திருவழிப்பாட்டு ஆண்டு A (31-08-2014)

என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, என்னைப் பின்பற்றட்டும்./> என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, என்னைப் பின்பற்றட்டும்./> என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, என்னைப் பின்பற்றட்டும்./>


திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் அன்புமிக்க சகோதர, சகோதரிகளே! உயிரினும் மேலான பேரன்புடையவரும், நமக்கு என்றும் துணையாக இருப்பவருமான நம் இறைத் தந்தையின் திருநாமத்தில் நல் வாழ்த்துக்கள் கூறி உங்கள் அனைவரையும் அன்புடன் இத்திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு வரவேற்று நிற்கின்றோம்.

இன்று நாம் ஆண்டின் பொதுக்காலம் இருபத்திரெண்டாம் ஞாயிறு தினத் திருப்பலியைக் கொண்டாடுகின்றோம். இயேசுவைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு அவரைப் பின்பற்ற வேண்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். இந்த இறைவார்த்தைகள் நாம் எதை இழந்தாலும் கடவுளையும் அவர் மீது கொண்டுள்ள விசுவாசத்தையும் இழந்துவிடக் கூடாது என்பதனை நமக்கு உணர்த்தி நிற்கின்றன. எனவே நாம் உலகத்தின் பொருள்கள், செல்வங்கள், ஆட்கள், புகழ் ஆகியவற்றை ஆதாயமாக்கிக் கொள்ள உழைக்காமல், இறையரசை ஆதாயமாக்கிக் கொள்ள இத் திருப்பலியில் வரம் கேட்டுச் செபிப்போம்.



முதல் வாசகம்

ஆண்டவரின் வாக்கு என்னை பழிச்சொல்லுக்கும் நகைப்புக்கும் ஆளாக்கியது
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 20: 7-9

ஆண்டவரே! நீர் என்னை ஏமாற்றிவிட்டீர்; நானும் ஏமாந்து போனேன்; நீர் என்னைவிட வல்லமையுடையவர்; என்மேல் வெற்றி கொண்டுவிட்டீர்; நான் நாள் முழுவதும் நகைப்புக்கு ஆளானேன். எல்லாரும் என்னை ஏளனம் செய்கின்றார்கள். நான் பேசும்போதெல்லாம் `வன்முறை அழிவு' என்றே கத்த வேண்டியுள்ளது; ஆண்டவரின் வாக்கு என்னை நாள் முழுதும் பழிச்சொல்லுக்கும் நகைப்புக்கும் ஆளாக்கியது. ``அவர் பெயரைச் சொல்ல மாட்டேன்; அவர் பெயரால் இனிப் பேசவும் மாட்டேன்'' என்பேனாகில், உம் சொல் என் இதயத்தில் பற்றியெரியும் தீ போல இருக்கின்றது. அது என் எலும்புகளுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. அதனை அடக்கிவைத்துச் சோர்ந்து போனேன்; இனி என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: கடவுளே! என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது
திருப்பாடல் 63: 1. 2-3. 4-5. 7-8

கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம் போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது. பல்லவி

2 உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன். 3 ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது; என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன. பல்லவி

4 என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்; கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன். 5 அறுசுவை விருந்தில் நிறைவடைவது போல என் உயிர் நிறைவடையும்; என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும். பல்லவி

7 ஏனெனில், நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்; உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன். 8 நான் உம்மை உறுதியாகப் பற்றிக்கொண்டேன்; உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது. பல்லவி

இரண்டாம் வாசகம்

தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 12: 1-2

சகோதரர் சகோதரிகளே, கடவுளுடைய இரக்கத்தை முன்னிட்டு உங்களை வேண்டுகிறேன்: கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள். இதுவே நீங்கள் செய்யும் உள்ளார்ந்த வழிபாடு. இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப்பெற்று மாற்றம் அடைவதாக! அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக!அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 21-27

அக்காலத்தில் இயேசு தாம் எருசலேமுக்குப் போய் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் பலவாறு துன்பப்படவும் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் என்பதைத் தம் சீடருக்கு அந்நேரம் முதல் எடுத்துரைக்கத் தொடங்கினார். பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்து கொண்டு, ``ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது'' என்றார். ஆனால் இயேசு பேதுருவைத் திரும்பிப் பார்த்து, ``என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்; ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவைபற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்'' என்றார். பின்பு இயேசு தம் சீடரைப் பார்த்து, ``என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக, என் பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவார். மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்? மானிட மகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வானதூதர்களுடன் வரப் போகிறார்; அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்பக் கைம்மாறு அளிப்பார்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன். என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது. நீரின்றி வறண்ட தரிசு நிலம் போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

பணியாளருக்குத் துணையாய் இருக்கும் தந்தையே இறைவா!

உம்முடைய பணியாளர்களான எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம்: அவர்கள் தங்கள் பணி வாழ்விலே சவால்களும், தடைகளும், வேதனைகளும் வரும்போது, மனந்தளராமல் உமது அருட்பிரசன்னத்திலும், அருட்கொடைகளிலும் நம்பிக்கை கொண்டு இறைமக்களுக்கு வலுவூட்டும் சக்திகளாகச் செயற்படுவதற்கு வேண்டிய சக்தியையும், ஆற்றலையும் அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

என்றென்றும் எமக்குத் துணைசெய்யும் தந்தையே!

எங்களுடைய வாழ்வு முழுவுதும் நாம் ஒவ்வொருவரும் உமக்கு ஏற்புடையதைப்பற்றியே சிந்தித்துச் செற்பட்டு, புதுப்பிறப்படைந்து, மனமாற்றம் பெற்றுப் பகிர்ந்த வாழும் இறைமக்கள் சமுதாயமாக வாழ்ந்து, உண்மயான நன்றிப்பலி செலுத்தும் மனப்பக்குவத்தை எமக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இரக்கத்தின் ஊற்றே இறைவா!

எம் இளைஞர்கள் ஒவ்வொருவரும் உலகத்தின் மாயக் கவர்ச்சிகளில் தங்கள் உள்ளத்தையும், உடலையும் பறிகொடுக்காது, தமது இதயத்தை உமக்காக மாத்திரமே கொடுத்து, உம்முடைய வாழ்வுதரும் வார்த்தைகளை தம் இதயத்தில் சுமந்து உம்மைப் பின் பற்றி நிறைவடையும் நல்லுள்ளத்தை அவர்களுக்குள் உருவாக்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எங்கள் தந்தையாகிய தந்தையே!

துன்பங்களாலும், துயரங்களாலும், வறுமையாலும் வாடிக்கொண்டிருக்கும் அனைவர்மீதும் இரங்கி, ஆசி வழங்கி, உம் திருமுக ஒளியை அவர்கள்மீது வீசி அமைதியையும், மகிழ்ச்சியையும் அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கருணையும் இரக்கமும் நிறைந்த தந்தையே!

நோயினால் வாடுவோர், தனிமையில் இருப்போர், கவலையினாலும் துன்பங்களினாலும் கலங்குவோர், தேவையில் உழல்வோர், அடிமைத்தனத்துள் வாழ்வோர் அனைவரையும் உமது கருணையினாலும், இரக்கத்தினாலும் நிறைத்து அவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும், நிம்மதியையும் அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இழப்பில்தான் நிறைவான இன்பம் எனக் கற்றுத் தந்த இயேசுவே

உம்மைப் போற்றுகிறோம். எங்களுக்காக உம்மையே நீர் கையளித்தீர். உமக்காக நாங்கள் வாழும் வரத்தைத் தாரும். எங்கள் வாழ்வின் இன்பங்கள், நிறைவுகள் என்று நாங்கள் கருதுபவற்றை உமக்காக, பிறருக்காக விட்டுக்கொடுக்க, தியாகம் செய்ய நல்ல மனதை எங்களுக்குத் தாரும். நாங்கள் இழக்கின்ற ஒவ்வொன்றுக்கும் நீர் பல மடங்கு கைமாறு தருவீர் என்பதை உணர்ந்து வாழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இன்றைய சிந்தனை

''பின்பு இயேசு தம் சீடரைப் பார்த்து, 'என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்' என்றார்'' (மத்தேயு 16:24)

இயேசுவின் சீடர்கள் இயேசுவைத் தம் தலைவராக, குருவாக ஏற்பவர்கள். சீடர்கள் தம்மைப் ''பின்பற்ற வேண்டும்'' என இயேசு கேட்டார். பின்பற்றுதல் என்பது ஒருவரின் பின்னால் நடந்துசெல்கின்ற வெளிச்செயலை மட்டுமல்ல, உள்ளார்ந்த விதத்தில் நிகழ்கின்ற ஒரு செயலை இவண் குறிக்கிறது. அதாவது, இயேசுவைப் பின்பற்ற விரும்புவர் முதலில் ''தான், தனது'' என்னும் உணர்வைக் கைவிடவேண்டும்; தன்னைப் பற்றி எண்ணாமல் இயேசுவிடத்தில் தன் எண்ணத்தைத் திருப்ப வேண்டும். கடவுள் நமக்குத் தருகின்ற இவ்வுலக வாழ்வு பொருளற்றது என்பதற்காக அல்ல, மாறாக, இயேசு வாக்களிக்கின்ற ''நிலையான வாழ்வுக்கு'' முன்னால் இவ்வுலக வாழ்வு சிறியதே என உணர்ந்து நாம் வாழ்வதற்கு அழைக்கப்படுகிறோம். இயேசுவும் தம்மைப் பற்றிக் கவலைப்படாமல் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதிலேயே கருத்தாயிருந்தார் (காண்க: பிலி 2:6-8). அதுபோலவே இயேசுவின் சீடர்களும் இருக்க வேண்டும்.

தம்மைப் பின்பற்றுவோர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு இயேசு விதிக்கின்ற இரண்டாம் நிபந்தனை நாம் நமது ''சிலுவையைச் சுமக்க வேண்டும்'' என்பதாகும் (மத் 16:24). இதுவும் தன்னலம் துறத்தலைக் குறிப்பதே. சிலுவை என்பது நம் வாழ்வில் ஏற்படுகின்ற இன்னல்களையும் தடைகளையும் சிக்கல்களையும் குறிக்கும் அடையாளம்; குறிப்பாக நாம் இயேசுவைப் போல நம் உயிரையே கையளிக்கவும் தயங்கலாகாது என்பதற்குச் சிலுவை ஓர் அடையாளமாக உள்ளது. எனவே, இயேசுவின் சீடர்களாக வாழ விரும்பும் நாம் முழுமனத்தோடு அவரைப் பின்பற்ற அழைக்கப்படுகிறோம். அவ்வாறு செயல்படும்போது நாம் நம் உயிரையும் ஒரு பொருட்டென மதிக்காமல் அவருக்காகவே வாழ்வோம்; அவருக்காக உயிர் துறக்கவும் தயாராயிருப்போம்.

மன்றாட்டு:

இறைவா, எம் வாழ்வையே பற்றிக்கொள்ளாமல் உம் திருமகனைப் பற்றிக்கொண்டு அவர் வழி சென்றிட எங்களுக்கு அருள்தாரும்.