திருவழிப்பாட்டு ஆண்டு B (25-12-2014)

உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி/> உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி/> உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி/>


திருப்பலி முன்னுரை

இறை இயேசு தரும் அருளில் நிறைவாக வாழ அழைக்கப்பட்ட அன்புச் சகோதர சகோதரிகளே, திருமகன் இயேசு பிறந்த மகிழ்வான இந்நாளில் வழிபாட்டில் பங்கேற்கும் உங்கள் ஒவொருவரையும் அன்புடன் வாழ்த்துவதில் பெருமகிழ்வு அடைகிறேன். நம் மீட்பரும் ஆண்டவருமான இயேசுக் கிறிஸ்துவின் பிறப்பு விழாவைக் கொண்டாட பெருமகிழ்ச்சியுடன் ஒன்று கூடியுள்ளோம்.

மார்கழி பெற்றெடுத்த மனிதநேயம் பூமிக்கு புறப்பட்டு வந்த புண்ணிய நாள்தான் இந்த கிறிஸ்து பிறப்புப் பெருவிழா. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கன்னிமரி வயிற்றில் மனுவுரு எடுத்த இறைவன், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு இன்றும், இந்த மண்ணில் மனுஉரு எடுக்கிறார். மீண்டும் ஒருமுறை மனிதருக்கு போதிக்க, புதுமைகள் புரிய மண்ணகத்தை படைத்தவன், இன்று நம்மிடையே மனிதனாக பிறக்கிறார். அன்று இறைமகன் இயேசுவின் நோக்கம் எதுவாக இருந்ததோ, அதுவே இன்றைய காலகட்டத்திற்கும் பொருந்த கூடியதாக இருக்கிறது. இதைதான் விவிலியத்தில் வானதூதர்களின் வாய்வழியாக “உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக” என்று வாசிக்கிறோம். “அமைதி உருவாக்கம” என்பதுதான் கிறிஸ்து பிறப்பின் மையமாக இருக்கிறது. உள அமைதி தொடங்கி உலக அமைதி வரைக்கும் எல்லாவற்றையும் உள்ளடக்கிய அமைதியை உருவாக்கம் செய்வது தான் கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியாக உள்ளது. ஆகவே அச்சத்தை அகற்றி, அன்பை பெருக்கியும், உறவுகளை உண்டாக்கி, உயிரூட்டியும், எளியோரையும், வலியோரையும், ஏழையையும், பணக்காரரையும், ஆணையும், பெண்ணையும் சக மனிதராக சமமான மனிதராக உறுதி செய்யவும், நச்சு மனங்களை நல்ல மனங்களாக பிறக்கவும் தான் இந்த கிறிஸ்து பிறப்பு பெருவிழா நமக்கு அழைப்பு விடுகிறது. ஆகவே ஆண்டவரின் அருள், அவனியில் அபரிவிதமாக அருளப்படவும், ஆண்டவரின் பிறப்பு அவனியில் அனுகூலமாகவும், இந்த திருப்பலியில் தொடர்ந்து செபிப்போம்.

அல்லது

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள். நம் மீட்பரும் ஆண்டவருமான இயேசுக் கிறிஸ்துவின் பிறப்பு விழாவைக் கொண்டாட பெருமகிழ்ச்சியுடன் ஒன்று கூடியுள்ளோம்.

முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இக்காலத்தில்; தம் மகன் வழியாக நம்மோடு பேசுகின்றார். நாம் செய்த அறச்செயல்களை முன்னிட்டு அல்ல, மாறாகத் தம் இரக்கத்தினால் கடவுள் நம்மை மீட்டார்: ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்: நேர்மையாளருக்கென ஒளியும் நேரிய உள்ளத்தோர்க்கென மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டுள்ளன, என்பது இயேசுவின் பிறப்பு நமக்குத் தரும் உறுதி மொழியாகும். இதுவே நமக்கு பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி. இயேசுவின் பிறப்பு நம் ஒவ்வொருவருக்கும் எண்ணிறைந்த ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகின்றது. விடுதலையும், மகிழ்வும், அமைதியும் அவரது பிறப்பின் வழியாக நாம் பெற்றுக்கொள்ளும் செல்வங்களாகும். இதற்காகவே மீட்பர் இயேசு நமக்காகப் பிறந்துள்ளார். இந்த நற்செய்தி கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோருக்கு நிறைவான மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியாக இருக்கும். இந்த அருள் உண்மைகளை நம் மனத்தில் ஆழமாகப் பதித்தவர்களாக, கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழவும், ஆண்டவருக்குள் மகிழ்ந்திருந்து, அவரை எப்பொழுதும் புகழ்ந்தேத்தவும், நாம் அனைவரும் அமைதியின் தூதர்களாக வாழவும் பணிபுரியவும் வரம் கேட்டுச் செபிப்போம்.

அல்லது

அன்புமிக்க சகோதர, சகோதரிகளே! அமைதியின் அரசர் இயேசுவின் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள். இன்று நாம் அனைவரும் பெரும் மகிழ்வோடும் கிறிஸ்துவே எங்கள் சமாதானம், அவரே எங்கள் விடுதலை என்னும் மாபெரும் நம்பிக்கையோடும் கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாட ஒன்று கூடி நிற்கின்றோம்.

இழப்பின் மத்தியிலும், நம் இருப்பே கேள்விக்குறியாகி, வெறுமையையே உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கும் இந் நிலையிலும் நம் உறவுகளுக்கும், ஏன் நமக்கும் இன்றைய அருள்வாக்கு வழியாக நம் இறைவன் புதியதொரு விடுதலையும், அமைதியும் நீடித்ததுமான வாழ்வை வாக்களிக்கின்றார். படைகளின் ஆண்டவரது பேரார்வம் இதைச் செய்து நிறைவேற்றும் என்னும் மாபெரும் வாக்குறுதி இந்த உண்மையை உறுதிப்படுத்துகின்றது. அதுவே நமக்கு ஆறுதலாகவும் ஆசீர்வாதமாகவும் அமைகின்றது. எனவே நாம் நம்பிக்கையற்று வாழும் நிலையிலிருந்து விடுபட்டு இறைவனில் நம்பிக்கை கொள்ளுவோம். இறையரசின் வீரர்களாக நாம் மாறுவோம், கிறிஸ்துவுக்கே முன்னுரிமை கொடுப்போம். ஏனெனில் ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்: ஓர் ஆண்மகவு நமக்காகக் தரப்பட்டுள்ளார். இந்தச் சிந்தனைகளை ஆழமாக உள்ளத்தில் இருத்தியவர்களாக இறைவனுக்கு நன்றி கூறி விசுவாசத்தோடு இறைவரம் கேட்டுச் செபிப்போம்.



முதல் வாசகம்

மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 52: 7-10

நற்செய்தியை அறிவிக்கவும், நல்வாழ்வைப் பலப்படுத்தவும், நலம்தரும் செய்தியை உரைக்கவும், விடுதலையைப் பறைசாற்றவும், சீயோனை நோக்கி, `உன் கடவுள் அரசாளுகின்றார்' என்று கூறவும் வருவோனின் பாதங்கள் மலைகள்மேல் எத்துணை அழகாய் இருக்கின்றன! இதோ, உன் சாமக் காவலர் குரல் எழுப்புகின்றனர்; அவர்கள் அக்களித்து ஒருங்கே ஆரவாரம் செய்கின்றனர்; ஆண்டவர் சீயோனுக்குத் திரும்பி வருவதை அவர்கள் தம் கண்களாலேயே காண்பர். எருசலேமின் பாழ் இடங்களே, ஒருங்கே ஆர்ப்பரித்துப் பாடுங்கள்; ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்; எருசலேமுக்கு மீட்பு வழங்கியுள்ளார். பிற இனத்தார் அனைவரின் கண்களும் காண ஆண்டவர் தம் தூய புயத்தினைத் திறந்து காட்டியுள்ளார்; மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
திருப்பாடல் 98: 1. 2-3. 3-4. 5-6

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி

2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். 3ய இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். பல்லவி

3உன உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். 4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். பல்லவி

5 யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள். 6 ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள். பல்லவி

இரண்டாம் வாசகம்

கடவுள் தம் மகன் இயேசு வழியாக நம்மிடம் பேசியுள்ளார்
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-6

பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்; இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்; இவர் வழியாக உலகங்களைப் படைத்தார். கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இவர், தம் வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார். மக்களைப் பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்தியபின், விண்ணகத்தில் இவர் பெருமைமிக்க கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். இவ்வாறு இறைமகன் வானதூதரைவிடச் சிறந்ததொரு பெயரை உரிமைப்பேறாகப் பெற்றார். அந்நிலைக்கு ஏற்ப அவர்களை விட இவர் மேன்மை அடைந்தார். ஏனெனில், கடவுள் வானதூதர் எவரிடமாவது �நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்'' என்றும், �நான் அவருக்குத் தந்தையாய் இருப்பேன், அவர் எனக்கு மகனாயிருப்பார்'' என்றும் எப்போதாவது கூறியதுண்டா? மேலும் அவர் தம் முதற்பேறான இவரை உலகிற்கு அனுப்பியபோது, �கடவுளின் தூதர் அனைவரும் அவரை வழிபடுவார்களாக'' என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! புலர்ந்தது நமக்குப் புனித நாள்; பிற இனத்தாரே, வருவீர், இறைவன் மலரடி தொழுவீர்; ஏனெனில் உலகின்மீது எழுந்தது பேரொளி இன்றேஅல்லேலூயா

நற்செய்தி வாசகம்

புனித யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-18

தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது. வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார். அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை. அவரிடம் வாழ்வு இருந்தது; அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது. அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது; இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை. கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்; அவர் பெயர் யோவான். அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக் குறித்துச் சான்று பகர்ந்தார். அவர் அந்த ஒளி அல்ல; மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர். அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது. ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது. ஆனால் உலகு அவரை அறிந்துகொள்ள வில்லை. அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார். அவர்கள் இரத்தத்தினாலோ உடல் இச்சையினாலோ ஆண்மகன் விருப்பத்தினாலோ பிறந்தவர்கள் அல்ல; மாறாகக் கடவுளால் பிறந்தவர்கள். வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார். யோவான் அவரைக் குறித்து, �எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில், எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன்'' என உரத்த குரலில் சான்று பகர்ந்தார். இவரது நிறைவிலிருந்து நாம் யாவரும் நிறைவாக அருள் பெற்றுள்ளோம். திருச்சட்டம் மோசே வழியாகக் கொடுக்கப்பட்டது; அருளும் உண்மையும் இயேசு கிறிஸ்து வழியாய் வெளிப்பட்டன. கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை; தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள்தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

இறைவாக்கினரைத் தேர்ந்தெடுத்து அனுப்பும் தந்தையே இறைவா!

நீர் இவ்வுலகில் எமக்கு இறைவாக்குரைத்துப் பணிசெய்யத் தந்திருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரும் திருமுழுக்கு யோவானைப் போல வலிமையும், சக்தியும், மாற்றமும் மனப்பக்குவமும் பெற்று, இறைமக்களை மனமாற்றத்திற்கு இட்டுச் செல்லும் பணியை இக்காலத்தில் சிறப்பாக முன்னெடுத்துச் செல்லுவதற்கு வேண்டிய ஞான ஒளியை அவர்களுக்கு அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அரும்பெரும் செயல்கள்; புரியும் வல்லவராம் தந்தையே இறைவா!

நீர் எமக்கு கொடுத்துள்ள எல்லா வளங்களுக்காகவும் உமக்கு நன்றி கூறுகின்றோம். இம் மகிழ்வின் காலத்தில் அவற்றை நாம் விரயமாக்காது, தேவையற்ற, ஆடம்பரப் பொருட்களுக்காகச் செலவிடாது பெறுப்புணர்வோடு அவைகளைப் பயன்படுத்துவதற்கும், ஏழைகளோடு அவற்றைப் பகிர்ந்து வாழ்வதற்கும் வேன்டிய நல்லுள்ளத்தை எமக்குத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

என்றென்றும் பேரன்பை நிலையாகக் கொண்டுள்ள தந்தையே!

இந்நாட்களிலே எமக்கு நீர் பல்வேறு விதமாக வெளிப்படுத்தும் உமது செய்தியையும், விருப்பத்தையும், சித்தத்தையும் நாம் சரியான விதத்திலே புரிந்துகொண்டு உம்மோடும், எம் உறவுகளோடும் ஒப்புரவாகி, மனமாற்றமடைந்து உமது விருப்பப்படி நடக்க வேண்டிய ஞானத்தை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்புத் தந்தையே இறைவா!

நீர் எமக்குக் கொடுத்துள்ள மக்கள் செல்வங்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். இவர்கள் உம்மையே தேடி நேசிப்பதிலும், உமது வார்த்தைக்கு ஆர்வத்துடன் செவிமடுத்து வாழுவதிலும் தங்கள் கவனத்தைச் செலுத்தவும்: எமது பிள்ளைகள் இறையுறவிலும், ஒழுக்கத்திலும், ஞானத்திலும், கல்வியிலும் சிறந்து விளங்கி உமக்குகந்த பிள்ளைகளாக வாழவும், செயற்படவும் அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சிய+ட்டும் நற்செய்தியை வழங்கும் தந்தையே!

இன்று இத்திருப்பலியில் பங்குகொள்ளமுடியாமல் நோயுற்றிருப்போர், சிறைகளிலும், வதைமுகாம்களிலும் இருப்போர், அகதிகள் முகாம்களில் இருப்போர், பல்வேறு வேலைத்தளங்களில் பணியாற்றுவோர், பயணம் செய்வோர் அனைவர் மீதும் மனமிரங்கி, அவர்களும் இன்றைய நாளின் மகிழ்வையும், ஆசீரையும் பெற்று மகிழச் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இன்றைய சிந்தனை

''வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்'' (யோவான் 1:14)

கடவுள் மனிதரிடமிருந்து வேறுபட்டவர் என்றும் மனிதரை விட்டு வெகு தொலையில் வாழ்பவர் என்றும் சிலர் உருவகிப்பதுண்டு. கிறிஸ்தவக் கண்ணோட்டத்தில் கடவுள் மனிதரை விட்டு அகன்று நிற்பவர் அல்ல. மனிதரைப் படைத்தவர் கடவுள் என்பதால் அவர் நம்மோடு நெருங்கிய விதத்தில் இணைந்துள்ளார். ஆனால், கடவுள் அதைவிடவும் மேலாகத் தம்மை மனிதரோடு ஒன்றித்திட விரும்பினார். கடவுளே மனிதராக மாறிட விழைந்தார். இதை நாம் ஒரு மறைபொருள் என அழைக்கிறோம். இதன் முழுப் பொருளும் நமக்கு ஒருநாளும் தெளிவாகாது என்றாலும் கடவுள் மனிதராக மாறிய உண்மையை விவிலியம் தெளிவாக எடுத்துரைக்கிறது. குறிப்பாக யோவான் நற்செய்தி இதை உணர்த்துகிறது. கடவுளோடு எக்காலத்திலும் இணைந்திருந்த வாக்கு காலம் நிறைவேறியபோது மனிதராக மாறினார் என்பது நமக்கு மகிழ்ச்சி தரும் செய்தி. நம்மைத் தேடிவந்த கடவுளை நாம் அடையாளம் காண வேண்டும். மனிதர் ஆன வாக்கு ''நம்மிடையே குடிகொண்டார்'' என்பதால் அவருடைய உடனிருப்பு ஒரு தொடர் நிகழ்வாகிறது.

கடவுள் நம்மிடையே குடிகொண்டிருக்கின்ற உண்மையிலிருந்து சில முக்கிய விளைவுகள் பிறக்கின்றன. கடவுளை விட்டு மனிதர் அகன்றிருப்பதில்லை என்பதால் அந்த உடனிருப்பை நாம் உள்ளத்தின் ஆழத்தில் உணர்ந்திட வேண்டும். அந்த உணர்வோடு நம் செயலும் ஒருங்கிணைந்து சென்றால் கடவுளின் விருப்பம் நமது விருப்பமாக மாறும். அப்போது நமது செயலும் விருப்பும் ஒன்றாக இணைந்த விதத்தில் நம் வாழ்வும் பொருள்பொதிந்ததாக உருப்பெறும். மனிதரான கடவுள் தம்மை ஒவ்வொரு மனிதரோடும் இணைத்துக்கொண்ட உண்மை நம்மை வழிநடத்த வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் உடனிருப்பை எங்கள் உள்ளத்தில் உணர்ந்திட அருள்தாரும்.