யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 1வது வாரம் புதன்கிழமை
2015-01-14

புனித பெலிக்ஸ்




முதல் வாசகம்

இயேசு மக்கள் பாவங்களுக்குக் கழுவாய் ஆகும்படி எல்லாவற்றிலும் எல்லாரைப் போல் ஆகவேண்டியதாயிற்று
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 2: 14-18

ஊனும் இரத்தமும் கொண்ட பிள்ளைகளைப்போல் கிறிஸ்துவும் அதே இயல்பில் பங்கு கொண்டார். இவ்வாறு சாவின்மேல் ஆற்றல் கொண்டிருந்த அலகையைச் சாவின் வழியாகவே அழித்துவிட்டார். வாழ்நாள் முழுவதும் சாவு பற்றிய அச்சத்தினால் அடிமைப்பட்டிருந்தவர்களை விடுவித்தார். ஏனெனில் அவர் வானதூதருக்குத் துணை நிற்கவில்லை. மாறாக, ஆபிரகாமின் வழிமரபினருக்கே துணை நின்றார் என்பது கண்கூடு. ஆதலின், கடவுள் பணியில் அவர் இரக்கமும் நம்பிக்கையும் உள்ள தலைமைக் குருவாயிருந்து, மக்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாகுமாறு எல்லாவற்றிலும் தம் சகோதரர் சகோதரிகளைப் போல் ஆகவேண்டிய தாயிற்று. இவ்வாறு தாமே சோதனைக்கு உள்ளாகித் துன்பப்பட்டதனால் சோதிக்கப்படுவோருக்கு உதவி செய்ய அவர் வல்லவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் தம் உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார்.
திருப்பாடல்105: 1-2. 3-4. 6-7. 8-9

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்! அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள். 2 அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்! பல்லவி

3 அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக! 4 ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! பல்லவி

6 அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே! 7 அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித் தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. பல்லவி

8 அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்; ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்கின்றார். 9 ஆபிரகாமுடன் தாம் செய்துகொண்ட உடன்படிக்கையையும் ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில் கொண்டுள்ளார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன,'' என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 29-39

இயேசுவும் சீடர்களும் தொழுகைக்கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள். சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் சொன்னார்கள். இயேசு அவரருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார். மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் அவரிடம் கொண்டு வந்தார்கள். நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது. பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் ஓட்டினார்; அந்தப் பேய்கள் அவரை அறிந்திருந்ததால் அவற்றை அவர் பேசவிடவில்லை. இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். சீமோனும் அவருடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள். அவரைக் கண்டதும், ``எல்லாரும் உம்மைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்'' என்றார்கள். அதற்கு அவர், ``நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்; ஏனெனில் இதற்காகவே நான் வந்திருக்கிறேன்'' என்று சொன்னார். பின்பு அவர் கலிலேய நாடு முழுவதும் சென்று அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றிப் பேய்களை ஓட்டி வந்தார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்' என்றார்'' (மாற்கு 1:38)

மக்களைத் தேடிச் சென்று அவர்களுக்கு இறையாட்சி பற்றிய நற்செய்தியை அறிவித்தார் இயேசு. அவ்வேளைகளில் இயேசு தம்மோடு தொடர்ந்து இருக்கவேண்டும் என்று மக்கள் விரும்பியதுண்டு. எனவேதான் சீடர்கள் இயேசுவிடம் சென்று, ''எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்'' என்று கூறினார்கள் (மாற் 1:37). ஆனால் இயேசு ஒருசில மனிதரை மனமாற்றம் அடையச் செய்தால் போதும் என்றோ, அவர்களுக்கு மட்டும் நற்செய்தி அறிவித்தால் போதும் என்றோ நினைக்கவில்லை. அவர் மேலும் பல ஊர்களுக்குச் செல்ல வேண்டும்; மேலும் பல மக்களைச் சென்றடைய வேண்டும்; மேலும் பலரை இறையாட்சியின் அரவணைப்பில் கொண்டு வர வேண்டும் என்னும் ஆர்வத்தால் உந்தப்பட்டார். எனவே, ''நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம்'' என்றார். இயேசு பல ஊர்களுக்குச் சென்று போதித்தாலும் அவருடைய நடமாட்டம் கலிலேயா பகுதியிலும் எருசலேம் பகுதியிலும் மட்டுமே நிகழ்ந்தது. இயேசுவின் பணியைத் தொடர்ந்து அனைத்துலக மக்களுக்கும் நற்செய்தியை அறிவிக்கின்ற பொறுப்பு அவருடைய சீடர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நாம் இயேசுவின் கால்களாக, கைகளாக, ஏன் இயேசுவின் உடலாக இருக்கின்றோம் என பவுல் அறிவுறுத்துகிறார் (காண்க: 1 கொரி 12:27; எபே 4:4-6). இத்தகைய உணர்வால் உந்தப்பட்டு, பவுல் போன்ற திருத்தூதர்கள் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கப் புறப்பட்டுச் சென்றார்கள். பிற்காலத்தில் தூய பிரான்சிஸ் சவேரியார் போன்றோர் இந்திய நாட்டிற்கு வந்து மறையறிவித்தார்கள். எனவே, இயேசு ஊர் ஊராகச் சென்று போதித்த பணி இன்றும் தொடர்கிறது. நற்செய்தியைப் பறைசாற்றுவோர் இயேசுவைப் பின்பற்றி ''அடுத்த ஊர்களுக்கும்'' போக அழைக்கப்படுகிறார்கள். ஒரே இடத்தில், ஒரே தளத்தில் வேரூயஅp;ன்றி விடாமல் வெவ்வேறு மக்களை அணுகிச் சென்று அவர்களையும் இறையாட்சியின் அரவணைப்பில் கொணர்ந்திட முயல வேண்டும் என்பதை இயேசுவின் பணி நமக்கு உணர்த்துகிறது. இதனால் நாம் பயணம் சென்று தொலைநாடுகள் செல்லவேண்டும் என்றில்லை; மாறாக, எங்கிருந்தாலும் அங்குள்ள அனைவருக்கும் வேறுபாடின்றி நற்செய்தியின் தூதுவர்களாக நாம் விளங்கிட வேண்டும் என்பதே பொருள்.

மன்றாட்டு:

இறைவா, எங்களை நற்செய்தியின் தூதுவர்களாக மாற்றியருளும்.