யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 29வது வாரம் திங்கட்கிழமை
2014-10-20




முதல் வாசகம்

இயேசு கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் நாம் அவரோடு உயிர்த்தெழவும் விண்ணுலகில் அவரோடு அமரவும் செய்தார்
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-10

சகோதரர் சகோதரிகளே, உங்களுடைய குற்றங்களையும் பாவங்களையும் முன்னிட்டு நீங்கள் இறந்தவர்களாய் இருந்தீர்கள். அப்பொழுது நீங்கள் இவ்வுலகப் போக்கின்படி, வான்வெளியில் அதிகாரம் செலுத்தும் தலைவனுக்கு ஏற்ப வாழ்ந்து வந்தீர்கள். கடவுளுக்குக் கீழ்ப்படியாத மக்களிடையே இப்போது செயலாற்றும் தீய ஆற்றலுக்குப் பணிந்து நடந்தீர்கள். இந்நிலையில்தான் ஒரு காலத்தில் நாம் எல்லாரும் இருந்தோம். நம்முடைய ஊனியல்பின் தீய நாட்டங்களின்படி வாழ்ந்து, உடலும் மனமும் விரும்பியவாறு செயல்பட்டு, மற்றவர்களைப் போலவே நாமும் இயல்பாகக் கடவுளின் சினத்துக்கு ஆளானோம். ஆனால் கடவுள் மிகுந்த இரக்கம் உடையவர். அவர் நம்மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார். குற்றங்களின் காரணமாய் இறந்தவர்களாய் இருந்த நாம் அவ்வன்பின் மூலம் இணைந்து உயிர் பெறச் செய்தார். நீங்கள் மீட்கப்பட்டிருப்பது அந்த அருளாலேயே. இயேசு கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் நாம் அவரோடு உயிர்த்தெழவும் விண்ணுலகில் அவரோடு அமரவும் செய்தார். கிறிஸ்து இயேசு வழியாகக் கடவுள் நமக்குச் செய்த நன்மையையும் அவரது ஒப்புயர்வற்ற அருள் வளத்தையும் இனி வரும் காலங்களிலும் எடுத்துக்காட்டுவதற்காகவே இவ்வாறு செய்தார். நீங்கள் அந்த அருளாலேயே நம்பிக்கையின் வழியாக மீட்கப்பட்டிருக்கிறீர்கள். இது உங்கள் செயல் அல்ல; மாறாக இது கடவுளின் கொடை. இது மனிதச் செயல்களால் ஆனது அல்ல. எனவே எவரும் பெருமை பாராட்ட இயலாது. ஏனெனில் நாம் கடவுளின் கைவேலைப்பாடு; நற்செயல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கிறோம். இவ்வாறு நற்செயல்கள் புரிந்து வாழும்படி கடவுள் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கிறார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள்.
திருப்பாடல் 100: 1-2. 3. 4. 5

அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்! 2 ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! பல்லவி

3 ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! பல்லவி

4 நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப் பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்! பல்லவி

5 ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 13-21

அக்காலத்தில் கூட்டத்தில் இருந்த ஒருவர் இயேசுவிடம், ``போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக்கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும்'' என்றார். அவர் அந்த ஆளை நோக்கி, ``என்னை உங்களுக்கு நடுவராகவோ பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தியவர் யார்?'' என்று கேட்டார். பின்பு அவர் அவர்களை நோக்கி, ``எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது'' என்றார். அவர்களுக்கு அவர் ஓர் உவமையைச் சொன்னார்: ``செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அவன், `நான் என்ன செய்வேன்? என் விளைபொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே!' என்று எண்ணினான். `ஒன்று செய்வேன்; என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன்; அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன்'. பின்பு, ``என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பலவகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன; நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு எனச் சொல்வேன்'' என்று தனக்குள் கூறிக்கொண்டான். ஆனால் கடவுள் அவனிடம், `அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?' என்று கேட்டார். கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

அறிவுள்ள செல்வன் நீ

உயிர் இல்லாத அழகு, பிணம். சாதனை இல்லாத அறிவு,மதியீனம். பணிவு இல்லாத வீரம், மூர்க்கத்தனம். தர்மம் இல்லாத செல்வம் பாலைவனத்து மழை, ஆன்மீகம் இல்லாத வாழ்க்கை ஒளியில்லா உலகம்.

வீட்டைப் பெரியதாக்குவதால், வீட்டுப்பொருட்களை பெருக்குவதால், சொத்துக்களின் எண்ணிக்கையை அதிகமாக்குவதால் ஒரு மனிதனுக்கு நிம்மதியான வாழ்வு கிடைத்துவிடுவதில்லை. "மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது".(லூக்12'15) "மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?" (மத் 16 :26).

பணத்துக்கும் சொத்துக்கும் சொந்தக்காரன் நாம் அல்ல. வீடும் உடைமையும் நமக்கு நிரந்தரமல்ல. வாழ்வு நம்முடையதல்ல. எல்லாம் அந்த ஆண்டவனுடையது.எதைத்; தேடுகிறோமோ(நிம்மதி) அது அவருடையது. எதில் தேடுகிறோமோ(உடைமை) அது அவருடையது. யாருக்காக(உயிர்) தேடுகிறோமோ அதுவும் அவருடையது. #8220;கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர்”(கொலோ 3'4). இதில் என்ன பெரிய சவடால் வேண்டிகிடக்கிறது. அறியாமை தவிர வேறு என்ன சொல்ல.

ஆண்டவனோடும் ஆன்மீகத்தோடும் தொடர்பு இல்லாத வாழ்க்கை நூல் அறுந்த பட்டம் போன்றது. தொடர்பிழந்த விமானம். அழிவது உறுதி. இறைவன் காட்டும் விழியில் விவேகத்துடன் வாழ்வோம்.

மன்றாட்டு:

இறைவா, மனிதர் அனைவரையும் உம் சாயலில் படைத்துள்ளீர் என நாங்கள் உணர்ந்து மனித மாண்பை மதித்திட அருள்தாரும்.