யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 2வது வாரம் புதன்கிழமை
2015-01-21

புனித அக்னெஸ்




முதல் வாசகம்

மெல்கிசதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 7: 1-3, 15-17

சகோதரர் சகோதரிகளே, மெல்கிசதேக்கு சாலேம் நகரின் அரசர்; உன்னத கடவுளின் குரு. ஆபிரகாம் அரசர்களை முறியடித்துத் திரும்பியபொழுது, அவரை எதிர்கொண்டு போய் அவருக்கு ஆசி அளித்தார். ஆபிரகாம் தம்மிடமிருந்த எல்லாவற்றில் இருந்தும் பத்தில் ஒரு பங்கை இவருக்குக் கொடுத்தார். நீதியின் அரசர் என்பது இவர் பெயரின் முதற்பொருள். மேலும், இவர் சாலேமின் அரசர். அமைதியின் அரசர் என்பது இதற்குப் பொருள். இவருக்குத் தந்தை இல்லை, தாய் இல்லை; தலைமுறை வரலாறு இல்லை; இவரது வாழ்நாளுக்குத் தொடக்கமும் இல்லை; முடிவும் இல்லை. இவர் கடவுளின் மகனுக்கு ஒப்பானவர்; குருவாக என்றும் நிலைத்திருப்பவர். மெல்கிசதேக்குக்கு ஒப்பான வேறொரு குரு தோன்றியிருப்பதால் நாம் மேற்கூறியது இன்னும் அதிகத் தெளிவாகிறது. இவர் திருச்சட்டத்தின் கட்டளைப்படி மனித இயல்புக்கு ஏற்ப அல்ல, அழியாத வாழ்வின் வல்லமையால் குருவாகத் தோன்றினார். இவரைப்பற்றி, ``மெல்கிசதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே'' என்னும் சான்று உரைக்கப் பட்டுள்ளது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே.
திருப்பாடல் 110: 1-2. 3. 4

ஆண்டவர் என் தலைவரிடம், `நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்' என்று உரைத்தார். 2 வலிமைமிகு உமது செங்கோலை ஆண்டவர் சீயோனிலிருந்து ஓங்கச் செய்வார்; உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்! பல்லவி

3 நீர் உமது படைக்குத் தலைமை தாங்கும் நாளில் தூய கோலத்துடன் உம் மக்கள் தம்மை உவந்தளிப்பர்; வைகறை கருவுயிர்த்த பனியைப்போல உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர். பல்லவி

4 `மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே' என்று ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார்; அவர் தம் மனத்தை மாற்றிக்கொள்ளார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 1-6

இயேசு மீண்டும் தொழுகைக்கூடத்திற்குள் சென்றார். அங்கே கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். சிலர் இயேசுமீது குற்றம் சுமத்தும் நோக்குடன், ஓய்வுநாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தனர். இயேசு கை சூம்பியவரை நோக்கி, ``எழுந்து, நடுவே நில்லும்'' என்றார். பின்பு அவர்களிடம், ``ஓய்வு நாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?'' என்று அவர் கேட்டார். அவர்களோ பேசாதிருந்தார்கள். அவர் சினத்துடன் அவர்களைச் சுற்றிலும் திரும்பிப் பார்த்து, அவர்களது பிடிவாத உள்ளத்தைக் கண்டு வருந்தி, கை சூம்பியவரை நோக்கி, ``கையை நீட்டும்'' என்றார். அவர் நீட்டினார். அவருடைய கை மீண்டும் நலமடைந்தது. உடனே பரிசேயர் வெளியேறி ஏரோதியரோடு சேர்ந்து இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''அவர்களிடம், 'ஓய்வு நாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை' என்று இயேசு கேட்டார்'' (மாற்கு 3:4)

யூத மக்கள் ஓய்வு நாளைக் கடைப்பிடிப்பதில் மிகுந்த அக்கறை காட்டினார்கள். யூத சமய வழக்கில் ஓய்வு நாள் மிக முக்கியமானதாகக் கருதப்பட்டது. எந்த வழக்கமாக இருந்தாலும் அது மக்களுக்கு நன்மை பயக்க வேண்டுமே ஒழிய தீமை பயத்தலாகாது. மனித உயிரை மேம்படுத்துவதற்கு ஓய்வு நாள் துணைசெய்ய வேண்டும்; மனித உயிருக்கு எதிராக அது அமைந்துவிடலாகாது. இந்த உண்மையை இயேசு எடுத்துரைக்கிறார். நோயுற்ற மக்களுக்கு நலம் கொணர்வது ஓய்வு நாளை மீறியதாகக் கருதப்பட்டால் இயேசு ஓய்வு நாளை மீறத் தயங்கமாட்டார். நன்மை செய்வதற்குக் குறிப்பிட்ட நேரம் காலம் வேண்டும் என்ற தேவை இல்லை. எந்த நாளும் நேரமும் நன்மை செய்வதற்கு உகந்ததே.

சிலர் நல்ல நேரம் பார்த்து, எதை எப்போது செய்யலாம் என்று கணிப்பதில் குறியாயிருப்பார்கள். இயேசுவின் பார்வையில் நல்ல நேரம் கெட்ட நேரம் என்றெல்லாம் கிடையாது. எந்த நேரமும் நன்மை செய்வதற்கென்றே உள்ளது. ஆக, கோள்களையும் கிரகங்களையும் பார்த்து நல்ல நேரம் குறித்துச் செயல்படுகின்ற போக்கு சரியல்ல என நாம் அறிவுறுத்தப்பெறுகிறோம். காலம் என்பது கடவுளின் கைகளில் உள்ளது. நமக்குக் கடவுள் தருகின்ற காலம் அவருடைய கொடை. எனவே, நாம் கடவுள் தருகின்ற கொடைகளை நன்றியோடு ஏற்பதாக இருந்தால், எப்போதும் நன்மை செய்வதையே குறிக்கோளாகக் கொண்டிருப்போம். நேரம் காலம் பாராமல் எந்த வேளையிலும் நன்மை செய்ய முன்வருவோம். கடவுளின் காலம் மனிதரின் காலக் கணிப்பிலிருந்து வேறுபட்டது. மனிதப் பார்வையில் மதிப்பிடாமல் கடவுளின் பார்வையில் மதிப்பிட நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, காலங்களைக் கடந்த உம்மை எக்காலமும் போற்றிட அருள்தாரும்.