யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 2வது வாரம் செவ்வாய்க்கிழமை
2015-01-20

புனித செபஸ்தியார்




முதல் வாசகம்

எதிர்நோக்கே உள்ளத்திற்குப் பாதுகாப்பானது; உறுதியான நங்கூரம் போன்றது.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 6: 10-20

சகோதரர் சகோதரிகளே, கடவுள் நீதியற்றவர் அல்ல. இறைமக்களுக்கு நீங்கள் முன்பு தொண்டாற்றி வந்தீர்கள்; இப்போதும் தொண்டு செய்து வருகின்றீர்கள். எனவே கடவுள் பெயரால் நீங்கள் காட்டிய அன்பையும் உழைப்பையும் அவர் மறக்கமாட்டார். நீங்கள் எதிர்நோக்குவது முழு உறுதி பெறும் பொருட்டு, உங்களுள் ஒவ்வொருவரும் முன்பு காட்டிய அதே ஆர்வத்தையே இறுதிவரை காட்டவேண்டும் என மிகவும் விரும்புகிறோம். இவ்வாறு நீங்கள், தளர்ச்சிக்கு இடம் கொடாமல், நம்பிக்கையாலும் பொறுமையாலும் இறைவாக்குறுதிகளை உரிமைப் பேறாகப் பெற்றவர்களைப்போல் வாழுங்கள். ஆபிரகாமுக்குக் கடவுள் வாக்குறுதி அளித்தபோது, தம்மைவிடப் பெரியவர் எவர் பெயராலும் ஆணையிட்டுக் கூற இயலாததால், தம்மீதே ஆணையிட்டு, ``நான் உன்மீது உண்மையாகவே ஆசி பொழிந்து உன்னைப் பல்கிப் பெருகச் செய்வேன்'' என்றார். இதன்படி அவரும் பொறுமையோடு காத்திருந்து, பின் கடவுள் வாக்களித்ததைப் பெற்றுக்கொண்டார். தங்களைவிடப் பெரியவர் ஒருவர் பெயரால்தான் மக்கள் ஆணையிடுவர். எல்லாச் சச்சரவுகளிலும் ஆணையிட்டே முடிவு கட்டுவர். அம்முடிவை ஆணை உறுதிப்படுத்தும். அவ்வாறே, கடவுளும் தம் வாக்குறுதியை உரிமைப்பேறாகப் பெற்றோருக்குத் தம் திட்டத்தின் மாறாத் தன்மையை மிகவும் தெளிவாகக் காட்ட விரும்பி, ஓர் ஆணையால் தம் வாக்கை உறுதிப்படுத்தினார். மாறாத் தன்மையுடைய இவை இரண்டையும் பொறுத்த வரையில் கடவுள் உரைத்தது பொய்யாயிருக்க முடியாது. அடைக்கலம் தேடும் நாம், நம் கண்முன் எதிர்நோக்கியுள்ளதை விடாமல் பற்றிக்கொள்வதற்குத் தளரா ஊக்கம் கொண்டிருக்கவேண்டும். இந்த எதிர்நோக்கே நம் உள்ளத்திற்குப் பாதுகாப்பான, உறுதியான நங்கூரம் போன்றுள்ளது. இது கோவிலின் திரைச்சீலைக்கு அப்பால் சென்று சேர்ந்திருக்கிறது. நமக்கு முன்னோடியாய் அந்தத் திரைச்சீலையைக் கடந்து இயேசு அங்குச் சென்று சேர்ந்திருக்கிறார். மெல்கிசதேக்கு முறைப்படி என்றென்றும் தலைமைக் குரு என்னும் நிலையில் நம் சார்பாக அவர் அங்குச் சென்றிருக்கிறார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார்.
திருப்பாடல் 111: 1-2. 4-5. 9,10

நெஞ்சார ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்; நீதிமான்களின் மன்றத்திலும் சபையிலும் அவருக்கு நன்றி செலுத்துவேன். 2 ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை; அவற்றில் இன்பம் காண்போர் அனைவரும் அவற்றை ஆய்ந்துணர்வர். பல்லவி

4 அவர் தம் வியத்தகு செயல்களை என்றும் நினைவில் நிலைக்கச் செய்துள்ளார்; அருளும் இரக்கமும் உடையவர் ஆண்டவர். 5 அவர் தமக்கு அஞ்சி நடப்போர்க்கு உணவு அளிக்கின்றார்; தமது உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார். பல்லவி

9 தம் மக்களுக்கு அவர் மீட்பை அளித்தார்; தம் உடன்படிக்கை என்றென்றும் நிலைக்குமாறு செய்தார்; அவரது திருப்பெயர் தூயது; அஞ்சுதற்கு உரியது. 10உ அவரது புகழ் என்றென்றும் நிலைத்துள்ளது. பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சிமிகு தந்தையுமானவர் ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வாராக அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 23-28

ஓய்வு நாளில் இயேசு வயல் வழியே செல்ல நேர்ந்தது. அவருடைய சீடர் கதிர்களைக் கொய்துகொண்டே வழி நடந்தனர். அப்பொழுது பரிசேயர் இயேசுவிடம், ``பாரும், ஓய்வு நாளில் செய்யக்கூடாததை ஏன் இவர்கள் செய்கிறார்கள்?'' என்று கேட்டனர். அதற்கு அவர் அவர்களிடம், ``தாமும் தம்முடன் இருந்தவர்களும் உணவின்றிப் பசியாய் இருந்தபோது தாவீது என்ன செய்தார் என்பதை நீங்கள் வாசித்ததே இல்லையா? அபியத்தார் தலைமைக் குருவாய் இருந்தபோது தாவீது இறை இல்லத்திற்குள் சென்று, குருக்களைத் தவிர வேறு எவரும் உண்ணக்கூடாத அர்ப்பண அப்பங்களைத் தாம் உண்டதுமன்றித் தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா?'' என்றார். மேலும் அவர் அவர்களை நோக்கி, ``ஓய்வு நாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது; மனிதர் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஆதலால் ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு 'ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது; மனிதர் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை' என்றார்'' (மாற்கு 2:27)

இயேசு ஓய்வு நாள் பற்றிக் கூறிய கருத்தின் அடிப்படையில் அவர் ஓய்வுநாளை எதிர்த்தார் என்று சிலர் முடிவுகட்டிவிடுகின்றனர். இது தவறு. இயேசு ஓய்வு நாளைக் கடைப்பிடிப்பது தவறு என்று கூறவில்லை; மாறாக, ஓய்வு நாளின் உண்மையான பொருள் எதில் அடங்கியிருக்கிறது என்பதை அவர் வெளிப்படுத்தினார். யூத வழக்கப்படி ஓய்வு நாள் கடவுளை வழிபடுவதற்கும், வேலை செய்வதிலிருந்து ஓய்வு பெறுவதற்கும், குடும்பக் கடமைகளில் கவனம் செலுத்துவதற்கும் பயன்பட்டது. ஆனால் நாளடைவில் ஓய்வு நாள் பற்றிய சட்டதிட்டங்கள் பலுகிப் பெருகின. ஓய்வு நாளில் எந்த வேலை செய்யலாம், எந்த வேலை செய்யத் தகாதது என வரையறுப்பதில் சட்ட நுணுக்கங்கள் புகுந்தன; மக்கள்மீது பெரிய சுமை சுமத்தப்படலாயிற்று. இதையே இயேசு கண்டித்தார். ஓய்வுநாளின் உண்மைப் பொருளை மறந்தது தவறு என்று சுட்டிக்காட்டிய இயேசு, ஓய்வு நாள் மனிதரின் நன்மைக்காகவே உருவாக்கப்பட்டது என்னும் கருத்தை ஆழமாக எடுத்துரைத்தார். எனவே அவர் ஓய்வு நாள்களில் குணமளித்தார். இது ஓய்வுநாள் பற்றிய சட்டதிட்டங்களுக்கு எதிராக அமைந்தது என இயேசு அறிந்திருந்த பிறகும் மனிதரின் நலனை முன்னிட்டு சட்ட மீறலில் ஈடுபட்டார்.

கிறிஸ்தவர்களுக்கு ஓய்வுநாளாக இருப்பது ஞாயிற்றுக் கிழமை ஆகும். யூதர்களின் ஓய்வு நாளாகிய சனிக்கிழமை கிறிஸ்தவ வழக்கில் ஞாயிறாக மாறியதற்கு ஒரு வரலாறு உண்டு. இயேசு சாவிலிருந்து உயிர்பெற்று எழுந்தது ஞாயிற்றுக் கிழமை என்னும் அடிப்படையில் கிறிஸ்தவ வழக்கில் ஞாயிறு சிறப்புப் பொருள் பெறலாயிற்று. ஞாயிறு என்பது வாரத்தின் முதல் நாள். இயேசு உயிர் பெற்றெழுந்த அந்த நாளைச் சிறப்பித்து, வழிபாட்டு நாளாகக் கொண்டாடுவது பொருத்தம் எனத் தொடக்க காலத் திருச்சபை முடிவு செய்தது. எனவே, கடவுளை வழிபடுவதற்கும், அன்றாட வேலையிலிருந்து ஓய்வு பெற்று, சமூக மற்றும் குடும்ப உறவுகளைப் புதுப்பிப்பதற்கும் ஏற்ற நாளாக நாம் ஞாயிற்றுக் கிழமையைக் கருதலாம். கிறிஸ்தவ ஓய்வு நாளின் உட்பொருளை உணர்ந்து வாழ்ந்திட நாம் அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு:

இறைவா, உம்மை வழிபட்டு உம் வழியில் நடந்திட எங்களுக்கு அருள்தாரும்.