யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
திருவருகைக்காலம் 2வது வாரம் வியாழக்கிழமை
2014-12-04

புனித யோவான் தமசேன்




முதல் வாசகம்

மெசியாமீது நம்பிக்கை கொண்ட நேர்மையான மக்களினம் உள்ளே வரட்டும்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 26: 1-6

நமக்கொரு வலிமைமிகு நகர் உண்டு; நம்மைக் காக்க அவர் கொத்தளங்களை அமைத்துள்ளார்; வாயில்களைத் திறந்துவிடுங்கள்; அவர்மீது நம்பிக்கை கொண்ட நேர்மையான மக்களினம் உள்ளே வரட்டும். அவர்கள் மன உறுதி கொண்டவர்கள்; உம்மீது நம்பிக்கை உடையவர்கள்; அவர்களை அமைதியால் நீர் உறுதிப்படுத்துகின்றீர். ஆண்டவர்மீது என்றென்றும் நம்பிக்கை கொள்ளுங்கள்; ஏனெனில், ஆண்டவர், என் ஆண்டவர், என்றும் உள்ள கற்பாறை! உயரத்தில் வாழ்வோரை அவர் தாழ்த்துகின்றார்; வானுற உயர்ந்த நகரைத் தகர்க்கின்றார்; அதைத் தரைமட்டமாக்கி, புழுதியோடு புழுதியாக, மண்ணோடு மண்ணாகச் செய்கின்றார். எளியோரின் காலடிகளும் ஏழைகளின் பாதங்களும் அதை மிதிக்கும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்.
திருப்பாடல் 118: 1,8-9. 19-21. 25-27

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. 8 மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்! 9 உயர் குடியினர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் அடைக்கலம் புகுவதே நலம்! பல்லவி

19 நீதிமான்கள் செல்லும் வாயில்களை எனக்குத் திறந்துவிடுங்கள்; அவற்றினுள் நுழைந்து நான் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன். 20 ஆண்டவரது வாயில் இதுவே! இது வழியாய் நீதிமான்களே நுழைவர். 21 என் மன்றாட்டை நீர் கேட்டதால், எனக்கு நீர் வெற்றி அளித்ததால், உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன். பல்லவி

25 ஆண்டவரே! மீட்டருளும்! ஆண்டவரே! வெற்றிதாரும்! 26 ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம். 27ய ஆண்டவரே இறைவன்; அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்; அவர் அண்மையில் இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுங்கள். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 21,24-27

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: �என்னை நோக்கி, `ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர். ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது. நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''என்னை நோக்கி, 'ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்'' (மத்தேயு 7:21)

நம் வாயிலிருந்து வெளிப்படுகின்ற வார்த்தைகளுக்கும் நாம் உண்மையாகவே புரிகின்ற செயல்களுக்கும் இடையே பெரிய வேறுபாடு உண்டு. பெரிய சாதனைகளைச் செய்யப் போவதாகச் சொல்வோர் எல்லாம் பெரிய காரியங்களைச் சாதிப்பதுமில்லை, புகழ் பெறுவதும் இல்லை. தாம் செய்யப்போவதாகக் கூறுபவற்றைச் செய்யாமல் வெறும் வாய்ச்சொல் வீரர்களாகவே நின்றுவிடுவோரை நாம் பார்த்திருக்கிறோம். எது நல்லது என நம் உள்ளத்தின் ஆழத்தில் உணர்கின்றோமோ அதைச் செய்வதும் அந்த உறுதிப்பாட்டின் அடிப்படையில் செயல்படுவதும் மனிதருக்கு அழகு. இதையே இயேசு நமக்கு நினைவுபடுத்துகிறார். இயேசு கடவுளின் முழு வெளிப்பாடாக நம்மிடையே வந்தார். அவரை நாம் ''ஆண்டவர்'' என ஏற்கிறோம். ஆனால் இயேசு நம் ஆண்டவர் என்றால் அவர் எந்த விழுமியங்களுக்காக வாழ்ந்தாரோ, எந்த மதிப்பீடுகளுக்காக இறந்தாரோ அந்த விழுமியங்களையும் மதிப்பீடுகளையும் நம் வாழ்வில் எதார்த்தமாக்கிட நாம் முன்வரவேண்டும். இயேசு தம் தந்தைக் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் முனைந்து செயல்பட்டார். அதுபோல நாமும் செயல்படவேண்டும்.

இறையாட்சியில் பங்கேற்க விரும்புவோர் வெறும் வாய்ச்சொல் வீரராக மட்டுமே இருந்தால் போதாது. நம் சொல்லும் செயலும் இயேசுவின் மதிப்பீடுகளுக்கு இசைய அமையும்போது நாம் உண்மையிலேயே கடவுளின் விருப்பப்படி நடக்கின்றோம் எனலாம். அன்றாட வாழ்வில் நாம் மொழியைப் பயன்படுத்தி நம் உறவுகளை வெளிப்படுத்துகின்றோம். அதுபோலவே, கடவுளோடு நமக்குள்ள உறவை வெளிப்படுத்தவும் நாம் மொழியைக் கையாளுகின்றோம். மொழி என்பது நம் நாவிலிருந்து உதிர்கின்ற சொல் மட்டுமல்ல. வாய்ச்சொல்லாக வடிவெடுக்கும் முன்னரே மொழி என்பது நம் உள்ளத்தில் உருவெடுக்கின்றது. உள்ளத்தில் எழுகின்ற நல்ல சிந்தனைகளை நம் மொழி எதிரொளிக்க வேண்டும்; அச்சிந்தனைகளின் குரலை எதிரொலிக்க வேண்டும். அப்போது நம் சொல்லும் நல்லதாக இருக்கும், அச்சொல்லில் அடங்கிய பொருளும் வெளியே துலங்கும். நம் சொல்லுக்குப் பொருந்துகின்ற விதத்தில் நம் செயலும் அமைந்தால் அதுவே நம் ஆழ்ந்த மனிதப் பண்பை வெளிப்படுத்துகின்ற ஒளியாக மாறும். எனவே, நம் தலைவரும் வழிகாட்டியுமாகிய இயேசுவை நோக்கி, ''ஆண்டவரே, ஆண்டவரே'' என்று சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், ''நம் விண்ணகத் தந்தையின் திருவுளப்படி செயல்பட'' நாம் முனைந்திட வேண்டும். அப்போது ''விண்ணரசில் புகுந்திடும்'' பேறு நமக்கு வழங்கப்படும்.

மன்றாட்டு:

இறைவா, உம்மை நோக்கிக் குரலெழுப்புகின்ற நாங்கள் உம் விருப்பத்தைச் செயல்படுத்த அருள்தாரும்.