யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 31வது வாரம் சனிக்கிழமை
2014-11-08




முதல் வாசகம்

எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு.
திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 10-19

சகோதரர் சகோதரிகளே, என்னைப் பற்றிய அக்கறை இப்பொழுதாவது மீண்டும் உங்களிடையே எழுந்தது கண்டு ஆண்டவர் அருளால் நான் பெரிதும் மகிழ்கிறேன். நீங்கள் என்னைப் பற்றி அக்கறை கொண்டிருந்தீர்கள் என்பது உண்மைதான். ஆனால் அதைக் காட்டிக்கொள்ளும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கவில்லை. எனக்கு ஏதோ குறைவாய் இருப்பதால் இவ்வாறு சொல்கிறேன் என நினைக்க வேண்டாம். ஏனெனில் எந்நிலையிலும் மனநிறைவோடு இருக்கக் கற்றுக்கொண்டுள்ளேன். எனக்கு வறுமையிலும் வாழத் தெரியும்; வளமையிலும் வாழத் தெரியும். வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ, நிறைவோ குறைவோ எதிலும் எந்தச் சூழலிலும் வாழப் பயிற்சி பெற்றிருக்கிறேன். எனக்கு வலுவூட்டுகிறவரின் துணை கொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு. ஆயினும் நான் பட்ட துன்பத்தில் நீங்கள் பங்கு கொண்டது உங்கள் நன்மனத்தைக் காட்டுகிறது. பிலிப்பியர்களே, நான் நற்செய்தியை அறிவிக்கத் தொடங்கின காலத்தில், மாசிதோனியாவை விட்டுச் சென்றபிறகு, உங்களைத் தவிர வேறெந்தத் திருச்சபையும் என் வரவு செலவில் பங்கேற்கவில்லை. இதை நீங்களும் அறிவீர்கள். ஏனெனில் நான் தெசலோனிக்காவில் இருந்தபோது கூட என் தேவையை நிறைவு செய்ய ஒரு முறை மட்டுமல்ல, இரு முறை உதவி அனுப்பினீர்கள். நான் உங்கள் நன்கொடைகளை நாடவில்லை; மாறாக, உங்கள் கணக்கில் நற்பயன்கள் பெருகவேண்டும் என்றே விரும்புகிறேன். நீங்கள் அனுப்பியதெல்லாம் பெற்றுக்கொண்டேன். இப்பொழுது என்னிடம் நிறையவே இருக்கிறது. நீங்கள் அனுப்பியவற்றை எப்பப்பிராதித்துவிடமிருந்து பெற்றுக்கொண்டு நிறைவுற்றிருக்கிறேன். அவை நறுமணம் வீசும் காணிக்கையும் கடவுளுக்கு ஏற்புடைய, உகந்த பலியும் ஆகும். என் கடவுள், கிறிஸ்து இயேசுவின் வழியாய்த் தம் ஒப்பற்ற செல்வத்தைக் கொண்டு, உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்.
திருப்பாடல் 112: 1-2. 5-6

1 ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்; அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர். 2 அவர்களது வழிமரபு பூவுலகில் வலிமைமிக்கதாய் இருக்கும்; நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும். பல்லவி

5 மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர். 6 எந்நாளும் அவர்கள் அசைவுறார்; நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர். பல்லவி

8யb அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும்; அவர்களை அச்சம் மேற்கொள்ளாது. 9 அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்; அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செல்வராயிருந்தும் அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு உங்களுக்காக ஏழையானார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 9-15

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: ``நான் உங்களுக்குச் சொல்கிறேன்: நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக்கொள்வார்கள். மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார். நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவராய் இருந்தால் யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்? பிறருக்கு உரியவற்றைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவர்களாய்ப் போனால் உங்களுக்கு உரியவற்றை உங்களுக்குக் கொடுப்பவர் யார்? எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது; ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.'' பண ஆசைமிக்க பரிசேயர் இவற்றையெல்லாம் கேட்டு இயேசுவை ஏளனம் செய்தனர். அவர் அவர்களிடம் கூறியது: ``நீங்கள் உங்களை மக்கள்முன் நேர்மையாளராகக் காட்டிக்கொள்கிறீர்கள். கடவுள் உங்கள் உள்ளங்களை அறிவார். நீங்கள் உங்களை மக்கள்முன் உயர்ந்தவர்களாகக் காட்டிக்கொள்வது கடவுள் பார்வையில் அருவருப்பாகும்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார்'' (லூக்கா 16:10)

''ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்'' என்பார்கள். சிறிய பொறுப்புகளைக் கவனமாக நிறைவேற்றுபவர் பெரிய பொறுப்பையும் அவ்வாறே நன்முறையில் நிறைவேற்றுவார் என நாம் எதிர்பார்க்கலாம். மனித வாழ்க்கையில் சிறிதும் பெரிதுமாகப் பல பொறுப்புகள் உண்டு. ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கை நிலைக்கும் பணிக்கும் வளர்ச்சிப்படிக்கும் ஏற்ப வெவ்வேறு பொறுப்புகளைப் பெறுவது வழக்கம் என்பதை நாமறிவோம். ஆனால் எந்த நிலையில், பணியில், வளர்ச்சிப்படியில் நாம் இருந்தாலும் சரி, கடவுளால் நமக்குத் தரப்படுகின்ற அடிப்படையான பொறுப்பு ஒன்று உண்டு. அதுவே கடவுள் நமக்கு விடுக்கின்ற அழைப்புக்கு நாம் அளிக்க வேண்டிய பதில் மொழி. கடவுளுக்கு நாம் ''ஆம்'' எனப் பதில் இறுக்கலாம், அல்லது ''இல்லை'' என்றுகூடப் பதில் இறுக்கலாம். ஏனென்றால் நமக்குக் கடவுள் சுதந்திரத்தைத் தந்துள்ளார். வரம்புகடந்த சுதந்திரம் நமக்குக் கிடையாது; ஆனால், எல்லைகளுக்க உட்பட்ட விதத்தில் நாம் சுய முயற்சியோடு முன்வந்து கடவுளின் திட்டத்தை ஏற்றோ மறுத்தோ பதில் வழங்கும் திறமையைக் கடவுள் நமக்கு அளித்திருக்கின்றார்.

சில நாட்களுக்கு முன் (நவம்பர் 4, 2008) அமெரிக்க ஐக்கிய நாடுகள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத் தக்க ஒரு நிகழ்வு நடந்தது. அமெரிக்க ஐக்கிய நாடுகள் உருவான 1776இலிருந்து இருநூறு ஆண்டுகளுக்கு மோலாக வெள்ளையர் இனமே ஆட்சிநடத்தி வந்த இந்த நாட்டின் தலைவராகக் கறுப்பு இனத்தைச் சார்ந்த பராக் ஒபாமா என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டது உண்மையிலேயே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. கறுப்பு இனத்தவர் அடிமைகளாக நடத்தப்பட்டு, பிரித்து வேறுபடுத்தப்பட்டு எத்தனையோ கொடுமைகள் அனுபவித்தது வரலாற்று உண்மை. ஆனால் இன்றைய உலகில் மனித மாண்பு பற்றிய உணர்வு முற்றிலுமாக மறைந்துவிடவில்லை என்பதற்கு பராக் ஒபாமாவின் வெற்றி ஒரு சான்றாக அமைகிறது. இப்பின்னணியில் இயேசுவின் கூற்றை நாம் சிந்தித்துப் பார்க்கலாம். நமக்குக் கடவுள் தருகின்ற பொறுப்பு யாது? கடவுளின் சாயலாக உருவாக்கப்பட்ட மனிதர் யாராக இருந்தாலும் சரி, எந்த குலத்தை அல்லது நாட்டை அல்லது இனத்தைச் சார்ந்தவராயினும் சரி, அவர்கள் அனைவருமே நம் மதிப்புக்கு உரியவர்கள். யாதொரு வேறுபாடும் காட்டாமல் மனிதர் ஒருவர் ஒருவரை மதித்து, அன்புசெய்ய வேண்டும். இப்பொறுப்பைப் பெற்றுள்ள நாம் நம்பத்தகுந்த விதத்தில் நடந்துகொள்ள கடவுள் நம்மை அழைக்கிறார். ''சிறியவற்றிலும்'' ''பெரியவற்றிலும்'' நாம் நம்பத் தகுந்தவராய் செயல்பட வேண்டும் (லூக்கா 16:10).

மன்றாட்டு:

இறைவா, நீர் எங்களிடம் ஒப்படைக்கின்ற பொறுப்பை நாங்கள் மனமுவந்து நிறைவேற்றிட அருள்தாரும்.