யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 23வது வாரம் புதன்கிழமை
2014-09-10




முதல் வாசகம்

மணமானோர் மணவிலக்குக்கு தேடக்கூடாது; மணமாகாதோர் திருமணம் செய்துகொள்ள வழி தேடக்கூடாது.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 7: 25-31

சகோதரர் சகோதரிகளே, மணமாகாதவர்களைக் குறித்துப் பார்ப்போம். இவர்களைப் பற்றிய ஆண்டவரின் கட்டளை எதுவும் என்னிடம் இல்லை. எனினும், ஆண்டவரின் இரக்கத்தால் நம்பிக்கைக்குரியவனாய் இருக்கும் நான் என் கருத்தைச் சொல்கிறேன். மணமாகாதோர் தாம் அழைக்கப்பட்ட நிலையிலேயே இருந்துவிடுவது நல்லது. இப்போதுள்ள இடர் நிலையை முன்னிட்டு இவ்வாறு இருப்பதே நல்லதென எண்ணுகிறேன். மனைவியுடன் திருமணத்தால் இணைக்கப்பட்டு இருப்பவர்கள் மணவிலக்குக்கு வழி தேடக் கூடாது; மனைவியுடன் இணைக்கப்படாதவர்கள் திருமணம் செய்து கொள்ள வழி தேடக் கூடாது. நீங்கள் திருமணம் செய்து கொண்டால் அது பாவமல்ல. இளம் பெண்கள் திருமணம் செய்து கொண்டால் அதுவும் பாவமல்ல. ஆனால் திருமணம் செய்து கொள்வோர் இவ்வுலக வாழ்வில் இன்னலுறுவர். நீங்கள் அவ்வின்னல்களுக்கு உள்ளாகாதிருக்க வேண்டும் என்பதே என் நோக்கம். அன்பர்களே, நான் சொல்வது இதுவே: இனியுள்ள காலம் குறுகியதே. இனி மனைவி உள்ளவரும் மனைவி இல்லாதவர்போல இருக்கட்டும். அழுபவர் அழாதவர் போலவும், மகிழ்ச்சியுறுவோர் மகிழ்ச்சியற்றவர் போலவும், பொருள்களை வாங்குவோர் அவை இல்லாதவர் போலவும் இருக்கட்டும். உலகச் செல்வத்தைப் பயன்படுத்துவோர் அவற்றில் முழுமையாக ஈடுபடாதவர் போல் இருக்கட்டும். இவ்வுலகு இப்போது இருப்பது போல் நெடுநாள் இராது

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

கேளாய் மகளே! கருத்தாய்க் காதுகொடுத்துக் கேளாய்!
திருப்பாடல் 45: 10-11. 13-14. 15-16

கேளாய் மகளே! கருத்தாய்க் காதுகொடுத்துக் கேள்! உன் இனத்தாரை மறந்துவிடு; பிறந்தகம் மறந்துவிடு. 11 உனது எழிலில் நாட்டங் கொள்வார் மன்னர்; உன் தலைவர் அவரே; அவரைப் பணிந்திடு! பல்லவி

13 அந்தப்புரத்தினிலே மாண்புமிகு இளவரசி தங்கமிழைத்த உடையணிந்து தோன்றிடுவாள். 14 பல வண்ணப் பட்டுடுத்தி மன்னரிடம் அவளை அழைத்து வருவர்; கன்னித் தோழியர் புடைசூழ அவள் அடியெடுத்து வந்திடுவாள். பல்லவி

15 மன்னவரின் மாளிகைக்குள் நுழையும்போது அவர்கள் மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும் அழைத்து வரப்படுவர். 16 உம் தந்தையரின் அரியணையில் உம் மைந்தரே வீற்றிருப்பர்; அவர்களை நீர் உலகுக்கெல்லாம் இளவரசர் ஆக்கிடுவீர். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 20-26

அக்காலத்தில் இயேசு சீடர்மீது தம் பார்வையைப் பதித்துக் கூறியவை: ``ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே. இப்பொழுது பட்டினியாய் இருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் நிறைவு பெறுவீர்கள். இப்பொழுது அழுதுகொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள். மானிடமகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர். அந்நாளில் துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அவர்களுடைய மூதாதையரும் இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்து வந்தனர். ஆனால் செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் எல்லாம் அனுபவித்துவிட்டீர்கள். இப்போது உண்டு கொழுத்திருப்போரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் பட்டினி கிடப்பீர்கள். இப்போது சிரித்து இன்புறுவோரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் துயருற்று அழுவீர்கள். மக்கள் எல்லாரும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் அவர்களின் மூதாதையரும் போலி இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்தார்கள்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே'' (லூக்கா 6:20)

இயேசு ஆற்றிய இரு பேருரைகள் ''மலைப் பொழிவு'' (மத் 5-7) எனவும் ''சமவெளிப் பொழிவு'' (லூக் 6:20-49) எனவும் அழைக்கப்படுகின்றன. லூக்கா நற்செய்தியில் வருகின்ற ''சமவெளிப் பொழிவு'' மத்தேயு நற்செய்தியில் உள்ள ''மலைப் பொழிவு'' என்னும் உரையிலிருந்து மாறுபட்டது. லூக்கா நற்செய்திப்படி இயேசு ''ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்'' எனப் போற்றுகிறார்; மத்தேயு நற்செய்தியில் ''ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்'' என்றுள்ளது. இந்த இரு பாடங்களிலும் சிறப்பு அம்சங்கள் உண்டு. லூக்கா ''ஏழைகள்'' என்று குறிப்பிடுவது இவ்வுலகப் பார்வைப்படி வறுமையில் வாடுகின்ற மக்களைக் குறிக்கும். வறுமையால் வாடுகின்ற மக்கள் கடவுளின் அன்புக்கு உரியவர்கள் என்றும், கடவுளின் ஆட்சியில் புகுவார்கள் என்றும் இயேசு கூறியது எதற்காக? இயேசு வறுமை நல்லது என்று கூறுகிறாரா? வறுமையை நாம் வரவேற்க வேண்டும் என்று மொழிகிறாரா? இல்லை என்றே பதிலிறுக்க வேண்டும்.

வறுமையில் வாடும் மக்கள் தங்கள் சொந்த செல்வத்தில் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். அவர்களிடம்தான் செல்வம் இல்லையே! மாறாக, ஏழைகள் கடவுளிடத்தில் நம்பிக்கைவைப்பார்கள். கடவுளையே நம்பி வாழ்வார்கள். எனவே, அவர்கள் ''கொடுத்துவைத்தவர்கள்'' எனலாம். அதே நேரத்தில் தங்கள் செல்வத்தை நம்பி வாழ்கின்ற ''செல்வர்கள்'' உண்மையிலேயே பரிதாபத்துக்கு உரியவர்கள். இவர்கள் கடவுளை நம்புவதில்லை. எனவே, நம் உள்ளத்தில் பற்றற்று நாம் வாழ்ந்து, இறைவனையே பற்றிக்கொள்ள வேண்டும். ஏழைகளில் இறைவனைக் கண்டு, அவர்களுடைய ஏழ்மையைப் போக்கிட நாம் உழைக்கவேண்டும். அதே நேரத்தில், கடவுளிடத்தில் நம் முழு நம்பிக்கையையும் வைத்து, அவருடைய விருப்பத்திற்கு ஏற்ப, அவருடைய ஆவியால் நாம் வழிநடத்தப்பட வேண்டும். அப்போது நாம் உண்மையிலேயே பேறுபெற்றோர் ஆவோம்.

மன்றாட்டு:

இறைவா, இவ்வுலகச் செல்வங்களை நம்பியிராமல் உம்மையே நம்பி வாழ எங்களுக்கு அருள்தாரும்.