள், கன்றுக்குட்டிகள் ஆகியவற்றின் இரத்தம் அல்ல, அவரது சொந்த இரத்தமே. அவர் ஒரே ஒரு முறை தூயகத்திற்குள் சென்று எக்காலத்திற்குமென அதைப் படைத்து நமக்கு என்றுமுள்ள மீட்புக் கிடைக்கும்படி செய்தார். வெள்ளாட்டுக்கிடாய்கள், காளைகள் இவற்றின் இரத்தமும் கிடாரியின் சாம்பலும் தீட்டுப்பட்டவர்கள்மீது தெளிக்கப்படும்போது, சடங்கு முறைப்படி அவர்கள் தூய்மை பெறுகிறார்கள். ஆனால் கிறிஸ்துவின் இரத்தம், வாழும் கடவுளுக்கு நாம் வழிபாடு செய்யுமாறு, சாவுக்கு அழைத்துச் செல்லும் செயல்களிலிருந்து நம் மனச்சான்றை எத்துணை மிகுதியாய்த் தூய்மைப்படுத்துகிறது! ஏனெனில் என்றுமுள்ள தூய ஆவியினால் தம்மைத்தாமே கடவுளுக்கு மாசற்ற பலியாகக் கொடுத்தவர் அவரே.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

எக்காளம் முழங்கிடவே, உயரே ஏறுகின்றார் ஆண்டவர்.
திருப்பாடல் 47: 1-2. 5-6. 7-8

1 மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். 2 ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே. பல்லவி

5 ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். 6 பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். பல்லவி

7 ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். 8 கடவுள் பிற இனத்தார்மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருமகனின் சொற்களை எங்கள் மனத்தில் இருத்தும்படி, ஆண்டவரே, எங்கள் இதயத்தைத் திறந்தருளும். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 20-21

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுடன் வீட்டிற்குச் சென்றார். மீண்டும் மக்கள் கூட்டம் வந்து கூடியதால் அவர்கள் உணவு அருந்தவும் முடியவில்லை. அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டு, அவரைப் பிடித்துக்கொண்டுவரச் சென்றார்கள். ஏனெனில் அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக்கொண்டனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசுவின் உறவினர்...அவரைப் பிடித்துக்கொண்டுவரச் சென்றார்கள். ஏனெனில் அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக் கொண்டனர்'' (மாற்கு 3:21)

சில சமயங்களில் பிறர் பேசுவது நமக்கு அர்த்தமற்றதாகத் தோற்றமளித்தால் அவர்களைப் பார்த்து, ''உங்களுக்கு என்ன பைத்தியமா?'' என்று கேட்பதுண்டு. எடுத்துக் கூறப்பட்ட கருத்து முன்னுக்குப் பின் முரணாக இருந்தாலோ, குழப்பத்தை உருவாக்கினாலோ, முறையாக விளக்கப்படாமல் போனாலோ நாம் இவ்வாறு கேட்கத் துணிகிறோம். இயேசுவின் உறவினரும் அப்படியே நினைத்தார்கள். அவர்கள் இயேசுவைக் கூர்ந்து கவனித்துவந்தனர். இயேசு அங்குமிங்கும் சென்று, ''கடவுளின் ஆட்சி'' பற்றிப் போதித்தார்; மக்கள் அவரைத் தேடிச் சென்று நலம் பெற்றார்கள். எங்கு சென்றாலும் மக்கள் கூட்டம் அவரைத் தொடர்ந்தது. தமக்குப் பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உண்டென்று இயேசு அறிவித்தார். ஓய்வுநாள் மனிதருக்கேயன்றி, மனிதர் ஓய்வு நாளுக்கல்ல என்று முழங்கினார். இயேசு புரிந்த இச்செயல்களும் உரைத்த சொற்களும் பலருக்குப் புரியாத புதிராக இருந்தன. எனவே அவர்கள் இயேசு ''மதிமயங்கி இருக்கிறார்'' (மாற் 3:21) என்று பேசிக் கொண்டார்கள்.

ஒருவிதத்தில் இயேசு மதிமயங்கித்தான் போனார் எனலாம். அவருடைய சிந்தனை முழுவதும் கடவுளைப் பற்றியும் மனிதரின் நலன் பற்றியும் இருந்ததால் தம்மைப் பற்றி எண்ணுவதற்கு அவருக்கு நேரம் இருக்கவில்லை. கடவுளிடமிருந்து தாம் பெற்றுக்கொண்ட பணியைப் பிரமாணிக்கமாக நிறைவேற்றுவதிலேயே இயேசு கருத்தாய் இருந்ததால் அவரைப் பற்றி மக்கள் பலவாறு பேசிக்கொண்டார்கள். இயேசு கடவுளின் சக்தியால் செயல்பட்டாரா அலகையின் வல்லமையால் அதிசயங்கள் புரிந்தாரா என்று கேட்கும் அளவுக்குச் சிலர் போய்விட்டிருந்தனர். கிறிஸ்துவை நம்புவோர் அவருடைய நற்செய்தியைத் தம் உயிர்மூச்சாக மாற்றும்போது கடவுளுக்காக ''மதிமயங்கி'' செயல்படத் தொடங்குவார்கள். அப்போது ''உங்களுக்கு என்ன பைத்தியமா?'' என்னும் கேள்வியை நம்மைப் பார்த்து யாராவது கேட்டால் நாம், ''கடவுளுக்காக நான் பைத்தியம்தான்'' எனப் பதில் கூறமுடியும்.

மன்றாட்டு:

இறைவா, உம் சிந்தனையால் நாங்கள் ஆட்கொள்ளப்பட அருள்தாரும்.