யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 25வது வாரம் வெள்ளிக்கிழமை
2014-09-26

புனிதர்கள் கேரஸ்மஸ் தமியான்




முதல் வாசகம்

உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலம் உண்டு.
சபை உரையாளர் நூலிலிருந்து வாசகம் 3: 1-11

ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரம் உண்டு. உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலம் உண்டு: பிறப்புக்கு ஒரு காலம், இறப்புக்கு ஒரு காலம்; நடவுக்கு ஒரு காலம், அறுவடைக்கு ஒரு காலம்; கொல்லுதலுக்கு ஒரு காலம், குணப்படுத்துதலுக்கு ஒரு காலம்; இடித்தலுக்கு ஒரு காலம், கட்டுதலுக்கு ஒரு காலம்; அழுகைக்கு ஒரு காலம், சிரிப்புக்கு ஒரு காலம்; துயரப்படுதலுக்கு ஒரு காலம், துள்ளி மகிழ்தலுக்கு ஒரு காலம்; கற்களை எறிய ஒரு காலம், கற்களைச் சேர்க்க ஒரு காலம்; அரவணைக்க ஒரு காலம், அரவணையாதிருக்க ஒரு காலம்; தேடிச் சேர்ப்பதற்கு ஒரு காலம், இழப்பதற்கு ஒரு காலம்; காக்க ஒரு காலம். தூக்கியெறிய ஒரு காலம்; கிழிப்பதற்கு ஒரு காலம், தைப்பதற்கு ஒரு காலம்; பேசுவதற்கு ஒரு காலம், பேசாதிருப்பதற்கு ஒரு காலம்; அன்புக்கு ஒரு காலம், வெறுப்புக்கு ஒரு காலம்; போருக்கு ஒரு காலம், அமைதிக்கு ஒரு காலம். வருந்தி உழைப்பவர் தம் உழைப்பினால் அடையும் பயன் என்ன? மனிதர் பாடுபட்டு உழைப்பதற்கெனக் கடவுள் அவர்மீது சுமத்திய வேலைச் சுமையைக் கண்டேன். கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார்; காலத்தைப் பற்றிய உணர்வை மனிதருக்குத் தந்திருக்கிறார். ஆயினும், கடவுள் தொடக்க முதல் இறுதிவரை செய்துவருவதைக் கண்டறிய மனிதரால் இயலாது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி!
திருப்பாடல் 144: 1-4

என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி! 2 என் கற்பாறையும் கோட்டையும் அவரே! எனக்குப் பாதுகாப்பாளரும் மீட்பரும் அவரே! என் கேடயமும் புகலிடமும் அவரே! பல்லவி

3 ஆண்டவரே! மனிதரை நீர் கவனிக்க அவர்கள் யார்? மானிடரை நீர் கருத்தில் கொள்ள அவர்கள் யார்? 4 மனிதர் சிறுமூச்சுக்கு ஒப்பானவர்; அவர்களின் வாழ்நாள்கள் மறையும் நிழலுக்கு நிகரானவை. பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மானிட மகன் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 18-22

அக்காலத்தில் இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர். அப்போது அவர்களிடம் ``நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?'' என்று அவர் கேட்டார். அவர்கள் மறு மொழியாக, ``சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் எனவும் சொல்கின்றனர்'' என்றார்கள். ``ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?'' என்று அவர்களிடம் அவர் கேட்டார். பேதுரு மறுமொழியாக, ``நீர் கடவுளின் மெசியா'' என்று உரைத்தார். இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார். மேலும் இயேசு, ``மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்'' என்று சொன்னார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''வழியில் இயேசு தம் சீடரை நோக்கி, 'நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?' என்று கேட்டார்'' (மாற்கு 8:27)

இயேசு தம்மைப் பற்றியும் தம் பணி பற்றியும் தெளிவான பார்வை கொண்டிருந்தார் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவருடைய சீடர்கள் இயேசுவைப் பற்றியும் அவருடைய போதனை மற்றும் பணி பற்றியும் தெளிவான பார்வை கொண்டிருக்கவில்லை. எனவே, இயேசு அவர்களைப் பாhத்து, ''நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?'' என்று கேட்ட கேள்விக்கு இரு பொருள்கள் இருந்தன. ஒன்று, இயேசு ஒருவிதத்தில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்துகிறார். அதாவது, பொது மக்கள் தம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது முதல் பொருள். அதே நேரத்தில் இயேசு தம் சீடர்கள் தம்மைப் பற்றி என்ன எண்ணுகிறார்கள் என அறியவும் விரும்புகிறார்.

இன்று நம்மிடம் இயேசு கேட்கும் கேள்வியும் அதுவே. நாமும் இயேசு யார் என்னும் கேள்விக்குப் பதில் அளிக்க அழைக்கப்படுகிறோம். இயேசுவைப் பற்றி நற்செய்தி நூல்கள் தருகின்ற தகவல்களின் அடிப்படையில் இயேசு பற்றிய சில வரலாற்றுச் செய்திகளை நாம் அறிகிறோம். ஆனால் இயேசு யார் என்னும் கேள்விக்கு நாம் அளிக்க வேண்டிய பதில் நம் உள்ளத்தின் ஆழத்தில் நாம் இயேசுவை எவ்வாறு ஏற்றுக்கொண்டுள்ளோம் என்பதை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். இயேசுவை ஏற்பதால் நம் வாழ்க்கையில் என்ன மாற்றம் நிகழ்ந்துள்ளது? அவர் நம் வாழ்வுக்கு வழியாகவும் நம் மதிப்பீடுகளைப் புரட்டிப்போட்டு இறையாட்சியின் மதிப்பீடுகளை நாம் ஏற்று வாழ நம்மைத் தூண்டுபவராகவும் உள்ளார். எனவே இயேசுவை யார் என அடையாளம் காணவேண்டும் என்றால் இயேசுவின் மன நிலை நமது மன நிலையாக மாற வேண்டும்; இயேசுவின் வாழ்க்கைப் பாணி நமது வாழ்க்கைப் பாணியாக மாற வேண்டும். அப்போது நம் ''யார் இந்த இயேசு?'' என்னும் கேள்விக்கு நம் வாழ்க்கையாலே பதிலளிக்க இயலும்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகன் இயேசுவை ஆழமாக அறிந்திட எங்களுக்கு அருள்தாரும்.