யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 20வது வாரம் திங்கட்கிழமை
2014-08-18




முதல் வாசகம்

எசேக்கியேல் உங்களுக்கு ஓர் அடையாளமாய் இருப்பான்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 24: 15-24

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: ``மானிடா! உன் கண்களுக்கு இன்பம் தருவதை உன்னிடமிருந்து ஒரே நொடியில் எடுத்துவிடப் போகிறேன். ஆனால் நீ புலம்பவோ, அழவோ, கண்ணீர் சிந்தவோ கூடாது. மெதுவாய்ப் பெருமூச்சு விடு! இறந்தோர்க்காய்ப் புலம்பாதே! உன் தலைப்பாகையைக் கட்டிக்கொள்! காலில் மிதியடியை அணிந்துகொள்! உன் வாயை மூடிக்கொள்ளாதே! இழவு கொண்டாடு வோரின் உணவை உண்ணாதே!'' நான் மக்களிடம் காலையில் உரையாடினேன். மாலையில் என் மனைவி இறந்துவிட்டாள். மறுநாள் காலையில் ஆண்டவர் கட்டளையிட்டதைச் செய்தேன். அப்போது மக்கள் என்னிடம், `நீர் செய்வதன் பொருள் என்னவென்று எங்களுக்குச் சொல்ல மாட்டீரோ?' என்று கேட்டனர். எனவே, நான் அவர்களுக்குச் சொன்னது: `ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: இஸ்ரயேல் வீட்டாருக்குச் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உங்கள் வலிமையின் பெருமையும், கண்களின் இன்பமும், இதயத்தின் விருப்பமுமாகிய என் தூயகத்தை நான் தீட்டுப்படுத்துவேன்; நீங்கள் விட்டுச் சென்ற ஆண் மக்களும் பெண் மக்களும் வாளால் மடிவர். நான் செய்ததுபோல் நீங்களும் செய்வீர்கள்; நீங்களும் உங்கள் வாயை மூடிக்கொள்ள மாட்டீர்கள்; இழவு கொண்டாடுவோரின் உணவை உண்ணவும் மாட்டீர்கள். தலைப்பாகையை உங்கள் தலையில் வைத்திருப்பீர்கள். கால்களில் மிதியடிகள் இருக்கும். நீங்கள் புலம்பவோ அழவோ மாட்டீர்கள். ஆனால் உங்கள் குற்றப்பழி குறித்துத் தளர்வுற்று உங்களிடையே புலம்பிக் கொள்வீர்கள். இவ்வாறு எசேக்கியேல் உங்களுக்கு ஓர் அடையாளமாய் இருப்பான். அவன் செய்ததுபோல் நீங்களும் செய்வீர்கள். இவை நடக்கையில் நானே தலைவராகிய ஆண்டவர் என அறிந்துகொள்வீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

நீ உன்னை ஈன்ற பாறையைப் புறக்கணித்தாய்.
இணைச்சட்டம் 32: 18-19. 20. 21

உன்னை ஈன்ற பாறையைப் புறக்கணித்தாய்; உன்னை உருவாக்கிய கடவுளை மறந்துவிட்டாய். 19 தம் மைந்தரும் தம் மகளிரும் தமக்குச் சினமூட்டியதை, ஆண்டவர் கண்டு அவர்களை இகழ்ந்து ஒதுக்கினார். பல்லவி

20 அவர் உரைத்தார்: எனது முகத்தை அவர்களிடமிருந்து மறைத்துக் கொள்வேன்; அவர்களது முடிவு என்னவென்று நான் கவனித்துக் கொள்வேன்; ஏனெனில், அவர்கள் கேடுகெட்ட தலைமுறையினர்; நேர்மை அறவே அற்ற பிள்ளைகள். பல்லவி

21 இல்லாத தெய்வத்தால் எனக்கு எரிச்சலூட்டினர்; அவர்களின் சிலைகளால் எனக்குச் சினமூட்டினர்; ஒன்றுமில்லாத இனத்தால் அவர்களுக்கு எரிச்சலூட்டுவேன்; மதிகெட்ட வேற்றினத்தால் அவர்களுக்குச் சினமூட்டுவேன். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 16-22

அக்காலத்தில் செல்வரான இளைஞர் ஒருவர் இயேசுவிடம் வந்து, ``போதகரே, நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு நான் என்ன நன்மை செய்ய வேண்டும்?'' என்று கேட்டார். இயேசு அவரிடம், ``நன்மையைப் பற்றி என்னை ஏன் கேட்கிறீர்? நல்லவர் ஒருவரே. நீர் வாழ்வடைய விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடியும்'' என்றார். அவர், ``எவற்றை?'' என்று கேட்டார். இயேசு, ``கொலை செய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச் சான்று சொல்லாதே; தாய் தந்தையை மதித்து நட. மேலும், உன்மீது நீ அன்பு கூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக'' என்று கூறினார். அந்த இளைஞர் அவரிடம், ``இவை அனைத்தையும் நான் கடைப்பிடித்து வந்துள்ளேன். இன்னும் என்னிடம் குறைபடுவது என்ன?'' என்று கேட்டார். அதற்கு இயேசு, ``நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்'' என்றார். அவர் சொன்னதைக் கேட்ட அந்த இளைஞர் வருத்தத்தோடு சென்றுவிட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்' என்றார்'' (மத்தேயு 19:21)

இயேசுவைப் பின்பற்ற விரும்புவோர் உலகப் பற்றுக்களுக்கு அடிமைகளாக இருத்தல் ஆகாது. இந்த உண்மையை நற்செய்தி நூல்கள் பல இடங்களில் தெளிவுபடுத்துகின்றன. இயேசுவைத் தேடிவந்த செல்வரான இளைஞரிடம் ''ஏராளமான சொத்து'' இருந்தது (மத் 19:22). அச்சொத்தையெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, பின்னர் இயேசுவைப் பின்பற்ற அந்த இளைஞருக்குப் போதிய துணிச்சல் இல்லை. எனவே அவர் ''வருத்தத்தோடு'' சென்றுவிட்டார் (மத் 19:22). இயேசுவை அணுகிய அந்த இளைஞர் கடவுளுக்கு உகந்த வாழ்க்கை நடத்தினார் என்பதில் ஐயமில்லை. அவர் கடவுள் அளித்த கட்டளைகளைக் கடைப்பிடித்துவந்தவர்தாம் (மத் 19:17-20). இருந்தாலும் தன்னிடம் ஏதோ குறையிருக்கிறதோ என அவர் ஐயப்படுகிறார் (மத் 19:21). குறைபோக்கும் விருப்பம் அந்த இளைஞரிடம் இருப்பதை உணர்ந்த இயேசு அவர் ''நிறைவடைய'' வழிசொல்லித் தருகிறார்: ''நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும்'' (மத் 19:21).

இங்கே இயேசு குறிப்பிடுகின்ற ''நிறைவு'' என்றால் என்ன? தொடங்கிய செயலை ''முழுமையாக''ச் செயல்படுத்துவது இங்கே குறிக்கப்படுகிறது. அந்த இளைஞர் நல்வழியில் நடக்கத் தொடங்கியிருந்தார் என்பது உண்மையே. என்றாலும், ''உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்'' என்று மலைப் பொழிவின் போது இயேசு கூறியிருந்ததை மத்தேயு ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தார் (காண்க: மத் 5:48). கடவுளின் ''நிறைவு'' அவருடைய எல்லையற்ற அன்பில் அடங்கும். அவர் உலக மக்கள் அனைவரையும் எவ்வித வேறுபாடுமின்றி அன்புசெய்கிறார். நல்லவர் தீயவர் என அவர் வேறுபாடு காட்டுவதில்லை. எனவே, கடவுளிடம் துலங்குகின்ற ''நிறைவு'' நம்மிடமும் விளங்க வேண்டும். கடவுள் நமக்கு அளித்துள்ள கட்டளைகளை முழுமையாக நிறைவேற்றி, பரிசேயரின் நெறியைவிடச் சிறப்பான நெறியுடையவர்களாக நாம் வாழும்போது நாமும் ''நிறைவு'' அடைவோம். இயேசுவைத் தேடி வந்த இளைஞருக்கும் இயேசு இத்தகைய சவாலை முன்வைக்கிறார். தன் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு இயேசுவைப் பின்செல்ல அந்த இளைஞருக்கு அழைப்பு வந்தது. ஆனால் அந்த அழைப்பை ஏற்க அவருக்குத் துணிவில்லை. நாமும் இயேசுவின் குரலுக்குச் செவிமடுக்கும்போது இத்தகைய சவால் நமக்கு விடுக்கப்படுவதை உணர்வோம். முழு உள்ளத்தோடும் விருப்போடும் இயேசுவைப் பின்பற்றத் துணிந்தவர்கள் தியாக மனப்பான்மையோடு செயல்படுவார்கள் என்பதில் ஐயமில்லை.

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் தாராள உள்ளத்தோடு இயேசுவைப் பின்பற்ற அருள்தாரும்.