யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 33வது வாரம் செவ்வாய்க்கிழமை
2014-11-18

திருத்தூதர்கள் பேதுரு, பவுல் பேராலயங்களின் நேர்ந்தளிப்பு




முதல் வாசகம்

மனம் மாறு: நீ விழிப்பாயிரு.
திருவெளிப்பாடு3;1-6 14-22

யோவான் என்னும் எனக்கு ஆண்டவா. கூறியது1 சர்தையில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது: 'கடவுளுடைய ஏழு ஆவிகளையும் ஏழு விண்மீன்களையும் கொண்டிருப்பவர் கூறுவது இதுவே: உன் செயல்களை நான் அறிவேன். நீ பெயரளவில்தான் உயிரோடிருக்கிறாய்: உண்மையில் இறந்துவிட்டாய்.2 எனவே விழிப்பாயிரு. உன்னில் எஞ்சியிருப்பதை உறுதிப்படுத்து. அது இறக்கும் தறுவாயில் உள்ளது. என் கடவுள் திருமுன் உன் செயல்கள் நிறைவற்றவையாய் இருக்கக் கண்டேன்.3 நீ கற்றதையும் கேட்டதையும் நினைவில் கொள்: அவற்றைக் கடைப்பிடி: மனம் மாறு: நீ விழிப்பாயிரு. இல்லையேல் நான் திருடனைப் போல வருவேன். நான் எந்த நேரத்தில் உன்னிடம் வருவேன் என்பதை நீ அறியாய்.4 ஆயினும், தங்கள் ஆடைகளைக் கறைப்படுத்திக்கொள்ளாத சிலர் சர்தையில் உள்ளனர். அவர்கள் வெண்ணாடை அணிந்து என்னுடன் நடந்து வருவார்கள். அவர்கள் அதற்குத் தகுதி பெற்றவர்களே.5 வெற்றிபெற்றோர் இவ்வாறு வெண்ணாடை அணிவிக்கப்பெறுவர். வாழ்வின் நூலிலிருந்து அவர்களின் பெயர்களை நீக்கிவிட மாட்டேன். மாறாக, என் தந்தை முன்னிலையிலும் அவருடைய வானதூதர்கள் முன்னிலையிலும் அவர்களின் பெயர்களை அறிக்கையிடுவேன்.6 கேட்கச் செவி உடையோர் திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும்.' இலவோதிக்கேயாவில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது: 'ஆமென் எனப்படுபவரும் நம்பிக்கைக்குரிய, உண்மையான சாட்சியும் கடவுளது படைப்பின் தொடக்கமும் ஆனவர் கூறுவது இதுவே:15 உன் செயல்களை நான் அறிவேன். நீ குளிர்ச்சியாகவும் இல்லை, சூடாகவும் இல்லை. குளிர்ச்சியாகவோ சூடாகவோ இருந்திருந்தால் எத்துணை நலமாய் இருந்திருக்கும்.16 இவ்வாறு நீ குளிர்ச்சியாகவோ சூடாகவோ இல்லாமல் வெதுவெதுப்பாய் இருப்பதால் என் வாயிலிருந்து உன்னைக் கக்கிவிடுவேன்.17 எனக்குச் செல்வம் உண்டு, வளமை உண்டு, ஒரு குறையும் இல்லை என நீ சொல்லிக்கொள்ளுகிறாய். ஆனால், நீ இழிந்த, இரங்கத்தக்க, வறிய, பார்வையற்ற, ஆடையற்ற நிலையில் இருக்கிறாய் என்பது உனக்குத் தெரியவில்லை.18 ஆகவே, நீ செல்வம் பெறும்பொருட்டு புடம்போட்ட பொன்னையும், ஆடையின்றி வெட்கி நிற்கும் உன் நிலையைப் பிறர் காணாதபடி அணிந்துகொள்ள வெண்ணாடையையும், நீ பார்வை பெறும்பொருட்டு உன் கண்களில் தடவிக்கொள்ள மருந்தையும் என்னிடமிருந்து விலைக்கு வாங்கிக் கொள்ளுமாறு உனக்கு அறிவுரை வழங்குகிறேன்.19 நான் யார் மீது அன்பு செலுத்துகிறேனோ அவர்களைக் கடிந்து தண்டித்துத் திருத்துகிறேன். ஆகவே நீ ஆர்வம் கொண்டு மனம் மாறு.20 இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்: அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள்.21 நான் வெற்றி பெற்று என் தந்தையின் அரியணையில் அவரோடு வீற்றிருப்பது போல, வெற்றி பெறும் எவருக்குமே எனது அரியணையில் என்னோடு வீற்றிருக்கும் உரிமை அளிப்பேன்.22 கேட்கச் செவி உடையோர், திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும்.'

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர்;
திருப்பாடல்15;2-5

2 மாசற்றவராய் நடப்போரே! - இன்னோர் நேரியவற்றைச் செய்வர்; உளமார உண்மை பேசுபவர்;3 தம் நாவினால் புறங்கூறார்; தம் தோழருக்குத் தீங்கிழையார்; தம் அடுத்தவரைப் பழித்துரையார் பல்லவி

.4 நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர்; தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறார் பல்லவி

;5 தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்; - இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! சக்கேயு, விரைவாய் இறங்கிவாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும் ' அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

புனித லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்19;1-10

1 இயேசு எரிகோவுக்குச் சென்று அந்நகர் வழியே போய்க் கொண்டிருந்தார்.2 அங்கு சக்கேயு என்னும் பெயருடைய செல்வர் ஒருவர் இருந்தார். அவர் வரிதண்டுவோருக்குத் தலைவர்.3 இயேசு யார் என்று அவர் பார்க்க விரும்பினார்; மக்கள் திரளாய்க் கூடியிருந்தால் அவரைப் பார்க்க முடியவில்லை. ஏனெனில், சக்கேயு குட்டையாய் இருந்தார்.4 அவர் முன்னே ஓடிப்போய், அவரைப் பார்ப்பதற்காக ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏறிக் கொண்டார். இயேசு அவ்வழியேதான் வரவிருந்தார்.5 இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன், அண்ணாந்து பார்த்து அவரிடம், ' சக்கேயு, விரைவாய் இறங்கிவாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும் ' என்றார்.6 அவர் விரைவாய் இறங்கி வந்து மகிழ்ச்சியோடு அவரை வரவேற்றார்.7 இதைக் கண்ட யாவரும், ' பாவியிடம் தங்கப்போயிருக்கிறாரே இவர் ' என்று முணுமுணுத்தனர்.8 சக்கேயு எழுந்து நின்று, ' ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன் ' என்று அவரிடம் கூறினார்.9 இயேசு அவரை நோக்கி, ' இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே!10 இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார் ' என்று சொன்னார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''பேதுருவும் படகிலிருந்து இறங்கி இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார். அப்பொழுது பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞசி அவர் மூழ்கும்போது, 'ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்' என்று கத்தினானார்'' (மத்தேயு 14:29-30)

இயேசு இயற்கை சக்திகளையும் அடக்குகின்ற வல்லமை கொண்டவர் என்பதை மத்தேயு ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தார் (மத் 8:23-27). திடீரெனக் கடலில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு அலைகள் படகைக் கவிழ்க்கவிருந்த வேளையில் இயேசு காற்றையும் கடலையும் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தார். பின்னர் ஒரு சில அப்பங்களையும் மீனையும் கொண்டு ஆயிரக் கணக்கான மக்களுக்கு உணவளித்தார் (மத் 14:13-21). இந்நிகழ்ச்சிகளுக்குப் பிறகு இயேசு கடல்மீது நடந்து சென்ற அதிசயத்தை மத்தேயு குறிப்பிடுகிறார் (மத் 14:22-33). மாற்குவில் வரும் பாடத்திற்கும் மத்தேயுவின் பாடத்திற்கும் இடையே உள்ள ஒரு பெரிய வேறுபாடு பேதுரு கடலில் நடக்கும் நிகழ்ச்சியாகும். மத்தேயு பொதுவாக இயேசுவின் சீடர்கள் ''நம்பிக்கை குறைந்தவர்கள்'' எனக் குறிப்பிடுவார். இங்கேயும் பேதுரு நம்பிக்கை குறைந்தவராக நடப்பதைக் காண்கிறோம். அதே நேரத்தில் பேதுரு துணிச்சல் மிக்கவர் கூட. கடலில் நடந்துசெல்ல இயேசு அனுமதி தர வேண்டும் எனக் கேட்கின்ற மன உறுதி அவரிடம் இருந்தது. ஆனால் அவர் தம்மை முழுவதுமாக இயேசுவிடம் கையளிக்கவில்லை. அதாவது, அவர் இயேசிடம் கொண்ட நம்பிக்கை ''குறைவுள்ளதாக'' இருந்தது. இந்த நம்பிக்கைக் குறைவின் காரணமாகப் பேதுரு கடலில் மூழ்கப் போனார். அவ்வாறு மூழ்கிக் கொண்டிருக்கும்போதே அவருடைய இதய ஆழத்திலிருந்து எழுகிறது ஒரு மன்றாட்டு: ''ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்'' என்பதே அம்மன்றாட்டு (மத் 14:30). இங்கே நாம் கருதத்தக்க கூறுகள் பல உண்டு. முதலில் பேதுருவின் கதை அவருடைய சொந்த வாழ்வில் நிகழ்ந்த ஒரு தனியார் சார்ந்த நிகழ்வு மட்டுமல்ல. பேதுரு இயேசுவின் சீடர்களின் பிரதிநிதியாக இவண் வருகின்றார். அவருடைய நம்பிக்கைக் குறைவு இயேசுவின் சீடர்களாகிய நம்மில் சில வேளைகளில் எழுகின்ற நம்பிக்கைக் குறைவைக் காட்டுகிறது. நாமும் இயேசுவிடத்தில் முழு நம்பிக்கை கொள்ளாத வேளைகளில் ஆபத்து நம்மை மூழ்கடிக்க முயல்வதுண்டு; துன்பங்கள் எழுந்து நம்மை அமிழ்த்திவிட முனைவதுண்டு. அந்த இக்கட்டான சூழ்நிலைகளிலும் நாம் நம்பிக்கை இழக்காமல் கடவுளை நோக்கி உதவி நாடி நம் மன்றாட்டை எழுப்பிட வேண்டும். பேதுரு இயேசுவை ''ஆண்டவர்'' என அழைத்தது இயேசுவிடத்தில் அவர் கடவுளின் வல்லமை வெளிப்பட்டதைக் கண்டார் என்பதைக் காட்டுகிறது.

தம்மை நோக்கிக் கூக்குரல் எழுப்பிய பேதுருவை இயேசு ''உடனே தம் கையை நீட்டிப் பிடிக்கிறார்'' (காண்க: மத் 14:31). நோயாளிகளைத் தொட்டுக் குணமாக்கிய இயேசுவின் செயல் இது. இங்கே இயேசு பேதுருவின் நம்பிக்கையின்மையை ஒருவிதத்தில் ''குணப்படுத்துகிறார்''. ஆனால் நலம் கொணர்கின்ற இயேசு நமக்கு மீட்பு அளிக்கிறார் என்பதே இங்கே நாம் காண்கின்ற ஆழ்ந்த உண்மை. நம் உள்ளத்தில் ஐயம் எழுகின்ற வேளைகளில் நாம் நம்பிக்கையோடு கடவுளையும் அவர் நம்மை மீட்க அனுப்பிய இயேசுவையும் அணுகிச் சென்றால் தூய ஆவியின் அருளால் நமது நம்பிக்கை மீண்டும் உறுதியாகும். நாமும் நலம் பெற்று மீட்பில் பங்கேற்போம்.

மன்றாட்டு:

இறைவா, துன்பங்கள் எழுந்து எங்களை அழுத்துகின்ற வேளைகளில் எங்களைக் கைதூக்கி விடுபவர் நீரே என நாங்கள் உணர்ந்து வாழ்ந்திட அருள்தாரும்.