யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 23வது வாரம் செவ்வாய்க்கிழமை
2014-09-09

புனித பீட்டர் கிளவர்




முதல் வாசகம்

சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் மற்றவருக்கு எதிராக வழக்குத் தொடரலாமா? அதுவும் நம்பிக்கை கொள்ளாத மக்கள் முன்னிலையிலா?
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 6: 1-11

சகோதரர் சகோதரிகளே, உங்களுள் ஒருவருக்கு மற்றொருவரோடு வழக்கு இருப்பின், தீர்ப்புக்காக இறைமக்களிடத்தில் போகாமல் நம்பிக்கை கொள்ளாதோரிடம் செல்லத் துணிவதேன்? இறைமக்கள்தான் உலகுக்குத் தீர்ப்பு அளிப்பவர்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? உலகுக்கே தீர்ப்பளிக்கப் போகும் நீங்கள் உங்களிடையே உள்ள சின்னஞ் சிறிய வழக்குகளைத் தீர்த்துக்கொள்ளத் தகுதியற்றவர்களாகி விட்டீர்களா? வானதூதர்களுக்கும் தீர்ப்பு அளிப்பது நாம்தான் என்பதும் உங்களுக்குத் தெரியாதா? அப்படியிருக்க அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் வழக்குகளை நீங்களே தீர்த்துக்கொள்ள முடியாதா? அத்தகைய வழக்குகளைத் தீர்க்கச் சபையினரால் புறக்கணிக்கப்பட்டோரை நடுவர்களாக அமர்த்துவது எப்படி? நீங்கள் வெட்கமடையவே இதைச் சொல்கிறேன். சகோதரர் சகோதரிகளிடையே உள்ள வழக்குகளைத் தீர்க்க உங்களுள் ஞானமுள்ளவர் ஒருவர்கூட இல்லையா? சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் மற்றவருக்கு எதிராக வழக்குத் தொடரலாமா? அதுவும் நம்பிக்கை கொள்ளாத மக்கள் முன்னிலையிலா? நீங்கள் ஒருவர்மீது மற்றவர் வழக்குத் தொடருவதே உங்களுக்கு ஒரு தோல்வியாகும். உங்களுக்கு இழைக்கப்பட்ட தீங்கை நீங்கள் பொறுத்துக்கொள்ளக் கூடாதா? உங்கள் உடைமைகளை வஞ்சித்துப் பறிக்கும்போது அதை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்துவிடக் கூடாதா? ஆனால் நீங்களே ஒருவருக்கொருவர் தீங்கிழைக்கிறீர்கள்; வஞ்சித்துப் பறிக்கிறீர்கள்; அதுவும் சகோதரர் சகோதரிகளுக்கே இப்படிச் செய்கிறீர்கள். தீங்கிழைப்போருக்கு இறையாட்சியில் உரிமையில்லை என்று உங்களுக்குத் தெரியாதா? ஏமாந்து போகாதீர்கள்; பரத்தைமையில் ஈடுபடுவோர், சிலைகளை வழிபடுவோர், விபசாரம் செய்வோர், தகாத பாலுறவு கொள்வோர், ஒருபால் புணர்ச்சியில் ஈடுபடுவோர், திருடர், பேராசையுடையோர், குடிவெறியர், பழிதூற்றுவோர், கொள்ளை அடிப்போர் ஆகியோர் இறையாட்சியை உரிமையாக்கிக் கொள்வதில்லை. உங்களுள் சிலர் இவ்வாறுதான் இருந்தீர்கள். ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயராலும் நம் கடவுளின் ஆவியாலும் கழுவப்பட்டுத் தூயவரானீர்கள்; கடவுளுக்கு ஏற்புடையவராகவும் இருக்கிறீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்.
திருப்பாடல் 149: 1-2. 3-4. 5-6,9

ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்; அவருடைய அன்பர் சபையில் அவரது புகழைப் பாடுங்கள். 2 இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக் குறித்து மகிழ்ச்சி கொள்வதாக! சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர்வார்களாக! பல்லவி

3 நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக; மத்தளம் கொட்டி, யாழிசைத்து அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக! 4 ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்; தாழ் நிலையிலுள்ள அவர்களுக்கு வெற்றியளித்து மேன்மைப்படுத்துவார். பல்லவி

5 அவருடைய அன்பர் மேன்மையடைந்து களிகூர்வராக! மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவராக! 6ய அவர்களின் வாய் இறைவனை ஏத்திப் புகழட்டும்; 9b இத்தகைய மேன்மை ஆண்டவர்தம் அன்பர் அனைவருக்கும் உரித்தானது. பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன், என்கிறார் ஆண்டவர் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 12-19

அந்நாள்களில் இயேசு வேண்டுவதற்காக ஒரு மலைக்குப் போனார். அங்குக் கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார். விடிந்ததும் அவர் தம் சீடர்களைத் தம்மிடம் கூப்பிட்டு அவர்களுள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார். அவர்கள் முறையே பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், அவருடைய சகோதரர் அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதி எனப்பட்ட சீமோன், யாக்கோபின் மகன் யூதா, துரோகியாக மாறிய யூதாசு இஸ்காரியோத்து என்பவர்களே. இயேசு அவர்களுடன் இறங்கி வந்து சமவெளியான ஓரிடத்தில் நின்றார். பெருந்திரளான அவருடைய சீடர்களும் யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும் தீர், சீதோன் கடற்கரைப் பகுதிகளிலிருந்தும் வந்த பெருந்திரளான மக்களும் அங்கே இருந்தார்கள். அவர் சொல்வதைக் கேட்கவும் தங்கள் பிணிகள் நீங்கி நலமடையவும் அவர்கள் வந்திருந்தார்கள். தீய ஆவிகளால் தொல்லைக்கு உள்ளானவர்கள் குணமானார்கள். அவரிடமிருந்து வல்லமை வெளிப்பட்டு அனைவர் பிணியையும் போக்கியதால், அங்குத் திரண்டிருந்த மக்கள் யாவரும் அவரைத் தொட முயன்றனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''விடிந்ததும் இயேசு தம் சீடர்களைத் தம்மிடம் கூப்பிட்டு அவர்களுள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார்'' (லூக்கா 6:13)

''பன்னிரு திருத்தூதர்'' இயேசுவோடு மிக நெருக்கமான உறவில் ஒன்றித்திருந்த சீடர்கள் ஆவர். இப்பன்னிருவரும் ''அப்போஸ்தலர்'' என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றனர். கிரேக்க மொழியில் ''அப்போஸ்தொலோஸ்'' என்றால் ''அனுப்பப்பட்டவர்'', ''தூதர்'' என்பது பொருள். இவர்கள் எதற்காக அனுப்பப்பட்டார்கள் என்பதை நற்செய்தி ஆசிரியர்கள் எடுத்துக் கூறுகின்றனர். அதாவது, ''தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் இயேசு பன்னிருவரையும் நியமித்தார்'' (மாற் 3:14-15). லூக்காவும் மாற்கும் இச்செய்தியை விவரிக்கும்போது ''இயேசு ஒரு மலைக்குப் போனார்'' என்றும், அப்போது பன்னிருவரையும் திருத்தூதர்களாக ஏற்படுத்தினார் எனவும் குறிப்பிடுகின்றனர் (மாற் 3:13; லூக் 6:12). அது மட்டுமன்று, இயேசு ''மலைக்குப் போய் அங்குக் கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார்'' எனவும் லூக்கா எழுதுகிறார் (லூக் 13:12). ''மலை'' என்னும் உருவகம் விவிலிய வழக்கில் சிறப்பான பொருளுடைத்தது. எடுத்துக்காட்டாக, எரிந்துகொண்டிருந்த முட்புதரின் நடுவே கடவுளின் பிரசன்னத்தை மோசே உணர்ந்து அனுபவித்தது ஓரேபு என்னும் மலையில் (விப 3:1-6); இஸ்ரயேல் மக்களோடு கடவுள் உடன்படிக்கை செய்துகொண்டது சீனாய் என்னும் ''மலை''யில் நிகழ்ந்தது; அதே மலையில்தான் மோசே கடவுளிடமிருந்து திருச்சட்டத்தைப் பெற்று அதை மக்களுக்கு அறிவித்தார் (விப 19:20-25; 20:1-21). மேலும் இயேசு மலைமீது உருமாற்றமடைந்த போதும் (மத் 17:1-9) ஒலிவ மலையில் துன்புற்ற போதும் தம்மோடு சில திருத்தூதர்களை அழைத்துச் சென்றிருந்தார் (லூக் 22-39:42). ஆக, ''மலை'' என்னும் உருவகத்தின் வழியாக நற்செய்தி ஆசிரியர்கள் உணர்த்துகின்ற கருத்து இது: இயேசு பன்னிருவரைத் திருத்தூதர்களாக ஏற்படுத்திய நிகழ்ச்சி கடவுளின் திட்டத்தில் மிக முக்கியமான ஒன்று. கடவுளின் உடனிருப்பு அந்த நிகழ்ச்சியில் தோன்றுகிறது. முற்காலத்தில் பன்னிரு குலத்தலைவர்கள் இஸ்ரயேல் மக்களுக்கு அடித்தளம் போல அமைந்தார்கள். அதுபோல, புதிய உடன்படிக்கையின்போது பன்னிரு திருத்தூதர்கள் இயேசு உருவாக்குகின்ற புதிய சமூகத்திற்குத் அடித்தளம் போல அமைவார்கள்.

இங்கு நாம் கருத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு அம்சம் இயேசு தாம் தேர்ந்துகொண்ட பன்னிருவருக்கும் ''திருத்தூதர் என்று பெயரிட்டார்'' என்னும் செய்தியாகும். மண்ணையும் விண்ணையும் படைத்த கடவுள் படைப்புப் பொருள்களுக்குப் ''பெயரிட்டார்'' என்னும் செய்தி தொடக்க நூலில் உண்டு (தொநூ 1:3-10). அவை அனைத்தும் அவருடைய உடைமைகள். விலங்குகளுக்குப் ''பெயரிடும்'' பொறுப்பைக் கடவுள் ஆதாமுக்குக் கொடுத்த போது முதல் மனிதர்கள் கடவுளின் வல்லமையில் பங்கேற்று, படைப்புப் பொருள்களை ஆண்டு நடத்தும் பொறுப்பையும் பெற்றார்கள் (தொநூ 2:20). அதுபோலவே, இயேசு பன்னிருவருக்குத் ''திருத்தூதர் என்று பெயரிட்ட'' நிகழ்ச்சியிலிருந்து அவர்களுக்குத் தம் அதிகாரத்தையும் ஆற்றலையும் பகிர்ந்தளிக்கின்றார் என நாம் அறிகிறோம். திருச்சபையின் பண்புகளில் ஒன்று அதன் ''திருத்தூது இயல்பு'' ஆகும். அதாவது, மக்களுக்கு நற்செய்தியை அறிவித்து, அவர்களை இயேசு அறிவித்த இறையாட்சியில் பங்கேற்க அழைக்கும் பொறுப்பைப் பன்னிரு திருத்தூதர்களும் பெற்றது போல, கிறிஸ்துவின் பெயரால் கூடிவருகின்ற திருச்சபையும் இயேசு பற்றிய ''தூது அறிவிக்க'' அனுப்பப்பட்டுள்ளது. நாம் நற்செய்தியின் ''தூதுவர்களாக'' முழு மூச்சுடன் செயல்பட அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் அன்பின் செய்தியை உலகுக்கு அறிவிக்க எங்களுக்கு ஆற்றல் அளித்தருளும்.