யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 24வது வாரம் வெள்ளிக்கிழமை
2014-09-19




முதல் வாசகம்

கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பயனற்றதே.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 12-20

சகோதரர் சகோதரிகளே, இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார் என அறிவிக்கப்பட்டிருக்க, உங்களுள் சிலர் இறந்தோர் உயிர்த்தெழுவதில்லை எனச் சொல்வது ஏன்? இறந்தோர் உயிர்த்தெழ மாட்டார் எனில், கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லை என்றாகிவிடும். கிறிஸ்து உயிருடன் எழுப்பப் படவில்லை என்றால், நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும். நாங்களும் கடவுளின் சார்பில் பொய்ச் சான்று பகர்வோர் ஆவோம். ஏனெனில் இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதில்லை என்றால் கடவுள் உயிர்த்தெழச் செய்யாத கிறிஸ்துவை, கடவுள்தான் உயிர்த்தெழச் செய்தார் என்று சான்று பகரும்போது கடவுளுக்கு எதிராகச் சான்று கூறியவர்கள் ஆவோம் அல்லவா? ஏனெனில் இறந்தோர் உயிருடன் எழுப்பப் படுவதில்லை என்றால் கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லை என்றாகிவிடும். கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால், நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பயனற்றதே. நீங்கள் இன்னமும் உங்கள் பாவங்களில் வாழ்பவர்களாவீர்கள். அப்படியானால், கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு இறந்தவர்களும் அழிவுக்குள்ளாவார்கள். கிறிஸ்துவிடம் நாம் கொண்டுள்ள எதிர்நோக்கு இவ்வுலக வாழ்வை மட்டும் சார்ந்திருந்தால் எல்லா மக்களையும் விட இரங்குதற்கு உரியவராய் இருப்போம். ஆனால் இப்போதோ, இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவரே முதலில் உயிருடன் எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

விழித்தெழும்போது, உம் உருவம் கண்டு நிறைவு பெறுவேன் ஆண்டவரே.
திருப்பாடல் 17: 1. 6-7. 8,15

ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்; என் வேண்டுதலை உற்றுக் கேளும்; வஞ்சகமற்ற உதட்டினின்று எழும் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும். பல்லவி

6 இறைவா, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகின்றேன்; ஏனெனில், நீர் எனக்குப் பதில் அளிப்பீர். என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்; என் விண்ணப்பத்திற்குச் செவி சாய்த்தருளும். 7 உமது வியத்தகு பேரன்பைக் காண்பித்தருளும்; உம்மிடம் அடைக்கலம் புகுவோரை அவர்களுடைய எதிரிகளிடமிருந்து உமது வலக்கரத்தால் விடுவிப்பவர் நீரே! பல்லவி

8 உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்; உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும். 15 நானோ நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்; விழித்தெழும்போது, உமது உருவம் கண்டு நிறைவு பெறுவேன். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-3

அக்காலத்தில் இயேசு நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று இறையாட்சி பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார். பன்னிருவரும் அவருடன் இருந்தனர். பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும், ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும் ஏரோதுவின் மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவி யோவன்னாவும் சூசன்னாவும் மேலும் பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்து வந்தார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''பன்னிருவரும் இயேசுவுடன் இருந்தனர்... பெண்கள் சிலரும் அவரோடு இருந்தார்கள்'' (லூக்கா 8:2-3)

கடவுள் மனிதரோடு பகிர்ந்துகொள்ள விரும்புகின்ற ''நற்செய்தி'' கடவுளிடமிருந்தே வருகிறது என்பதில் ஐயமில்லை. ஆனால், இந்த நற்செய்தியைப் பிறருக்கு எடுத்துச் சொல்ல கடவுள் மனிதரையே கருவிகளாகப் பயன்படுத்துகின்றார். கடவுள் தேர்ந்துகொண்ட தனிச்சிறப்பான நற்செய்தித் தூதுவர் இயேசுவே. இவர் பாலஸ்தீன நாட்டில் ஒரு நாடோடி போதகராகச் செயல்பட்டார். அக்கால மறைநூல் அறிஞரைப் போல உயர்பதவி இயேசுவுக்கு இருக்கவில்லை. அவர் ஒரு சாதாரண கலிலேய மனிதர்; சமுதாயத்தில் உயரிடம் அவருக்கு ஒதுக்கப்படவில்லை; அதிகாரமும் ஆட்சிப் பொறுப்பும் அவருக்கு அளிக்கப்படவில்லை. அவருக்குத் துணையாகச் சென்றவர்கள் தலைசிறந்த படிப்பாளிகள் அல்ல; மீன்பிடித்தல், வரிதண்டுதல் போன்ற தொழில்களே அவர்களது பிழைப்புக்கு வழியாயிருந்தன. மேலும், இயேசுவோடு சில பெண்களும் துணையாகச் சென்றார்கள். இவர்களில் சிலர் பேய்பிடியால் துன்புற்றவர்கள். அவர்கள் இயேசுவை அணுகிச் சென்று அவர் வழியாக நலம் பெற்றதால் கடவுளின் இரக்கத்தையும் அன்பையும் நேரடியாக அனுபவித்திருந்தார்கள். பெண்கள் என்றாலே சமுதாயத்தில் தாழ்நிலையைச் சார்ந்தவர்கள் என்று கருதப்பட்ட அக்காலத்தில் இயேசுவோடு கூட வழிநடந்தவர்களுள் நோய்நொடிகளால் அவதிப்பட்ட (குணமான) பெண்களும் இடம்பெற்றனர் என்பது வியப்புக்குரியதே.

தம் நற்செய்தியைப் பரப்புவதற்குக் கடவுள் தேர்ந்துகொள்கின்ற மனிதர் சாதாரணமானவர்கள். நம் ஒவ்வொருவரையும் கடவுள் தம் நற்செய்தியின் தூதுவராகத் தெரிந்துகொள்ள முடியும் என்றால் கடவுளின் வியத்தகு அன்புதான் என்னே! இத்தொழிலில் ஈடுபடுவதற்குத் தனிப் படிப்போ தகுதியோ தேவையில்லை. கிறிஸ்துவை நாம் அன்புசெய்ய வேண்டும்; அவரை நம் உள்ளத்திலும் இதயத்திலும் ஏற்கவேண்டும்; அவரோடு வழிநடக்க நாம் தயாராக இருக்க வேண்டும். இத்தகைய மனநிலை நம்மிடம் இருந்தால் போதும், நாம் நற்செய்தி அறிவிக்கத் தகுதியுடையவர்கள் ஆகிவிடுவோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் அன்பை இவ்வுலக மக்களோடு பகிர்ந்துகொள்ள நீர் எங்களை அழைக்கின்றீர் என உணர்ந்து வாழ்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.