யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 24வது வாரம் திங்கட்கிழமை
2014-09-15

வியாகுல அன்னை நினைவு




முதல் வாசகம்

நீங்கள் சபையாகக் கூடிவரும்போது உங்களிடையே பிளவுகள் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 11: 17-26

சகோதரர் சகோதரிகளே, இவ்வறிவுரைகளைக் கொடுக்கும் நான் உங்களைப் பாராட்ட மாட்டேன். ஏனெனில் நீங்கள் ஒன்றுகூடி வரும்போது நன்மையை விடத் தீமையே மிகுதியாக விளைகிறது. முதலாவது, நீங்கள் சபையாகக் கூடிவரும்போது உங்களிடையே பிளவுகள் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். ஓரளவு அதை நம்புகிறேன். உங்களிடையே கட்சிகள் இருக்கத்தான் செய்யும். அப்போதுதான் உங்களுள் தகுதியுள்ளவர்கள் யாரென வெளிப்படும். இந்நிலையில் நீங்கள் ஒன்றாகக் கூடி வந்து உண்பது ஆண்டவரின் திருவிருந்து அல்ல. ஏனெனில் நீங்கள் உண்ணும் நேரத்தில், ஒவ்வொருவரும் தாம் கொண்டுவந்த உணவை மற்றவர்களுக்கு முந்தியே உண்டுவிடுகிறீர்கள். இதனால் சிலர் பசியாய் இருக்க, வேறு சிலர் குடிவெறியில் இருக்கிறார்கள். உண்பதற்கும் குடிப்பதற்கும் உங்களுக்கு வீடுகள் இல்லையா? அல்லது என்ன சொல்வது? உங்களைப் பாராட்டுவதா? இதில் உங்களைப் பாராட்டமாட்டேன். ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதாவது, ஆண்டவராகிய இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில், அப்பத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, ``இது உங்களுக்கான என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்'' என்றார். அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, ``இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்'' என்றார். ஆதலால் நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும்போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.
திருப்பாடல்40: 6-7. 8. 9. 16

பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர். 7 எனவே இதோ வருகின்றேன்; என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது. -பல்லவி

8 என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது என்றேன் நான். -பல்லவி

9 என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக்கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர். -பல்லவி

16 உம்மைத் தேடுவோர் அனைவரும் உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்! நீர் அருளும் மீட்பில் நாட்டங்கொள்வோர், `ஆண்டவர் எத்துணை பெரியவர்!' என்று எப்போதும் சொல்லட்டும்! -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 25-27

அக்காலத்தில் சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்றுகொண்டிருந்தனர். இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், ``அம்மா, இவரே உம் மகன்'' என்றார். பின்னர் தம் சீடரிடம், ``இவரே உம் தாய்'' என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்.

திருவிருந்தின்போது எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்னும் பவுலடியாரின் அறிவுரை அன்றைய கொரிந்து நகரக் கிறித்தவர்களுக்கு எவ்வளவு பொருந்தியதோ, அதே அளவு இன்றைக்கும் பொருத்தமானதாக, பொருளுள்ளதாக இருக்கிறது என்பது ஒரு வேதனையான உண்மை. அன்றைய நாள்களில் ஒற்றுமையின் விருந்தான திருவிருந்தில் பிளவுபட்ட மனதினராய், தகுதியற்ற உள்ளத்தினராய் கலந்துகொண்டனர். இன்றும்கூட சாதி உணர்வு, பகை உணர்வு, ஏற்றத்தாழ்வுகள் அத்தனை இருந்தும், எந்தவித உறுத்தல் உணர்வும் இன்றி ஆயிரக்கணக்கான கிறித்தவர்கள் திருவிருந்தில் பங்குபெற்றுக்கொண்டுதான் இருக்கிறோம். கடவுளின் திருச்சபையை இழிவுபடுத்தி, இல்லாதோரை இழிவுபடுத்தும் செயலில் இன்றும் நாம் ஈடுபட்டுவருகிறோம். இதை நாம் உணர்கிறோமா? பவுலின் கடினமான சாட்டையடிச் சொற்கள் நம்மைச் சுடட்டும். நற்கருணை அருள்சாதனத்தில் நமக்கு உண்மையான நம்பிக்கை இருந்தால், நமது தகுதியின்மையை ஏற்றுக்கொண்டு மன்னிப்பு கோர வேண்டும். திருவிருந்தின் முரண்பாடுகளைக் களைய வேண்டும்.

மன்றாட்டு:

வானக உணவாக உம்மையே எங்களுக்குத் தந்த இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உமது ஒற்றுமையின் விருந்தில் பிளவுபட்ட உள்ளத்தினராய், சாதி, சமத்துவமற்ற உணர்வுகளோடு கலந்துகொண்டதற்காக வருந்துகிறோம். எங்களை மாற்றும். எங்களின் தகுதியின்மையைப் போக்கும். ஆமென்.