திருவழிப்பாட்டு ஆண்டு A (07-09-2014)

குற்றம் செய்தவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது: உங்கள் உறவு தொடரும்./> குற்றம் செய்தவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது: உங்கள் உறவு தொடரும்./> குற்றம் செய்தவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது: உங்கள் உறவு தொடரும்./>


திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் அன்புமிக்க சகோதர, சகோதரிகளே! இன்று பொதுக்காலம் இருபத்திமூன்றாம் ஞாயிறு. அருளும், அமைதியும் அருளும் நம் ஆண்டவரின் திருப்பாதத்தில் அவருடைய வார்த்தை கேட்டு நிறைவுபெற ஒன்று கூடியுள்ளோம். உயிரினும் மேலான பேரன்புடையவரும், நமக்கு என்றும் துணையாக இருப்பவருமான நம் இறைத் தந்தையின் திருநாமத்தில் நல் வாழ்த்துக்கள் கூறி உங்கள் அனைவரையும் அன்புடன் இத்திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு வரவேற்று நிற்கின்றோம்.

இன்றைய நாளில்: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள் என்ற அழைப்பை நாம் கேட்கின்றோம். நாம் மனம் மாறி நம் அயலவரின் மனமாற்றத்திற்காகவும், நல் வாழ்விற்காகவும் உழைக்கவேண்டுமெனவும், நம்மை அர்ப்பணிக்க வேண்டுமெனவும் நமக்குச் சொல்லப்படுகின்றது. உன் மீது அன்பு கூர்வது போல், உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக என்னும் வார்த்தையின் வழியாக அந்த மாபெரும் அழைப்பை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென இறைவன் விரும்புகின்றார். ஆகவே நாம் அனைவரும் நம் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாமல், அண்டவரின் குரலுக்குச் செவிசாய்த்து, பிறரிடத்தில் அன்புகூர்வதன் வழியாக இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றி வாழ வரம் வெண்டிச் செபிப்போம்.



முதல் வாசகம்

தீயோர் தம் வழியிலிருந்து திரும்பும்படி நீ அவர்களை எச்சரிக்காவிடில், அவர்களது இரத்தப்பழியை உன் மேல் சுமத்துவேன்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 33: 7-9

ஆண்டவர் கூறியது: மானிடா! நான் உன்னை இஸ்ரயேல் வீட்டாருக்கும் காவலாளியாக ஏற்படுத்தியுள்ளேன். என் வாயினின்று வரும் வாக்கைக் கேட்கும் போதெல்லாம் நீ என் பொருட்டு அவர்களை எச்சரிக்க வேண்டும். தீயோரிடம் நான், ` ஓ தீயோரே! நீங்கள் உறுதியாகச் சாவீர்கள்' என்று சொல்ல, அத்தீயோர் தம் வழியிலிருந்து திரும்பும்படி நீ அவர்களை எச்சரிக்காவிடில், அத்தீயோர் தம் குற்றத்திலேயே சாவர்; ஆனால், அவர்களது இரத்தப் பழியை உன் மேலேயே சுமத்துவேன். ஆனால் தீயோரை அவர்கள் தம் வழியிலிருந்து திரும்ப வேண்டுமென்று நீ எச்சரித்தும் அவர்கள் தம் வழியிலிருந்து திரும்பாவிட்டால், அவர்கள் தம் குற்றத்திலேயே சாவர். நீயோ, உன் உயிரைக் காத்துக் கொள்வாய்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
திருப்பாடல் 95: 1-2. 6-7. 8-9

1 வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். 2 நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப் பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். பல்லவி

6 வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். 7 அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக் காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! பல்லவி

8 அன்று மெரிபாவிலும், பாலைநிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். 9 அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். பல்லவி

இரண்டாம் வாசகம்

அன்பே திருச்சட்டத்தின் நிறைவு.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 13: 8-10

சகோதரர் சகோதரிகளே, நீங்கள் யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே கடனாய் இருக்கட்டும். பிறரிடத்தில் அன்புகூர்பவர் திருச்சட்டத்தை நிறைவேற்றுபவர் ஆவார். ஏனெனில், ``விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே, பிறருக்குரியதைக் கவர்ந்திட விரும்பாதே'' என்னும் கட்டளைகளும், பிற கட்டளைகளும், ``உன்மீது அன்புகூர்வதுபோல், உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக'' என்னும் கட்டளையில் அடங்கியுள்ளன. அன்பு அடுத்திருப்பவருக்குத் தீங்கிழைக்காது. ஆகவே அன்பே திருச்சட்டத்தின் நிறைவு.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுள் உலகினரைக் கிறிஸ்துவின் வாயிலாகத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை அவரே எங்களிடம் ஒப்படைத்தார்அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 15-20

அக்காலத்தில் இயேசு சீடர்களிடம் கூறியது: ``உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும். இல்லையென்றால் `இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்குமூலத்தால் அனைத்தும் உறுதி செய்யப்படும்' என்னும் மறைநூல் மொழிக்கு ஏற்ப உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக்கொண்டு போங்கள். அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில் திருச்சபையிடம் கூறுங்கள். திருச்சபைக்கும் செவிசாய்க்காவிடில் அவர் உங்களுக்கு வேற்று இனத்தவர் போலவும் வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும். மண்ணுலகில் நீங்கள் தடை செய்பவை அனைத்தும் விண்ணுலகிலும் தடை செய்யப்படும்; மண்ணுலகில் நீங்கள் அனுமதிப்பவை அனைத்தும் விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார். ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


வாருங்கள், தாள்பணிந்து அவரைத் தொழுவோம்: நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். அவரே நம் கடவுள்:

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

பணியாளருக்குத் துணையாய் இருக்கும் தந்தையே இறைவா!

உம்முடைய பணியாளர்களான எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம்: அவர்கள் தங்கள் பணி வாழ்விலே சவால்களும், தடைகளும், வேதனைகளும் வரும்போது, மனந்தளராமல் உமது அருட்பிரசன்னத்திலும், அருட்கொடைகளிலும் நம்பிக்கை கொண்டு இறைமக்களுக்கு வலுவூட்டும் சக்திகளாகச் செயற்படுவதற்கு வேண்டிய சக்தியையும், ஆற்றலையும் அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

என்றென்றும் எமக்குத் துணைசெய்யும் தந்தையே!

நாங்கள் ஒவ்வொருவரும் எம் தீய வழிகளை விட்டு விலகி, எம் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாமல், அண்டவராகிய உம் குரலுக்குச் செவிசாய்த்து, பிறரிடத்தில் அன்புகூர்வதன் வழியாக உமது விருப்பத்தை நிறைவேற்றி வாழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இரக்கத்தின் ஊற்றே இறைவா!

எம் இளைஞர்கள் ஒவ்வொருவரும் உலகத்தின் மாயக் கவர்ச்சிகளில் தங்கள் உள்ளத்தையும், உடலையும் பறிகொடுக்காது, தமது இதயத்தை உமக்காக மாத்திரமே கொடுத்து, உம்முடைய வாழ்வுதரும் வார்த்தைகளை தம் இதயத்தில் சுமந்து உம்மைப் பின் பற்றி நிறைவடையும் நல்லுள்ளத்தை அவர்களுக்குள் உருவாக்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எங்கள் தந்தையாகிய தந்தையே!

துன்பங்களாலும், துயரங்களாலும், வறுமையாலும் வாடிக்கொண்டிருக்கும் அனைவர்மீதும் இரங்கி, ஆசி வழங்கி, உம் திருமுக ஒளியை அவர்கள்மீது வீசி அமைதியையும், மகிழ்ச்சியையும் அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கருணையும் இரக்கமும் நிறைந்த தந்தையே!

நோயினால் வாடுவோர், தனிமையில் இருப்போர், கவலையினாலும் துன்பங்களினாலும் கலங்குவோர், தேவையில் உழல்வோர், அடிமைத்தனத்துள் வாழ்வோர் அனைவரையும் உமது கருணையினாலும், இரக்கத்தினாலும் நிறைத்து அவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும், நிம்மதியையும் அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

புகழ்ச்சியின் நடுவில் வாழும் மாட்சிமிகு இறைவா,

உம்மைப் போற்றுகிறோம். எங்களைச் சுற்றி நிகழும் பாவங்கள், தீமைகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக மன்னிப்பு கோருகிறோம். தீமைகளைச் சுட்டிக்காட்டி, இறைவாக்குப் பணிபுரியும் ஆற்றல் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இன்றைய சிந்தனை

''உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள்'' (மத்தேயு 18:15)

கிறிஸ்து வழங்கிய அன்புக் கட்டளைக்கு இரு பக்கங்கள் உண்டு. ஒன்று, நாம் கடவுளை அன்புசெய்வது, மற்றொன்று நாம் பிறர் மட்டில் அன்புகாட்டுவது. இந்த இரு பக்கங்களும் ஒரே அன்புக் கட்டளையின் இணைபிரியா அம்சங்கள். ஆனால், பிறரை அன்புசெய்ய வேண்டும் என்னும் கட்டளையை நடைமுறையில் கடைப்பிடிப்பது எப்படி? அன்பின் வடிவங்கள் பல. அவற்றுள் ஒன்றுதான் பிறர் குற்றம் செய்யும்போது அவர்களைத் திருத்துவதற்காக நாம் எடுக்கும் முயற்சி. பிறரிடம் குற்றம் காண்பதையே தங்கள் வாழ்க்கைக் குறிக்கோளாகக் கொள்வோர் சிலர் உண்டு. இவர்கள் தங்களுடைய குறைகளைப் பற்றிக் கவலைப்படாமல் பிறரைத் திருத்துவதிலேயே கருத்தாயிருப்பார்கள். இது இயேசுவின் அணுகுமுறை அல்ல. நம்மிடம் காணப்படுகின்ற குறைகளை நாம் களைந்துவிட்டு, அதன் பின்னர் பிறரிடம் உள்ள குற்றங்களைச் சுட்டிக்காட்டுவதே முறை. ஆனால், குற்றம் காண்பதிலும் பல வகைகள் உண்டு. பிறரைக் குறைகூறுவதற்கென்றே குற்றம் காண்பது உண்மையான அன்பு அல்ல. மாறாக, பிறர் நல்வழிக்குத் திரும்ப வேண்டும் என்னும் நல்லெண்ணத்தோடு பிறருடைய குற்றங்களைத் திருத்துவதற்கு நாம் முயன்றால் அதுவே பிறரன்பின் சிறந்த வெளிப்பாடாக அமையும்.

பிறரைத் திருத்த நாம் முனையும்போது முதல்முதலில் அவர்களோடு தனித்துப் பேசி அக்குறையைச் சரிப்படுத்த வேண்டும் என்பது இயேசு வழங்குகின்ற வழிமுறை. இயேசு இவ்வாறு ஏன் கூறுகிறார் என்றொரு கேள்வியை நாம் கேட்கலாம். இயேசுவின் பார்வையில் எந்த ஒரு மனிதரும் தம்மைக் குற்றமற்றவர் எனக் கூறிட இயலாது. கடவுளின் முன்னிலையில் நாம் அனைவருமே குறையுள்ளவர்கள்தாம். கடவுளின் இரக்கமும் மன்னிப்பும் நம் அனைவருக்கும் தேவையானதே. அப்படியிருக்க, நம் சகோதரர் சகோதரிகளிடம் மட்டும் குற்றம் இருப்பதாக எண்ணி நாம் செயல்படுவதற்கு மாறாக, நமக்குக் கடவுளின் மன்னிப்பு அருளப்படுவதுபோல பிறரும் அதே அன்பு அனுபவத்தை நம் செயல்கள் வழியாகப் பெற்றிட நாம் வழிவகுக்க வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம்மிடமிருந்து நாங்கள் பெறுகின்ற மன்னிப்பு அனுபவத்தால் ஊக்கம் பெற்று எங்களை அடுத்திருப்போரையும் அன்போடு நெறிப்படுத்த எங்களுக்கு அருள்தாரும்.