யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 32வது வாரம் வெள்ளிக்கிழமை
2014-11-14




முதல் வாசகம்

போதனையில் நிலைத்திருப்போரிடமே தந்தையும் மகனும் இருக்கிறார்கள்.
திருத்தூதர் யோவான் எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4-9

தேர்தெடுக்கப்பட்ட பெருமாட்டியே, தந்தையிடமிருந்து நாம் பெற்ற கட்டளைப்படி, உம்முடைய பிள்ளைகளுள் சிலர் உண்மைக்கேற்ப நடப்பது கண்டு நான் பெருமகிழ்ச்சியுற்றேன். பெருமாட்டியே, நான் இப்பொழுது உம்மிடம் கேட்டுக்கொள்வது இதுவே: ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோம். இதை நான் ஒரு புதிய கட்டளையாக எழுதவில்லை. இது தொடக்கத்திலிருந்தே நமக்குள்ள கட்டளை. நாம் அவருடைய கட்டளைப்படி வாழ்வதில் அன்பு அடங்கியுள்ளது. அந்தக் கட்டளை நீங்கள் தொடக்கத்திலிருந்து கேட்டறிந்ததுதான்; அதைக் கடைப்பிடித்து வாழுங்கள். ஏனெனில் ஏமாற்றுவோர் பலர் உலகில் தோன்றியுள்ளனர். இயேசு கிறிஸ்து மனிதராக வந்தவர் என்னும் உண்மையை இவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இவர்களே ஏமாற்றுவோர், எதிர்க் கிறிஸ்துகள். உங்கள் உழைப்பின் பயனை இழந்துவிடாமல் முழுக் கைம்மாறு பெற்றுக்கொள்ளக் கவனமாயிருங்கள். கிறிஸ்துவின் போதனையில் நிலைத்திராமல் வரம்பு மீறிச் செல்வோர் கடவுளைக் கொண்டிருப்பதில்லை. அவர் போதனையில் நிலைத்திருப் போரிடமே தந்தையும் மகனும் இருக்கிறார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.
திருப்பாடல் 119: 1,2. 10,11. 17,18 (

1 மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர். 2 அவர் தந்த ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்; முழுமனத்தோடு அவரைத் தேடுவோர் பேறுபெற்றோர். பல்லவி

10 முழுமனத்தோடு நான் உம்மைத் தேடுகின்றேன்; உம் கட்டளைகளை விட்டு என்னை விலக விடாதேயும். 11 உமக்கெதிராய் நான் பாவம் செய்யாதவாறு உமது வாக்கை என் இதயத்தில் இருத்தியுள்ளேன். பல்லவி

17 உம் அடியானுக்கு நன்மை செய்யும்; அப்பொழுது, நான் உம் சொற்களைக் கடைப்பிடித்து வாழ்வேன். 18 உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை நான் கண்டுணருமாறு என் கண்களைத் திறந்தருளும். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 26-37

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: ``நோவாவின் காலத்தில் நடந்தது போலவே மானிட மகனுடைய காலத்திலும் நடக்கும். நோவா பேழைக்குள் சென்ற நாள் வரை எல்லாரும் திருமணம் செய்துகொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள். வெள்ளப்பெருக்கு வந்து அவர்கள் அனைவரையும் அழித்தது. அவ்வாறே லோத்தின் காலத்திலும் நடந்தது. மக்கள் உண்டார்கள், குடித்தார்கள்; வாங்கினார்கள், விற்றார்கள்; நட்டார்கள், கட்டினார்கள். லோத்து சோதோமை விட்டுப் போன நாளில் விண்ணிலிருந்து பெய்த தீயும் கந்தகமும் எல்லாரையும் அழித்தன. மானிடமகன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும். அந்நாளில் வீட்டின் மேல்தளத்தில் இருப்பவர் வீட்டிலுள்ள தம் பொருள்களை எடுக்கக் கீழே இறங்க வேண்டாம். அதுபோலவே வயலில் இருப்பவர் திரும்பி வரவேண்டாம். லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள். தம் உயிரைக் காக்க வழி தேடுவோர் அதை இழந்துவிடுவர்; தம் உயிரை இழப்பவரோ அதைக் காத்துக்கொள்வர். நான் உங்களுக்குச் சொல்கிறேன்; அந்த இரவில் ஒரே கட்டிலில் இருவர் படுத்திருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார். இருவர் சேர்ந்து மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார். இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார்.'' அவர்கள் இயேசுவைப் பார்த்து, ``ஆண்டவரே, இது எங்கே நிகழும்?'' என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், ``பிணம் எங்கே இருக்கிறதோ அங்கேயே கழுகுகளும் வந்து கூடும்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''அந்நாளில் வீட்டின் மேல்தளத்தில் இருப்பவர் வீட்டிலுள்ள தம் பொருள்களை எடுக்கக் கீழே இறங்க வேண்டாம். அதுபோலவே வயலில் இருப்பவர் திரும்பி வர வேண்டாம்'' (லூக்கா 17:31)

இயேசுவின் போதனைகள் மனிதரை நல்வழியில் இட்டுச் செல்வதற்காக அளிக்கப்பட்டன. நன்னெறியைக் கடைப்பிடித்து வாழ்வோர் இவ்வுலகில் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுவார்கள். அதே சமயத்தில் விண்ணகத்தில் நிலையான வாழ்வைப் பெற்றுக்கொள்வார்கள். மண்ணக வாழ்வுக்கும் விண்ணக வாழ்வுக்கும் இடையே என்ன தொடர்பு என்னும் கேள்விக்கும் இயேசு பதில் தருகிறார். நாம் வாழ்கின்ற உலகில் கடவுளின் ஆட்சி ஏற்கெனவே தொடங்கிவிட்டது. ஆனால் அது நிறைவடையும் காலம் ஒரு நாள் வரும். அந்த நிறைவுக் காலத்தை நாம் இருவிதங்களில் பார்க்கலாம். நம் ஒவ்வொருவரின் மண்ணக வாழ்வு சாவின் காரணமாக முடிவுக்கு வரும்போது ஒருவிதத்தில் நம் நிறைவுக்காலம் வந்துவிட்டது எனலாம். அதுபோல, மனித குலத்தின் வரலாறு முடிவடைந்து, உலகம் அனைத்துமே ஒரு நாள் கடவுளின் திட்டத்திற்கேற்ப நிறைவுக்கு வரும் என்பது மற்றொரு கூறு. இந்த உலக முடிவு எப்போது வரும் என்பது பற்றி இயேசு பதில் கூற மறுத்துவிட்டார். ஆனால் அந்த நிறைவுக் காலம் எப்படி இருக்கும் என்பது பற்றி ஒருசில விளக்கங்களை இயேசு தந்துள்ளார். அதாவது, உலக முடிவும் இறையாட்சியின் நிறைவும் மானிடமகனின் வருகையும் நாம் எதிர்பாராத நேரத்தில், முன்னறிவிப்பின்றியே வந்துவிடும். உலகம் அனைத்தையும் கடவுள் தீர்ப்பிடுவார்.

ஆனால் கடவுள் வழங்குகின்ற தீர்ப்பு நம்மை அச்சத்தில் ஆழ்த்த வேண்டியதில்லை. ஏனென்றால் கடவுள் எல்லையற்ற இரக்கமும் அன்பும் கொண்டவர். அவர் தம் மக்களை அடக்கி ஒடுக்குகின்ற சர்வாதிகாரி அல்ல. மாறாக, அவர் நம் அன்புத் தந்தை. எனவே, இறுதிக் காலம் பற்றி நாம் பயந்து நடுங்காமல் கடவுளிடத்தில் முழு நம்பிக்கை கொண்டு வாழ அழைக்கப்படுகிறோம். அப்போது எல்லாமே அழிந்து போகிறதே என நாம் அவதிப்பட்டு ஒரு சில பொருள்களையாவது காப்பாற்றிவிடலாமே என அங்கலாய்க்க வேண்டியதில்லை. வயலில் வேலைசெய்துகொண்டிருக்கும் வேளையில் இறுதிக் காலம் வருவதாக உணர்ந்ததும் வீட்டுக்குச் சென்று அங்குள்ள பொருள்களை மீட்டுவிடலாமே என எண்ணவும் வேண்டியதில்லை. ஏனென்றால் நம் உயிரைக் காத்துக்கொள்வதற்காக நாம் ஓடிப் போக வேண்டியதில்லை (காண்க: லூக் 17:31). மண்ணக வாழ்வு எப்போதாவது முடிவுக்கு வரும். ஆனால் கடவுளின் விருப்பத்திற்கு ஏற்ப வாழ்கின்ற மனிதர்கள் இவ்வுலக வாழ்வுக்குப் பிறகு நிலையான விண்ணக வாழ்வில் பங்கேற்பார்கள். அங்கே சென்று சேர்ந்திட நமக்கு வழியாக இருப்பவர் இயேசு கிறிஸ்து. அவரிடம் நம்பிக்கை கொண்டு வாழ்ந்தால் எதைக் கண்டும் அஞ்ச வேண்டியதில்லை.

மன்றாட்டு:

இறைவா, உம்மை நம்பி வாழ்வோர் ஒருநாளும் அழிவதில்லை என உணர்ந்து நாங்கள் செயல்பட அருள்தாரும்.