யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 27வது வாரம் சனிக்கிழமை
2014-10-11




முதல் வாசகம்

கிறிஸ்து இயேசுவின் மீது கொண்டுள்ள நம்பிக்கையால் நீங்கள் அனைவரும் கடவுளின் மக்களாய் இருக்கிறீர்கள்.
திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 22-29

சகோதரர் சகோதரிகளே, இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொள்வோருக்கு வாக்களிக்கப் பட்டவை நம்பிக்கையால் கிடைக்கவேண்டும் என்பதற்காகவே அனைத்தும் பாவத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டுள்ளது என மறைநூல் கூறுகிறது. நாம் நம்பிக்கை கொள்வதற்கு முன் சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தோம். வெளிப்பட இருந்த அந்த நம்பிக்கையை நாம் பெறும்வரை இந்நிலை நீடித்தது. இவ்வாறு, நம்பிக்கையின் அடிப்படையில் நாம் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆக்கப்படுவதற்காக நம்மைக் கிறிஸ்துவிடம் கூட்டிச்செல்லும் வழித்துணையாய்த் திருச்சட்டம் செயல்பட்டது. இப்பொழுது நாம் நம்பிக்கை கொண்டுள்ளதால் இனி நாம் வழித்துணைவரின் பொறுப்பில் இல்லை. ஏனெனில், கிறிஸ்து இயேசுவின் மீது கொண்டுள்ள நம்பிக்கையால் நீங்கள் அனைவரும் கடவுளின் மக்களாய் இருக்கிறீர்கள். அவ்வாறெனில், கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற நீங்கள் அனைவரும் கிறிஸ்துவை அணிந்துகொண்டீர்கள். இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை; ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள். நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்களும் ஆபிரகாமின் வழித்தோன்றல்களுமாய் இருக்கிறீர்கள். வாக்குறுதியின் அடிப்படையில் உரிமைப்பேறு உடையவர்களாயும் இருக்கிறீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்.
திருப்பாடல் 105: 2-3. 4-5. 6-7

2 அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்! 3 அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக! பல்லவி

4 ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! 5 அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள்! அவர்தம் அருஞ்செயல்களையும், அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள். பல்லவி

6 அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்து கொண்ட யாக்கோபின் பிள்ளைகளே! 7 அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித் தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ! இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் அதிகம் பேறுபெற்றோர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 27-28

அக்காலத்தில் இயேசு மக்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது, கூட்டத்திலிருந்து பெண் ஒருவர், ``உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்'' என்று குரலெழுப்பிக் கூறினார். அவரோ, ``இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''உம் தாய் பேறுபெற்றவர்'' (லூக்கா 11:27)

அன்னை மரியா இயேசுவைக் கருத்தாங்கி, பத்துமாதம் சுமந்து, இவ்வுலகிற்குப் பெற்றளித்தார். எனவே அவரை நாம் ''பேறுபெற்றவர்'' எனப் போற்றுவது பொருத்தம்தான். இதையே இயேசுவின் போதனையைக் கேட்டுக்கொண்டிருந்த பெண் ஒருவரும் வெளிப்படையாகப் பறைசாற்றினார். இயேசுவின் தாய் பேறுபெற்றவர் என்பதற்கு இரு முக்கிய காரணங்கள் உண்டு. முதலில், மரியா இயேசுவைத் தம் வயிற்றில் தாங்கி, அவரைத் தம் மகனாக இவ்வுலகிற்கு அளித்தார். மரியா இயேசுவின் தாய் மட்டுமல்ல, கடவுளும் மனிதருமாகிய இயேசுவைப் பெற்றதால் அவர் ''கடவுளின் தாய்'' எனவும் அழைக்கப்படுகிறார். ஆனால், மரியா பேறுபெற்றவர் எனப் போற்றப்படுவதற்கு இன்னொரு முக்கியமான காரணம் உண்டு. அதாவது, மரியா ''கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடித்தார்'' (காண்க: லூக்கா 11:28). கடவுளின் தாய் ஆவதற்கு இசைவு தெரிவித்தார் மரியா. கணவரோடு கூடி வாழ்வதற்கு முன்னரே இயேசுவைத் தம் வயிற்றில் தூய ஆவியின் வல்லமையால் கருத்தாங்கிய மரியா கடவுளின் வார்த்தைக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்தார். இதுவே அவரைப் ''பேறுபெற்றவர்'' ஆக மாற்றிற்று.

மரியாவைப் போல நாமும் பேறுபெற்றவர் ஆக வாய்ப்பு உள்ளது. நாமும் மரியாவைப் போல இறைவார்த்தையைக் கேட்க வேண்டும். கடவுளின் வார்த்தை நம்மிடமிருந்து எதிர்பார்க்கின்ற நடத்தை நமதாக மாற வேண்டும். அப்போது நாமும் பேறுபெற்றவர் ஆவோம். இவ்வாறு கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்போர் தம்முடைய சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் தம் வாழ்க்கையை அமைக்காமல் கடவுளின் விருப்பத்தின்படியே செயல்பட முன்வருவார்கள். கடவுளின் விருப்பம் நாம் அவரை அன்புசெய்து வாழ்வதும் நம்மை அடுத்திருப்போரை நம்மைப்போல அன்புசெய்வதுமே ஆகும். எனவே, கடவுளில் நாம் முழுமையாக நம்பிக்கை கொண்டவர்களாக மாற வேண்டும்; அன்புக் கட்டளையை நாம் செயல்படுத்த வேண்டும். அப்போது நாம் எதிர்நோக்கிக்; காத்திருக்கின்ற பேரின்ப வாழ்வு நமதாகும். நாம் உண்மையிலேயே ''பேறுபெற்றோர்'' ஆவோம்.

மன்றாட்டு:

இறைவா, உம்மில் நம்பிக்கைகொள்வோரை நீர் ஒருபோதும் கைவிடுவதில்லை என உணர்ந்து வாழ்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.