யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 2வது வாரம் திங்கட்கிழமை
2015-01-19




முதல் வாசகம்

இறைமகனாய் இருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-10

சகோதரர் சகோதரிகளே, தலைமைக் குரு ஒவ்வொருவரும் மனிதரிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, பாவங்களுக்குக் கழுவாயாகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்துவதற்காக மக்கள் சார்பாகக் கடவுள் முன் பணிபுரிய ஏற்படுத்தப் படுகிறார். அவர் தாமே வலுவின்மைக்கு ஆளாகியிருப்பதால், அறியாமையில் இருப்போருக்கும் நெறி தவறி நடப்போருக்கும் பரிவு காட்டக் கூடியவராய் இருக்கிறார். அவர் மக்களுடைய பாவத்திற்குக் கழுவாயாகப் பலி செலுத்துவதுபோல, தம் வலுவின்மையின் பொருட்டுத் தமக்காகவும் பலி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார். மேலும், யாரும் இம்மதிப்புக்குரிய பணியைத் தாமே தேர்ந்துகொள்வதில்லை. ஆரோனுக்கு வந்ததுபோன்று கடவுளிடமிருந்தே அழைப்பு வரவேண்டும். அவ்வாறே கிறிஸ்துவும் தலைமைக் குருவாகத் தம்மையே உயர்த்திக்கொள்ளவில்லை. ``நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்'' என்று அவரிடம் கூறியவரே அந்த மேன்மையை அவருக்கு அளித்தார். இவ்வாறே மற்றோரிடத்தில், ``மெல்கிசதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே'' என்றும் கூறப்பட்டுள்ளது. அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்குச் செவிசாய்த்தார். அவர் இறைமகனாயிருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். அவர் நிறைவுள்ளவராகி, `தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார். ``மெல்கிசதேக்கின் முறைப்படி வந்த தலைமைக் குரு'' என்று கடவுள் அவருக்குப் பெயர் சூட்டினார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே.
திருப்பாடல் 110: 1. 2. 3. 4

ஆண்டவர் என் தலைவரிடம், `நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்' என்று உரைத்தார். பல்லவி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 18-22

யோவானுடைய சீடரும் பரிசேயரும் நோன்பு இருந்து வந்தனர். சிலர் இயேசுவிடம், ``யோவானுடைய சீடர்களும் பரிசேயருடைய சீடர்களும் நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?'' என்று கேட்டனர். அதற்கு இயேசு அவர்களை நோக்கி, ``மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் நோன்பு இருக்க முடியுமா? மணமகன் அவர்களோடு இருக்கும் காலமெல்லாம் அவர்கள் நோன்பு இருக்க முடியாது. ஆனால் மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள். எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப்போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப்போட்டால், அந்தப் புதிய துணி பழையதிலிருந்து கிழியும்; கிழிசலும் பெரிதாகும். அதுபோலப் பழைய தோற்பைகளில், எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை. ஊற்றி வைத்தால் மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும்; மதுவும் தோற்பைகளும் பாழாகும். புதிய மது புதுத் தோற் பைகளுக்கே ஏற்றது'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''ஓர் ஓய்வு நாளில் இயேசு வயல் வழியே செல்ல நேர்ந்தது. அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து கைகளினால் கசக்கித் தின்றனர்'' (லூக்கா 6:1)

ஓய்வு நாளில் எந்தெந்த வேலைகள் அனுமதிக்கப்படவில்லை என்னும் பட்டியல் மிக நீண்டது. முப்பத்தொன்பது வகையான வேலைகள் ஓய்வு நாளில் செய்யத் தகாதவை என்று சட்டம். அறுவடை செய்தல், தானியத்தைப் பிரித்தெடுத்தல், உணவு தயாரித்தல் என்னும் வேலைகள் தடைசெய்யப்பட்டவை. ஆனால் இயேசுவின் சீடர்கள் அவற்றை மீறி, ''கதிர்களைக் கொய்து கைகளினால் கசக்கித் தின்றனர்'' (லூக் 6:1). ''ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு'' (காண்க: விப 20:8-11) என்னும் சட்டம் கடவுள் மோசே வழியாகக் கொடுத்த கற்பனைகளில் முக்கியமான ஒன்று. இக்கட்டளை பொதுவான ஒன்றாக இருந்ததால் அதற்கு விளக்கங்கள் பல எழுந்தன. ஓய்வு நாளைத் ''தூயதாகக் கடைப்பிடிப்பது'' எப்படி? அந்நாளில் ஓய்வு எடுப்பது எப்படி? எந்தெந்த வேலைகளைச் செய்யலாம்? தடைசெய்யப்பட்ட வேலைகள் யாவை? இவை பற்றிய விளக்கங்களை மக்களுக்குப் பரிசேயர், மறைநூல் அறிஞர் போன்றோர் விரிவாகவும் துல்லியமாகவும் எடுத்துக் கூறினர். எல்லா சமுதாயங்களிலும் தூய்மை பற்றிய ஒழுங்குகள் உண்டு. அதுபோலவே யூத சமயத்திலும் பல ஒழுங்குகள் இருந்தன. ஆனால் இயேசு அந்த ஒழுங்குகள் மனிதரின் நன்மைக்காகவே எழுந்தனவென்று வலியுறுத்துகிறார்.

ஓய்வு நாள் பற்றிய விளக்கம் அளிக்க இயேசுவுக்கு அதிகாரம் உண்டு என்பதைப் பரிசேயர்கள் அறியத் தவறிவிட்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, ''ஓய்வு நாளும் மானிடமகனுக்குக் கட்டுப்பட்டதே'' (லூக் 6:5) என்று கூறி, தம் அதிகாரத்தை நிலைநாட்டுகிறார். இதன் பொருள் என்ன? ஓய்வு நாளில் இயேசுவின் சீடர்கள் தடைசெய்யப்பட்ட வேலை செய்தார்கள் என்றே வைத்துக்கொண்டாலும் இயேசு அந்த விளக்கம் சரியானதல்ல என நிலைநாட்டுகிறார். அதற்கு எடுத்துக்காட்டாக முற்காலத்தில் தாவீது அரசர் குருக்கள் மட்டுமே உண்ணக் கூடிய ''அர்ப்பண அப்பத்தை''த் தாமும் உண்டு தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்ததை முன்வைக்கிறார். தாவீது செய்ததும் பரிசேயர் கணிப்புப்படி சட்ட விரோதம் என்றுதான் கணிக்கப்பட வேண்டும். எனவே இயேசு தம்மைத் தாவீது அரசருக்கும் மேலாக உயர்த்துவதையும் இவண் காண்கின்றோம். மேலும், தொடக்க காலத் திருச்சபையில் ஓய்வு நாள் பற்றிய விவாதம் தொடர்ந்து நிகழ்ந்தது என்பதும் நற்செய்தி நூல்களில் காணப்படுகிறது. யூத சமயம் வழங்கிய தூய்மை சாய்ந்த சட்டங்களையும் அவற்றிற்கு அளிக்கப்பட்ட விளக்கங்களையும் இயேசு ஏற்கவில்லை. அச்சட்டங்களும் விளக்கங்களும் மனிதரின் நலனுக்கு எதிராகப் போனால் அவற்றால் யாதொரு பயனும் இல்லை எனவும், மாறாக அவற்றை ஒதுக்க வேண்டும் எனவும் இயேசு கற்பித்தார். இன்றும் கூட, சட்டத்தின் பெயரால் மனித நலன் புறக்கணிக்கப்படுகின்ற ஆபத்து இருக்கத்தான் செய்கிறது. இயேசுவின் சீடர்களும் மனித நலனை ஒடுக்குகின்ற சட்டங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, மனித நலனை மேம்படுத்துகின்ற வழிகளைக் காணவேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகன் இயேசு வழங்கிய போதனைகளை நாங்கள் கருத்தாகக் கடைப்பிடிக்க அருள்தாரும்.