பொதுக்காலத்தின் 31ஆம் ஞாயிறு


திருவழிப்பாட்டு ஆண்டு A (02-11-2014)

ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்: ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது./> ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்: ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது./> ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்: ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது./> ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்: ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது./> ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்: ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது./>


திருப்பலி முன்னுரை

இறையேசுவில் பிரியமானவர்களே! விண்ணகத் தந்தையின் திருப்பெயரால் நல்வாழ்த்துக்கள் கூறி இத்திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று கல்லறையில் மரித்தவர்களுக்காக நாம் விழா எடுக்கிறோம். நாம் எடுக்கும் இந்த விழா, நமது வாழ்வு வளர்ந்து கொண்டிருக்கும் முடிவற்ற திருப்பயணம் என்பதை உலகிற்கு எடுத்துகாட்டுகிறது.

தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட அனைவரையும் அழிய விடாமல் இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்யவேண்டுமென்பதே கடவுளின் திருவுளம் என்னும் ஏமாற்றம் தராத எதிர்நோக்கை கிறிஸ்து உறுதிப்படுத்துகின்றார். அதாவது நம் அனைவருக்கும் உயிர்ப்பு நிட்சயம் என்பதே இன்றைய செய்தியாகின்றது. எனவே நாம் இந்த உறுதி மொழியை ஆழமாக விசுவசித்து, அவரிடமே நம்பிக்கை கொண்டு, மனமாற்றம் பெற்று புதுவாழ்வு வாழ இத்திருப்பலியில் வரங்கேட்டுச் செபிப்போம்.



முதல் வாசகம்

முதல் வாசக முன்னுரை

நேர்மையாளராக இவ்வுலகில் வாழ்ந்த மனிதர் மறுவுலகில் அமைதி காண்பர்; ஆனால் இறைப்பற்றின்றி வாழ்வோர் தண்டனை பெறுவர். ஆகவே, நம்மை அழைக்கின்ற கடவுளுக்கு நாம் எவ்விதத்தில் பதில் அளிக்கின்றோமோ அதைப் பொறுத்தே நமது மறுவுலக வாழ்வு அமையும் என இன்றைய முதல் வாசகம் நமக்கு விளக்குவதை கேட்போம்.

அருளும் இரக்கமும் அவர் தேர்ந்துகொண்டோர் மீது இருக்கும்.
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 3: 1-9

நீதிமான்களின் ஆன்மாக்கள் கடவுளின் கையில் உள்ளன. கடுந்தொல்லை எதுவும் அவர்களைத் தீண்டாது. அறிவிலிகளின் கண்களில் இறந்தவர்களைப் போல் அவர்கள் தோன்றினார்கள். நீதிமான்களின் பிரிவு பெரும் துன்பமாகக் கருதப்பட்டது. அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து சென்றது பேரழிவாகக் கருதப்பட்டது. அவர்களோ அமைதியாக இளைப்பாறுகிறார்கள். மனிதர் பார்வையில் அவர்கள் தண்டிக்கப்பட்டாலும், இறவாமையில் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளார்கள். சிறிதளவு அவர்கள் கண்டித்துத் திருத்தப்பட்ட பின், பேரளவு கைம்மாறு பெறுவார்கள். கடவுள் அவர்களைச் சோதித்தறிந்த பின், அவர்களைத் தமக்குத் தகுதியுள்ளவர்கள் என்று கண்டார். பொன்னை உலையிலிட்டுப் புடமிடுவது போல் அவர் அவர்களைப் புடமிட்டார்; எரிபலி போல் அவர்களை ஏற்றுக்கொண்டார். கடவுள் அவர்களைச் சந்திக்க வரும்போது அவர்கள் ஒளிவீசுவார்கள்; அரிதாள் நடுவே தீப்பொறி போலப் பரந்து சுடர்விடுவார்கள்; நாடுகளுக்குத் தீர்ப்பு வழங்குவார்கள்; மக்கள் மீது ஆட்சி செலுத்துவார்கள். ஆண்டவரோ அவர்கள் மீது என்றென்றும் அரசாள்வார். அவரை நம்புவோர் உண்மையை அறிந்துகொள்வர்; அன்பில் நம்பிக்கை கொள்வோர் அவரோடு நிலைத்திருப்பர். அருளும் இரக்கமும் அவர் தேர்ந்துகொண்டோர் மீது இருக்கும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
திருப்பாடல் 23: 1-2. 3. 5. 6

ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. 2 பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். -பல்லவி

3 அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார். -பல்லவி

5 என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. -பல்லவி

6 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். -பல்லவி

இரண்டாம் வாசகம்

இரண்டாம் வாசக முன்னுரை

தூய ஆவியின் வழியாகக் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது; அந்த அன்பைப் பெற்றுள்ள நாம் ஒருபோதும் ஏமாற்றம் தராத எதிர்நோக்கையும் கொண்டுள்ளோம். எனவே, கடவுள் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்னும் உறுதி நமக்கு இருப்பதால் நாம் எதைக் கண்டும் அஞ்சவேண்டியதில்லை என்று புனித பவுலடியார் இன்றைய இரண்டாம் வாசகத்தில் கூறுவதை கேட்போம்.

கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம்
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6: 3-9

சகோதரர் சகோதரிகளே, திருமுழுக்கினால் கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருக்கும் நாம் அனைவரும் அவருடைய சாவிலும் அவரோடு இணைந்திருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியாதா? இறந்த கிறிஸ்துவை மாட்சிமிகு தந்தை உயிர்த்தெழச் செய்தார். அவ்வாறு நாமும் புதுவாழ்வு பெற்றவர்களாய் வாழும்படி திருமுழுக்கின் வழியாய் அவரோடு அடக்கம் செய்யப்பட்டோம். அவர் இறந்தது போலவே நாமும் அவரோடு ஒன்றித்து இறந்தோமெனில், அவர் உயிர்த்தெழுந்தது போலவே நாமும் அவரோடு ஒன்றித்து உயிர்த்தெழுவோம். நாம் இனிமேல் பாவத்துக்கு அடிமைகளாய் இராதபடி, நம்முடைய பழைய மனித இயல்பு அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. இவ்வாறு பாவத்துக்கு உட்பட்டிருந்த நம் இயல்பு அழிந்து போகும். இது நமக்குத் தெரியும். ஏனெனில் இறந்தோர் பாவத்தினின்று விடுதலை பெற்றுவிட்டனர் அன்றோ? கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்பதே நாம் கொண்டுள்ள நம்பிக்கை. இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட கிறிஸ்து இனிமேல் இறக்க மாட்டார்; இனி அவர் சாவின் ஆட்சிக்கு உட்பட்டவர் அல்ல என நாம் அறிந்திருக்கிறோம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார், என்கிறார் ஆண்டவஅல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 31-46

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: ``வானதூதர் அனைவரும் புடைசூழ மானிடமகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்றுகூட்டப்படுவர். ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப் பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப் பக்கத்திலும் நிறுத்துவது போல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார். பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப் பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, `என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப் பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்' என்பார். அதற்கு நேர்மையாளர்கள் `ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக்கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்? எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத் தேடி வந்தோம்?' என்று கேட்பார்கள். அதற்கு அரசர், `மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்' எனப் பதிலளிப்பார். பின்பு இடப் பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, `சபிக்கப்பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை. நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை' என்பார். அதற்கு அவர்கள், `ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்?' எனக் கேட்பார்கள். அப்பொழுது அவர், `மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' எனப் பதிலளிப்பார். இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


ஆண்டவரே என் ஆயர்: எனக்கேதும் குறையில்லை;!

பதில்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

எம் இறைவா,

உம் அன்புத் திருச்சபையை காத்து வழிநடத்தி இறந்த திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், அனைவரும் உம் இரக்கமும் அருளையும் பொழிந்து உம் வானக வீட்டில் சேர்த்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நீதியின் இறைவா,

எம் நாட்டை ஆண்டு இறந்த தலைவர்கள், பொதுமக்கள், தியாகிகள் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். உயிர்தெழுதலும், வாழ்வும் நானே என்னிடம் நம்பிக்கை கொள்வோர் இறப்பிலும் வாழ்வார் என்ற உம்வார்த்தையில் நம்பிக்கைகொண்டு இறந்த அனைவரின் பாவங்களை போக்கி அவர்களை உம் வானக வீட்டில் சேர்த்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்யும் தந்தையே!

எம் பங்கை வழிநடத்தி இறந்த பங்கு குருக்களுக்காவும், பங்குமக்களுக்காகவும் மன்றாடுகிறோம். உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார் என்பதிற்கினங்க உம்மீது நம்பிக்கை கொண்டு வாழ்ந்து இறந்த ஆன்மாக்கள் அனைத்தும் தங்களுடைய பாவங்களினால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்தாலும் அவர்களை நிறைவாக ஆசிர்வதித்து உம் வானக வீட்டில் சேர்த்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அன்பின் இறைவா,

யாரும் நினையாத ஆன்மாக்களுக்காக சிறப்பாக மன்றாடுகிறோம். அவர்கள் தாங்கள் செய்த பாவங்களினால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்தாலும் அவர்கள் வேதனை குறைந்து உம் தெய்வீக விருந்தில் பங்குபெற அவர்களை ஆசிர்வதித்து உம்மிடம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

கருணையும் இரக்கமும் நிறைந்த தந்தையே!

நோயினால் வாடுவோர், தனிமையில் இருப்போர், கவலையினாலும் துன்பங்களினாலும் கலங்குவோர், தேவையில் உழல்வோர், அடிமைத்தனத்துள் வாழ்வோர் அனைவரையும் உமது கருணையினாலும், இரக்கத்தினாலும் நிறைத்து அவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும், நிம்மதியையும் அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

தூயவரான அன்புத் தந்தையே இறைவா!

இன்று எமது சமூகத்திலே வீணான விவாதங்களாலும், குழப்பங்களாலும், தவறான போதனைகளாலும், பிடிவாதத்தாலும், உறவை முறித்து, விசுவாசத்தை மறந்து பாதை மாறிச் செல்லும் அனைவர்மீதும் மனமிரங்கி உமது வழியில் செல்ல அவர்களை வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அனைவரையும் உயிர்த்தெழச் செய்யும் அன்புத் தந்தையே இறைவா!

எமது நாட்டில் ஏற்பட்ட போரில் இறந்து போன அனைவருக்கும் நித்திய இளைப்பாற்றியை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நீர் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டும் தந்தையே இறைவா!

எமது இளைஞர்களை நிறைவாக ஆசீர்வதியும். அவர்களது இளமைப் பருவத்தின் பாவங்களையும், குற்றங்களையும் நினையாது உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் அவர்கள் மேல் பொழிந்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இன்றைய சிந்தனை

''நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்'' (மத்தேயு 25:35)

மத்தேயு நற்செய்தியின் இறுதியில் ''மக்களினத்தார் அனைவருக்கும் தீர்ப்பு'' என்னும் பகுதி உள்ளது (காண்க: மத் 25:31-46). மானிட மகன் ''எல்லா மக்களினத்தாருக்கும்'' இறுதித் தீர்ப்பு வழங்க வருவார். அப்போது தம் வலப்பக்கத்தில் நிறுத்தப்பட்ட நல்லவர்களைப் பார்த்து அவர், ''நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்'' என்று கூறுவார். ஆனால், இடப்பக்கத்தில் உள்ள கெட்டோரைப் பார்த்து, ''நான் பசியாய் இருந்தேன், ஆனால் நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை'' என்பார். நேரடியாக இயேசுவுக்கு உணவு கொடுத்தோம் அல்லது உணவு கொடுக்கவில்லை என்பதல்ல இங்கே குறிக்கப்படும் பொருள். மாறாக, ''மிகச் சிறிய சகோதரர் சகோதரிகளுக்கு எதைச் செய்தோமோ அதை இயேசுவுக்கே செய்தோம்'' (காண்க: மத் 25:40,45).

இங்கே ''சகோதரர் சகோதரிகள்'' எனக் குறிக்கப்படுவோர் ''கிறிஸ்தவர்'' என்றொரு விளக்கம் உண்டு (காண்க: மத் 10:40-42). இருப்பினும், பசி, தாகம், அன்னியராயிருத்தல், ஆடையின்மை, நோய், சிறைப்படல் போன்ற இன்னல்களில் உழல்வோர் யாராயிருந்தாலும் அவர்கள் இயேசுவின் ''சகோதரர் சகோதரிகள்'' ஆவர் என்பதும் உண்மையே. ஆக, கடவுளன்பும் பிறரன்பும் இங்கே இணைவதைப் பார்க்கிறோம். இயேசு அளித்த அன்புக் கட்டளையும் இந்த இரு பரிமாணங்களையும் உள்ளடக்கியதே (காண்க: மத் 22:34-40). எந்த வித இன்னல்களுக்கும் உட்பட்ட மனிதருக்கு நாம் உதவும்போது இயேசுவுக்கே உதவுகிறோம்; மாறாக, பிறருக்கு உதவ நாம் மறுக்கும்போது இயேசுவுக்கே உதவ மறுக்கிறோம். மக்களினத்தாருக்குத் தீர்ப்பு வழங்கப்படுவது பற்றி இயேசு போதித்த காலத்தில் மக்களுக்கு இருந்த தேவைகள் இன்றும் தொடர்ந்து நிலவுகின்றன. உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க வீடும் இல்லாதோர் இன்றும் ஆயிரக் கணக்கில் உண்டு. இயற்கைச் சீற்றம், போர் போன்ற பேரிடர்கள் காரணமாக அகதிகள் ஆவோர் உண்டு; அநீதியாக ஒடுக்கப்படுவோர் உண்டு; சமூக அமைப்புகளால் அடிமைகள் போல நடத்தப்படுவோர் உண்டு. இவர்களுக்கெல்லாம் நாம் அளிக்கின்ற உதவி என்ன? பிறரன்பு என்பது குறிப்பாக ஏழை எளியோர் மட்டில் காண்பிக்கப்பட வேண்டும் என்னும் இயேசுவின் போதனையை நாம் கடைப்பிடித்தால் இறுதி நாளில் நமக்கு வழங்கப்படும் தீர்ப்பு நல்லதாக அமையும்: ''நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறச் செல்வார்கள்'' (காண்க: மத் 25:46).

மன்றாட்டு:

இறைவா, பிறரன்புக் கட்டளையைக் கடைப்பிடித்து உம் அன்பில் நாங்கள் நிலைத்திட அருள்தாரும்.