யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 19வது வாரம் திங்கட்கிழமை
2014-08-11

புனித கிளாரா




முதல் வாசகம்

ஆண்டவரது மாட்சிமிகு சாயலின் காட்சியை நான் கண்டேன்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 1: 2-5, 24-28

யோயாக்கீன் அரசன் நாடு கடத்தப்பட்ட ஐந்தாம் ஆண்டு - கல்தேயர் நாட்டின் கெபார் ஆற்றோரம், பூசி என்ற குருவின் மகன் எசேக்கியேலுக்கு, ஆண்டவரது வாக்கு அருளப்பட்டது. அங்கே ஆண்டவரின் கைவன்மை அவர்மேல் இருந்தது. நான் உற்றுப் பார்க்கையில், வடக்கிலிருந்து புயற்காற்று விரைந்து வந்தது. மின்னலடிக்கும் பெருமேகத்தையும் அதனைச் சுற்றிச் சுடர்வீசும் தீப் பிழம்பையும், அத்தீப் பிழம்பினுள் மின்னும் வெண்கலம் போன்ற ஒன்றையும் கண்டேன். அதன் நடுவினின்று நான்கு உயிரினங்களின் வடிவம் தோன்றியது. அவற்றின் தோற்றம் மனிதச் சாயலுக்கு ஒப்பாயிருந்தது. அவை செல்லும்போது அவற்றின் இறக்கைகள் எழுப்பிய ஒலியைக் கேட்டேன். அது பெருவெள்ளத்தின் இரைச்சல் போன்றும், எல்லாம் வல்லவரின் குரலொலி போன்றும் இருந்தது. அவை இயங்கும்போது ஏற்படும் இரைச்சலின் ஒலி ஒரு போர்ப் படையின் இரைச்சலை ஒத்த ஆரவாரமாக இருந்தது. அவை நின்றபோது தங்கள் இறக்கைகளை இறக்கிக்கொண்டன. அவை தங்கள் இறக்கைகளை இறக்கி நின்றபோது அவற்றின் தலைக்கு மேலிருந்த கவிகையின் மீதிருந்து குரலொன்று கேட்டது. அவற்றின் தலைக்கு மேலிருந்த கவிகையின்மீது நீல மணிக்கல் தோற்றமுடைய ஓர் அரியணை போன்ற ஒன்று தெரிந்தது. அந்த அரியணை மேல் மனிதச் சாயலுக்கு ஒப்பான ஓர் உருவமும் தெரிந்தது. அவரது இடைக்கு மேற்புறம் சுற்றிலும் பளபளக்கும் வெண்கலம் போன்றும், நெருப்பு சூழ்ந்திருப்பது போன்றும் இருக்க நான் கண்டேன். அவரது இடைக்குக் கீழ்ப்புறம் நெருப்புப் போன்றும் சுற்றிலும் ஒளிமயமாயும் இருக்கக் கண்டேன். சூழ்ந்திருந்த ஒளியும் கார்கால மேகத்தினிடையே காணப்படும் வானவில் போன்று தோன்றியது. இது ஆண்டவரது மாட்சிமிகு சாயலின் காட்சி. இதை நான் பார்த்ததும் முகம் குப்புற விழுந்தேன்; அப்போது ஒருவர் பேசும் குரல் கேட்டேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

வானமும் வையமும் உமது மகிமையால் நிறைந்துள்ளன.
திருப்பாடல் 148: 1-2. 11-12. 13-14

விண்ணுலகில் உள்ளவையே, ஆண்டவரைப் போற்றுங்கள்; உன்னதங்களில் அவரைப் போற்றுங்கள். 2 அவருடைய தூதர்களே, நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள்; அவருடைய படைகளே, நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள். பல்லவி

11 உலகின் அரசர்களே, எல்லா மக்களினங்களே, தலைவர்களே, உலகின் ஆட்சியாளர்களே, 12 இளைஞரே, கன்னியரே, முதியோரே மற்றும் சிறியோரே, நீங்கள் எல்லாரும் ஆண்டவரைப் போற்றுங்கள். பல்லவி

13 அவர்கள் ஆண்டவரின் பெயரைப் போற்றுவார்களாக; அவரது பெயர் மட்டுமே உயர்ந்தது; அவரது மாட்சி விண்ணையும் மண்ணையும் கடந்தது. 14 அவர் தம் மக்களின் ஆற்றலை உயர்வுறச் செய்தார்; அவருடைய அனைத்து அடியாரும் அவருக்கு நெருங்கிய அன்பார்ந்த மக்களாகிய இஸ்ரயேல் மக்களும் அவரைப் போற்றுவார்கள். அல்லேலூயா! பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும் பொருட்டே, நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 22-27

அக்காலத்தில் கலிலேயாவில் சீடர்கள் ஒன்றுதிரண்டிருக்கும் போது இயேசு அவர்களிடம், ``மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார். அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள்; ஆனால் அவர் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படுவார்'' என்றார். அப்பொழுது அவர்கள் மிகவும் துயரடைந்தார்கள். அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்தபோது கோவில் வரியாக இரண்டு திராக்மா தண்டுவோர் பேதுருவிடம் வந்து, ``உங்கள் போதகர் இரண்டு திராக்மா வரியைச் செலுத்துவதில்லையா?'' என்று கேட்டனர். அவர், ``ஆம், செலுத்துகிறார்'' என்றார். பின்பு வீட்டிற்குள் வந்து பேதுரு பேசத் தொடங்குவதற்கு முன்பே இயேசு, ``சீமோனே உனக்கு எப்படித் தோன்றுகிறது? இவ்வுலக அரசர்கள் சுங்க வரியையோ தலைவரியையோ யாரிடமிருந்து பெறுகின்றார்கள்? தங்களுடைய மக்களிடமிருந்தா? மற்றவரிடமிருந்தா?'' என்று கேட்டார். ``மற்றவரிடமிருந்துதான்'' என்று பேதுரு பதிலளித்தார். இயேசு அவரிடம், ``அப்படியானால் குடிமக்கள் இதற்குக் கட்டுப்பட்டவரல்ல. ஆயினும் நாம் அவர்களுக்குத் தடையாய் இருக்கக் கூடாது. எனவே நீ போய்க் கடலில் தூண்டில் போடு; முதலில் அகப்படும் மீனை எடுத்து அதன் வாயைத் திறந்து பார்த்தால் ஸ்தாத்தேர் நாணயத்தைக் காண்பாய். அதை எடுத்து உன் சார்பாகவும் என் சார்பாகவும் அவர்களிடம் செலுத்து'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்'' (மத்தேயு 17:22)

இயேசு தம்மைக் குறிக்கப் பயன்படுத்திய பெயர்களில் முக்கியமான ஒன்று ''மானிட மகன்'' என்பதாகும். யார் இந்த மானிட மகன்? இதற்கு விவிலிய அடிப்படை என்ன? மானிட மகன் என்னும்போது ''மனிதர்'' எனப் பொதுவாகப் பொருள்கொள்ளலாம். இயேசு எல்லா மனிதருக்கும் பிரதிநிதிபோல இவ்வுலகில் வந்ததால் அவர் அனைவருக்கும் மேலான ''மானிட மகன்''. பழைய ஏற்பாட்டில் மானிட மகன் பற்றிய குறிப்புகள் யோபு (16:21; 25:6), திருப்பாடல்கள் (8:4; 80:17; 114:3), எசேக்கியேல் (2:1-8), தானியேல் (17:13) போன்ற நூல்களிலும், புதிய ஏற்பாட்டில் மத்தேயு (8:20; 12:38-42) முதலிய நற்செய்தி நூல்களிலும் பரவலாகக் காணப்படுகின்றன. கிறிஸ்தவ விளக்கத்தின்படி, இயேசு தம்மை ''மானிட மகன்'' எனக் குறிப்பிட்டது பெரும்பாலும் தாம் துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் இறந்து, புத்துயிர் பெற்று எழுவதை விளக்கவே. மானிட மகன் என்பவர் துன்புறும் மெசியா. அவரே இயேசு.

அதே நேரத்தில், இயேசு மனிதரோடு தம்மை முழுமையாக ஒன்றித்துக் கொண்டதால் அவருடைய வாழ்வில் நிகழ்ந்தவை மனிதரின் வாழ்விலும் நிகழ்கின்றன. குறிப்பாக, மானிட வாழ்க்கையில் சிலுவைக்கு இடம் உண்டு; உயிர்த்தெழலுக்கும் இடம் உண்டு. இவ்வாறு நம்மைத் தம்மோடு ஒன்றித்துக்கொள்கின்ற இயேசு நம் துன்ப வேளைகளில் நமக்குத் துணையாக வருகிறார். நாம் அவருடைய துன்பங்களில் பங்கேற்கும்போது அவரும் நம் துன்பங்களில் பங்கேற்கிறார் என்பது ஓர் முரணான உண்மை. எனவே இயேசுவின் சீடர் துயரமடையத் தேவையில்லை. சிலுவை வழியாக நமக்குப் புது வாழ்வு பிறந்தது என்பது குறித்து நாம் மகிழ வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகன் இயேசுவோடு நாங்கள் துன்ப வேளையிலும் இணைந்திருக்க அருள்தாரும்.