யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 19வது வாரம் புதன்கிழமை
2014-08-13

புனிதர்கள் போன்சியானு இப்போலித்து




முதல் வாசகம்

எருசலேமில் செய்யப்படும் அருவருக்கத்தக்க செயல்களுக்காகப் புலம்பும் மனிதர்களுக்கு நெற்றியில் அடையாளம் இடு.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 9: 1-7; 10: 18-22

ஆண்டவர் என் செவிகளில் உரத்த குரலில், ``நகருக்குத் தண்டனை வழங்குவோரே! நீங்கள் ஒவ்வொருவரும் உம் கொலைக் கருவியைக் கையிலேந்தி நெருங்கி வாருங்கள்'' என்றார். இதோ ஆறு ஆள்கள் வடக்கு நோக்கி இருக்கும் மேல் வாயிலின் வழியாக வந்தனர். ஒவ்வொருவர் கையிலும் ஒரு கொலைக் கருவி இருந்தது. அவர்களுடன் நார்ப் பட்டு உடுத்தி, எழுதும் மைக்கூட்டை இடையில் வைத்திருந்த ஒருவனும் இருந்தான். ,இவர்கள் உள்ளே வந்து வெண்கலப் பீடத்தின் அருகில் நின்றனர். அப்பொழுது இஸ்ரயேலின் கடவுளது மாட்சி அது தங்கியிருந்த கெருபுகளை விட்டு மேலெழுந்து இல்லத்தின் வாயிற்படிக்கு வந்தது. உடனே ஆண்டவர் நார்ப் பட்டு உடுத்தி எழுதும் மைக்கூட்டைத் தம் இடையில் வைத்திருந்த அம்மனிதரை அழைத்தார். பின் ஆண்டவர் அவரை நோக்கி, ``நீ எருசலேம் நகரெங்கும் சுற்றி வந்து அதனுள் செய்யப்படும் எல்லா அருவருக்கத்தக்க செயல்களுக்காகவும் பெருமூச்சு விட்டுப் புலம்பும் மனிதர்களுக்கு நெற்றியில் அடையாளம் இடு'' என்றார். என் செவிகளில் விழுமாறு அவர் மற்றவர்களை நோக்கிக் கூறியது: ``நீங்கள் அவர் பின்னால் நகரெங்கும் சுற்றி வந்து தாக்குங்கள். உங்கள் கண்களினின்று யாரையும் தப்பவிட வேண்டாம்; இரக்கம் காட்ட வேண்டாம். முதியோர், இளைஞர், கன்னியர், குழந்தைகள், பெண்கள் அனைவரையும் கொன்றொழியுங்கள். அடையாளம் இடப்பட்ட மனிதர் எவரையும் நெருங்காதீர்கள். என் தூயகத்திலிருந்து தொடங்குங்கள்''. அவர்களும் ஆண்டவரது இல்லத்தின் முன்னிருந்த முதியோரிலிருந்து தொடங்கினர். அவர் அவர்களை நோக்கி, ``கோவிலைக் கறைப்படுத்துங்கள்; முற்றங்களைக் கொலையுண்டவர்களால் நிரப்புங்கள்; புறப்படுங்கள்'' என்றார். அவர்களும் நகருக்குள் சென்று வெட்டி வீழ்த்தினார்கள். ஆண்டவரது மாட்சி கோவிலின் வாயிற்படியை விட்டுக் கெருபுகளின் மேல் வந்து நின்றது. என் கண்ணெதிரே, கெருபுகள் தங்கள் இறக்கைகளை விரித்து நிலத்தினின்று மேலெழுந்தன. அவை சென்றபோது சக்கரங்களும் அவற்றுடன் சென்றன. ஆண்டவரது இல்லத்தின் கிழக்கு நுழைவாயிலில் அவை நின்றன. இஸ்ரயேலின் கடவுளது மாட்சி அவற்றின் மேல் இருந்தது. கெபார் ஆற்றோரம் இஸ்ரயேலின் கடவுளுக்குக் கீழே நான் கண்ட உயிரினங்கள் இவையே. அவை கெருபுகளே என்று நான் தெரிந்து கொண்டேன். அவை ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்களும், நான்கு இறக்கைகளும் இருந்தன. அவற்றின் இறக்கைகளின் கீழ் மனிதக் கைகளின் சாயல் இருந்தது. அவற்றின் முகச் சாயல் கெபார் ஆற்றோரம் நான் கண்ட முகங்களைப் போன்றே தோன்றிற்று. அவை ஒவ்வொன்றும் நேர்முகமாகச் சென்றன.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

வானங்களையும் விட உயர்ந்தது இறைவனின் மாட்சி
திருப்பாடல் 113: 1-2. 3-4. 5-6

ஆண்டவரின் ஊழியர்களே, அவரைப் புகழுங்கள். அவரது பெயரைப் போற்றுங்கள். 2 ஆண்டவரது பெயர் வாழ்த்தப் பெறுவதாக! இப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்தப்பெறுவதாக! பல்லவி

3 கீழ்த்திசை முதல் மேற்றிசை வரை ஆண்டவரது பெயர் போற்றப்படுவதாக! 4 மக்களினங்கள் அனைத்திற்கும் ஆண்டவர் மேலானவர்; வானங்களையும் விட உயர்ந்தது அவரது மாட்சி. பல்லவி

5 நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகர் யார்? அவர் போல வானளாவிய உயரத்தில் வீற்றிருப்பவர் யார்? 6 அவர் வானத்தையும் வையகத்தையும் குனிந்து பார்க்கின்றார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை அவரே எங்களிடம் ஒப்படைத்தார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 15-20

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களிடம் கூறியது: ``உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும். இல்லையென்றால் `இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்குமூலத்தால் அனைத்தும் உறுதி செய்யப்படும்' என்னும் மறைநூல் மொழிக்கு ஏற்ப உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக்கொண்டு போங்கள். அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில் திருச்சபையிடம் கூறுங்கள். திருச்சபைக்கும் செவிசாய்க்காவிடில் அவர் உங்களுக்கு வேற்று இனத்தவர் போலவும் வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும். மண்ணுலகில் நீங்கள் தடை செய்பவை அனைத்தும் விண்ணுலகிலும் தடை செய்யப்படும்; மண்ணுலகில் நீங்கள் அனுமதிப்பவை அனைத்தும் விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார். ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்கச் சொல்கிறேன்' என்றார்}} (மத்தேயு 18:20)

இயேசுவை நம்பிக்கையோடு ஏற்று வாழ்கின்ற மக்கள் குழு திருச்சபை. இது இயேசுவின் போதனையைப் பிரமாணிக்கமாகப் பின்பற்ற அழைக்கப்படுகின்ற மக்கள் குழுவாகத் திகழ்கிறது. இச்சபையின் சிறப்புப் பண்புகள் யாவை என மத்தேயு பல இடங்களில் விளக்குகிறார். இயேசுவின் திருச்சபையில் நிலவ வேண்டிய ஒரு முக்கியமான பண்பு ''பாவ மன்னிப்பு'' ஆகும். கடவுளுக்கோ மனிதருக்கோ எதிராகச் செய்யப் படுகின்ற பாவங்கள் கிறிஸ்தவ சமூகத்தை உள்ளிருந்தே கொல்கின்ற சக்தி வாய்ந்தவை. எனவே, குற்றம் செய்வோரைத் திருத்தி நல்வழிப்படுத்த எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது இயேசுவின் போதனை (காண்க: மத் 18:15-18).

திருச்சபைக்குள் நிலவ வேண்டிய ஒற்றுமை பல நிலைகளில் வெளிப்பட வேண்டும். இறைவழிபாட்டுக்காகக் கூடி வருகின்ற திருச்சபையில் இந்த ஒற்றுமை தோன்றும். எனவே, ஒருமித்த மனத்தோடும் ஒத்த கருத்தோடும் இறைவனை வேண்டும்போது நம் வேண்டுதல் கேட்கப்படும். இயேசுவின் பெயரால் நாம் ஒன்றுகூடி வரும்போது நம்மிடையே அவரும் உடனிருப்பார் (மத் 18:20). இந்த வாக்குறுதி உயிர்த்தெழுந்த இயேசு தம் திருச்சபையோடு இருந்து அதை வழிநடத்துவதைக் குறிப்பதாக மத்தேயு நற்செய்தியின் இறுதியில் காண்கின்றோம். ''இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்'' என இயேசு வாக்களித்துள்ளார் (மத் 28:20). அதுபோலவே மத்தேயு நற்செய்தியின் தொடக்கத்திலும் இயேசுவின் பிறப்பின்போது அவர் ''இம்மானுவேல்'' (அதாவது ''கடவுள் நம்முடன் இருக்கிறார்'') என அறிமுகப்படுத்தப்படுகிறார் (மத் 1:23). ஆக, கிறிஸ்தவ நம்பிக்கை கொண்டோர் அனைத்திலும் ஒன்றித்திருந்து, ஒற்றுமையோடு செயல்பட அழைக்கப்படுகிறார்கள். பிளவுகள் தோன்றினாலும் அவற்றைப் போக்குவதற்கான வழிகளைத் தேட வேண்டும்; அன்பும் மன்னித்து ஏற்கும் பண்பும் நம்மில் மிளிர வேண்டும். அப்போது கடவுள் நம்மோடு இருக்கிறார் என்னும் உண்மை உலகுக்குத் தெளிவாகத் தெரியும்.

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் ஒற்றுமையை வளர்க்க அருள்தாரும்.