பொதுக்காலத்தின் 33ஆம் ஞாயிறு


திருவழிப்பாட்டு ஆண்டு A (16-11-2014)

உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும்...
இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்/> உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும்...
இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்/> உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும்...
இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்/> உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும்...
இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்/> உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும்...
இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்/> உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும்...
இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்/> உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும்...
இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்/>


திருப்பலி முன்னுரை

ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள். இன்று பொதுக் காலம் முப்பத்தி மூன்றாம் ஞாயிறு. நமக்கு ஆசி வழங்கி, நல் வாழ்வைக் காணும்படி செய்யும் நம் தந்தையாம் இறைவனின் திருப்பாதத்தில் ஒரே குடும்பமாக ஒன்று கூடியுள்ளோம்.

இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் கொடைகளையும், ஆற்றல்களையும் பொது நன்மைக்காக வழங்குகின்றார். ஆகவே நாம் அவற்றைச் சரியாகவும், சிறப்பாகவும் பயன்படுத்தி மனிதருக்கு ஆறுதலையும், கடவுளுக்கு மகிமையையும் கொண்டுவரவேண்டுமென்பது இன்றைய இறைவார்த்தைகள் தரும் செய்தியாகின்றது. அத்தோடு நாம் எப்பொழுதும் விவேகத்தோடும், அறிவுத் தெளிவோடும் இருந்து தீமைகளை விலக்கி எப்பொழுதும் கடவுளைச் சந்திக்கத் தயாராய் இருக்கவேண்டும் என்ற சிந்தனையும் நமக்குத் தரப்படுகின்றது. இந்தச் சிந்தனைகளை நாம் நம் மனத்தில் ஆழமாகப் பதித்து, இறைவன் விரும்பும் வாழ்வை நாம் வாழ வரம் கேட்டுச் செபிப்போம்.



முதல் வாசகம்

முதல் வாசக முன்னுரை

நீதிமொழிகள் நூலின் இறுதிப் பகுதியான இன்றைய முதல் வாசகம் சாதாரண வாழ்வைச் சாதனை வாழ்வாக மாற்றுவது எப்படி என்பதை எடுத்துரைக்கிறது. பெண்கள் குடும்பப் பொறுப்பை ஆற்றுவதில் ஞானத்தோடு விளங்கி, பொதுவாழ்வில் பங்கேற்று, கடவுளுக்கு உகந்தவர்களாகவும் சமூகத்திற்கு நலம் பயப்பவர்களாகவும் செயல்பட உரிமையும் கடமையும் கொண்டுள்ளனர் என்னும் உண்மையை இன்றைய முதல் வாசகம் நமக்கு அறிவுறுத்துவதை கேட்போம்.

அவளது உழைப்பை மக்கள் மன்றம் பாராட்டுவதாக.
நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 31: 10-13, 19-20, 30-31

திறமை வாய்ந்த மனத்திடமுள்ள மனையாளைக் காண்பது மிக மிக அரிது; அவள் பவளத்தை விடப் பெருமதிப்புள்ளவள். அவளுடைய கணவன் அவளை மனமார நம்புகிறான்; அவளால் அவனுக்கு நலமும் வளமும் பெருகும். அவள் தன் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு நல்லதையே செய்வாள்; ஒருநாளும் தீங்கு நினையாள். கம்பளி, சணல் ஆகிய பொருள்களைத் தானே தேடிக் கொணர்வாள்; தன் வேலை அனைத்தையும் விருப்புடன் தானே செய்வாள். இராட்டினத்தைத் தானே பிடித்து வேலை செய்வாள்; நூல் இழைகளைத் தன் விரல்களால் திரிப்பாள். எளியவனுக்கு உதவி செய்யத் தன் கையை நீட்டுவாள். வறியவனுக்கு வயிறார உணவளிப்பாள். எழில் ஏமாற்றும், அழகு அற்றுப் போகும்; ஆண்டவரிடம் அச்சம் கொண்டுள்ள பெண்ணே புகழத்தக்கவள். அவளுடைய செயல்களின் நற்பயனை எண்ணி அவளை வாழ்த்துங்கள்; அவளது உழைப்பை மக்கள் மன்றம் பாராட்டுவதாக.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழி நடப்போர் பேறுபெற்றோர்!
திருப்பாடல் 128: 1-2. 3. 4-5

ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! 2 உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! -பல்லவி

3 உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். -பல்லவி

4 ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். 5 ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ்நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! -பல்லவி

இரண்டாம் வாசகம்

இரண்டாம் வாசக முன்னுரை

யாருமே எதிர்பாராத நேரத்தில் கிறிஸ்துவின் வருகை நிகழும் ஆகவே நாம் அவருடைய வருகையை நம்பிக்கையுடன் எதிர்பார்த்து அமைதியாக உழைக்க வேண்டும் என புனித பவுலடியார் கிறிஸ்தவ சமூகமாகிய நம்மை பணிக்கிறார். உலகுக்கு ஒளியாக வந்த கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்ளும் நாம், ஒளியின் மக்களாக நடக்க இன்றைய இரண்டாம் வாசகம் நம்மை அழைப்பதை கேட்போம்

ஆண்டவருடைய நாள் வரும் என்பதை நீங்களே திண்ணமாய்த் தெரிந்திருக்கிறீர்கள்.
திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-6

சகோதரர் சகோதரிகளே, காலங்களையும் நேரங்களையும் குறித்து உங்களுக்கு எழுதத் தேவையில்லை. ஏனெனில் திருடன் இரவில் வருவது போல, ஆண்டவருடைய நாள் வரும் என்பதை நீங்களே திண்ணமாய்த் தெரிந்திருக்கிறீர்கள். `எங்கும் அமைதி, ஆபத்து இல்லை' என்று மக்கள் கூறிக்கொண்டிருக்கும் பொழுது, கருவுற்றிருப்பவருக்கு வேதனை வருவது போல, திடீரென அவர்களுக்கு அழிவு வரும்; யாரும் தப்பித்துக்கொள்ள இயலாது. ஆனால் அன்பர்களே! நீங்கள் இருளில் நடப்பவர்களல்ல; ஆகவே அந்த நாள் திருடனைப் போல் உங்களுக்கு வராது. நீங்கள் எல்லாரும் ஒளியைச் சார்ந்தவர்கள்; பகலில் நடப்பவர்கள். நாம் இரவையோ இருளையோ சார்ந்தவரல்ல. ஆகவே மற்றவர்களைப் போல் நாமும் உறங்கலாகாது; விழிப்போடும் அறிவுத் தெளிவோடும் இருப்போம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 14-30

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறிய உவமை: விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்: நெடும் பயணம் செல்ல இருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார். அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும், இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து வேறு ஐந்து தாலந்து ஈட்டினார். அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார். ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார். நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார். ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி, வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து, `ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன்' என்றார். அதற்கு அவருடைய தலைவர் அவரிடம், `நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன், உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்' என்றார். இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி, `ஐயா, நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன்' என்றார். அவருடைய தலைவர் அவரிடம், `நன்று. நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்' என்றார். ஒரு தாலந்தைப் பெற்றுக்கொண்டவரும் அவரை அணுகி, `ஐயா, நீர் கடின உள்ளத்தினர்; நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்; நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன். உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது' என்றார். அதற்கு அவருடைய தலைவர், `சோம்பேறியே! பொல்லாத பணியாளனே, நான் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன். நான் தூவாத இடத்திலும் போய்ச் சேகரிப்பவன் என்பது உனக்குத் தெரிந்திருந்தது அல்லவா? அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் வரும்போது எனக்கு வரவேண்டியதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன்' என்று கூறினார். `எனவே அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்து பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள். ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும். பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்' என்று அவர் கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


ஆண்டவரே என் ஆயர்: எனக்கேதும் குறையில்லை;!

பதில்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

கொடைகளை வாரி வழங்கும் ஆண்டவரே!

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம்: அவர்கள் ஒவ்வொருவரும் உமக்கு அஞ்சி உமது வழிகளில் நடக்கவும், அவர்களுக்கு நீர் கொடுத்த கொடைகளையும், ஆற்றல்களையும் சிறப்பாகவும் பயன்படுத்தி மனிதருக்கு ஆறுதலையும், உமக்கு மகிமையையும் கொண்டுவர வேண்டிய மனப்பக்குவத்தை அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நீதியின் இறைவா,

எம் நாட்டை ஆண்டு இறந்த தலைவர்கள், பொதுமக்கள், தியாகிகள் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். உயிர்தெழுதலும், வாழ்வும் நானே என்னிடம் நம்பிக்கை கொள்வோர் இறப்பிலும் வாழ்வார் என்ற உம்வார்த்தையில் நம்பிக்கைகொண்டு இறந்த அனைவரின் பாவங்களை போக்கி அவர்களை உம் வானக வீட்டில் சேர்த்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

சீயோனிலிருந்து எமக்கு ஆசி வழங்கும் தந்தையே!

உம்முடைய பிள்ளைகளாகிய நாங்கள், உமக்கு அஞ்சி உமது வழிகளில் நடக்கவும், எங்களுக்கு நீர் கொடுத்த கொடைகளையும், ஆற்றல்களையும் சிறப்பாகவும், சரியாகவும், பயன்படுத்தி மனிதருக்கு ஆறுதலையும், உமக்கு மகிமையையும் கொண்டுவர வேண்டிய ஆற்றலை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நல்வாழ்வைக் காணும்படி செய்யும் தந்தையே!

குடும்ப அமைதி, உடல் நலம், வதிவிட அனுமதி, விடுதலை வாழ்வு, குழந்தைப்பேறு அகியவற்றிற்காக ஏங்கித் தவிக்கும் அனைவர் மீதும் கருணைகூந்து அவர்களின் ஏக்கத்தைப் போக்கி, அவர்களின் தேவைகளை நிறைவு செய்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்பின் இறைவா,

உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார் என்பதிற்கினங்க உம்மீது நம்பிக்கை கொண்டு வாழ்ந்து இறந்த ஆன்மாக்கள் அனைத்தும் தங்களுடைய பாவங்களினால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்தாலும் அவர்களை நிறைவாக ஆசிர்வதித்து உம் வானக வீட்டில் சேர்த்தருள வேண்டுமென்றும்; யாரும் நினையாத ஆன்மாக்களுக்காக சிறப்பாக மன்றாடுகிறோம். அவர்கள் தாங்கள் செய்த பாவங்களினால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்தாலும் அவர்கள் வேதனை குறைந்து உம் தெய்வீக விருந்தில் பங்குபெற அவர்களை ஆசிர்வதித்து உம்மிடம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

கருணையும் இரக்கமும் நிறைந்த தந்தையே!

நோயினால் வாடுவோர், தனிமையில் இருப்போர், கவலையினாலும் துன்பங்களினாலும் கலங்குவோர், தேவையில் உழல்வோர், அடிமைத்தனத்துள் வாழ்வோர் அனைவரையும் உமது கருணையினாலும், இரக்கத்தினாலும் நிறைத்து அவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும், நிம்மதியையும் அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

தூயவரான அன்புத் தந்தையே இறைவா!

இன்று எமது சமூகத்திலே வீணான விவாதங்களாலும், குழப்பங்களாலும், தவறான போதனைகளாலும், பிடிவாதத்தாலும், உறவை முறித்து, விசுவாசத்தை மறந்து பாதை மாறிச் செல்லும் அனைவர்மீதும் மனமிரங்கி உமது வழியில் செல்ல அவர்களை வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அனைவரையும் உயிர்த்தெழச் செய்யும் அன்புத் தந்தையே இறைவா!

எமது நாட்டில் ஏற்பட்ட போரில் இறந்து போன அனைவருக்கும் நித்திய இளைப்பாற்றியை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நீர் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டும் தந்தையே இறைவா!

எமது இளைஞர்களை நிறைவாக ஆசீர்வதியும். அவர்களது இளமைப் பருவத்தின் பாவங்களையும், குற்றங்களையும் நினையாது உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் அவர்கள் மேல் பொழிந்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இன்றைய சிந்தனை

வாழ்வது ஒருமுறை, வாழ்த்தட்டும் தலைமுறை

ஒரு தாலந்து என்பது வெள்ளி நாணய அடிப்படையில் ஒரு தொழிலாளியின் 15 வருட கூலிக்கு சமம். முதல் இரண்டு நபரும் தலைவர் கொடுத்த தாலந்தை வைத்து இன்னும் அதிகமாக சம்பாதிக்க முயற்சி எடுக்கிறார்கள். தலைவர் அந்த முயற்சியை பாராட்டுகிறார். ஒருவேளை அவர்கள் அதில் நஷ்டம் அடைந்திருந்தாலும், தலைவர் அவர்களின் முயற்சியை நிச்சயமாகப்பாராட்டியிருப்பார். தலைவர் கோபப்படுவது மூன்றாவது ஊழியரை. அதற்கு காரணம் அவரின் முயற்சியின்மை, சோம்பேறித்தனம்.

கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் வாழ்வு என்னும் கொடையைத் தந்திருக்கிறார். இந்த வாழ்வில் நமக்கென்று குறைகள் இருக்கலாம், நமக்கென்று பலவீனங்கள் இருக்கலாம். ஆனால், அந்த வாழ்வை எந்த அளவுக்கு முயற்சி எடுத்து நாமும் பயன்பெற்று, மற்றவர்களின் வாழ்விலும் ஒளியேற்றுகிறோம் என்பதுதான் கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது. நான் குறையுள்ளவன், எத்தனைமுறை முயன்றாலும், நான் வெற்றி பெற மாட்டேன் என்கிற முயற்சியின்மையை தலைவர் வெறுக்க மட்டும் செய்யவில்லை. அவனுக்கு தண்டனையும் கொடுக்கிறார்.

கடவுள் நமக்கு கொடுத்திருக்கிற கொடை மூலமாக எவ்வளவோ நல்ல காரியங்களைச் செய்ய முடியும். இருளில் வாழ்கிற மக்களின் வாழ்வில் ஒளியேற்ற முடியும். இதை சாதித்திருக்கிறவர்களின் மாதிரியைப்பின்பற்றி, நாமும் வாழ்வை நல்ல முறையில் வாழ்வோம்.

மன்றாட்டு:

இறைவல்லமையும், ஞானமுமான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்கள்; வாழ்வில் நாங்கள் சந்திக்கும் சிலுவைகளை உமது வல்லமையாக, ஞானமாக ஏற்றுக்கொள்ளும் அருளைத் தந்தருளும்.